Saturday 22 October 2011

Catholic News - hottest and latest - 21 October 2011

1. சமயச் சுதந்திரமும் வழிபாட்டுச் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு நெதர்லாந்து அரசு விழிப்புடன் செயல்படும் : திருத்தந்தை நம்பிக்கை

2. கடாஃபியின் இறப்பு, கொடூரமும் அடக்குமுறையும் கொண்ட ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது - திருப்பீடப் பத்திரிகை அலுவலகம்

3. உலகம் ஒரு மனிதனின் இறப்பைக் கொண்டாடவில்லை கர்தினால் டர்க்சன்

4. புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மாரத்தான் ஓட்டம்

5. சியன்னா நகர் புனித கத்ரீன் பற்றிய சர்வதேச கருத்தரங்கு அக்.27-29

6. நற்செய்தியை அறிவிக்க வியட்நாம் கத்தோலிக்கருக்கு அழைப்பு

7. நேபாளத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

8. மியான்மார் இராணுவம் குடிமக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு உரிமைக் குழுக்கள் அழைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. சமயச் சுதந்திரமும் வழிபாட்டுச் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு நெதர்லாந்து அரசு விழிப்புடன் செயல்படும் : திருத்தந்தை நம்பிக்கை

அக்.21,2011. நெதர்லாந்து மற்றும் உலகின் பிற நாடுகளில் சமயச் சுதந்திரமும் வழிபாட்டுச் சுதந்திரமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதற்கு நெதர்லாந்து அரசு விழிப்புடன் செயல்படும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளிக்கிழமை, திருப்பீடத்துக்கான நெதர்லாந்து நாட்டுப் புதிய தூதர் Joseph Weterings இடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்திய சமயச் சுதந்திரம் குறித்த விவகாரம் திருப்பீடத்துக்குக் கவலை தருவதாக இருக்கின்றது என்று கூறினார்.
சமயச் சுதந்திரம், உலகின் சில பகுதிகளில் சட்டரீதியானக் கட்டுப்பாடுகள் மூலம் அச்சுறுத்தப்பட்டு வரும்வேளை, சட்டரீதியாக இது பாதுகாக்கப்படும் பல சமூகங்களில்கூட மதத்திற்கு எதிரான மனநிலையால் இது அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும் திருத்தந்தை கூறினார்.
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் தொழில் ஆகியவற்றை ஊக்கமிழக்கச் செய்வதற்கு டச்சு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.
தனிப்பட்டவர்க்குச் சுதந்திரம் வழங்குவதில் நெதர்லாந்து நாடு நீண்டகாலமாக முன்னணியில் நிற்கின்றது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தச் சுதந்திரப் போக்கினால் மக்கள், தங்களை அல்லது பிறரைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ஏழைகள், நோயாளிகள், கருவில் வளரும் குழந்தைகள், முதியோர், அநியாயமாய்ப் பாகுபடுத்தப்படும் சிறுபான்மையினர் உட்பட சமுதாயத்தில் குரல் அற்றவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் திருச்சபை, உலகில் நீதிக்கும் சரியான காரணங்களுக்கும் எதிராக இடம் பெறும் செயல்களை எதிர்க்கின்றது என்றும் கூறினார்.

2. கடாஃபியின் இறப்பு, கொடூரமும் அடக்குமுறையும் கொண்ட ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது - திருப்பீடப் பத்திரிகை அலுவலகம்

