1. திருத்தந்தை, மத்ரித்தில் உலக இளையோரைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார் - திருப்பீடப் பேச்சாளர்
2. உலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் கம்போடிய இளையோர்
3. சர்வாதிகாரர்களைத் தூக்கியெறிவதில் இளையோர் “திகைப்பூட்டும்” வகையில் செயல்பட்டுள்ளார்கள் -ஐ.நா.பொதுச் செயலர்
4. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை விழுமியங்களை வழங்கவேண்டும் - பேராயர் ஃபிசிக்கெல்லா
5. நேபாளத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யும் சட்டப் பரிந்துரை குறித்து திருச்சபைத் தலைவர்கள் கவலை
6. விண்வெளியில் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு
7. சட்ட விரோதமாக உடலுறுப்பு மாற்றினால் 10 ஆண்டு சிறை
8. அதிகக் கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
9. போபால் விஷவாயு விபத்துக் கம்பனிக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை, மத்ரித்தில் உலக இளையோரைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார் - திருப்பீடப் பேச்சாளர்
ஆக.13,2011. இஸ்பெயினின் மத்ரித்தில் நடைபெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கின்ற பெருமளவான இளையோரைச் சந்திக்கும் அந்த “வியத்தகு ஆன்மீக” நேரங்களை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆவலுடன் எதிர்நோக்குவதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி கூறினார்.
மத்ரித்தில் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் உலக இளையோர் தினம் மிகுந்த சவால் நிறைந்தது, எனினும், கொலோன், சிட்னி ஆகிய நகரங்களில் இளையோர் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டதைப் பார்த்த அனுபவத்திலிருந்து திருத்தந்தை, இளையோருக்கு விசுவாசச் சான்று வாழ்வை வழங்கக் காத்திருக்கிறார் என்று அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார்.
இவ்விளையோர் தின நிகழ்வுகளில் வருகிற வியாழனன்று கலந்து கொள்ளும் திருத்தந்தை, நான்கு நாட்கள் அங்கிருந்து ஒன்பது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இந்நிகழ்வின் கடைசி நாளான ஆகஸ்ட் 21ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் 800க்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்து கொள்வார்கள் என்று அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
2. உலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் கம்போடிய இளையோர்
ஆக.13,2011. மத்ரித்தில் நடைபெறும் இவ்வுலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் 200 நாடுகளிலிருந்து இளையோர் பங்கு கொள்வது கத்தோலிக்கத்தின் “உலகளாவிய”த் தன்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்று கம்போடியாவுக்கான அப்போஸ்தலிக்க அதிபர் ஆயர் Olivier Michel Marie Schmitthaeusler கூறினார்.
கம்போடியாவிலிருந்து 14 இளையோர் மத்ரித் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருப்பது குறித்துப் பேசிய ஆயர் Schmitthaeusler, இளம் கம்போடியர்களுக்கு இது விசுவாசம் மற்றும் திருச்சபையின் அனுபவமாக இருக்கும் என்றார்.
கம்போடியர்கள் இறைவார்த்தையை அறிவிப்பதற்கு விவிலிய மற்றும் இறையியல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும் ஆயர் கூறினார்.
3. சர்வாதிகாரர்களைத் தூக்கியெறிவதில் இளையோர் “திகைப்பூட்டும்” வகையில் செயல்பட்டுள்ளார்கள் -ஐ.நா.பொதுச் செயலர்
ஆக.13,2011. கடந்த ஆண்டில் சர்வாதிகாரர்களைத் தூக்கியெறிவதில் இளையோர் “திகைப்பூட்டும்” வகையில் செயல்பட்டுள்ளார்கள் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
“நம் உலகை மாற்றுவோம்” என்ற சுலோகத்துடன் ஆகஸ்ட் 12ம் தேதியான இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக இளையோர் நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலகின் நூறு கோடிக்கு மேற்பட்ட இளையோரில் பலருக்கு கல்வியும் சுதந்திரமும் அவர்களுக்கு உகந்த வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இந்நிலை இருந்த போதிலும், சில விவகாரங்களில், நல்லோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு இவர்கள் பெருமளவான மக்களைத் தூண்டி வருகிறார்கள் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் பான் கி மூன்.
ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக பாலியல், இனம், மொழி போன்றவற்றின் பாகுபாடுகளால் துன்புறும் மக்களின் உரிமைகளுக்காக இளையோர் துணிந்து போராடுகிறார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது.
4. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை விழுமியங்களை வழங்கவேண்டும் - பேராயர் ஃபிசிக்கெல்லா
ஆக.13,2011. மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை விழுமியங்களை பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும் என்று திருப்பீட புதிய நற்செய்திப்பணி அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா கேட்டுக் கொண்டார்.
