1. Knights of Columbus பிறரன்பு நிறுவனத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து
2. கத்தோலிக்கத் திருச்சபை, ஒப்புரவு அருட்சாதனத்தின் முத்திரையை ஒருபோதும் மீறாது - வத்திக்கான் அதிகாரி உறுதி
3. தொமினிக்கன் குடியரசின் சிறைகளில் காலரா அச்சுறுத்தல், திருச்சபை கண்டனம்
4. கோஜ்ரா வன்முறைத் தாக்குதல்களுக்கு முஸ்லீம் தலைவர்கள் வருத்தம்
5. டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திருமணப் பதிவு மசோதா
6. சிரிய அதிகாரிகள் மனிதப்பண்பற்றச் செயல்களை நிறுத்துமாறு ஐ.நா. வேண்டுகோள்
7. உலக அளவில் மனஅழுத்தப் பிரச்சனை அதிகம் உள்ள நாடு பிரான்ஸ்
8. சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. Knights of Columbus பிறரன்பு நிறுவனத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து
ஆக.03,2011. சனநாயகச் சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெரும் அறநெறி விவகாரங்களுக்குத் தெளிவான மற்றும் தைரியமான சான்று பகருவது இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஒரு சமூகத்தின் அடிப்படை அமைப்புக்களான குடும்பம், திருமணம் போன்றவற்றை மட்டுமன்றி மனச்சான்று மற்றும் சமய சுதந்திரத்தின் அடிப்படை மனித உரிமைகளைக் குறைத்து மதிப்பிடும் சட்டங்கள் பெருகி வரும் சூழலில் இத்தகைய சான்று வாழ்வு அவசியமாகின்றது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வரில் தங்களது 129வது மாநாட்டை இச்செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள Knights of Columbus என்ற பன்னாட்டுக் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவன உறுப்பினர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ விசுவாசத்தைக் காப்பதற்கும், பாப்பிறையின் உலகளாவியத் திருச்சபையின் பணிகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் இந்நிறுவனம் ஆற்றி வரும் சேவைகளுக்கும் நிதியுதவிகளுக்கும் திருத்தந்தையின் பாராட்டும் நன்றியும் அச்செயதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு இவ்வியாழனன்று நிறைவடையும்.
Knights of Columbus என்ற உலகின் மிகப்பெரிய பன்னாட்டுக் கத்தோலிக்கச் சகோதரத்துவத் தொண்டு நிறுவனம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1882ல், கிறிஸ்டோபர் கொல்பசைக் கௌரவப்படுத்தும் நோக்கத்தில் அவர் பெயரில் தொடங்கப்பட்டது. தற்சமயம் இதில் 18 இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கத்தோலிக்க விசுவாசத்தை உண்மையாகவே வாழும் 18க்கும் அதற்கு மேற்பட்ட வயதினரும் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்க முடியும்.
2010ம் ஆண்டில் மட்டும் 15 கோடியே 40 இலட்சம் டாலரைப் பிறரன்புப் பணிகளுக்கு நேரிடையாகக் கொடுத்துள்ளது. இதன் உறுப்பினர்கள் ஏழு கோடிக்கு அதிகமான மணி நேரங்களைத் தன்னார்வச் சேவைக்கென அர்ப்பணித்துள்ளனர். 4,13,000 pints இரத்த தானமும் செய்துள்ளனர்.
2. கத்தோலிக்கத் திருச்சபை, ஒப்புரவு அருட்சாதனத்தின் முத்திரையை ஒருபோதும் மீறாது - வத்திக்கான் அதிகாரி உறுதி
ஆக.03,2011. கத்தோலிக்கத் திருச்சபை, ஒப்புரவு அருட்சாதனத்தின் உடைபடா முத்திரையை ஒருபோதும் மீறாது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் உறுதிபடக் கூறினார்.
மனம் வருந்தும் ஒருவர் ஒப்புரவு அருட்சாதனத்தில் வெளியிடுபவற்றைக் கத்தோலிக்கத் திருச்சபை ஒருபொழுதும் வெளியிடாது என்று அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்புத் துறையின் தலைவர் பேராயர் ஜான்பிராங்கோ ஜிரோத்தி கூறினார்.
