Friday 14 October 2011

Catholic News - hottest and latest - 13 October 2011

1. திருத்தந்தை, ஹொண்டுராஸ் அரசுத் தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, கத்தோலிக்க மக்கள் அளித்திருக்கும் நிதித்தொகை 6 கோடி யூரோக்கள்

3. சூடான் ஆயர் பேரவையின் முயற்சியாக நடைபெறும் ஒப்புரவு கருத்தரங்கு

4. ரியோ டி ஜெனீரோவில் இருக்கும் மீட்பராம் கிறிஸ்துவின் திரு உருவம் 80 ஆண்டு நிறைவு

5. அமெரிக்க ஆயர்கள் ஈராக்கில் மேற்கொண்ட பயணம்

6. புதுடில்லியில் மனநலம் குன்றியவர்களுக்கு உதவும் 24 மணி நேர தொலைபேசித் தொடர்பு

7. மியான்மாரில் அரசியல் கைதிகள் உட்பட பலர் விடுதலை

8. கூடங்குளத்தில் இரவு பகலாக தொடர் மறியல் போராட்டம் நடத்த திட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, ஹொண்டுராஸ் அரசுத் தலைவர் சந்திப்பு

அக்.13,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஹொண்டுராஸ் நாட்டு அரசுத் தலைவர் Porfirio Lobo Sosa ஐ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து 23 நிமிடங்கள் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத் தலைவர் Lobo Sosa.
இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், ஹொண்டுராஸ் நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக, நலவாழ்வு, கல்வி ஆகிய துறைகளில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் நற்பணிகளை அரசுத் தலைவர் லோபோ சோசா பாராட்டினார் என்றும் கூறியது.
அத்துடன், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, ஒப்புரவு, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், ஒருமைப்பாடு, அமைதி ஆகியவற்றை ஊக்குவிப்பதில் தொடர்ந்து செயல்படுமாறு அரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்றும் திருப்பீட அறிக்கை கூறியது.
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ், சர்வதேச அளவில் கொண்டிருக்கும் நல்ல உறவுகளும் இச்சந்திப்புக்களில் பாராட்டப்பட்டன.


2. திருத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, கத்தோலிக்க மக்கள் அளித்திருக்கும் நிதித்தொகை 6 கோடி யூரோக்கள்

அக்.13,2011. சோமாலியா, மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பசிக் கொடுமையைக் குறிப்பிட்டு திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை அடுத்து, கத்தோலிக்க உலகம் தாராளமாக உதவிகள் செய்திருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி என்று Mogadishuவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜார்ஜியோ பெர்ட்டின் கூறினார்.
திருத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, இதுவரை கத்தோலிக்க மக்கள் அளித்திருக்கும் நிதித் தொகை 6 கோடி யூரோக்கள், அதாவது, 400 கோடி ரூபாய் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆப்ரிக்காவில் தற்போது நிலவும் இந்த நெருக்கடிப் பிரச்சனையையும் தாண்டி, அப்பகுதியில் நிரந்தரத் தீர்வுகள் காணும் விதமாக, பல்வேறு பாலர் பள்ளிகளை அமைக்க கிறிஸ்தவர்கள் முன் வர வேண்டும் என்று 'Cor Unum' என்ற திருப்பீட பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் ராபர்ட் சாரா விடுத்துள்ள அழைப்பையும் ஆயர் பெர்ட்டின் FIDES நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அவசரக்கால உதவிகள் செய்வது முக்கியம் என்றாலும், நீண்டகாலத் தீர்வுகளையும் காணும் வண்ணம் சோமாலியா போன்ற நாடுகளில் கல்வி அறிவு, நல வாழ்வு இவைகளை அமைக்கும் வழிகளைக் காண வேண்டும் என்று Mogadishuவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி வலியுறுத்திக் கூறினார்.


