Monday 1 August 2011

Catholic News - hottest and latest - 30 July 2011

1.வத்திக்கான் அதிகாரி:நார்வேயில் இடம் பெற்ற பயங்கரவாதச் செயல்கள் கடவுளுக்கு எதிரானக் குற்றம்

2. நிக்கராகுவாவில் சட்டம் ஒழுங்கு இல்லை - ஆயர் Sandigo Giron  கவலை

3. மெக்சிகோ-அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லைப்புற மறைமாவட்டம் அமைதிக்காகச் செபம்

4. பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகம் மீண்டும் பிறப்பு

5. சிரியாவின் தற்போதைய அரசியல் பதட்டநிலை, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் - முக்கிய விமர்சகர் கருத்து

6. இலங்கையில் சுமார் 5000 காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் - ஐக்கிய நாடுகள் நிறுவனம்

7. நாடுகளில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவது தொடர்கின்றது ஐ.நா.

8. இருபது கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய தாஜ்மகால்

----------------------------------------------------------------------------------------------------------------

1.வத்திக்கான் அதிகாரி:நார்வேயில் இடம் பெற்ற பயங்கரவாதச் செயல்கள் கடவுளுக்கு எதிரானக் குற்றம்

ஜூலை 30,2011. நார்வே நாட்டில் அண்மையில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு பயங்கரவாதச் செயல்கள் கடவுளுக்கு எதிரானக் குற்றம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த இரண்டு பயங்கரவாதச் செயல்களையும் நடத்தியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள Anders Behring Breivik என்பவர் தனது விசாரணையின் போது சொன்ன கருத்துக்களை வைத்துப் பேசிய பேராயர் சால்வத்தோரே ஃபிசிக்கெல்லா, மதத்தை வன்முறைக்காக நாம் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றார்.
பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் இசுலாம் நுழைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும், பன்மைக் கலாச்சாரப் போக்கு, ஐரோப்பாவில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்த விட்டுவிடும் என்ற நம்பிக்கையிலும் தான் இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பை நடத்தியதாக Breivik கூறியிருக்கிறார் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இத்தகைய எண்ணம், கடவுளோடும் உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தோடும் எத்தகைய தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று, புதிய நற்செய்தி அறிவிப்புக்கானத் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ஃபிசிக்கெல்லா கூறினார்.
நார்வேயில் இம்மாதம் 22ம் தேதி இடம் பெற்ற பயங்கரவாதச் செயல்களில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர்.

2. நிக்கராகுவாவில் சட்டம் ஒழுங்கு இல்லை - ஆயர் Sandigo Giron  கவலை

ஜூலை 30,2011. நிக்கராகுவா நாட்டில் அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா மீண்டும் தேர்தலில் நிற்கும் வழிகளைத் தேடுவதாக அறிவித்திருப்பது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதைக் காட்டுகிறது என்று அந்நாட்டு ஆயர் Socrates Rene Sandigo Giron  தெரிவித்தார்.
மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் மக்கள் மத்தியில் பரவலாக அவநம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவித்த ஆயர் Sandigo Giron, அண்மை மாதங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்த கவலையையும் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு அரசு நிறுவனங்களில் நேர்மையின்மையும் ஒளிவுமறைவும் தெரிகின்றன எனவும் பிரிவினைவாதச் சக்திகள் அரசு அமைப்பையும் அரசு நிறுவனங்களையும் மிகவும் தங்கள் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகின்றன எனவும் நிக்கராகுவா ஆயர் பேரவைச் செயலரான ஆயர் Sandigo Giron கூறினார்.
நிக்கராகுவா நாட்டில் வருகிற நவம்பர் 5ம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

3. மெக்சிகோ-அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லைப்புற மறைமாவட்டம் அமைதிக்காக ஒரு நாள் செபம்

ஜூலை 30,2011. மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லையிலுள்ள Matamoros மறைமாவட்டம், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை மற்றும் வன்முறைச் சூழல் ஒழிய வேண்டுமென்பதற்காக 24 மணி நேர அமைதிக்கானச் செப வழிபாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரிகளுடன் நடத்தப்படும் சண்டையில் வன்முறையும் பாதுகாப்பின்மையும் இருக்கின்றன என்று சொல்லி அவை களையப்பட இந்தச் செப பக்தி முயற்சி நடத்தப்படவிருக்கின்றது.
போதைப்பொருள் வியாபாரக் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அருட்பணி Marco Durán கொல்லப்பட்ட முதல் நினைவு மாதத்தையொட்டி வருகிற செவ்வாய்  மற்றும் புதன் கிழமைகளில் இந்தச் செப பக்தி முயற்சி இடம் பெறுகின்றது.

4. பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகம் மீண்டும் பிறப்பு

ஜூலை 30,2011. பாகிஸ்தானில் அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் என்ற பெயரில் அண்மையில் இரத்து செய்யப்பட்ட அந்நாட்டுச் சிறுபான்மை அமைச்சகத்தைப் புதிய பெயரில் மீண்டும் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடந்த மார்ச்சில் தீவிரவாதக் குழுவால் கொல்லப்பட்ட Shahbaz Bhatti தலைமை வகித்து வந்த சிறுபான்மை அமைச்சகம், தேசிய நல்லிணக்க அமைச்சகம் என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் இதை வழிநடத்தும் பொறுப்பு கத்தோலிக்க அரசியல்வாதி Akram Gill டம் ஒப்படைக்கப்படும் எனவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
சிறுபான்மை மதத்தவரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இப்புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

5. சிரியாவின் தற்போதைய அரசியல் பதட்டநிலை, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் - முக்கிய விமர்சகர் கருத்து

ஜூலை 30,2011. சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று ஒரு முக்கிய விமர்சகர் அறிவித்தார்.
இலண்டன் Heythrop கல்லூரியில் கீழைரீதி கிறிஸ்தவ மையத்தின் இயக்குனராக இருக்கும் Anthony O’Mahony, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
சிரிய அரசுத்தலைவர் Bashir al Assad ன் ஆட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் அரசியல் நெருக்கடிகள், அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்திற்குப் பெரும் ஆபத்துக்களை முன்வைக்கின்றன என்று கூறினார் ஒமஹோனி.
தற்போதைய ஆட்சிக் கவிழ்ந்தால் அது கிறிஸ்தவர்கள் மீது புதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட வழி செய்யும் என்றும் இந்த அச்சுறுத்தல் சிரியாவுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்குமானது என்றும் அல் அசாத் மேலும் கூறினார்.
சிரியாவில் கிறிஸ்தவர்கள் தற்போது வெளிப்படையாகத் தங்கள் விசுவாசத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் இசுலாமிய அரசு உருவானால் அது கிறிஸ்தவர்களின் இருப்புக்கு ஆபத்தாக இருக்கும் என்றார் அல் அசாத்.
சிரியாவில் சனநாயக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கேட்டுத் தொடங்கப்பட்ட மக்கள் புரட்சியானது, சுமார் 40 ஆண்டுகளாகப் பதவியிலிருக்கும் அரசுத்தலைவர் Bashir al Assad பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் போராட்டங்கள் தற்சமயம் இடம் பெற்று வருகின்றன.

6. இலங்கையில் சுமார் 5000 காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் - ஐக்கிய நாடுகள் நிறுவனம்

ஜூலை 30,2011. இலங்கையில், காணாமல்போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட முக்கிய மனித உரிமை ஆர்வலரின் மரணம் தொடர்பில் புலன்விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் (Pattani Razeek) என்ற புத்தளத்தைத் தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை ஆர்வலர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்நிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து இவ்வாரத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ரவீனா ஷம்தாசனி (Ravina Shamdasani) இலங்கை அரசைக் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
இலங்கையில் தற்போது 5,653 காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.

7. நாடுகளில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவது தொடர்கின்றது ஐ.நா.

ஜூலை 30,2011. பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவதில் சில நாடுகளில் முன்னேற்றம் தெரிந்தாலும் அவர்களின் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெறுவதாக ஐ.நா. அறிவித்தது.
பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் ஒழிப்பு ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற ஐ.நா.கூட்டம் பற்றி நிருபர்களிடம் தெரிவித்த இந்த ஒப்பந்தக் கமிட்டித் தலைவர் சில்வியா பிமெண்ட்டல், இத்தாலி, எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், ஜாம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கொரியக் குடியரசு ஆகிய நாடுகளில் சேகரித்த விபரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டது என்றார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயலைத் தடுப்பதற்குச் சட்டங்கள் இல்லையென்ற அவர், சில நாடுகளில் குழந்தை பிறப்பின் போது தாய்மார் இறப்புகள் அதிகம் இடம் பெறுவது குறித்தக் கவலையையும் தெரிவித்தார்.  

8. இருபது கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய தாஜ்மகால்

ஜூலை 30,2011. இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான தாஜ்மகால், கடந்த ஆண்டில் மட்டும் இருபது கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம், தாஜ்மகால் கடந்த ஆண்டில், இருபது கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், 14 கோடியே 36 இலடசம் ரூபாயும், 2009-10ம் ஆண்டில், 17 கோடியே 24 இலடசம் ரூபாயும், 2010-11ம் ஆண்டில் 19 கோடியே 89 இலடசம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளன.
இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 116 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் 87 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், டில்லியில் உள்ள குதூப் மினார் மூலம், 10 கோடி ரூபாயும், ஹூமாயூன் கல்லறை மூலம் 6 கோடி 15 இலடசம் ரூபாயும், செங்கோட்டை மூலம் 5 கோடியே  90 இலடசம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளன.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...