“அருட்பணியாளர்கள், ஒப்புரவு அருட்சாதனத்தில் தெரிவிக்கப்படும் பாலியல் தவறுகள் குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை” வழங்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி கடந்த ஜூலை 14ம் தேதி உறுதி கூறினார்.
இது குறித்துப் பேசிய பேராயர் ஜிரோத்தி, அயர்லாந்து அரசு தான் விரும்பும் எந்தச் சட்டங்களையும் நிறைவேற்றட்டும், ஆனால், ஒப்புரவு அருட்சாதனம் குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்குத் திருச்சபை, தனது அருட்பணியாளர்களை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அரசு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
3. தொமினிக்கன் குடியரசின் சிறைகளில் காலரா அச்சுறுத்தல், திருச்சபை கண்டனம்
ஆக.03,2011. தொமினிக்கன் குடியரசின் சிறைகளில் காலரா நோய்ப் பரவிய தகவல்களை அதிகாரிகள் மறைத்துள்ளது குறித்து அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை அரசைக் குறை கூறியுள்ளது.
அந்நாட்டுச் சிறைகளின் சுகாதாரமற்ற நிலைகள், கைதிகளுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கின்றன என்றும் காலரா நோய்ப் பரவுவதற்கு இதுவே காரணம் என்றும் அந்நாட்டு ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணிக் குழு அரசைக் குறை கூறியது.
இதற்கிடையே, சிறைகளில் காலராப் பரவியது என்ற குற்றச்சாட்டை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஹெய்ட்டியில் 2010ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் அந்நாட்டில் காலராப் பரவியதையடுத்து அதன் அண்டை நாடான தொமினிக்கன் குடியரசிலும் அந்நோய்ப் பரவியது. இதனால் ஹெய்ட்டியில் ஆறாயிரத்துக்கு அதிகமானோரும் தொமினிக்கன் குடியரசில் 92 பேரும் இறந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
4. கோஜ்ரா வன்முறைத் தாக்குதல்களுக்கு முஸ்லீம் தலைவர்கள் வருத்தம்
ஆக.03,2011. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் கோஜ்ரா நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறையில் தங்கள் உறவுகளையும் வீடுகளையும் தொழிலையும் இழந்த மக்களிடம் இரண்டு முஸ்லீம் தலைவர்கள் பொதுப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் நடந்த ஈராண்டு நினைவாக கோஜ்ராவின் இயேசுவின் திருஇதய ஆலயத்தில் இத்திங்களன்று நடைபெற்ற பல்சமயக் கருத்தரங்கில் கலந்து கொண்ட இரண்டு இசுலாம் சூஃபிகள் இந்த வன்முறைக்காக வருந்தினர்.
இந்த வன்முறையானது “இசுலாம் உணர்வுகளுக்கு” எதிரானது என்று சொல்லி இதற்காகத் தாங்கள் பெரிதும் வருந்துவதாக இந்த இசுலாம் யோகிகள் கூறினர்.
2009ம் ஆண்டு ஆகஸ்டில் கோஜ்ரா மற்றும் அதற்கு அருகிலுள்ள கிராமக் கிறிஸ்தவச் சமூகங்களுக்கு எதிராக 800க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வன்முறையில் இறங்கி, கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர் மற்றும் கிறிஸ்தவர்களைக் கண்மூடித்தனமாய்த் தாக்கினர். இதில் 10 கத்தோலிக்கர் இறந்தனர்.
5. டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திருமணப் பதிவு மசோதா
ஆக.03,2011. இந்தியத் தலைநகர் டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திருமணங்களைப் பதிவு செய்யும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ஷீலா திக்ஷித் தலைமையிலான அரசினால் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவின் மூலம், கணவர்களால் கைவிடப்பட்டப் பெண்களுக்கு நிதி ஆதரவும் அவர்களின் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும்.
தி்ருமணமாகி 60 நாள்களுக்குள் பதிவு செய்யாமல் இருந்தால் அத்தம்பதியருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகின்றது.