இஸ்பெயினின் அவிலா நகரில் நடைபெற்று வரும் உலகக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டில் இச்சனிக்கிழமை உரையாற்றிய பேராயர் ஃபிசிக்கெல்லா, ஒரு பக்குவமடைந்த மனிதனாக உருவாக வேண்டியதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
திருச்சபை, ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் போது அது வெறுமனே மாணவ மாணவியரின் திறமைகளை வளர்ப்பதற்கும் அறிவின் மீதான தாகத்தையும் ருசியையும் ஏற்படுத்துவதற்குமான நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக, அவர்களின் ஆன்மீக நலனில் மிகுந்த அக்கறை காட்டும் நோக்கத்துடன் அதனை உருவாக்குகின்றது என்று 1852ல் ஜான் ஹென்ரி நியுமென் கூறியதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.
பல்கலைக்கழக மாணவ மாணவியர், சமுதாயத்தில் பல்வேறு அங்கங்களை வகிக்கும் போது அவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
இவ்வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த அவிலா மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.
5. நேபாளத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யும் சட்டப் பரிந்துரை குறித்து திருச்சபைத் தலைவர்கள் கவலை
ஆக.13,2011. நேபாளத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யும் நோக்கத்தில் குற்றவியல் சட்டப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தலத்திருச்சபைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மதமாற்றம் குறித்த இப்பரிந்துரை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மூத்த அரசியல் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பக் கடிதம் அனுப்பியுள்ளனர் நேபாளத் திருச்சபைத் தலைவர்கள்.
இந்தப் புதியச் சட்டப் பரிந்துரை கடந்த ஜூனில் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இது உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நேபாள குருகுல அதிபர் அருட்பணி பயஸ் பெருமானா கூறினார்.
6. விண்வெளியில் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு
ஆக.13,2011. விண்வெளியில் வியாழன் கிரகத்தைவிட மிகப் பெரியதாக இருக்கின்ற புதிய கிரகம் ஒன்றை வானயியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் கெப்ளர் என்ற விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் மூலம் இப்புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் ஐம்பது இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், மஞ்சள் நிறத்தில், விண்மீன்களின் இடையே மறைந்து கிடக்கும் இப்புதிய கிரகத்திற்கு “ட்ரெஸ்-2 பி” (TrES-2b) என அறிவியலாளர் பெயரிட்டுள்ளனர்.
கெப்ளர் தொலைநோக்குக் கருவி மூலம் பார்க்கக் கூடிய இக்கிரகத்தில் 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது என்றும் அறிவியலாளர் கூறுகின்றனர்.
இந்தக் கிரகம் மீது சூரியனின் ஒரு விழுக்காட்டு வெளிச்சம் மட்டுமே விழுவதால் இது கரியைவிட மிகவும் கறுப்பு நிறத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பில் பல “கியாஸ்”பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில் இந்தக் கிரகம் கடும் வெப்பமாக உள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
7. சட்ட விரோதமாக உடலுறுப்பு மாற்றினால் 10 ஆண்டு சிறை
ஆக.13,2011. மனித உடல் உறுப்புகள் தொடர்பான சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபடுவோருக்குப் பத்தாண்டுவரை சிறைத் தண்டனையும் ஒரு கோடி ரூபாய்வரை அபராதமும் விதிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு, லோக்சபாவில் இவ்வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்து பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், இதன்படி, சட்ட விரோத மனித உடல் உறுப்புகள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும், சட்ட விரோத உடலுறுப்பு மாற்றத்தில் ஈடுபடுவோருக்கும் இனிமேல், 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.
இந்தச் சட்டத் திருத்த மசோதா அடுத்த வாரம் ராஜ்யசபாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
தற்போது இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும், 20 இலட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது என்று குலாம் நபி ஆசாத் மேலும் கூறினார்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 15 இலட்சம் பேருக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன. இவர்களில் 3,500 பேர் மட்டுமே மாற்றுச் சிறுநீரகத்தைப் பெறுகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
8. அதிகக் கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
ஆக.13,2011. அதிகக் கடன் சுமையுள்ள இருபது வளரும் நாடுகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இவ்வெள்ளிக்கிழமை லோக்சபாவில் கேள்வி-பதில் நேரத்தில் இதனைத் தெரிவித்த முகர்ஜி, “உலக வங்கி வெளியிட்டுள்ள உலகளாவிய நிதி வளர்ச்சி 2011” என்ற அறிக்கையின்படி, 2009ல் அதிக வெளிநாட்டுக் கடன் சுமையுள்ள இருபது வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்றார்.
இருந்தபோதிலும், இந்தக் கடன் சுமை சமாளிக்கக் கூடியதே என்றும் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும். இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
உலக வங்கி வெளியிட்ட இந்தப் பட்டியலில், சீனா, இரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளன என்றார் முகர்ஜி.
9. போபால் விஷவாயு விபத்துக் கம்பனிக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
ஆக.13,2011. போபால் விஷவாயு விபத்துடன் தொடர்புடைய அமெரிக்க டோவ் (Dow) வேதிய நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனுசரணையாளராக தேர்வாகியுள்ளதை எதிர்த்து கையெழுத்துக்களை சேகரிக்கும் இயக்கமொன்று இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள இந்த விஷ வாயு விபத்துத் தொடர்பில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நட்ட ஈடு குறித்த வழக்குகள் இன்னமும் முடிவு பெறவில்லை என்பதாலும் இந்த நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளோடு சம்மந்தப்பட்டிருக்கக் கூடாது என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment