Monday 24 October 2011

Catholic News - hottest and latest - 22 October 2011

1. இராணுவத்தில் இருப்போருக்கு ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம் - திருத்தந்தை

2. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தலைவர், சிறப்புச் செயலர் நியமனம்

3. திருச்சபைக்கு மூன்று புதிய புனிதர்கள்

4. பெங்களூரில் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கு

5. இரஷ்ய மொழியில் முதன் முறையாக உலக மறைபோதக ஞாயிறு

6. மத்திய கிழக்கில் சமய சுதந்திரமும் மனித உரிமைகளும் மதிக்கப்பட மாரனைட் முதுபெரும் தலைவர் அழைப்பு

7. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்து சர்வதேச சமுதாயம் புலன்விசாரணை செய்வதைத் தவிர்க்க காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் அழைப்பு

8. கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை ஓர் ஆய்வு முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. இராணுவத்தில் இருப்போருக்கு ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம் - திருத்தந்தை

அக்.22,2011. இராணுவத்தில் பணி செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் அவசியம் என்பதை, இராணுவத்தினருக்கு மேய்ப்புப்பணி செய்பவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இராணுவத்தினருக்கு மேய்ப்புப்பணி செய்பவர்களின் ஆறாவது சர்வதேச கருத்தரங்கு மற்றும் இந்த ஆன்மீக வழிகாட்டிகளுக்கான 3வது சர்வதேசப் பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்ட சுமார் எண்பது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
நிலநடுக்கம், வெள்ளம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அகதிகளுக்குப் படைவீரர்கள் ஆற்றும் அன்புப் பணிகள், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் அவர்களது பணிகள், போர்களில் அவர்கள் செய்வது ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த வீரர்கள் பலரது விசுவாசம் ஆழமானது என்றும் அவர்கள் அமைதியை ஊக்குவிக்க விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
இப்படைவீரர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுவதும் ஆன்மீக வழிகாட்டிகளின் கடமை என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
படைவீரர்களின் ஆன்மீக நலன் குறித்த அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பால் அவர்களின் அப்போஸ்தலிக்க மடல் வெளியிடப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறும் இந்நேரத்தில் இச்சர்வதேச கருத்தரங்கு நடைபெறுவதையும் அவர் குறிப்பிட்டார்.
அருளாளர் பாப்பிறை 2ம் ஜான் பாலின் திருவிழா, அக்டோபர் 22, இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டது. அக்டோபர் 22 அவர் பாப்பிறையாகப் பொறுப்பேற்ற நாளாகும்.

2. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தலைவர், சிறப்புச் செயலர் நியமனம்

அக்.22,2011. 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு இரண்டு பொறுப்பாளர்களை இச்சனிக்கிழமை நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாமன்றத்தின் தலைவராக, அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald William WUERL என்பவரையும், சிறப்புச் செயலராக பிரான்சின் Montpellier பேராயர் Pierre Marie CARRÉ என்பவரையும் நியமித்தார்.
"கிறிஸ்தவ விசுவாசத்தை அறிவிப்பதற்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி" என்ற தலைப்பில் 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும்.

3. திருச்சபைக்கு மூன்று புதிய புனிதர்கள்

அக்.22,2011. அருளாளர்கள் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, லூயிஜி குவனெல்லா, போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ ஆகியோரை புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு காலை பத்து மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் இம்மூன்று அருளாளர்களையும் புனிதர்கள் என அறிவிப்பார் திருத்தந்தை.
இத்தாலியின் பார்மா ஆயராகப் பணியாற்றிய அருளாளர் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, 1895ம் ஆண்டில் சவேரியன் மறைபோதகர்கள் என அழைக்கப்படும் வெளிநாட்டு மறைபோதக சவேரியார் சபையை ஆரம்பித்தவர். மறைபோதக அருட்பணியாளர் ஒன்றியம் தொடங்கவும் உதவிய இவர், மறைப்பணி ஆர்வத்தை அதிகம் ஊக்குவித்தவர்.
ஏழைகளின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியரான அருட்பணி லூயிஜி குவனெல்லா, பிறரன்புப் பணியாளர் ஆண்கள் சபையையும் புனித மரியின் இறைபராமரிப்பு பெண்கள் சபையையும் தொடங்கியவர். இந்தியா உட்பட ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களில் இச்சபையினர் பணியாற்றுகின்றனர்.
இஸ்பெயினின் சாலமங்காவில் பிறந்த அருளாளர் போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ, புனித வளன் பணியாளர் பெண்கள் சபையைத் தொடங்கியவர். நற்செய்தி விழுமியங்களுக்கு வீரத்துவமான சான்று பகர்ந்தவர். பெண்களின் மாண்பு காக்கப்படுவதற்கு உழைத்தவர்.  

4. பெங்களூரில் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கு

அக்.22,2011. பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை, திருப்பீட கலாச்சார அவை பெங்களூரில் இம்மாதம் 25 முதல் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
உறுதியான உலகளாவியப் பொருளாதார அமைப்பு : சந்தைப் பொருளாதாரத்தில் அதன் வெளிப்பாடு என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கை கர்நாடக மாநில முதலமைச்சர் வி.சதானந்த் கவுடாவும் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோவும் தொடங்கி வைக்கின்றனர்.
ஊழலுக்கு எதிராகப் போராடி வருவதில் பரவலாக அறியப்படும் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்ட்ர் சந்தோஷ் ஹெக்டே நிறைவு உரை வழங்குவார்.
இந்தியாவின் உறுதியான சனநாயகம், அதன் வளமையான கலாச்சாரப் பாரம்பரியம், பன்மைக் கலாச்சார, பல்சமயச் சூழல் போன்றவற்றின் அடிப்படையில் இக்கருத்தரங்கு இந்தியாவில் நடைபெறுவதாக திருப்பீட கலாச்சார அவை கூறியது.