3. சூடான் ஆயர் பேரவையின் முயற்சியாக நடைபெறும் ஒப்புரவு கருத்தரங்கு

அக்.13,2011. தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள இவ்வேளையில், அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிறிஸ்துவர்களின் பங்களிப்பு ஆகியவைகளைக் கலந்து பேசும் ஒரு கருத்தரங்கு அந்நாட்டில் இவ்வியாழன் முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
"பல்வேறு இனம், மொழி மற்றும் மக்களைக் கொண்ட திருச்சபை - கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்திற்கு" என்ற மையக் கருத்துடன் ஆரம்பமாகியுள்ள இந்தக் கருத்தரங்கில் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பல்வேறு துறைகளில் பணி புரியும் பொது நிலையினர் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Khartoum உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Gabriel Zubeir மற்றும் Juba மறைமாவட்டத்தின் ஆயர் Pauline Lukudu Loro ஆகியோர் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கு, சூடான் ஆயர் பேரவையின் முயற்சி என்றும், இக்கருத்தரங்கில் ஒப்புரவு, அமைதி, நாட்டின் ஒற்றுமை ஆகியவைகளே முக்கிய கருத்துக்களாகப் பேசப்படும் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


4. ரியோ டி ஜெனீரோவில் இருக்கும் மீட்பராம் கிறிஸ்துவின் திரு உருவம் 80 ஆண்டு நிறைவு

அக்.13,2011. பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோவில் இருக்கும் மீட்பராம் கிறிஸ்துவின் திரு உருவம் நிறுவப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, அந்நாட்டு மக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் இப்புதனன்று ஈடுபட்டனர்.
பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பெருமை தரும் இந்தத் திரு உருவம், தன் கைகளை விரித்து மற்றவர்களை அழைப்பதுபோல், இந்நாட்டு மக்களும் அனைவரையும் வரவேற்கும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று ரியோவின் பேராயர் Orani João Tempesta கூறினார்.
1922ம் ஆண்டு ஆரம்பமான இத்திரு உருவின் கட்டுமானப் பணிகள் 1931ம் ஆண்டு நிறைவு பெற்று, அவ்வாண்டு அக்டோபர் 12ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது.
130 அடி உயரமும், கிறிஸ்துவின் விரிக்கப்பட்ட இரு கரங்களுக்கிடையே 98 அடி அகலமும் உடைய இத்திரு உருவம், 635 டன் எடையுள்ளது.
ரியோ நகரை நோக்கியவண்ணம் அமைந்துள்ள இந்தத் திரு உருவம், உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதனன்று 80ம் ஆண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இளையோர், 2013ம் ஆண்டு தங்கள் நகரில் நடைபெற உள்ள உலக இளையோர் நாளையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.


5. அமெரிக்க ஆயர்கள் ஈராக்கில் மேற்கொண்ட பயணம்

அக்.13,2011. அடுத்த சில மாதங்களில் அமெரிக்க அரசு ஈராக்கிலிருந்து தன் படைகளை விலக்கிக் கொள்ளவிருப்பதால், அங்கு வன்முறைகள் வளராமல் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பு உருவாக வேண்டியுள்ளது என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில் ஈராக்கை அண்மையில் பார்வையிடச் சென்றிருந்த அமெரிக்க ஆயர்கள் இருவர், அந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகளையும், சவால்களையும் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விதம் கூறினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் நகரில் 58 பேரின் இறப்புக்குக் காரணமான தாக்குதல் நடைபெற்ற அன்னை மரியாவின் கத்தோலிக்கக் கோவிலைத் தங்கள் ஈராக் பயணத்தின்போது தரிசித்தது ஓர் உயர்ந்த அனுபவமாக இருந்தது என்று அரிசோனா ஆயர் Gerald Kicanas கூறினார்.
ஈராக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்ற போர், மற்றும் அந்நாட்டின் மீது சுமத்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், அவர்களிடையே நிலவும் நம்பிக்கையும், அந்நாட்டில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள பிறரன்புப் பணிகளும் பெரிதும் போற்றுதற்குரியது என்று ஆயர் Kicanas மேலும் கூறினார்.