டெல்லியில் பல பெண்கள் கணவர்களால் கைவிடப்பட்டுத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாத நிலையில் பாதுகாப்பின்றி வாழ்வதாக 2006ல் உச்சநீதிமன்றம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இந்தச் சட்டம் அமலில் இருக்கின்றது.
6. சிரிய அதிகாரிகள் மனிதப்பண்பற்றச் செயல்களை நிறுத்துமாறு ஐ.நா. வேண்டுகோள்
ஆக.03,2011. சிரியாவில் இடம் பெறும் சனநாயக ஆதரவுப் போராட்டங்களில் கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 145 பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்து ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவநீதம்பிள்ளை தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
அப்பாவி பொது மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு நவநீதம்பிள்ளை சிரிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தனிப்பட்ட மனித உரிமை குழுக்கள், மனித உரிமைகள் அவையினால் குறிக்கப்பட்ட உண்மையை அறியும் பணிக்குழு போன்றவற்றை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பதன் மூலம் அந்நாட்டின் நிலைமையை உலக சமுதாயத்தின் கண்களுக்கு மறைக்க முபற்சிக்கின்றது என்றும் நவநீதம்பிள்ளை குற்றம் சாட்டினார்.
7. உலக அளவில் மனஅழுத்தப் பிரச்சனை அதிகம் உள்ள நாடு பிரான்ஸ்
ஆக.03,2011. உலக நாடுகளில் அதிகமான மன அழுத்தம் மிக்க நாடாக பிரான்ஸ் உள்ளது என அண்மை ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.
வருவாய் அதிகம் உள்ள 18 நாடுகளில் 89 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் பி.எம்.சி (BMC) மருத்துவ இதழ், பிரான்ஸ் மக்கள் அதிக மன அழுத்தப் பிரச்சனையில் தவிப்பதாகக் தெரிவிக்கிறது.
உலகில் ஏறக்குறைய 12 கோடியே 10 இலட்சம் பேர் மனச்சோர்வால் துன்புறுவதாகவும் இதனால் ஒவ்வோர் ஆண்டும் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலக மன அழுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரான்சில் 21 விழுக்காட்டு மக்கள் மன அழுத்தம் பிரச்சனையில் தவிக்கிறார்கள். அதையடுத்து நாடுகள் விவரம் அமெரிக்க ஐக்கிய நாடு, (19.2 விழுக்காடு), பிரேசில்(18.4) நெதர்லாந்து(17.9), நியூசிலாந்து(17.8), உக்ரெய்ன்(14.8), பெல்ஜியம்(14.1), கொலம்பியா(13.3), லெபனன்(10.9), இஸ்பெயின்(10.6), இஸ்ரேல்(10.2), இத்தாலி(9.9), ஜெர்மனி(9.9), தென்னாப்ரிக்கா(9.8), இந்தியா(9), மெக்சிகோ(6.6), சீனா(6.5) ஆகும்.
8. சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ
ஆக.03,2011. இலங்கையில் இறுதிகட்டப் போர்க் காலத்தின் போது இடம் பெற்ற குற்றங்களை வெளிக்கொணரும் சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான விவரணப்படம் பொய்களாலானது என்று பிரசாரம் செய்யும் பாணியில் ஆங்கில மொழியிலான விவரணப் படமொன்று தற்போது இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
‘லைஸ் அக்ரீட் அப்ஒன்’ (Lies Agreed Upon) என்ற தலைப்பில் இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்விவரணப் படம், சானல் 4 இல், இலங்கை அரசும் படையினரும் புரிந்துள்ளதாகக் கூறப்பட்ட பல குற்றச்செயல்களை மறுக்கின்றது. இத்துடன், அதில் வீடியோ காட்சிகள் போலியாக தொகுக்கப்பட்டு, உண்மையானவையாக காட்டப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இந்த படம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றமை தவறு என்று கூறியுள்ள இந்த விவரணப்படம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா உண்மையில் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்துள்ள ரமேஷின் காலத்திலேயே, காத்தான்குடி, அரந்தலாவ போன்ற இடங்களில் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீதான படுகொலைகளைப் புரிந்தனர் என்றும் பிரசாரப்படுத்துவதில் இலங்கை அரசு சார்பான இந்த வீடியோ அக்கறை காட்டியுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.
No comments:
Post a Comment