An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Monday, 31 October 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 31 October 20...
robert john kennedy: Catholic News - hottest and latest - 31 October 20...: 1. பிரசில் சமூக வளர்ச்சிப் பணிகளில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து பாப்பிறை 2. திருத்தந்தையின் மூவேளை செப உரை 3. பெருமழையால் பாதிக்கப்ப...
Catholic News - hottest and latest - 31 October 2011
1. பிரசில் சமூக வளர்ச்சிப் பணிகளில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து பாப்பிறை
2. திருத்தந்தையின் மூவேளை செப உரை
3. பெருமழையால் பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் தாய்லாந்து மக்களுக்கான திருத்தந்தையின் செபம்
4. இடுகாடு வேண்டி நேபாள கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்
5. பழைய ஏற்பாட்டின் மூன்று முக்கிய நபர்கள் குறித்த திரைப்படங்கள்
6. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை
7. 2010ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பிரசில் சமூக வளர்ச்சிப் பணிகளில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து பாப்பிறை
அக்.31,2011. மனித வாழ்வின் பாதுகாப்பு, குடும்ப மதிப்பீடுகளை ஏற்று நடத்தல், கடுமையான உழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை போன்ற நல் மதிப்பீடுகளில் பிரசில் சமூகம் வளர தலத்திருச்சபை வழங்கியுள்ள உதவிகள் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான பிரசில் நாட்டின் புதிய தூதுவர் அல்மிர் ஃபிராங்கோ தெ சபார்பூடா (Almir Franco de SABARBUDA) என்பவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற நிகழ்வின்போது உரையாற்றிய திருத்தந்தை, 1500ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அந்நாட்டில் செயல்படத் துவங்கிய திருச்சபை, தன் சாட்சியங்களை அந்நாட்டு கலாச்சரத்திலும், மதக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல், அம்மக்களின் வாழ்விலும் கொண்டுள்ளது என்றார்.
இன்றைய சமூகத்தில் திருச்சபையின் பணி என்பது மனிதாபிமான மற்றும் கல்விப்பணிகளாக மட்டும் தொடர்வதில்லை, மாறாக சமூகத்தின் ஒழுக்க ரீதி வளர்ச்சிக்கும் மனச்சான்று உருவாக்கலுக்கும் உதவுவதாகத் தொடர்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
2008ம் ஆண்டு திருச்சபைக்கும் பிரசில் நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பின் ஒப்பந்தம் குறித்தும் இங்கு குறிப்பிட்ட திருத்தந்தை, இதன் வழி தலத்திருச்சபை தன் முழு சக்தியுடன் ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சிக்கென உழைக்க ஊக்கம் கிட்டியுள்ளது என்றார்.
அரசின் மதச்சார்பற்ற போக்கை பாதிக்காத வகையில், பொதுநலனை மனதில் கொண்டதாய் அனைத்துப் பள்ளிகளிலும் மத வகுப்புகள் இடம்பெற வேண்டியதன் தேவை குறித்தும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
2013ம் ஆண்டில் ரியோ தி ஜெனீரோவில் இடம்பெற உள்ள 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் தான் பங்குபெறுவதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
2. திருத்தந்தையின் மூவேளை செப உரை
அக்.31,2011. சொல்வதைச் செயலில் காட்டாத மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் போலல்லாமல் அன்பெனும் முதற்கட்டளையைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த பின்னரே மற்றவர்களுக்கு போதித்தார் இயேசு என தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றைக் கடைபிடித்து நடந்து வாருங்கள், ஆனால் அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள் என்று இயேசு கூறும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த பாப்பிறை, தந்தையின் விருப்பத்திற்கு விசுவாசமாக நடந்த இயேசுவின் பாதையைப் பின்பற்றி செல்லவேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்றார். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காகவே செய்யும் தலைவர்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிடும் இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டனாக இருக்கட்டும்' எனக் கூறியதையும் எடுத்துரைத்து, இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் என மேலும் உரைத்தார்.
3. பெருமழையால் பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் தாய்லாந்து மக்களுக்கான திருத்தந்தையின் செபம்
அக்.31,2011. தன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், தாய்லாந்தின் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.