6. புதுடில்லியில் மனநலம் குன்றியவர்களுக்கு உதவும் 24 மணி நேர தொலைபேசித் தொடர்பு

அக்.13,2011. இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரிவுகளும், பிறரன்பு அமைப்புக்களும் இணைந்து மன நலம் குன்றியவர்களுக்கு உதவும் 24 மணி நேர தொலைபேசித் தொடர்பை, புதுடில்லியில் இப்புதனன்று ஆரம்பித்துள்ளனர்.
எம்மானுவேல் மருத்துவமனை கழகம், புனித ஸ்டீபன் மருத்துவமனை, மற்றும் மார் தோமா சபை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்த உதவியை Vandrevala அறக்கட்டளை இப்புதனன்று துவக்கி வைத்தது.
வட இந்தியாவில் மன நலம் குன்றியவர்களுக்கு உதவும் வகையில் இந்த வசதி தலைநகரில் செய்யப்பட்டுள்ளது என்று இவ்வறக்கட்டளையின் உறுப்பினரான அருண் ஜான் கூறினார்.
மன அழுத்தம், ஆழ்ந்த சோகம், பல்வேறு உறுப்புக்களின் செயல்பாடுகளை இழத்தல், மறதி ஆகிய குறைகளால் துன்புறுவோருக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த உதவியில், பல்வேறு மனநல மருத்துவர்கள் இணைந்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. மியான்மாரில் அரசியல் கைதிகள் உட்பட பலர் விடுதலை

அக்.13,2011. மியான்மாரில் சிறையில் இருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசியல் கைதிகள் உட்பட பலரை விடுவிக்கும் நடவடிக்கையை அந்நாட்டின் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்று ஐம்பதுக்கும் மேலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
இராணுவத்தின் பின்புலத்தில் இயங்கும் மியான்மார் அரசு, சீர்திருத்தங்களை நோக்கி முன்னேறும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அண்மைய காலச் செயற்பாடுகள் இருக்கின்றன என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
அரசால் விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் பல புத்த பிக்குகளும், ஒரு பிரபல நகைச்சுவை நடிகரும் அடங்குவர் என்று எண்ணப்படுகிறது. இவர்கள் அந்நாட்டில் நர்கீஸ் சூறாவளி தாக்கிய பிறகு, முன்னாள் இராணுவ அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தனர்.
அரசால் விடுவிக்கப்படுபவர்கள் யார் என்பதை கூர்ந்து அராய்ந்த பிறகே குடியரசு ஆதரவுவாதிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் அறிஞர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது


8. கூடங்குளத்தில் இரவு பகலாக தொடர் மறியல் போராட்டம் நடத்த திட்டம்

அக்.13,2011. கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் மீண்டும் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வியாழனன்று நடந்த ஆலோசனையில் அணு உலை வாசலில் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அணு உலை திட்டத்தை வாபஸ் வாங்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கூடுதல் மின்சாரம் தரும் திட்டமான அணு உலை இரஷ்ய நாட்டு ஒத்துழைப்புடன் 90 விழுக்காடு பணிகள் முடிந்து துவங்கும் நிலையை எட்டியுள்ளது. ஆனால் இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து எழுந்துள்ள சந்தேகஙகளால் இப்பகுதி மக்கள் அணு உலை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட இப்பகுதி மக்கள், அணுஉலைப் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை மாநில அரசும் கோரும் என்று தமிழக முதல்வர் அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.
அணு உலைப் பணிகள் நிறுத்தப்படாது என மத்திய அரசு அண்மையில் கூறியதையடுத்து, ஞாயிறு முதல் மீண்டும் போராட்டம் துவங்கியிருக்கிறது. கூடங்குளம் அணு உலை இருக்கும் பகுதியில் இவ்வியாழனன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
 

No comments:

Post a Comment