அக்.21,2011. லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபியின் இறப்பு, மனித மாண்பு மற்றும் சட்டம்-ஒழுங்கின் அடிப்படையில் அந்நாட்டில் புதிய அத்தியாயத்தைத் திறக்க வேண்டும் என்று திருப்பீடம் வலியுறுத்துகிறது.
கடாபி, தனது சொந்த ஊரான செர்த்தில் கொல்லப்பட்டார் என்ற செய்தி இவ்வியாழனன்று வெளியான சிலமணி நேரங்களில் அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், கடாஃபியின் இறப்பு, கொடூரமும் அடக்குமுறையும் கொண்ட ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது என்று கூறியது.
இந்த வட ஆப்ரிக்க நாட்டில் இரத்தம் சிந்துதல் முடிவுக்கு வந்துள்ளது என்றும், லிபியாவின் புதிய அரசு, சமூகநீதி மற்றும் ஒன்றிப்புணர்வில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையையும் அவ்வறிக்கை  வெளியிட்டுள்ளது.
லிபியச் சிறுபான்மை கத்தோலிக்கச் சமுதாயம் தனது தன்னலமற்ற சேவையின் மூலம், குறிப்பாக பிறரன்பு மற்றும் நலவாழ்வுப் பணிகள் மூலம் தனது சாட்சிய வாழ்வைத் தொடர்ந்து அளிக்கும் என்றும் திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தின் அறிக்கை கூறியது.
69 வயதாகும் சர்வாதிகாரி கடாஃபி, லிபியாவை சுமார் 42 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

3. உலகம் ஒரு மனிதனின் இறப்பைக் கொண்டாடவில்லை கர்தினால் டர்க்சன்

அக்.21,2011. கடாஃபியின் இறப்பு குறித்துப் பேசிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், உலகம் ஒரு மனிதனின் இறப்பையோ அல்லது ஒரு குற்றவாளியின் இறப்பையோ ஒருபோதும் கொண்டாட முடியாது என்று கூறினார்.
லிபியாவிற்கும் வட ஆப்ரிக்காவின் பிற பகுதிகளுக்கும் தேவையானது சில தலைவர்களிடமிருந்து மட்டும் விடுதலை அல்ல, மாறாக சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் உட்பட அனைவருக்கும் சுதந்திரம் தேவையாக இருக்கின்றது என்று கர்தினால் டர்க்சன் மேலும் கூறினார்.
சதாம் ஹூசேன் தூக்கில் போடப்பட்டபோது ஈராக்கில் நடந்தது போல, தற்போது லிபியாவிலும், கடாஃபியின் இறப்புக்காக வருந்துகிறவர்கள் இருப்பதால், அந்நாட்டிற்கு   ஒப்புரவு அவசியம் என்றும், ஆப்ரிக்கக் கர்தினாலாகிய டர்க்சன் வலியுறுத்தினார்.
இன்னும், ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், லிபியாவில் போரிடும் தரப்புகள் ஆயுதங்களைக் கைவிட்டு ஒன்றிணைந்து அமைதியான முறையில் நாட்டைக் கட்டி எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4. புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மாரத்தான் ஓட்டம்

அக்.21,2011. புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், மாரத்தான் ஓட்டம் ஒன்று இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்டின் ஆசீருடன் தொடங்கியது.
இந்த ஓட்டத்தில் கொண்டு செல்லப்படும் ஜோதி இப்புதன் பொது மறைபோதகத்தின் போது திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது. 
திருத்தந்தை 2ம் ஜான் பால் விளையாட்டுகள் என அழைக்கப்படும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பெத்லகேமிலிருந்து எருசலேம் வரை அமைதி ஓட்டம் மற்றும் பல விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் விழாவாகிய அக்டோபர் 22ம் தேதி நிகழ்வும் இதில் அடங்கும்.
இந்த மாரத்தான் ஓட்டம் வருகிற செவ்வாயன்று நிறைவடையும்.

5. சியன்னா நகர் புனித கத்ரீன் பற்றிய சர்வதேச கருத்தரங்கு அக்.27-29

அக்.21,2011. சியன்னா நகர் புனித கத்ரீன் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 550ம் ஆண்டை முன்னிட்டு கத்ரீனாவும் அவரது மரபுரிமையும் என்ற தலைப்பில் இம்மாதம் 27 முதல் 29 வரை உரோமிலும் சியன்னாவிலும் சர்வதேச கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. 
இக்கருத்தரங்கு குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வெள்ளிக்கிழமை பேசிய திருப்பீட வரலாற்று அறிவியல் கழகத் தலைவர் பேரருட்திரு Bernard Ardura, புனித கத்ரீன் திருப்பீடத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்து விளக்கினார்.
1461ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திருத்தந்தை 2ம் பத்திநாதரால் புனிதராக அறிவிக்கப்பட்டார் புனித கத்ரீன். இப்புனிதரின் இறையியல் அறிவின் ஆழத்தை அங்கீகரிக்கும் விதமாக 1970ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை 6ம் பவுல், திருச்சபையின் மறைவல்லுனர் எனவும் இப்புனிதரை அறிவித்தார்.

6. நற்செய்தியை அறிவிக்க வியட்நாம் கத்தோலிக்கருக்கு அழைப்பு

அக்.21,2011. வியட்நாமில் கத்தோலிக்கரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உதவியாக அந்நாட்டுக் கத்தோலிக்கர் நற்செய்தியை அதிகமாகப் பரப்ப முன்வர வேண்டுமென்று தலத்திருச்சபைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஹூயு உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சுமார் ஆயிரம் குருக்கள், துறவிகள் மற்றும் பொது நிலையினருக்கு உரையாற்றிய ஹூயு துணை ஆயர் பிரான்சிஸ் சேவியர் லெ வான் ஹாங் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
வியட்நாமின் ஏறக்குறைய 8 கோடியே 60 இலட்சம் பேரில் 7 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்பதையும் ஆயர் ஹாங் சுட்டிக் காட்டினார்.
வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 85வது உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

7. நேபாளத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

அக்.21,2011. SIGNIS என்ற திருச்சபையின் உலகளாவிய சமூகத் தொடர்பு அமைப்பில், பெரும்பான்மையான இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு முதன்முறையாக இணைந்துள்ளது.
SIGNIS அமைப்பு, காட்மண்டுவில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் அதன் உறுப்பினராக இவ்வியாழனன்று இணைந்தது நேபாளம்.
19 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நேபாளத்திலிருந்து ஆறு பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேசிய Chirendra Satyal, நேபாளத்தில் கிறிஸ்தவ சமூகத் தொடர்பு பற்றிப் பேசும் போது அது கத்தோலிக்கம் சாராத ஊடகச் செய்திகள் என்றே பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது என்று கூறினார்.
இந்துக்களைக் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளத்தில் கிறிஸ்தவர்கள் சுமார் நான்கு விழுக்காட்டினர். இவர்களில் கத்தோலிக்கர் சுமார் 9,000 பேர் மட்டுமே.
மேலும், நேபாள நாடாளுமன்றத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அந்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை நான்காயிரம் அதிகரித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.    

8. மியான்மார் இராணுவம் குடிமக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு உரிமைக் குழுக்கள் அழைப்பு

அக்.21,2011. மியான்மாரில் குடிமக்கள் மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு மனித உரிமைக் குழுக்கள் அந்நாட்டுத் தலைவர் தெய்ன் செயினுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மியான்மார் அரசுப் படைவீரர்கள், கச்சின் மாநிலத்திலுள்ள கத்தோலிக்க ஆலயத்தைத் தாக்கி, அவ்வாலயத்தில் இருந்த மக்கள் மீது சுட்டனர் எனவும், பங்குக்குருவின் உதவியாளரை துப்பாக்கி முனையால் அடித்துள்ளனர் எனவும் சமய உரிமைக்கான அமைப்பு ஒன்று கூறியது.
உலகளாவிய கிறிஸ்தவ  ஒருமைப்பாடு (CSW) என்ற சமய உரிமைக்கான அமைப்பின் அறிக்கையின்படி, படைவீரர்கள் 19 வயது இளைஞன் ஒருவனையும் ஒரு விவசாயியையும் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தெரிகிறது.
இச்சம்பவங்களைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள CSW அமைப்பு, மியான்மாரில் குடிமக்கள் தாக்கப்படுவது  நிறுத்தப்படுமாறு அரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

No comments:

Post a Comment