Friday, 7 October 2011

Catholic News - hottest and latest - 06 October 2011

1. தெசலோனிக்கா பல்கலைக் கழகத்திலிருந்து திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கம்

2. அனைத்து குடிமக்களும் மதிப்புடனும் உரிமைகளுடனும்  வாழ்வதே எந்த ஒரு நாட்டுக்கும் அழகு - பொலிவியா நாட்டு கர்தினால்

3. இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் அவையின் ஆண்டுக் கூட்டத்தில் புதுடில்லி பேராயர்

4. மியான்மார் கச்சின் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்துள்ள மக்களுக்காக அக்டோபர் 9 சிறப்பான செபநாள்

5. தலித் குழந்தைகளின் நல் வாழ்வுக்கு நிதி திரட்டும் ஆஸ்திரேலியப் பெண்ணின் 1000 கிலோமீட்டர் நடைபயணம்

6. இலங்கை உள்நாட்டுப் போரில் கை, கால் இழந்தோருக்கு செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் இந்திய அரசுசாரா அமைப்பு

7. கி.மு., கி.பி., ஆகிய சொற்களை மாற்ற முயலும் BBC தொலைக்காட்சி நிறுவனம்

8. உலகில் இன்னும் 61 இலட்சம் ஆசிரியர்கள் தேவை - UNESCO அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. தெசலோனிக்கா பல்கலைக் கழகத்திலிருந்து திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட தங்கப் பதக்கம்

அக்.06,2011. கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே உரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் வளர்வதைத் தான் விரும்புவதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் இப்புதன் காலை திருத்தந்தை பொது மறைபோதகத்தை வழங்கிய பின்னர், தெசலோனிக்கா பல்கலைக் கழகத்திலிருந்து அவருக்கு திருத்தூதர் யாசோன் பெயரில் நிறுவப்பட்டுள்ள ஒரு தங்கப் பதக்கம் விருதாக வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெறுவதில் தான் மகிழ்வதாகக் கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவர்கள் அனைவரும் உண்மையிலும், ஒற்றுமையிலும் வளர்வதை இறைவன் விரும்புகிறார் என்றும், அதுவே தனது செபமும் விருப்பமும் என்றும் கூறினார்.
திருத்தூதர் பணிகள் என்ற புதிய ஏற்பாட்டு நூலில் கூறப்பட்டுள்ள யாசோன் என்பவர் கீழைரீதி மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளில் அதிக வணக்கத்தைப் பெறும் ஒரு திருத்தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.


2. அனைத்து குடிமக்களும் மதிப்புடனும் உரிமைகளுடனும்  வாழ்வதே எந்த ஒரு நாட்டுக்கும் அழகு - பொலிவியா நாட்டு கர்தினால்

அக்.06,2011. நீதி அமைதி ஆகிய வழிகளில் நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் மதிப்புடனும் அனைத்து உரிமைகளுடனும்  வாழ்வதே எந்த ஒரு நாட்டுக்கும் அழகு என்று பொலிவியா நாட்டின் கர்தினால் Julio Terrazas கூறினார்.
பாதுகாக்கப்பட்டப் பகுதி என்று பல ஆண்டுகளாக அரசால் குறித்து விடப்பட்டுள்ள தங்கள் காட்டுப்பகுதிகளின் வழியே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து, பொலிவியாவில் வாழும் பழங்குடியினர் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, அவர்களில் பலர் நீண்ட நடைபயணத்தை அன்று ஆரம்பித்தனர்.
இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களை Santa Cruz பேராலயத்திற்கு முன் அண்மையில் சந்தித்த அவ்வுயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Terrazas, அம்மக்களின் முயற்சிகளுக்கு தன் ஆசீரையும் செபங்களையும் வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
1500க்கும் அதிகமான பழங்குடியினர் கலந்து கொள்ளும் இந்த நடைபயணத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே, செப்டம்பர் 25ம் தேதி ஏற்பட்ட மோதலில் கண்ணீர்புகை பயன்படுத்தப்பட்டது. காவல்துறையினரின் அத்துமீறிய இந்நடவடிக்கைக்கு பொலிவிய அரசுத் தலைவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
கர்தினால் வழங்கிய ஆசீரைப் பெற்ற போராட்டக் குழுவினர் இச்செவ்வாயன்று தங்கள் நடைபயணத்தை  அந்நாட்டின் தலை நகரை நோக்கித் தொடர்ந்தனர்.


3. இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் அவையின் ஆண்டுக் கூட்டத்தில் புதுடில்லி பேராயர்

அக்.06,2011. கிறிஸ்துவின் பிரசன்னத்தை உலகிற்குத் தெளிவாக உணர்த்தும் ஒரு பணியே குணமாக்கும் பணி என்று புதுடில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ கூறினார்.
CHAI என்று அழைக்கப்படும் இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் அவையின் 68வது ஆண்டுக் கூட்டத்தை வாரணாசியில் உள்ள நவ சாதனா என்ற நிறுவனத்தில் இப்புதனன்று துவக்கி வைத்து, திருப்பலியாற்றிய பேராயர் கொன்செஸ்ஸாவோ, அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் தாதியர் அனைவரும் இறையாட்சியின் கருவிகள் என்று கூறினார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் அல்லாதோரும் அவரிடம் குணம் பெற்றுத் திரும்பியதைப் போல், கிறிஸ்துவர் அல்லாதோரும் நம்மை நாடிவந்து குணம் பெற்றுத் திரும்பும்போது, இறைவன் உலகம் முழுவதையும் பாகுபாடின்றி ஆசீர்வதிப்பது தெளிவாகிறது என்று பேராயர் சுட்டிக்காட்டினார்.
வாரணாசி ஆயர் மற்றும் பிற துறவற சபைகளின் தலைவர்கள் கலந்துகொண்ட  இந்தக் கூட்டத்தில், பேசிய CHAI இயக்குனர் அருள்தந்தை Tomi Thomas, பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள வாரணாசி இன்னும் பல வழிகளில் உள்ளூர குணம்  பெற வேண்டிய அவசியம் உள்ளது என்று எடுத்துரைத்தார்.


4. மியான்மார் கச்சின் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்துள்ள மக்களுக்காக அக்டோபர் 9 சிறப்பான செபநாள்

அக்.06,2011. மியான்மாரில் கச்சின் பகுதியில் நிலவி வரும் கலவரங்களால் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்காக அக்டோபர் 9, வருகிற ஞாயிறு சிறப்பான செபநாள் கடைபிடிக்கப்படும் என்று மியான்மார் ஆயர் ஒருவர் கூறினார்.
துன்புறும் மக்களுடன் கத்தோலிக்கர்கள் தங்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்காக செபிப்பதுடன், அன்று திரட்டப்படும் தொகையை அம்மக்களின் தேவைகளுக்கு அளிக்கும்படியும் Banmaw மறைமாவட்ட ஆயர் Raymond Sumlut Gam இப்புதனன்று வேண்டுகோள் விடுத்தார்.
மியான்மார் அரசுக்கும், கச்சின் பகுதி மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் அமைப்பதிலும், அவர்களுக்குத் தேவையான உணவு, மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் மறைமாவட்டத்தின் சமூகப் பணிக்குழு ஈடுபட்டுள்ளதென்று இப்பணிக் குழுவின் இயக்குனர் அருள்தந்தை Paul Lahpai Aung Dang கூறினார்.


5. தலித் குழந்தைகளின் நல் வாழ்வுக்கு நிதி திரட்டும் ஆஸ்திரேலியப் பெண்ணின் 1000 கிலோமீட்டர் நடைபயணம்

அக்.06,2011. இந்தியாவில் வாழும் தலித் குழந்தைகளின் நல் வாழ்வுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன், ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான ஒரு நடைபயணத்தை இப்புதனன்று ஆரம்பித்தார்.
இந்தியாவில் ஒரு சில ஆண்டுகள் மறைபணியில் ஈடுபட்டிருந்த Beverley Hughes என்ற பெண்ணும் Juni Howel என்ற அவரது தோழியும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இப்புதனன்று தங்கள் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிட்னி மெல்பர்ன் ஆகிய இரு நகரங்களுக்கிடையே உள்ள 1173 கிலோமீட்டர் தூரத்தை 43 நாட்களில் நடக்க முடிவு  செய்துள்ள இவ்விரு பெண்களும் தாங்கள் திரட்டும் தொகையை இந்தியாவில் உள்ள தலித் குழந்தைகளின் நல வாழ்வு, கல்வி ஆகியவற்றிற்குச் செலவிட திட்டமிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள Go the Extra Mile’ அதாவது, ‘இன்னும் ஒரு மைல் கூடுதலாகச் செல்என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பு கடந்த இரு ஆண்டுகளாக 308,000 ஆஸ்திரேலிய டாலர்கள் நிதி திரட்டி இந்தியாவிலுள்ள 58,000 தலித் குழந்தைகளுக்கு அனுப்பி வந்துள்ளது.
இந்த முயற்சியுடன் தன் நடைபயணத்தையும் இணைத்துக் கொள்ள விளையும் Beverley Hughes, தான் திரட்டும் நிதியால் இன்னும் பல ஆயிரம் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.


6. இலங்கை உள்நாட்டுப் போரில் கை, கால் இழந்தோருக்கு செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் இந்திய அரசுசாரா அமைப்பு