கடந்த ஐம்பது ஆண்டுகளிலேயே மிகப்பெரிதென எண்ணப்படும் தாய்லாந்தின் அண்மை பெருமழையால் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அண்மையில் பெய்த பெருமழையில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. இடுகாடு வேண்டி நேபாள கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதம்
அக்.31,2011. இறந்த கிறிஸ்தவர்களை அடக்குவதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என நேபாள கிறிஸ்தவர்களின் தொடர்ந்த விண்ணப்பம் அந்நாட்டு அரசால் செவிமடுக்கப்படாததைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நேபாளத்தின் பசுபதிநாத் இந்து கோவிலுக்குரிய நிலத்தில், இறந்த உடல்களை புதைத்து வந்த கிறிஸ்தவர்களுக்கு அக்கோவில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கடந்த பிப்ரவரி முதல் அரசிடம் இடுகாட்டிற்கான இடம் கேட்டு போராடி வருகின்றனர் நேபாள கிறிஸ்தவர்கள்.
இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவானவர்களாக வாழும் கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் உறவினர்களின் உடல்களைப் புதைக்க இடமின்மை காரணமாக இரவு நேரங்களில் இரகசியமாக ஆற்றில் வீசுவதும் இடம்பெற்று வருகின்றது.
5. பழைய ஏற்பாட்டின் மூன்று முக்கிய நபர்கள் குறித்த திரைப்படங்கள்
அக்.31,2011. பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்களான நோவா, மோசே மற்றும் யூதா மக்கபே ஆகிய மூவர் குறித்தும் பெரும் பொருட்செலவில் திரைப்ப்டங்களை உருவாக்க உள்ளதாக ஹாலிவுட்டின் இரு முக்கிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நோவாவை மையப்படுத்திய திரைப்படத்தை புதிதாக எடுக்க உள்ளதாக பேராமவுண்ட் பிக்சர்ஸ் அறிவித்துள்ள அதேவேளை, மோசே குறித்த திரைப்படத்தை 'கடவுள்களும் மன்னர்களும்' என்ற தலைப்பில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கைக் கொண்டும், யூதா மக்கபே என்ற திரைப்படத்தை மெல் கிப்சனைக் கொண்டும் இயக்க உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.
6. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை
அக்.31,2011. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்வதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 விழுக்காட்டினர் நன்கு படித்தவர்கள்; 19.8 விழுக்காட்டினர் படிக்காதவர்கள் எனவும், திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் இநத ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டதில், அதிக எண்ணிக்கையுடன், அதாவது 12.3 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
7. 2010ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்
அக்.31,2011. கடந்த 2010ம் ஆண்டில், 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டனர், 5,484 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டனர், 1,408 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்' என, மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், நாடு முழுவதும் நடந்த கொடூரமான குற்றங்களில், 33 ஆயிரத்து 908 பேர் கொல்லப்பட்டனர். இதில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 15 ஆயிரத்து 787 பேர்; 1,408 பேர் அப்பாவி குழந்தைகள் என, அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டனர். குழந்தைகள் கடத்தலில், தலைநகர் டில்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு, 2,982 குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதற்கு அடுத்ததாக, பீகாரில் 1,359, உ.பி.,யில் 1,225, மகாராஷ்டிராவில் 749, ராஜஸ்தானில் 706, ஆந்திராவில் 581 குழந்தைகளும் கடத்தப்பட்டனர். இவ்வாறு, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Saturday, 29 October 2011
robert john kennedy: Catholic News - hottest and latest - 29 October 20...
robert john kennedy: Catholic News - hottest and latest - 29 October 20...: 1. நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் பாப்பிறை 2. பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைம...
Catholic News - hottest and latest - 29 October 2011
1. நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் பாப்பிறை
2. பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
3. கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை
4. உக்ரைன் நாட்டில் நீதி மிகப்பெரும் அளவில் குறைவு படுவதாக கிரேக்க கத்தோலிக்க ரீதி கவலை
5. விவசாயிகள் தற்கொலை :மகாராஷ்டிரா முன்னிலை
6. செயற்கை இரத்தம் தயாரித்து இங்கிலாந்து அறிவியலாளர்கள் சாதனை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்கிறார் பாப்பிறை
அக் 29, 2011. நற்செய்தி நோக்கித் திரும்பும் போது மனமாற்றமும் மனமாற்றத்தின் வழி வளர்ச்சிப் பணிகளுக்கான அர்ப்பணமும் இடம்பெறுகிறது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அட்லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த அங்கோலா மற்றும் சவோதோம் பிரின்சிபே நாடுகளின் ஆயர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, நற்செய்தி அறிவித்தல் என்பது வளர்ச்சிக்கு உதவும் முக்கியக் கூறுகளுள் ஒன்றாக இருக்கிறது என்றார்.
