Saturday 27 August 2011

Catholic News - hottest and latest - 26 August 2011

1. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னாள் மாணவர்கள் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து விவாதித்து வருகின்றனர்

2. அமெரிக்காவின் முதல் மறைமாவட்டத்திற்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி தேவைப்படுகின்றது

3. கத்தோலிக்கர், தாய்மையின் பொருளை மீண்டும் கண்டுணர வேண்டும் வத்திக்கான் அதிகாரி

4. வாழ்வுக்கு ஆதரவாக 40 நாள் செபம், உண்ணா நோன்பு

5. நலிவடைந்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரம் குறித்து ஆயர் கவலை

6. இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக சீரோ மலங்கரா கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டுள்ளது

7. குடியுரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன்றைய உலகில் 1 கோடியே 20 இலட்சம் ஐ.நா. அறிக்கை

8. பாதுகாப்பான குடிநீர் வழங்குவதால் ஒவ்வொரு நாடும் உறுதியான பொருளாதாரத்தைப் பெற முடியும் - ஐ.நா. உயர் அதிகாரி

9. அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அரசுத்தலைவர் முடிவு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னாள் மாணவர்கள் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து விவாதித்து வருகின்றனர்.

ஆக.26,2011. பேராசிரியராகப் பணிபுரிந்த திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னாள் மாணவர்கள் காஸ்தல் கந்தோல்ஃபோவில் கூடி புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து  விவாதித்து வருகின்றனர்.
இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்த நான்கு நாள் கருத்தரங்கில் வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn, Hamburg துணை ஆயர் Hans-Jochen Jaschke, திருப்பீட கலாச்சார அவைச் செயலர் பேரருட்திரு Barthelemy உட்பட சுமார் 40 பேர் கலந்து கொள்கின்றனர்.
வருகிற அக்டேபர் 15 மற்றும் 16 தேதிகளில் மேற்கத்திய திருச்சபைப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை நடத்தவிருக்கும் கூட்டத்தின் கருப்பொருளான புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்தே தற்சமயம் அவரின் முன்னாள் மாணவர்கள் விவாதித்து வருகின்றனர்.
“Ratzinger Schülerkreis” என்றழைக்கப்படும் இந்தக் கருத்தரங்கு, பேராசிரியராக இருந்த திருத்தந்தை, மியுனிக்கின் பேராயராக நியமனம் செய்யப்பட்ட பிறகு 1977ல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஆண்டுதோறும் இது நடைபெற்று வருகிறது. 

2. அமெரிக்காவின் முதல் மறைமாவட்டத்திற்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிதேவைப்படுகின்றது

ஆக.26,2011. அமெரிக்காவில் முதல் மறைமாவட்டம் தொடங்கி ஐந்நூறு ஆண்டுகள் ஆகியுள்ள இவ்வேளையில் அக்கண்டத்திற்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிதேவைப்படுகின்றது என்று திருத்தந்தையின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
கரீபியன் நாடாகிய தொமினிக்கன் குடியரசின் தலைநகர் Santo Domingo மறைமாவட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் 500ம் ஆண்டையொட்டி நடைபெற்ற கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட கர்தினால் Carlos Amigo Vallejo இவ்வாறு கூறினார்.
இம்மாதம் 7,8 தேதிகளில் நடைபெற்ற இந்த ஜூபிலி கொண்டாட்டங்களில் உறையாற்றிய கர்தினால் Amigo, இம்மறைமாவட்டத்திற்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிதேவைப்படுகின்றது என்றார்.
கடவுள், மக்களின் வரலாற்றிலும் அவர்களின் கலாச்சாரத்திலும் நற்செய்தியை அறிவிக்க விரும்பினார், வரலாறானது விசுவாசத்திலிருந்து அறியப்பட வேண்டும் என்றும் கர்தினால் கூறினார்.

3. கத்தோலிக்கர், தாய்மையின் பொருளை மீண்டும் கண்டுணர வேண்டும் வத்திக்கான் அதிகாரி

ஆக.26,2011. தாய்மை என்பது கடவுளிடமிருந்து கொடையாகப் பெறப்படுவதால் அதன் அர்த்தம் மீண்டும் கண்டுணரப்பட வேண்டும் என்று திருப்பீட வாழ்வுக் கழகத் தலைவர் பேராயர் Ignacio Carrasco de Paula அழைப்பு விடுத்துள்ளார்.
தாய்மைப் பேற்றை அடையும் செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும், “வாழ்த்துக்கள்சொல்வதற்கு இட்டுச் செல்ல வேண்டுமெனப் பேராயர் Carrasco மேலும் கூறினார்.
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கென 25 ஆண்டுகளுக்கு முன்னர் இத்திருப்பீட வாழ்வுக் கழகத்தை ஆரம்பித்தார் என்று சி.என்.எ செய்தி நிறுவனத்திடம் கூறிய பேராயர், இத்திருப்பீட அவையின் இவ்வாண்டுச் செயல்திட்டங்களையும் விளக்கினார்.
கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் சார்ந்த பிரச்சனைகள், கருவுற இயலாதவர்களுக்கானச் சிகிச்சைகள், தொப்புள்கொடி வங்கிகள் போன்ற விவகாரங்கள் இவ்வாண்டில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றன என்று பேராயர் கூறினார். 
                                                
4. வாழ்வுக்கு ஆதரவாக 40 நாள் செபம், உண்ணா நோன்பு

ஆக.26,2011. 40 Days for Lifeஎன்ற வாழ்வுக்கு ஆதரவான குழு ஒன்று, உலக அளவில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாழ்வுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 28 முதல் நவம்பர் 6 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டில் 48 மாநிலங்கள், கானடாவில் ஏழு பகுதிகள், இன்னும், ஆஸ்திரேலியா, இஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கருக்கலைப்பு நடத்தப்படும் இடங்களுக்கு முன்னர் உண்ணா நோன்பு, செபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்த நாற்பது நாட்களும் நடைபெறும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு டெக்சஸ் மாநிலத்தின் Bryan ல், Carney, அவரது மனைவி மற்றும் அவரது நண்பர்களால் 2004ல் தொடங்கப்பட்ட வாழ்வுக்கு ஆதரவான 40 நாள்என்ற நடவடிக்கையில் கடந்த ஆண்டில் மட்டும் நான்கு இலட்சத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டு செபம் செய்து உண்ணா நோன்பு கடைபிடித்தனர்.

5. நலிவடைந்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரம் குறித்து ஆயர் கவலை

ஆக.26,2011. வேலை என்பது, கடவுளின் படைப்பில் பங்கு கொண்டு பொது நலனைக் கட்டி எழுப்புவதால் அது மாண்புடையதாக இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் தேசியத் தொழில் தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Stephen Blaire, அந்நாட்டில் நலிவடைந்துள்ள பொருளாதாரம் குறித்த கவலையைக் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பையும், தரமான ஊதியத்தையும், தொழிலாளருக்குத் தேவையான சலுகைகளையும் வழங்காத பொருளாதாரம் குறித்துக் கவலையை வெளியிட்ட ஆயர் Blaire, அமெரிக்க தேசியத் தொழில் தினத்தில் பொருளாதாரக் குறியீடுகளையும் கடந்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்கர்கள், பிறரின் இலக்குகளுக்குச் சவால் விடுப்பதைக் கைவிட்டு பொருளாதார வாழ்வின் பல்வேறு கூறுகளை மதிக்க முயற்சிக்க வேண்டுமெனவும் ஆயரின் அறிக்கை வலியுறுத்துகிறது.

6. இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக சீரோ மலங்கரா கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டுள்ளது

ஆக.26,2011. இந்தியாவில் இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக மற்றுமொரு சீரோ மலங்கரா கத்தோலிக்க ஆலயம் தாக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், Secunderabad லுள்ள அன்னைமரி மலங்கரா ரீதி ஆலயத்தில், நாசவேலைக்காரர்கள், திருநற்கருணைப் பேழை, விவிலியம், திருப்பலிப் புத்தகம் மற்றும் பிற பொருட்களைத் திருப்பலி பீடத்தில் வைத்து எரித்துள்ளனர் என்று அவ்வாலயப் பங்குக்குரு Felix Thondalil கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஆலயத்தை இந்துமதத் தீவிரவாதிகள் தாக்கிப் பொருட்களைச் சேதப்படுத்தினர் என்றும் அக்குரு தெரிவித்தார்.
இம்மாதம் 15ம் தேதி புனே நகரில் சீரோ மலங்கரா கத்தோலிக்க ஆலயம் ஒன்று தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
இச்சம்பவம் தொடர்பாக, இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

7. குடியுரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன்றைய உலகில் 1 கோடியே 20 இலட்சம் ஐ.நா. அறிக்கை

ஆக.26,2011. எந்த நாட்டிலும் சேர்க்கப்படாதவர்களாய், குடியுரிமை மறுக்கப்பட்டவர்களாய் இன்றைய உலகில் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்வதாக ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோருக்கான தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
வீடு, கல்வி, உடல் நலம், என்பன போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்து, முகாம்களிலும், கூடாரங்களிலும் வாழ்ந்து வரும் இம்மக்கள் உலகில் மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வருகின்றனர் என்று ஐ.நா. உயர் அதிகாரி Antonio Guterres கூறினார்.
குடியுரிமையற்றோரின் எண்ணிக்கையை உலகில் குறைக்கும் நோக்கத்தோடு, 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ஐ.நா.வினால் நடத்தப்பட்ட ஒரு பன்னாட்டு கருத்தரங்கின் 50ம் ஆண்டு நிறைவு நெருங்கி வரும் வேளையில், இப்பிரச்சனைக்கு நாம் இன்னும் தகுந்த தீர்வு காணவில்லை என்பதை இன்றைய உலக நிலை நமக்குச் சொல்கிறது என்று Guterres எடுத்துரைத்தார்.
1990களில் சோவியத் ஒன்றியம், யுகோஸ்லாவியா, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் பிரிக்கப்பட்டபோது பல்லாயிரம் மக்கள் குடியுரிமை இழந்தனர்.
இதேபோல் கடந்த பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளதால், குடியுரிமை இழந்தோரின் எண்ணிக்கை கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் பல மடங்காகப் பெருகியுள்ளதென்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளோரில் பலர், சமுதாயத்தின் வலுவற்ற நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட இனத்தவராகவும், பழங்குடி இனத்தவராகவும் இருக்கின்றனர் என்றும் இச்செய்தி மேலும் கூறுகிறது.

8. பாதுகாப்பான குடிநீர் வழங்குவதால் ஒவ்வொரு நாடும் உறுதியான பொருளாதாரத்தைப் பெற முடியும் - ஐ.நா. உயர் அதிகாரி

ஆக.26,2011. உலகின் ஒவ்வொரு நாடும் உருவாக்கும் பொருட்களின் மொத்த மதிப்பு, அதாவது, GDPயில் மிகக் குறைந்த அளவான 0.16 விழுக்காடு அளவு தண்ணீர் தொடர்பான முயற்சிகளுக்கு செலவிடப்பட்டால், உலகில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று ஐ.நா. இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.
2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டிய மில்லேன்னிய முன்னேற்ற இலக்குகளில் ஒன்றாக விளங்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், கழிப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் ஒவ்வொரு நாடும் உறுதியான பொருளாதாரத்தைப் பெற முடியும் என்று ஐ.நா. உயர் அதிகாரி Achim Steiner கூறினார்.
ஒவ்வொரு நாடும் தொழில் துறையில் பெருமளவு முன்னேறி வருவதால், மிக அதிக அளவு தண்ணீர் இத்துறையால் பயன்படுத்தப்படுவதோடு, தொழில்துறையின் கழிவுகள் தண்ணீரை அதிகம் மாசுபடுத்தும் ஆபத்தும் பெருகி வருகிறதென Steiner சுட்டிக் காட்டினார்.
உலகில் கிடைக்கும் உப்பற்ற நல்ல நீர் மிகக் குறைந்த அளவே உள்ளதால், நல்ல நீரைத் தகுந்த வழியில் பயன்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று ஐ.நா.விடுத்துள்ள இவ்வறிக்கை கூறுகிறது.

9. அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அரசுத்தலைவர் முடிவு

ஆக.26,2011. நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை ஜனநாயக முறைப்படி சாதாரண சட்டத்தின் கீழேயே முன்னெடுக்க முடியுமென்பதால் அவசரகால சட்டத்தை நீக்கிவிடுவதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாக இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
நாட்டின் நிர்வாகத்துக்கு அவசரகாலச் சட்டத்தின் தேவை இப்போது இல்லையென்று தான் திருப்தி அடைந்துள்ளதாலேயே அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமலிருக்க தீர்மானித்ததாக மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான அவசரகால சட்டம் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தில் நீடிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அரசியல் ரீதீயான பல பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...