1. மத்ரித் உலக இளையோர் தினத்தையொட்டி பரிபூரணபலன்
2. இந்தியக் கிறிஸ்தவர்கள் கடைபிடித்த கருப்பு நாள்
3. இங்கிலாந்தின் வன்முறைகளுக்குத் தீர்வு காண Pax Christi அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பல்சமய முயற்சிகள்
4. வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள்
5. இலங்கையில் போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
6. கல்வி நிறுவனங்கள் உலகில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைப்பதற்கு வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்
7. தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
8. திருத்திய விடைத்தாளை மாணவர் பார்க்க அனுமதி
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. மத்ரித் உலக இளையோர் தினத்தையொட்டி பரிபூரணபலன்
ஆக.11,2011. இஸ்பெயினின் மத்ரித்தில் இம்மாதம் 16 முதல் 21 வரை நடைபெறவுள்ள 26வது உலக இளையோர் தினத்தையொட்டி பரிபூரணபலனை அறிவித்துள்ளது அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்பு அலுவலகம்.
மத்ரித்தின் இவ்விளையோர் தினக் கொண்டாட்ட நாட்களில் திருப்பயண உணர்வுகளோடு கலந்து கொள்ளும் விசுவாசிகள் இப்பலனைப் பெறுவார்கள். அத்துடன் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், இந்த நிகழ்வில் ஆன்மீகரீதியில் பங்கு கொள்வோர் ஒவ்வொருவருக்கும் இப்பலனின் ஒரு பகுதி கிடைக்கும் என்று இந்த வத்திக்கான் அலுவலக அறிக்கை கூறுகிறது.
இஸ்பெயின் ஆயர் பேரவைத் தலைவரான மத்ரித் பேராயர் கர்தினால் அந்தோணியோ மரிய ரோக்கோ வலேராவின் வேண்டுகோளின் பேரில் அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்பு அலுவலகம் இந்தப் பரிபூரணபலனை அறிவித்துள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த உலக இளையோர் தினத்தில் பக்தியுடன் கலந்து கொண்டு தங்களது பாவங்களுக்காக உண்மையிலேயே மனம் வருந்தி ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று திருநற்கருணை உட்கொண்டு திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்பவர்கள் இப்பலனை அடைவார்கள்.
2. இந்தியக் கிறிஸ்தவர்கள் கடைபிடித்த கருப்பு நாள்
ஆக.11,2011. கருப்பு உடை அணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தி, இந்தியாவின் பல இடங்களில் கிறிஸ்தவர்கள் இப்புதனன்று கருப்பு நாள் கடைபிடித்தனர்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சந்தித்து வரும் இந்த கொடுமை, இந்நாளை ஒரு துயர நாளாக மாற்றிவிட்டது என்று புது டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
பல இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயர்களும் தலைமை ஏற்று நடத்தினர் என்று இந்திய ஆயர் பேரவை தலித் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Cosmon Arokiaraj கூறினார். தமிழ்நாட்டில் லால்குடி எனும் இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் கருப்பு நாள் போராட்டத்தில் அருள்தந்தை ஆரோக்கியராஜ் ஈடுபட்டிருந்தார்.
1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் நாள் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடையாது என்று இந்திய அரசு சட்டமியற்றிய அந்த நாளை கடந்த சில ஆண்டுகள் கருப்பு நாளாக இந்தியக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தக் கருப்பு நாள் போராட்டத்திற்கு முன்னதாக, கடந்த மாதம் 25 முதல் 28 வரை புது டில்லியில் பாராளு மன்றத்திற்கு முன் 50 கத்தோலிக்க ஆயர்களுடன் 10000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.
3. இங்கிலாந்தின் வன்முறைகளுக்குத் தீர்வு காண Pax Christi அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பல்சமய முயற்சிகள்
ஆக.11,2011. கடந்த ஒரு வாரமாக இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் நிலவி வரும் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் வகையில், லண்டன் மாநகரில் Pax Christi அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பல்சமய முயற்சிகள் இப்புதன் இரவு நிறைவுக்கு வந்தன.
இளையோர் மத்தியில் வருங்காலத்தைப் பற்றி பெருமளவு நிலவும் நிலையற்ற எண்ணங்கள் அவர்களில் பலரை இவ்வகை கலவரங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட வைக்கின்றன என்று Pax Christi அமைப்பின் பொதுச் செயலர் Pat Gaffney கூறினார்.
இன்றைய உலகின் பாதுகாப்பற்ற, மற்றும் நம்பிக்கையைக் குறைக்கும் சூழல்களிலும் நமது விசுவாசம் நமக்கு உதவியாக உள்ளது என்றும், இன்று நிலவும் இந்தப் பட்டங்கள் நீங்கி, இளையோர் மீது மீண்டும் நம்பிக்கை பிறக்க நமது விசுவாசம் துணை நிற்கும் என்றும் Columban Justice and Peace என்ற குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
பல்சமய செப வழிபாடு முடிந்ததும், அனைத்து மத உறுப்பினர்களும் புத்த மதக் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அங்கிருந்து ஏந்திய விளக்குகளுடன் Thames ஆற்றங்கரைக்கு சென்று, அந்த விளக்குகளை ஆற்றில் மிதக்க விட்டனர்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஜப்பானில் ஹீரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அணுகுண்டுக்குப் பலியானோரையும் நினைவுகூர்ந்து இவ்விளக்குகள் ஆற்றில் விடப்பட்டன.
4. வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள்
ஆக.11, 2011. வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா துவங்குவதை முன்னிட்டு, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, கும்பகோணம், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா வரும், 29ம் தேதி துவங்குவதை முன்னிட்டு இம்மாதம், 27ம் தேதி முதல் அடுத்த மாதம், 12ம் தேதி வரை திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், பூண்டி மாதாகோவில், ஓரியூர், பட்டுக்கோட்டை, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை,காரைக்கால், நாகூர் ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இலங்கையில் போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
ஆக 11, 2011. இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
போரின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்குத் தேவையான பணிகளில் ஈடுபடுவதுமே சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி.
இச்சங்கம் ஜெனீவாவில் இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் மருத்துவமனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது, கொலம்பியாவில் காயமடைந்த மக்கள் கொல்லப்பட்டது, லிபியாவில் அம்புயூலன்ஸ் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது போன்றவை குறித்த கவலையை வெளியிட்டுள்ளார் செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் Yves Daccord.
இலங்கை, சோமாலியா, ஈராக் போன்ற நாடுகளில் மருத்துவப்பிரிவினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதும் மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
6. கல்வி நிறுவனங்கள் உலகில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைப்பதற்கு வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்
ஆக.11,2011. கல்வியறிவு பெற்றவர்களும், கல்வி நிறுவனங்களும் உலகில் நிலவும் பசிக் கொடுமையைத் தீர்க்கவும், உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைப்பதற்கும் வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
தென் கொரியத் தலைநகரான Seoulல் உயர்கல்வி நிறுவனங்களுக்கென ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் இவ்வாறு கூறினார்.
ஆப்ரிக்காவில் நிலவும் பசிக் கொடுமையில் ஒரு கோடியே பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் துன்புறுவதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பான் கி மூன், சுற்றுச் சூழல் மாற்றங்கள் மற்றும் சமதாயத்தில் உருவாகும் பிளவுகள், வன்முறைகள் அனைத்தும் ஆப்ரிக்காவில் நிலவும் பட்டினிக்குக் காரணம் என்பதை சுட்டிக் காட்டினார்.
மனிதர்களின் அறிவுத் திறனையும் இன்னும் பிற வளங்களையும் சரிவரப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலை சீரழிக்காத முன்னேற்ற வழிகளைக் கண்டுபிடிக்கவும் உயர்கல்வி நிறுவனங்கள் முயன்றால், பசி, பட்டினி ஆகிய உலகப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று பான் கி மூன் மேலும் கூறினார்.
சமுதாய முன்னேற்றத்தில் உயர்கல்வி நிறுவனங்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை உலகின் 104 நாடுகளில் 670 உயர்கல்வி நிறுவனங்களில் ஐ.நா. மேற்கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
7. தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
ஆக.11,2011. தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களுக்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதில், தலைநகரான சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் தோல்வி, கணவனுடன் தகராறு, காதல் விவகாரம், கடன் தொல்லை, விரக்தி, வாழ்க்கையில் வெறுப்பு போன்ற காரணங்களாலும், மனதளவில் தைரியத்தை தொலைத்தவர்கள், மனக்குழப்பத்தில் இருப்பதுடன், தனிமையில் இருப்பவர்கள் போனறவர்களாலும் தற்கொலை முடிவுகள் எடுக்கப்படுவதாக மனோதத்துவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில், இலகுவான மனம் படைத்த பெண்கள் தான் அதிகம் என்று அனைவரும் நினைத்திருக்கும் வேளையில், பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பது வழக்குப் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், 10 ஆயிரத்து 552 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், அதே ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை, 6,009 பேர் மட்டுமே. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலையே நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. திருத்திய விடைத்தாளை மாணவர் பார்க்க அனுமதி
ஆக.11,2011. இந்தியாவில் மாணவர்கள் தம்முடைய திருத்தப்பட்ட விடைத்தாள்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பார்க்க முடியும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருத்தப்பட்ட விடைத்தாள்களும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு 'தகவல்'தான் என இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அரசு பணிகளுக்கான தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள், பள்ளித் தேர்வுகள், தொழிற்சேவை அமைப்புகளுக்கான தேர்வுகள் போன்றவற்றுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்.
இந்தியாவில் எந்த ஒரு மாணவனும் தான் எழுதிய எந்த ஒரு பரிட்சைக்கான திருத்தப்பட்ட விடைத்தாளையும் பார்க்க உரிமை உள்ளது என்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
பிரீத்தம் ரூஜ் என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த மாணவர், தனது பல்கலைக்கழகத்தில் தான் எழுதிய பரிட்சைகளின் விடைத்தாள்களைப் பார்க்க வேண்டும் என்று கோரி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வந்துள்ளது.
No comments:
Post a Comment