5. இரஷ்ய மொழியில் முதன் முறையாக உலக மறைபோதக ஞாயிறு

அக்.22,2011. கஜகஸ்தான் குடியரசில் முதன் முறையாக இரஷ்ய மொழியில் உலக மறைபோதக ஞாயிறு சிறப்பிக்கப்படவிருக்கின்றது என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
கஜகஸ்தான் குடியரசில் 2008ம் ஆண்டில் பாப்பிறை மறைபோதகக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்நாட்டில் உலக மறைபோதக ஞாயிறு குறித்த விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்தும் வண்ணம் அஞ்ஞாயிறின் முக்கியத்துவம் குறித்த விபரங்களை இரஷ்ய மொழியில் அந்நாடெங்கும் அனுப்பியிருப்பதாக இக்கழகங்களின் தேசிய இயக்குனர் அருட்பணி பொனவெந்தூர் காரோஃபாலோ கூறினார்.
அக்டோபர் 23ம் தேதியான இஞ்ஞாயிறன்று திருச்சபையில் 85வது உலக மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுகின்றது.
2009ம் ஆண்டில் வெளியான புள்ளி விபரங்களின்படி உலகில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 118 கோடியே  6 இலட்சத்து 65 ஆயிரம் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிகம்.

6. மத்திய கிழக்கில் சமய சுதந்திரமும் மனித உரிமைகளும் மதிக்கப்பட மாரனைட் முதுபெரும் தலைவர் அழைப்பு

அக்.22,2011. மத்திய கிழக்கு நாடுகள் சமய சுதந்திரத்திற்கும் மனித உரிமைகள் மதிக்கப்படவும் ஆதரவு வழங்காவிடில், அரபு வசந்தம் என அழைக்கப்படும் தற்போதைய அரபு நாடுகளில் எழுந்துள்ள மக்கள் எழுச்சி அரபுக் குளிர்காலமாக மாறிவிடும் என்று லெபனன் மாரனைட் ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் பெக்காரா ராய் எச்சரித்தார்.
வட ஆப்ரிக்கா மற்றும் பிற அரபு நாடுகளில் இவ்வாண்டில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன என்றும், தலைவர்கள் அரசையும் மதத்தையும் பிரிக்கும் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்றும் முதுபெரும் தலைவர் ராய் கூறினார்.
இந்த நாடுகளில் சுதந்திரம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் மனித உரிமைகள் மற்றும் சனநாயக விழுமியங்கள் அமலில் இருப்பதையும் தாங்கள் பார்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இந்த மதிப்பீடுகள் செயல்படுத்தப்படாவிட்டால் ஈராக்கில் இடம் பெறுவது போல இந்நாடுகளிலும் உள்நாட்டுப் போர்கள் வெடிக்கும் எனவும் அதிகத் தவீரவாத அரசியலுக்கு இட்டுச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து இலட்சம் பாலஸ்தீனிய அகதிகளால் லெபனனில் தாங்கள் துன்பம் அனுபவித்ததையும் 1975ம் ஆண்டில் லெபனனில் பாலஸ்தீனியர்களோடு சண்டை தொடங்கியது என்பதையும் லெபனன் கத்தோலிக்கத் தலைவர் நினைவுகூர்ந்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இசுலாமியர் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் தங்களது மதிப்பீடுகளால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

7. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்து சர்வதேச சமுதாயம் புலன்விசாரணை செய்வதைத் தவிர்க்க காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் அழைப்பு

அக்.22,2011. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமுதாயம் புலன்விசாரணை செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளைப் புறக்கணித்துள்ளார் எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda.
கெய்ரோவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவது, தாங்கள் வலியுறுத்தி வரும் தேசிய ஒற்றுமைக்குப் பாதகமாக அமையும் என்றும் முதுபெரும் தலைவர் Shenouda மேலும் கூறினார்.
இவ்வன்முறையில் பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்ததையொட்டி இவ்வாறு கூறினார் அத்தலைவர்.
கெய்ரோவில் இம்மாதம் 9ம் தேதி காப்டிக் கிறிஸ்தவர்கள் அமைதியாக மேற்கொண்ட ஊர்வலத்தில் இடம் பெற்ற கலவரத்தில் சுமார் 28 பேர் இறந்தனர்.

8. கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை ஓர் ஆய்வு முடிவு

அக்.22,2011. கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மூளைப் புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்று, இது குறித்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டென்மார்க்கில் வாழும் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேரிடம் சுமார் இருபது ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவு கிடைத்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கும், அவ்வகையில் கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்களுக்கும் இடையே மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஒரே அளவில்தான் உள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரித்தானிய மருத்துவப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும், வியாபாரத் தேவைகளுக்காக கைபேசிகளைப் பயன்படுத்துவோர் இவ்வாய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று சொல்லி, சில நிபுணர்கள் இந்த ஆய்வைக் குறை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment