1. உலக அமைதிக்கான அசிசி கூட்டம் குறித்த விவரங்கள்
2. அசிசி உலக அமைதி நாளில் ஒதுக்கப்பட்டிருக்கும் அமைதி செபநேரம் ஆசிய ஆன்மீக முறையைத் தழுவியதாய் உள்ளது - வத்திக்கான் அதிகாரி
3. அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்று பெங்களூரில் திறக்கப்பட்டது
4. கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் தெளிவாக நிலைக்க வைப்பது கத்தோலிக்க விசுவாசிகளின் பணி – தென் அமெரிக்க ஆயர்
5. அருள்தந்தை Tentorioவின் அடக்கச் சடங்கில் 15000க்கும் அதிகமான விசுவாசிகள்
6. ஏழை நாடுகளின் கச்சாப்பொருட்களின் மூலம் இலாபம் அடைவோர் அந்நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்
7. அணு ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததென கூறப்பட்ட B 53 செயல் இழக்கம் செய்யப்பட்டது
8. 2009ம் ஆண்டு வலம்வந்த 16 இலட்சம் கோடி டாலர் சட்டத்திற்குப் புறம்பான 'அழுக்குப்பணம்'
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உலக அமைதிக்கான அசிசி கூட்டம் குறித்த விவரங்கள்
அக்.26,2011. 'உண்மையின் திருப்பயணம் அமைதியின் திருப்பயணம்' என்ற தலைப்பில் உலக அமைதிக்காக இத்தாலியின் அசிசியில் இடம்பெறும் பல்சமயக் கூட்டம் குறித்த முழு விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
27ம் தேதி வியாழனன்று காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கு வத்திக்கான் இரயில் நிலையத்திலிருந்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் ஏனைய மதப்பிரதிநிதிகளையும் ஏற்றிச் செல்லும் இரயில், 9.45 மணிக்கு அசிசி நகரை அடைந்த பின், அசிசி குன்றின் அடிவாரத்திலுள்ள சாந்தா மரியா தெல்லி ஆஞ்சலி என்ற பசிலிக்காப் பேராலயத்தில் 10.15லிருந்து 12.30 வரை பல்சமயப் பிரதிநிதிகளின் கூட்டம் திருத்தந்தையின் பங்கேற்புடன் இடம்பெறும்.
மதிய உணவிற்குப்பின் பல்சமயப் பிரதிநிதிகள், தங்கள் அறைகளில் தனிப்பட்ட செபங்களில் ஈடுபட்டிருக்க, சாந்தா மரியா தெல்லி ஆஞ்சலி பசிலிக்காவிலிருந்து இளைஞர்களின் அமைதி நடைபயணம் புனித பிரான்சிஸ் அசிசி பேராலயம் நோக்கி துவங்கும். உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு திருத்தந்தையும் பல்சமயப் பிரதிநிதிகளும் பங்குபெறும் கூட்டமும் அதன் இறுதில் மதப்பிரதிநிதிகள் புனித பிரான்சிசின் கல்லறையைத் தரிசிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறும்.
வியாழன் இரவே சிறப்பு இரயிலில் திருத்தந்தையுடன் உரோம் நகர் வந்தடையும் பல்சமய அங்கத்தினர்களை வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை.
பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே ஏற்பாடுச் செய்யும் மதிய உணவு விருந்திலும் கலந்து கொள்வர் இப்பிரதிநிதிகள்.
2. அசிசி உலக அமைதி நாளில் ஒதுக்கப்பட்டிருக்கும் அமைதி செபநேரம் ஆசிய ஆன்மீக முறையைத் தழுவியதாய் உள்ளது - வத்திக்கான் அதிகாரி
அக்.26,2011. இத்தாலியின் அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நடைபெறும் உலக அமைதி நாள் பல்சமயக் கூட்டத்தின்போது அமைதி செபநேரம் ஒதுக்கப்பட்டிருப்பது ஆசிய ஆன்மீக முறையைத் தழுவியதாய் உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தாய்லாந்தில் பிறந்தவரும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் நேரடிச் செயலருமான பேரருள்திரு Andrew Thanya-anan Vissanu, ஆசிய மக்களிடையே மௌனம் வலிமை மிக்கதொரு செபமாகக் கருதப்படுகிறது என்றும், இவ்வியாழனன்று அசிசி நகரில் மௌனம் கடைபிடிக்கப்படுவதை ஆசிய சமயத் தலைவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் என்றும் கூறினார்.
இக்கூட்டத்தின் முடிவில் அனைத்து மதத்தலைவர்களும் அளிக்கவிருக்கும் அமைதி உறுதிமொழி சீன மொழியில் வாசிக்கப்படும் என்று கூறிய பேரருள்திரு Vissanu, சீனாவிலிருந்து முதன் முறையாக பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் Shaolin மடத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ள துறவிகள் என்றும் சுட்டிக் காட்டினார்.
11 நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டுள்ள 68 புத்த பிக்குகள், ஜப்பானிலிருந்து முதன் முறையாக நான்கு புதிய சமயங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ள 13 பிரதிநிதிகள் உட்பட பல மதத்தைச் சார்ந்தவர்கள் ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தியாவிலிருந்து இந்து, சமணம், சீக்கியம் உட்பட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள், மகாத்மா காந்தியின் பேரன் இராஜ்மோகன், சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் அடங்கிய 18 பேர் குழு ஒன்று இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்று பெங்களூரில் திறக்கப்பட்டது
அக்.26,2011. இந்தியாவிற்கென நியமனம் பெற்றுள்ள திருப்பீடத்தூதர் பேராயர் Salvatore Pennacchio பெங்களூரில் இச்செவ்வாயன்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்றைத் திறந்தார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் பெயரால் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள இந்த முதல் கோவிலை பேராயர் Pennacchio திறந்து வைத்த இந்த விழாவில், கர்நாடகாவில் பணி புரியும் 13 ஆயர்களும் கலந்து கொண்டனர். அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் திரு உருவம் ஒன்றும் இவ்விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் கர்நாடகா கத்தோலிக்கர்களுக்கும், பெங்களூர் விசுவாசிகளுக்கும் கிடைத்த ஒரு பெரும் வரம் என்று பெங்களூர் பேராயர் Bernard Moras கூறினார்.
அஞ்ச வேண்டாம் என்று அருளாளர் இரண்டாம் ஜான்பால் தன் மறையுரைகளில் அடிக்கடி கூறி வந்ததை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்திய திருப்பீடத்தூதர் பேராயர் Pennacchio, கர்நாடகாவில் தற்போது நிகழும் பல வன்முறைகளின் நடுவே அஞ்சாமல் வாழ அருளாளர் தன் பரிந்துரையால் விசுவாசிகளைக் காப்பார் என்று கூறினார்.
அருளாளர் இரண்டாம் ஜான் பால் 1986ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட பொது, மங்களூர் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
4. கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் தெளிவாக நிலைக்க வைப்பது கத்தோலிக்க விசுவாசிகளின் பணி – தென் அமெரிக்க ஆயர்
அக்.26,2011. புதிய மறைபரப்புப் பணியில் கத்தோலிக்க விசுவாசிகள் முழுமையாக ஈடுபட்டு, பொது வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை இன்னும் தெளிவாக நிலைக்க வைப்பது அவர்கள் பணி என்று தென் அமெரிக்காவின் சிலி நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
இன்றைய உலகில் நிரந்தர அம்சங்கள் எதுவென்றும், கடந்து செல்லும் அம்சங்கள் எதுவென்றும் புரியாத ஒரு சூழலில் மக்கள் வாழ்ந்து வருவதால், பொது நிலையினர் நிரந்தமானவைகள் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பும் ஒரு முக்கிய பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிலி நாட்டின் Santiago உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Ricardo Ezzati கூறினார்.
‘கத்தோலிக்கர்களும் பொது வாழ்வும்’ என்ற தலைப்பில் அண்மையில் சிலி நாட்டில் நடைபெற்ற நான்காவது அகில உலகக் கருத்தரங்கில் பேசிய பேராயர் Ezzati, புதிய மறைபரப்புப் பணியில் பொதுநிலையினர் ஈடுபடுவதற்கு சிறப்பான அழைப்பை விடுத்தார்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட CNA என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்தின் இயக்குனர் Alejandro Bermudez, இவ்வுலகம் பல்வேறு அச்சங்களால் அமைதி இழந்து தவிக்கிறதென்றும், அருளாளர் இரண்டாம் ஜான் பால் தன் செய்திகளில் அடிக்கடி பகிர்ந்து வந்த 'அஞ்ச வேண்டாம்' என்ற கருத்தை உலகில் பரப்புவது இன்றைய இளையோரின் முக்கியக் கடமை என்றும் வலியுறுத்தினார்.
5. அருள்தந்தை Tentorioவின் அடக்கச் சடங்கில் 15000க்கும் அதிகமான விசுவாசிகள்
அக்.26,2011. அருள்தந்தை Fausto Tentorioவைக் கொலை செய்தவர்கள் தங்கள் குற்றங்களுக்கு வருந்தி மனம் திரும்புவதையே தாய் திருச்சபை விரும்புகிறதென்று பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர் கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் அக்டோபர் 17 அன்று கொலை செய்யப்பட்ட மறைபணியாளர் Fausto Tentorioவின் அடக்கச்சடங்கை இச்செவ்வாயன்று முன்னின்று நடத்திய Kidapawan மறைமாவட்ட ஆயர் Romulo de la Cruz, அருள்தந்தை Tentorio பழங்குடியினர் மத்தியில் மேற்கொண்ட இந்த அன்புப்பணி தொடரும் என்றும், அருள்தந்தையின் சாட்சிய மரணத்தால் பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை இன்னும் உறுதி பெறும் என்றும் கூறினார்.
அருள்தந்தை Tentorioவின் அடக்கச் சடங்கில் ஆறு ஆயர்கள், நூற்றுக்கணக்கான குருக்கள் மற்றும் 15,000க்கும் அதிகமான விசுவாசிகள் கலந்து கொண்டனர் என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதற்கிடையே, அருள்தந்தையின் கொலையில் இராணுவத்தினர் சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், இக்கொலை வழக்கை பாராளுமன்ற அளவில் விசாரிக்க வேண்டும் என்று "Bayan Muna" என்ற மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய அரசுத் தலைவர் Benigno Aquino 2010ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து இதுவரை தீர்க்கப்படாத மர்மக் கொலைகள் 54 நிகழ்ந்துள்ளன என்று FIDES செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.
6. ஏழை நாடுகளின் கச்சாப்பொருட்களின் மூலம் இலாபம் அடைவோர் அந்நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்
அக்.26,2011. உலகின் ஏழை நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் புதிய வரி முறை ஒன்றை புகுத்த வலியுறுத்துமாறு இங்கிலாந்தை விண்ணப்பித்துள்ளது ஸ்காட்லாந்தின் கத்தோலிக்க உதவி நிறுவனமான SCIAF.
ஏழை நாடுகளின் உற்பத்திப் பொருட்களினால் பெரும் இலாபம் அடையும் வெளிநாட்டு அமைப்புகள், அந்நாட்டு மக்களுக்கான பங்கை வழங்க முன்வர வேண்டும் என இவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மூன்றில் இரு பகுதி மக்கள் ஏழ்மையில் வாடும் சாம்பியா நாட்டில், அதன் ஏற்றுமதியில் 70 விழுக்காடு கனிமச் சுரங்கத்திலிருந்து இருக்க, தேசிய வருமானத்தில் 10 விழுக்காடே கனிமச் சுரங்கத்திலிருந்து கிட்டுவதாக உள்ளது என்பதை உதாரணமாகக் காட்டியுள்ளது இக்கத்தோலிக்க உதவி அமைப்பு.
ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் ஸ்காட்லாந்து கத்தோலிக்க உதவி அமைப்பு முன்வைத்துள்ள இப்புதிய வரி விதிப்பு விண்ணப்பத்திற்கு அந்நாட்டின் எண்ணற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
7. அணு ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததென கூறப்பட்ட B 53 செயல் இழக்கம் செய்யப்பட்டது
அக்.26,2011. அமேரிக்கா இரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே உருவாகியிருந்த பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததென கூறப்பட்ட B53 என்ற அணு ஆயுதம் Texas நகரில் இச்செவ்வாயன்று செயல் இழக்கம் செய்யப்பட்டதென்று BBC செய்தியொன்று கூறுகிறது.
10000 பவுண்டு எடையுள்ள B53 அணு குண்டு 1945ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷீமாவை அழித்த அணுகுண்டை விட 600 முறை அதிக சக்தி வாய்ந்தேன்று கூறப்படுகிறது.
1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அணுகுண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத் தளவாடங்களின் ஒரு பகுதியாக 1997ம் ஆண்டு வரை வைக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.
இந்த அணுகுண்டிலிருந்து மிகவும் கவனமாகப் பிரிக்கப்பட்ட 136 கிலோ கிராம் எடையுள்ள உரேனியம் பத்திரமாகப் புதைக்கப்பட்டுள்ளது என்றும் BBCன் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.
B53 அணுகுண்டை செயல் இழக்கச் செய்தது உலகில் இன்னும் சிறிது பாதுகாப்பான சூழலை உருவாகியுள்ளதென்று இக்குழுவின் தலைவரான Thomas D'Agostino செய்தியாளர்களிடம் கூறினார்.
1967ம் ஆண்டு பனிப்போரின் உச்சகட்டம் நிலவி வந்த காலங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 31,225 அணுசக்தி அடங்கிய ஆயுதங்கள் இருந்தன என்றும், தற்போது அந்நாட்டில் 5113 ஆயுதங்களே உள்ளன என்றும், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை இவ்வாண்டு மே மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
8. 2009ம் ஆண்டு வலம்வந்த 16 இலட்சம் கோடி டாலர் சட்டத்திற்குப் புறம்பான 'அழுக்குப்பணம்'
அக்.26,2011. 2009ம் ஆண்டில் மட்டும் உலகின் பல குற்றவாளிகள் 1.6 ட்ரில்லியன், அதாவது, 16 இலட்சம் கோடி டாலர்களுக்கு ஈடான பணத்தை உலகச் சந்தையில் உலவ விட்டுள்ளனர் என்றும், இந்தத் தொகையில் சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள் வர்த்தகமே பெரியத் தொகை என்றும் ஐ.நா.வெளியிட்டுள்ள ஓர் புதிய அறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டில் உலகின் அனைத்து நாடுகளின் உற்பத்தி அளவீட்டில் இந்த 16 இலட்சம் கோடி டாலர்கள் கணிசமான ஒரு தொகை என்று ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றப் பிரிவு என்ற அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
‘சட்டத்திற்குப் புறம்பான பணப்புழக்கம்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உலகின் பல நாடுகளில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் பணப்புழக்கத்தின் மதிப்பு 21 இலட்சம் கோடி டாலர்கள் என்றும், இவற்றில் ஒரு விழுக்காடு பணமே அரசு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான இந்த 'அழுக்குப்பணம்' இலஞ்சம் கொடுப்பது, தீவிர வாத அமைப்புக்களை ஆதரிப்பது ஆகியவற்றில் பெரும்பாலும் செலவிடப்படுகிறது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
உலகில் 2009ம் ஆண்டு வலம்வந்த இந்த 16 இலட்சம் கோடி டாலர் 'அழுக்குப் பணத்தில்' 84 ஆயிரம் கோடி டாலர்கள் Cocaine என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகத்தில் மட்டுமே ஈட்டப்பட்ட இலாபம் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment