Friday 12 August 2011

Catholic News - hottest and latest - 09 August 2011

1. உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இஸ்பெயின் பொருளாதாரத்திற்கு உதவும் - அரசு அதிகாரி

2. இப்புதனை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கின்றனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்

3. ஆந்திராவில் பொய்க் குற்றச்சாட்டின்பேரில் ஐந்து கிறிஸ்தவர்கள் கைது

4. பாகிஸ்தான் காரித்தாஸின் வீடு கட்டிக் கொடுக்கும் பணி துவங்கியுள்ளது

5. சொமாலியாவிற்கு 31 டன் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது ஐ.நா.

6. 150 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இம்மாதம் 12ம் தேதி விடுவிக்கப்படுவர்

7. இலங்கை அரசு பெற்றிருப்பது போரின் வெற்றியேயன்றி, அமைதியல்ல

8. புதிய கண்டுபிடிப்புகளின் விளைவால் விலங்குகளின் எண்ணிக்கை குறைவு: துணைவேந்தர் பேச்சு

----------------------------------------------------------------------------------------------------------------

1. உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இஸ்பெயின் பொருளாதாரத்திற்கு உதவும் - அரசு அதிகாரி

ஆக.09,2011. இம்மாதம் திருத்தந்தையுடன் இஸ்பெயினின்  மத்ரித்தில் இடம்பெறும் உலக இளைஞர் கொண்டாட்டங்கள் மூலம் இஸ்பெயின் நாட்டிற்கு 14 கோடியே 30 இலட்சம் டாலர் வருமானம் கிட்டும் என நம்புபுவதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் வீட்டு வசதி மற்றும் பொருளாதார அலுவலகத்தின் தலைவர் பெர்சிவால் மங்ளானோ.
இத்தகைய கொண்டாட்டத்தினால் இஸ்பெயின் அரசுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற சிலரின் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த மங்ளானோ, பல இலட்சக்கணக்கான இளைஞர்களின் வருகை, இஸ்பானிய பொருளாதாரத்திற்கு நன்மையாகவே இருக்கும் என்றார்.
இஸ்பானிய அரசு இவ்விளைஞர் தினக்கொண்டாட்டங்களுக்கு நேரடியாக எவ்விதப் பொருளாதார உதவிகளும் செய்யாத நிலையில் தனியார் அமைப்புகளே இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றன.

2. இப்புதனை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கின்றனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்

ஆக.09,2011. தாழ்த்தப்பட்ட சமூகம் குறித்த இந்திய அரசியலமைப்பு விதி உருவாக்கப்பட்டதன் 61ம் ஆண்டு நிறைவையொட்டி இப்புதனை கறுப்பு நாளாக கடைபிடிக்கின்றனர் இந்திய கிறிஸ்தவர்கள்.
இந்து மத்த்தினரைத்தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமுதாயமாகக் கருதப்படவோ, சலுகைகள் பெறவோ தடைச்செய்யும் இந்த அரசியலமைப்பு விதி குறித்து தங்கள் எதிர்ப்பை வெளியிடும் விதமாக இந்தக் கறுப்பு தினத்தை இந்தியாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து அறிவித்துள்ளன.
டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ மற்றும் வட இந்திய திருச்சபையின் பொதுச்செயலர் ஆல்வன் மசிஹ் ஆகியோர் தலைமையில் இப்புதனன்று டெல்லியில் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ தலித் இனத்தவர்க்கான சலுகைகள் குறித்த ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக அறிவித்துள்ளார் சிறுபான்மையினருக்கான இராசாங்க அமைச்சர் வின்சென்ட் பாலா.

3. ஆந்திராவில் பொய்க் குற்றச்சாட்டின்பேரில் ஐந்து கிறிஸ்தவர்கள் கைது

ஆக.09,2011மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் ஆந்திராவில் ஐந்து கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும், அக்கிறிஸ்தவர்களைத் தாக்கியவர்கள் எவ்விதத் தண்டனையுமின்றி தப்பியுள்ளதும் கவலை தருவதாக உள்ளதாகத் தெரிவித்தார் இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவையின் தலைவர் சாஜன் ஜார்ஜ்.
இந்துக் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு மலையில் 'இயேசு மீட்கிறார்' என்ற வார்த்தையை எழுதியதற்காக ஐந்து கிறிஸ்தவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்க அங்கத்தினர்கள், பின்னர் அவர்களைக் காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளனர். அவர்களை  மதமாற்ற முயற்சியின் கீழ் கைதுச்செய்த காவல்துறை, பின்னர் பிணையத்தின்பேரில் விடுதலை செய்துள்ளது.
காவல்துறை இத்தகைய சார்பு எண்ணத்துடன் செயல்படுவதால்கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் ஆபத்து இருப்பதாக கவலையை வெளியிட்டுள்ளார் சாஜன் ஜார்ஜ்.

4. பாகிஸ்தான் காரித்தாஸின் வீடு கட்டிக் கொடுக்கும் பணி துவங்கியுள்ளது

ஆக.09,2011. பாகிஸ்தானின் தென் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 500 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கியுள்ளது காரித்தாஸ் பாகிஸ்தான் அமைப்பு.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஹஜி ஜானோ மசி கிராமத்தில் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி உரையாற்றிய பாகிஸ்தான் காரித்தாஸ் இயக்குனர் ஷாமாஸ் ஷமௌன், ரமதான் மாதத்தையொட்டிய பரிசாக இதனை இஸ்லாமிய மக்களுக்கு வழங்குவதாகவும், 2,500 வீடுகளைக் கட்டுவதற்கான தங்கள் திட்டத்தின் முதல் தவணையே இந்த 500 வீடுகள் எனவும் கூறினார்.
கடந்த ஆண்டின் வெள்ளப்பெருக்கால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களுள் 44 ஆயிரத்து 670 குடும்பங்களுக்கு உதவியுள்ளது காரித்தாஸ் அமைப்பு. இதில் 2,950 தவிர ஏனைய அனைத்தும் இஸ்லாமியக் குடும்பங்களே.

5. சொமாலியாவிற்கு 31 டன் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது ஐ.நா.

ஆக.09,2011. சொமாலியாவில் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென 31 டன் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு.
சொமாலியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர், அதாவது 32 இலட்சம் பேர் வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உறைவிடங்களுக்கான பிளாஸ்டிக் விரிப்புகள், போர்வைகள் மற்றும் பாய்களைக் கொணர்ந்துள்ளது இந்த ஐநா அமைப்பு.
வழக்கமாக தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ உதவிப்பொருட்களை எடுத்துச்செல்லும் இவ்வமைப்பு, தற்போது அவசரநிலை நடவடிக்கையாக விமான மூலம் அவைகளைக் கொண்டுச் சென்றுள்ளது.
சொமாலியாவில் 30 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் வாடும் அதே வேளை, 10,000க்கு நான்கு குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் உயிரிழந்து வருகின்றன.
ஆப்ரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் கென்யா, எத்தியோப்பியா, டிஜிபுத்தி மற்றும் சொமாலியாவில்  1கோடியே 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் இத்தகைய ஒரு வறட்சி அப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. 150 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இம்மாதம் 12ம் தேதி விடுவிக்கப்படுவர்

ஆக.09,2011. புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் 150 பேர், வரும் வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக முன்னர் 24 புனர்வாழ்வு நிலையங்கள் இருந்தபோதிலும் பலர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் தற்போது 9 நிலையங்கள் மட்டுமே இயங்குவதாகவும் அவர் கூறினார்.
வன்னிப்போரில் சரணடைந்த 11,700 முன்னாள் போராளிகளில் 7,969 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,879 பேர் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.

7. இலங்கை அரசு பெற்றிருப்பது போரின் வெற்றியேயன்றி, அமைதியல்ல

ஆக.09,2011. இலங்கை அரசு போரை வென்றிருக்கலாம் ஆனால் அமைதியை அல்ல என்பது மட்டுமல்ல, அது கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறியுள்ளது என குற்றம் சாட்டினார் அந்நாட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற அங்கத்தினர் விஜிதா ஹெரத்.
மதத்தலைவர்கள், பொதுநிலைப்பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பங்கேற்புடன் நாட்டின் அமைதி குறித்து இலங்கையின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற அங்கத்தினர் விஜிதா, நாட்டின் நீடித்த அமைதிக்கான எவ்வித செயல்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறை கூறினார்.
இதே கூட்டத்தில் கலந்துகொண்ட கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சேவியர் குருமடத்தின் இறையியல் துறைத்தலைவர் குரு பேசில் மங்களராஜா, யாழ்ப்பாணத்தில் பேச்சு சுதந்திரம் காணப்படவில்லை எனவும், மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாகவும் தெரிவித்தார்.
இதில் கலந்துகொண்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான அமைச்சர் திலன் பெரேராபல இனங்களையும் பல கலாச்சாரங்களையும் கொண்ட இலங்கையில் , சிறுபானமை சமுதாயத்தினரின் குரல்கள், அரசியல் அதிகாரமுடைய பெரும்பான்மையினரின் குரல்களால் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்றார்.

8. புதிய கண்டுபிடிப்புகளின் விளைவால் விலங்குகளின் எண்ணிக்கை குறைவு: துணைவேந்தர் பேச்சு
ஆக.09,2011புதுப் புது கண்டுபிடிப்புகளின் விளைவால், ஆண்டுதோறும் 1 கோடி விலங்குகள் அழிக்கப்பட்டு வருவதாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுடலைமுத்து கூறினார்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற "பசுமை தயாரித்தலில் நவீன முறைகள்' குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய துணைவேந்தர், அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நீர், நிலம், காடு ஆகியவற்றை சேதப்படுத்தாமலும், வருங்காலச் சந்ததியினரைக் காப்பாற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
ஒவ்வொரு நாளும் உருவாகும் புதுப் புது கண்டுபிடிப்புகளுள் சிலவற்றின் மூலம் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு, அதனால், ஆண்டுதோறும் 1 கோடி விலங்குகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், பசுமைக் கண்டுபிடிப்புகள் மூலம் புவியைக் காப்பாற்ற முடியும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுடலைமுத்து.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...