அக்.06,2011. உலகில் உள்ள பல அரசுசாரா அமைப்புக்களில் தனியொரு இடம் பெற்றுள்ள BMVSS என்று அழைக்கப்படும் பகவான் மகாவீர் விக்லங் சமித்தி சகாய் (Bhagwan Mahaveer Viklang the Samiti Sahay) என்ற அரசுசாரா அமைப்பு இலங்கை உள்நாட்டுப் போரில் கை, கால் இழந்தோருக்கு செயற்கை உறுப்புக்களைப் பொருத்தியுள்ளது.
மிகக் குறைந்த செலவில் செயற்கை உறுப்புக்கள் செய்வதில்  'ஜெய்ப்பூர் கால்' என்று உலகப் புகழ் பெற்ற BMVSS நிறுவனம், அண்மையில் இலங்கை சென்று, அங்கு ஒரு மாத காலமாக 535 பேருக்கு செயற்கை உறுப்புக்கள் பொருத்துவதிலும், இன்னும் 600க்கும் மேற்பட்டோருக்கு ஊன்றுகோல்கள் வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தது.
மொத்தத்தில் இந்த அமைப்பு இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட 1163 பேருக்கு உதவிகள் செய்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டும் இதே அமைப்பு இலங்கை சென்று 1400க்கும் அதிகமானோருக்கு உதவிகள் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1975ம் ஆண்டு நிறுவப்பட்ட BMVSS என்ற இந்த நிறுவனம் இதுவரை 25 நாடுகளுக்குச் சென்று ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 20,000 பேருக்கு மிகக் குறைந்த செலவில் செயற்கை உறுப்புக்கள் பொருத்துவதில் ஈடுபட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.


7. கி.மு., கி.பி., ஆகிய சொற்களை மாற்ற முயலும் BBC தொலைக்காட்சி நிறுவனம்

அக்.06,2011. கிறிஸ்துவுக்குமுன், கிறிஸ்துவுக்குப்பின் என்று காலத்தைக் குறிக்க உலகெங்கும் பயன்படுத்தப்படும் கி.மு., கி.பி., ஆகிய சொற்களை மாற்றி, BBC தொலைக்காட்சி நிறுவனம் BCE அதாவது பொதுக் காலத்திற்கு முன், CE பொதுக் காலம் என்ற சொற்களைப் பயன்படுத்த எடுத்துள்ள தீர்மானம், மனித வரலாற்றை மறந்து செயலாற்றும் போலித்தனம் என்று வத்திக்கானின் செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.
வத்திக்கானில் இருந்து வெளியாகும் L’Osservatore Romano என்ற செய்தித் தாளில் இப்புதனன்று வெளியான ஒரு முன்பக்கக் கட்டுரையில், BBCயின் இந்த முடிவு பெருமளவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
பிற மதங்களைப் புண்படுத்த விரும்பவில்லை என்ற காரணம் காட்டி, BBC எடுத்துள்ள இந்த முடிவு, வரலாற்றையே காட்டிக் கொடுக்கும் ஒரு முயற்சி என்றும், மேற்கத்திய கலாச்சாரத்தில் கிறிஸ்துவத்தின் சுவடுகளை அழிக்கும் ஒரு முயற்சி என்றும் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனித வரலாற்றில் பிரெஞ்ச் புரட்சி, மற்றும் லெனின் புரட்சி ஆகிய காலங்களிலும் இதுபோன்று காலக் குறியீடுகளை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டும் இக்கட்டுரை, இந்த மாற்றங்கள் ஒரு சில ஆண்டுகளே நீடித்தன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
BBCயின் இந்த முடிவை இலண்டன் மேயர் Boris Johnshon உட்பட பலரும் கண்டனம் செய்துள்ளனர் என்று வத்திக்கான் செய்தித்தாள் கூறியுள்ளது.
மேற்கித்திய கலாச்சாரத்தில் கிறிஸ்தவம் பதித்துள்ள முத்திரைகளை மறுப்பதன் மூலம் வரலாற்றையே மாற்ற முயற்சிக்கும் BBC யின் இந்த முடிவு பரிதாபத்திற்குரியது என்று இக்கட்டுரையின் ஆசிரியர் Luceta Scaraffia கூறியுள்ளார்.


8. உலகில் இன்னும் 61 இலட்சம் ஆசிரியர்கள் தேவை - UNESCO அறிக்கை

அக்.06,2011. மில்லேன்னிய இலக்குகளை 2015ம் ஆண்டுக்குள் அடைவதற்கு உலகில் இன்னும் 61 இலட்சம் ஆசிரியர்கள் தேவை என்று ஐ.நா.நிறுவனம் கூறியுள்ளது.
அக்டோபர் 5 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட உலக ஆசிரியர் நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட UNESCO நிறுவனம், இந்த 61 இலட்சம் ஆசிரியர்களில் 20 இலட்சம் ஆசிரியர்கள் ஆப்ரிக்காவின் சகாரா பகுதிகளுக்கு மட்டும் தேவைப்படுகின்றனர் என்று கூறியது.
'இருபால் சமத்துவத்தை வலியுறுத்த ஆசிரியர்கள்' என்ற கருத்துடன் இவ்வாண்டு கொண்டாடப்படும் உலக ஆசிரியர் நாளில், ஆரம்பக் கல்விகளில் பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தையும் UNESCO அறிக்கை வெளியிட்டுள்ளது.
வருங்காலச் சந்ததியினரைச் சிறந்த முறையில் வளர்க்க ஆசிரியர்கள் மிகவும் தேவை. எனவே, அவர்களை இந்தத் துறைக்கு ஈர்ப்பதற்கு ஒவ்வொரு நாடும் தகுந்த வழிகளை உருவாக்க வேண்டும் என்று UNESCOவின் தலைமை இயக்குனர் Irina Bokova கூறினார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...