Saturday, 27 August 2011

Catholic News - hottest and latest - 25 August 2011

1. மறைக் கல்விக்கும் திருவழிபாட்டிற்கும் இடையே இன்னும் அதிக பிணைப்பு உருவாக வேண்டும் - திருத்தந்தை

2. மெக்சிகோ நாட்டில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருப்பண்டங்கள்

3. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டம் குறித்து இந்திய ஆயர்கள் கருத்து

4. ஆஸ்திரேலியாவில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாவதற்கு கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவத் தலைவர்கள் எதிர்ப்பு

5. உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் இயேசு சபையினரின் வழி நடத்துதலில் கலந்து கொண்ட 3000 இளையோர்

6. வேளாங்கண்ணி கோவில் ஆண்டு பெருவிழா: அனைத்து ஏற்பாடும் தயார்!

7. பாட்னா திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கென்று தரமான ஒரு திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும்

8. ஆப்ரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தைப் போக்க அவசரகால கூட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. மறைக் கல்விக்கும் திருவழிபாட்டிற்கும் இடையே இன்னும் அதிக பிணைப்பு உருவாக வேண்டும் - திருத்தந்தை

ஆக.25,2011. மறைக் கல்விக்கும் திருவழிபாட்டிற்கும் இடையே இன்னும் அதிக பிணைப்பு உருவாக வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
இவ்வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தாலிய ஆயர் பேரவையினரால் நடத்தப்படும் இத்தாலியத் திருவழிபாட்டு வாரம் என்ற கூட்டத்திற்கு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வழியாக தன் செய்தியை அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறான அழைப்பை முன் வைத்தார்.
நாம் கொண்டாடும் திருவழிபாடு நமது மறை கல்வி மற்றும் ஒவ்வொரு நாள் வாழ்வின் வெளிப்பாடாகக் கொண்டாடப்படவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நம் ஆன்ம வாழ்வு நல்வழியில் முதிர்ச்சி அடைவதற்கு திருவழிபாடு ஒவ்வொரு நாளும் உதவியாக இருக்க வேண்டும் என்று தன் செய்தியில் கூறினார்.


2. மெக்சிகோ நாட்டில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருப்பண்டங்கள்

ஆக.25,2011. மெக்சிகோ நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் வளர்வதற்கும், சிறப்பாக அந்நாடு போதைப் பொருள் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் பரிந்துரைகளை விசுவாசிகள் நாட வேண்டும் என்று மெக்சிகோ பேராயர் கர்தினால் நோர்பெர்தோ ரிவேரா கரேரா கூறினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் திருப்பண்டங்கள் தற்போது மெக்சிகோவின் பல்வேறு நகரங்களில் மக்களின் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. இப்புனித பயணத்தில் மெக்சிகோவின் விசுவாசிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கர்தினால் கரேரா அழைப்பு விடுத்துள்ளார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவரது இரத்தம் அடங்கிய பாத்திரம் ஒன்று இஞ்ஞாயிறு வரை குவாதலுபே (Guadalupe) பேராலயத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5 முதல் 8 வரை அது மெக்சிகோ நகரின் பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தத் திருப்பண்டமும், மெழுகால் வார்க்கப்பட்டுள்ள அருளாளர் இரண்டாம் ஜான்பாலின் உருவமும் மெக்சிகோ நாட்டின் 90 மறை மாவட்டங்களுக்கும் மக்களின் வணக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


3. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டம் குறித்து இந்திய ஆயர்கள் கருத்து

ஆக.25,2011. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேயின் உடல் நலம் குன்றியிருப்பதாகக் கூறப்படும் இவ்வேளையில், இதைக் குறித்து இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள இப்போராட்டம் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் Gracias, இந்தியத் திருச்சபை அன்னா ஹசாரேயின் நலம் குறித்து செபித்து வருவதாகக் கூறினார். ஹசாரேயின் முயற்சிகளால் எளிய மக்களும் இந்தியாவில் நிலவும் ஊழல் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; எனவே, மக்களை இன்னும் சீரியப் பாதையில் வழிநடத்த ஹசாரே தன் உடல் நலனைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.
ஊழல் என்பது இந்திய நாட்டின் மிகப் பெரும் பிரச்சனை என்பதால், ஹசாரேயின் குழுவினரும், இந்திய அரசும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வழிகளைத் தீர ஆராய, இந்திய ஆயர் பேரவையின் தலைவர் என்ற முறையில் அவர்களுக்குத் தன் சிறப்பான விண்ணப்பத்தை முன் வைப்பதாக கர்தினால் Gracias கூறினார்.
அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள இந்த போராட்டம் மக்களின் மிக முக்கியமான பிரச்னையை மையப்படுத்தியது என்பதால், இதற்குத் தன் ஆதரவைக் கூறிய புது டில்லிப் பேராயர் Vincent Concessao, இப்போராட்டம் மக்களாட்சி முறைப்படி நடத்தப்படுவதை தான் இன்னும் அதிகம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பினை நிறுவியவர்களில் ஒருவரான பேராயர் Concessao இந்தியாவின் மிகப் பெரும் பிரச்சனையான ஊழலுக்குத் தகுந்த தீர்வு கிடைப்பதில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டுமேயொழிய, உணர்வுகள் மேலோங்கி, இப்போராட்டம் வன்முறையில் முடியும் ஆபத்தைத் தவிர்க்க வேண்டும் என்று தன் வேண்டுகோளை முன் வைத்தார்.


4. ஆஸ்திரேலியாவில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாவதற்கு கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவத் தலைவர்கள் எதிர்ப்பு

ஆக.25,2011. ஆஸ்திரேலியாவில் ஓரினத் திருமணத்தைச் சட்டமாக்குவது குறித்து  தங்கள் எதிர்ப்பையும், விண்ணப்பங்களையும் அந்நாட்டின் 226 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்துவத் தலைவர்கள் அனுப்பியுள்ளனர்.
சிட்னி உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் George Pell, ஆங்க்லிகன் பேராயர் Peter Jensen, லுத்தரன் சபையின் தலைவர் Mike Semmler உட்பட 50 தலைவர்களுக்கும் அதிகமானோர் இப்புதன் முதல் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்முயற்சியைத் தடுக்கும் நோக்கத்தில் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.     
குழந்தைகள் பிறப்பதற்கும், நல்லதொருச் சூழலில் வளர்வதற்கும் தாய், தந்தை என்ற இருபால் உறவு, திருமணம், குடும்பம் ஆகிய அடிப்படை சமுதாயக் கட்டுமானங்கள் தேவை என்று இத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபட்ட இளையோர் பிளவுபட்ட, தந்தையற்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய இத்தலைவர்கள், சமுதாயம் உறுதியான நிலையில் இருக்க ஆண், பெண் ஆகியோர் உருவாக்கும் குடும்பங்கள் மிகவும் தேவை என்று கூறினர்.
தற்போது ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பணியாற்றிவரும் Julia Gillard பாரம்பரிய வழியில் நடைபெறும் திருமணத்தையே ஆதரிப்பவர் என்பதால், அவரை பிரச்சனையில் சிக்கவைப்பதற்கு எதிர் கட்சிகள் மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியே திருமணம் குறித்த இந்த சட்ட மாற்றத்தைக் கோரும் விவாதங்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.


5. உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் இயேசு சபையினரின் வழி நடத்துதலில் கலந்து கொண்ட 3000 இளையோர்