ஆப்ரிக்க நாடுகளில் கத்தோலிக்கத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்தும் ஆயர்களுக்கு சுட்டிக்காட்டிய பாப்பிறை, திருமணப் பொறுப்புணர்வுகளை ஏற்கும் வண்ணம் இளைய தலைமுறையினரை மனிதகுல மற்றும் ஆன்மீக முதிர்ச்சி நோக்கி தயாரித்து அழைத்துச் செல்ல வேண்டிய கடமை திருச்சபைக்கு உள்ளதையும் எடுத்துரைத்தார்.
பில்லி சூன்யம் என்ற பெயரால் குழந்தைகளும் முதியோர்களும் உயிரிழக்கும் சூழல்களில், தலத்திருச்சபை, உண்மையின் பக்கம் நின்று தன் குரலை எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பாப்பிறை.
திருமுழுக்கு பெற்ற மக்களும் கூட கிறிஸ்தவத்திற்கும் ஆப்ரிக்க பாரம்பரிய மதங்களுக்கும் இடையே பாகுபட்டவர்களாய் உழன்று வரும் சூழல்களில், புதிய நற்செய்தி அறிவித்தலின் அவசியத்தை அங்கு திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஆப்பிரிக்க நாடுகள் பல, தங்கள் இனம், மொழி ஆகியவைகளையும் தாண்டிச் சென்று, அண்மை நாடுகளின் மக்களுக்கு உதவி வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பிறை, இத்தகையைப் பணிகள் தொடர்ந்து இடம்பெற தலத்திருச்சபைகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பெனின் நாட்டிற்கான தன் அடுத்த திருப்பயணம் குறித்தும் ஆயர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
2. பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
அக் 29, 2011. பங்களாதேஷின் தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதே மறைமாவட்ட குரு செபஸ்தியான் டுடுவை அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தலைநகர் டாக்காவின் தூய ஆவி உயர் குருமடத்தின் துணை அதிபராகப் பணியாற்றி வரும் குரு டுடு 1967ம் ஆண்டு சங்குரா எனுமிடத்தில் பிறந்தவர். இதே குருமடத்தில் பயின்று 1999ம் ஆண்டின் இறுதியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இரு பங்குதளங்களில் பணிபுரிந்துள்ளதுடன் உரோம் நகரின் உர்பான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள குரு செபஸ்தியான் டுடு, 2009ம் ஆண்டு முதல் டாக்கா தூய ஆவி உயர் குருமடத்தின் துணை அதிபராகப் பணியாற்றி வருகிறார்.
3. கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையில் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை
அக் 29, 2011. கொல்கத்தாவின் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றே நாட்களில் 29 குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அறிவித்துள்ளார் இந்தியாவின் Asansol ஆயர் சிப்ரியன் மோனிஸ்.
அரசு மருத்துவமனையில் இடம்பெற்ற குழந்தைகளின் திடீர்ச் சாவுகளுக்கு அரசு பொறுப்பேற்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் மோனிஸ்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் அவசரச் சிகிச்சைகளை வழங்கும் வசதி திருச்சபையிடம் இல்லையெனினும், குழந்தை இறப்புகளை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வுத் திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்த உள்ளதாக ஆயர் மோனிஸ் மேலும் கூறினார்.
4. உக்ரைன் நாட்டில் நீதி மிகப்பெரும் அளவில் குறைவு படுவதாக கிரேக்க கத்தோலிக்க ரீதி கவலை
அக் 29, 2011. உக்ரைன் நாட்டில் நீதி என்பது மிகப்பெரும் அளவில் குறைவுபடுவதாக தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் கிரேக்க கத்தோலிக்க ரீதி முதுபெரும் தலைவர் Sviatoslav Shevchuk.
உக்ரைன் நாட்டின் முன்னாள் பிரதமர் Yulia Tymoshenkoவிற்கு வழங்கப்பட்டுள்ள அண்மை தீர்ப்பு குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட முதுபெரும் தலைவர், அப்பாவி மக்கள் தொடர்ந்து தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணமே என்றார்.
சட்டம் என்பது மனித மாண்பு, மனித விடுதலை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும், அதேவேளை நீதித்துறையோ அச்சட்டம் அமுலாக்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும் என மேலும் கூறினார் முதுபெரும் தலைவர் Shevchuk.
குற்றவாளிகள் தப்பவும் அப்பாவிகள் தண்டனை பெறவும் உக்ரைனில் நீதி அமைப்பு பயன்படுத்தப்படுவது குறித்து தன் கவலையையும் வெளியிட்டார் அவர்.
5. விவசாயிகள் தற்கொலை :மகாராஷ்டிரா முன்னிலை
அக் 29, 2011. விவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தேசிய குற்றவியல் புள்ளிவிவர அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995 -ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான 16 ஆண்டு கால கட்டத்தில் சுமார் 2லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், முதல் எட்டு ஆண்டு கால இடைவெளியில் இத் தற்கொலைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 66 ஆக இருந்தது அடுத்த எட்டு ஆண்டுகளில் 30 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிய வருகிறது.
விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், அதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களும் இடம்பெறுகி்ன்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,155 ஆக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.
6. செயற்கை இரத்தம் தயாரித்து இங்கிலாந்து அறிவியலாளர்கள் சாதனை
அக் 29, 2011. அவசரத் தேவையின் போது உடனடியாக இரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதைத் தடுக்க, தற்போது இங்கிலாந்து அறிவியலாளர்கள் செயற்கை முறையில் இரத்தம் தயாரித்துள்ளனர்.
இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கி, அதை ஆய்வுக் கூடத்தில் வைத்து செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளனர்.
மனித உடலில் செலுத்தும்போது, எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாத இந்த இரத்தம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய அறுவைச் சிகிச்சை, இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்துவதன் மூலம் இலட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
robert john kennedy: Catholic News - hottest and latest - 28 October 20...
robert john kennedy: Catholic News - hottest and latest - 28 October 20...: 1. அசிசி நகர் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு 2. அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின்...
Catholic News - hottest and latest - 28 October 2011
1. அசிசி நகர் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
2. அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வுகள்
3. அசிசி உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலாவில் பல்சமயக் கூட்டம்
4. திருப்பீடமும் ஆர்த்தடாக்ஸ் சபையும் நடத்தவிருக்கும் கருத்தரங்கு
5. துருக்கியில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பணிகள் கிறிஸ்தவ அன்புக்கு சாட்சி - பேராயர் Ruggero Franceschini
6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது - அமெரிக்க ஆயர்
7. பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அசிசி நகர் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
அக்.28,2011. உலகில் அமைதியை விழையும், மற்றும் அமைதிக்காக உழைத்து வரும் பல கோடி மக்களின் பிரதிநிதிகளாக அசிசி நகரில் மதத்தலைவர்கள் மேற்கொண்ட ஒரு நாள் முயற்சிக்கு தன் நன்றியைத் தெரிவிப்பதாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று அசிசி நகரில் நடைபெற்ற பல் சமயக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியத் திருத்தந்தை, அசிசி நகரில் உணரப்பட்ட நல்லுறவு, உலகின் அனைத்து குழுக்களிடையேயும் உருவாவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.
வெகு தொலைவில் இருந்து, கடினமான பயணங்களை மேற்கொண்ட பல பிரதிநிதிகளின் முயற்சியைத் தனிப்பட்ட வகையில் பாராட்டியத் திருத்தந்தை, அனைத்து மதங்களின் சார்பில் உண்மையைத் தேடும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார்.
1986ம் ஆண்டில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்தது, எதிர்காலத்தின் தேவைகளைத் தீர்க்கமாகச் சிந்திக்க முடிந்த அவரது எண்ணங்களைத் தெளிவாக்குகிறது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, உலக அமைதி ஒரு தொடர் பயணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று கூறினார்.
இந்த ஒரு நாள் முயற்சிக்குப் பின் நாம் நமது இடங்களுக்கும், நம் பணிகளுக்கும் பிரிந்து செல்லும்போது, இந்தப் பயணத்தின் நல்லுணர்வுகளைத் தாங்கிச்செல்வோம் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.
திருத்தந்தையின் உரைக்குப் பின், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீஸியோ பெர்தோனே வழங்கிய விருந்தில் அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
2. அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வுகள்
அக்.28,2011. வன்முறையும், போரும், தீவிரவாதமும் இனி உலகில் ஒருபோதும் வேண்டாம்; கடவுளின் பெயரால் ஒவ்வொரு மதமும் உலகிற்கு நீதியை, அமைதியை, மன்னிப்பை, அன்பை மற்றும் வாழ்வைக் கொண்டு வரட்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழனன்று அசிசி நகரில் நடைபெற்ற ஒரு நாள் பல்சமயக் கூட்டத்தின் இறுதி நிகழ்வாக மாலையில் புனித பிரான்சிஸ் பசிலிக்கா பேராலய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருத்தந்தையின் அழைப்பை ஏற்று அசிசி நகர் வந்திருந்த 300க்கும் அதிகமான மற்ற சமயப் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் ஒளியேற்றப்பட்ட ஒரு விளக்கை இளையோர் அளித்தனர். அமைதிக்காக அங்கு இருந்தோர் கூறிய உறுதி மொழிகளின் ஓர் அச்சாரமாக அந்த ஒளிவிளக்குகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடவுளிடமிருந்து வரும் அமைதியை உலகில் இன்னும் ஆழமாக விதைக்க நாம் அனைவரும் கருவிகளாவோம் என்று கூறிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, மன்னிப்பின்றி நீதியும், நீதியின்றி அமைதியும் உருவாக முடியாது என்று வலியுறுத்தினார்.
இந்த மாலை நிகழ்வில், ஒருவருக்கொருவர் சமாதானத்தைப் பகிர்ந்து கொண்ட போது, அங்கிருந்த பிரான்சிஸ்கன் துறவியர் வெள்ளைப் புறாக்களை வானில் பறக்க விட்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் விருப்பமுள்ள பிரதிநிதிகளும், திருத்தந்தையும் புனித பிரான்சிஸ் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்று செபித்தனர்.
3. அசிசி உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலாவில் பல்சமயக் கூட்டம்
அக்.28,2011. அசிசி நகரில் இவ்வியாழன் நடைபெற்ற உலக அமைதி நாள் நிகழ்வையொட்டி, மனிலா நகரில் பல்சமயக் கூட்டம் ஒன்றை பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகளும், பிலிப்பின்ஸ் பழங்குடியினர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அசிசி நகரில் திருத்தந்தை விடுத்த செய்தியின் சுருக்கத்தை மனிலாவின் துணை ஆயர் Bernardino Cortez எடுத்துரைத்தார்.
பல்வேறு தலைவர்கள் பேசியபின்னர், அருளாளர் இரண்டாம் ஜான்பால் தலைமையில் அசிசி நகரில் மேற்கொள்ளப்பட்ட பல்சமயத் திருப்பயண விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பிரதிநிதிகள் சமாதானத்தின் அடையாளமாக, மலர்களைப் பகிர்ந்து கொண்டனர் என்றும், இறுதியில் அனைவரும் ஒரு சமாதான உறுதிமொழியில் கையொப்பம் இட்டனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. திருப்பீடமும் ஆர்த்தடாக்ஸ் சபையும் இணைந்து நடத்தவிருக்கும் கருத்தரங்கு
அக்.28,2011. கத்தோலிக்கத் திருச்சபையும், ஆர்த்தடாக்ஸ் சபையும் எடுத்துரைக்கும் நன்னெறி விழுமியங்கள் ஐரோப்பிய சமுதாயத்தின் கட்டமைப்பில் எவ்விதம் தாக்கங்களை உருவாக்க முடியும் என்பதை ஆய்வு செய்யும் ஒரு கூட்டம் நவம்பர் மாதம் Minsk நகரில் நடைபெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவ ஒருமைப்பாட்டின் வளர்ச்சி என்ற திருப்பீட அவையும், பல்சமய உரையாடல் நிறுவனமும், Belarus நாட்டின் ஆர்த்தடாக்ஸ் அவையுடன் இணைந்து, நவம்பர் 13 முதல் 15 வரை நடத்தவிருக்கும் இந்தக் கருத்தரங்கில் சமுதாய நன்னெறி, பொருளாதார நெருக்கடி, விசுவாச வாழ்வு சந்திக்கும் சவால்கள் ஆகிய தலைப்புக்களில் கருத்துக்கள் பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கின்போது, நவம்பர் 14ம் தேதி நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சியில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் பாடல்களும், பிற புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் இசை படைப்புக்களும் இடம் பெறும் என்று வத்திக்கான் செய்தி கூறுகிறது.
5. துருக்கியில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட பணிகள் கிறிஸ்தவ அன்புக்கு சாட்சி - பேராயர் Ruggero Franceschini
அக்.28,2011. துருக்கியில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடியாக துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டது அனைவரின் உள்ளங்களையும் கிறிஸ்தவ அன்பால் நிறைத்துள்ளது என்று துருக்கியின் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று துருக்கியைத் தாக்கிய 7.2 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் அந்நாட்டின் Van என்றும் நகர் பெரிதும் அழிந்துள்ளது என்றும், அம்மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை செய்த காரித்தாசின் பணி போற்றுதற்குரியதென்றும் Smyrna பேராயரும், துருக்கி ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் Ruggero Franceschini கூறினார்.
அசிசி நகர் பயணத்திற்கு முந்திய நாள் புதனன்று திருத்தந்தை மேற்கொண்ட செப வழிபாட்டின் இறுதியில் துருக்கி மக்களின் துயர் துடைக்க அனைவரும் முன் வர வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்று பலரும் உதவிகள் செய்து வருகின்றனர் என்றும் பேராயர் Franceschini எடுத்துரைத்தார்.
கரித்தாஸ் செய்யும் அற்புதமான துயர்துடைப்பு பணிகளால் பெரிதும் பயன் பெறுவது கிறிஸ்தவர் அல்லாதோரே என்பதை பேராயர் Franceschini சுட்டிக்காட்டினார்.
6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது - அமெரிக்க ஆயர்
அக்.28,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திரம் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய ஆயர் William Lori கூறினார்.
அமெரிக்க அரசின் ஓர் உயர்மட்டக் குழுவின் அங்கத்தினர்களை ஆயர் பேரவையின் சார்பில் இப்புதனன்று சந்தித்த Bridgeport மறைமாவட்டத்தின் ஆயர் Lori, அண்மைக் காலங்களில் அமெரிக்க அரசு எடுத்து வரும் பல முடிவுகள் மதச்சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
நலவாழ்வு காப்பீட்டுத் திட்டத்தில் கருத்தடையை இணைப்பது, கருக்கலைப்பு சிகிச்சைகளைச் செய்ய விரும்பாத கத்தோலிக்க அமைப்புக்களுக்கு அரசின் உதவித் தொகைகளை மறுப்பது ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறிய ஆயர் Lori, அரசின் இந்தப் போக்கு கிறிஸ்துவ நன்னெறி விழுமியங்களைக் கேள்விக்குரியதாக்கும் ஒரு போக்கு என்று கூறினார்.
மதச்சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Lori, இவ்வுரிமைகள் அரசின் அதிகாரத்திற்குக் கீழ் வராத முதல் உரிமைகள் என்பதை வலியுறுத்தினார்.
7. பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'
அக்.28,2011. வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை தமிழகத்தில் ஒரு கிராம மக்கள் கொண்டாடினர்.
புதுச்சேரிக்கு அருகில், தமிழகப் பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை. கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்தின்னும் வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம்.
பழந்தின்னும் இந்த வவ்வல்களுக்காக கடந்த 5 தலைமுறையாக இந்த ஊர் மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல், சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இந்த ஊரில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என கொண்டாடப்படும் பொதுவான நிகழ்ச்சிகளிலும், வெடி சத்தமும், புகை, நெடி ஆகியவைகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கள் ஊரை இவர்கள் கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர்.
வழக்கம்போல, இவ்வாண்டும் தீபாவளி விழாவின்போது இந்த ஊர் மக்கள் பட்டாசுக்களை வெடிக்காமல், மற்றப்படி இனிப்புகள், புத்தாடைகள் ஆகியவற்றுடன் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர்.
Subscribe to:
Posts (Atom)
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...