ஆக.25,2011. அண்மையில் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நிறைவுபெற்ற அகில உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் இயேசு சபையினரின் வழி நடத்துதலில் 3000 இளையோர் கலந்து கொண்டனர்.
Magis என்ற பெயர் கொண்ட இவ்விளையோர் குழு, இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டில் பிறந்த Loyola கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தங்கள் திருப்பயனத்தைத் துவக்கி, மத்ரித் நகரில் முடித்தனர்.
இந்தியாவிலிருந்து 52 இளையோரை வழிநடத்திய இயேசு சபை குரு Erwin Lazardo, இந்த அனுபவம் நாம் அனைவரும் இவ்வுலகில் பயணிகள் என்பதை உணர வைத்ததென்றும், இம்முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தங்கள் விசுவாசத்தில் ஆழப்பட்டனர் என்றும் கூறினார்.
தான் அழைத்து வந்த இளையோரில் பலர் இந்திய கிராமங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், இவர்களில் பலர்  விமானத்தில் மேற்கொண்ட முதல் பயணம், மற்றும் பிற நாடுகளின் கலாச்சாரம் ஆகியவை ஆழ்ந்த அனுபவங்களாக இருந்தன என்றும் அருள்தந்தை Lazardo மேலும் கூறினார்.


6. வேளாங்கண்ணி கோவில் ஆண்டு பெருவிழா: அனைத்து ஏற்பாடும் தயார்!

ஆக.25,2011. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பசிலிக்காப் பேராலய அதிபர் அருள்தந்தை மைக்கிள் தெரிவித்துள்ளார்.
இப்பெருவிழாவையொட்டி பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த அருள்தந்தை மைக்கிள் மேலும் பல விவரங்களை வெளியிட்டார்.
வேளாங்கண்ணியில் பக்தர்களின் தேவைக்கு 24 மணி நேரமும், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. திருட்டு மற்றும் குற்ற செயல்களைத் தடுக்க ஆங்காகே சுழல் கேமராக்கள் மாவட்ட போலீஸ் சார்பில் பொறுத்தப்பட்டுள்ளன. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை பேராலய அதிபர் அருள்தந்தை மைக்கிள் தெரிவித்தார்.


7. பாட்னா திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கென்று தரமான ஒரு திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும்

ஆக.25,2011. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் அன்னை தெரேசா அகில உலகத் திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக, பாட்னா நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கென்று தரமான ஒரு திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முயற்சியின் முதல் கட்டமாக, "In the Name of God's Poor" அதாவது, 'இறைவனின் ஏழைகள் பெயரால்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அன்னை தெரேசாவின் வாழ்வைக் குறித்தத் திரைப்படம் இலவசமாகக் காட்டப்படும்.
இதைத் தொடர்ந்து 'குழந்தைகள் திரைப்படக் கழகம்' ஒன்று அமைக்கப்படும் என்றும், அதன் வழியாக நல்ல மதிப்பீடுகள் நிறைந்த, தரமானத் திரைப்படங்கள் குழைந்தைகளுக்குக் காட்டப்படும் என்றும் பாட்னாவில் உள்ள  AASRA பிறரன்பு அறக்கட்டளையும், Regent திரையரங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.


8. ஆப்ரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தைப் போக்க அவசரகால கூட்டம்

ஆக.25,2011. Eritrea, Djibouti, Ethiopia, Somalia ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆப்ரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தைப் போக்க உலக நாடுகளும், பெரும் நிறுவனங்களும் உடனடியாக முன் வர வேண்டுமென ஐ.நா. உயர் அதிகாரிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இவ்விழாயனன்று ஆப்ரிக்கக் கண்டத்தின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் Addis Ababaவில் அவசரகால கூட்டமொன்றை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், அக்கண்டத்தின் பசி, பட்டினி இவைகளைப் போக்க உலகின் அரசுகள்  அனைத்தும் முன் வர வேண்டுமென்று ஐ.நா. அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆப்ரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் வடகிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் பசி, பட்டினியால் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது துயர் துடைக்கவும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் குறைந்தது ஒரு பில்லியன், அதாவது, 100 கோடி டாலர்கள் அதிகமாகத் தேவைப்படுகிறதென்று ஐ.நா.செய்தியொன்று கூறுகிறது.
பட்டினிக் கொடுமையால் இந்நாடுகளில் இருந்து கென்யா, எதியோப்பியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பிரச்சனைகளும் கூடி வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.
 

No comments:

Post a Comment