Friday, 19 August 2011

Catholic News - hottest and latest - 17 August 2011

1. மத்ரிதில் ஆரம்பமான உலக இளையோர் மாநாட்டின் துவக்கத் திருப்பலியில் கர்தினால் Stanislaw Rylko

2. உலக இளையோர் மாநாட்டின்போது திருத்தந்தையைச் சந்திக்க விழையும் கந்தமால் பகுதி இளம் ஆசிரியை

3. Anna Hazare தலைமையில் நடைபெறும் போராட்டங்களுக்கு சில கிறிஸ்தவ அமைப்புக்கள் கண்டனம்

4. மியான்மாரில் Aung San Suu Kyiக்கும் அரசுக்கும் இடையே உருவாகியுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து கிறிஸ்தவக் குழுக்கள் கருத்து

5. நேபாளம் மதச்சுதந்திரம் பெற்றதிலிருந்து அங்குள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது

6. எத்தியோப்பிய முகாம்களில் குழந்தை இறப்புக்கள் அதிர்ச்சியூட்டுகின்றன ஐ.நா.

7. தீவிரமாகும் உணவுப் பிரச்சனை: உலக வங்கி

------------------------------------------------------------------------------------------------------

1. மத்ரிதில் ஆரம்பமான உலக இளையோர் மாநாட்டின் துவக்கத் திருப்பலியில் கர்தினால் Stanislaw Rylko

ஆக.17,2011. திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கும் நம் மத்தியில் மற்றொரு மிக முக்கிய விருந்தினராக அருளாளர் இரண்டாம் ஜான் பால் நம்முடன் இருக்கிறார் என்று கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
இச்செவ்வாயன்று மத்ரிதில் ஆரம்பமான உலக இளையோர் மாநாட்டின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்திய பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Rylko, அங்கு கூடியிருந்த 500000க்கும் மேற்பட்ட இளையோரை வரவேற்று, மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவில் வேரூன்றிய விசுவாசம் நம் ஒவ்வொருவரது வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும், இன்றைய உலகில் விசுவாச வாழ்வு வாழ்வது சவால்கள் நிறைந்த ஒன்று என்றும் கர்தினால் இளையோரிடம் கூறினார்.
இளையோர் மீது பரிவு கொண்டிருந்த அருளாளர் இரண்டாம் ஜான்பால் இம்மாநாட்டின் பாதுகாவலராக இருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Rylko, அவர் இளையோரிடம் அடிக்கடி கூறி வந்த வார்த்தைகளான, 'கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் தேர்ந்தெடுக்க அஞ்சாதீர்கள்!' என்பதையும் நினைவுறுத்தினார்.
கடவுளை மறந்து, அல்லது மறுத்து வாழும் இவ்வுலகிற்கு, முக்கியமாக, இளையோர் மத்தியில் கடவுள் நம்பிக்கை குறைந்து வரும் இக்காலத்திற்கு மத்ரிதில் கூடியிருக்கும் இளையோர் ஒரு மாறுபட்ட சாட்சியாக திகழ்கிறார்கள் என்று கர்தினால் Stanislaw Rylko சுட்டிக் காட்டினார்.


2. உலக இளையோர் மாநாட்டின்போது திருத்தந்தையைச் சந்திக்க விழையும் கந்தமால் பகுதி இளம் ஆசிரியை

ஆக.17,2011. உலக இளையோர் மாநாட்டின்போது திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதி மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளையும், அவர்கள் வாழ்ந்து வரும் விசுவாச வாழ்வையும் குறித்து திருத்தந்தையிடம் சொல்வேன் என்று ஓர் இளம் ஆசிரியை கூறினார்.
2007, மற்றும் 2008ம் ஆண்டுகளில் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு ஆளான Mousomi Kumar என்ற இளம் வயது ஆசிரியை ஒரிஸ்ஸா தலத்திருச்சபையும் அவரது குடும்பத்தினரும் செய்த உதவிகளைக் கொண்டு மத்ரிதில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்கு அவர் திருத்தந்தையைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், தானும், இன்னும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களும் அனுபவித்தத் துயரங்களைத் திருத்தந்தையிடம் கூறி, அவரது செபங்களையும் ஆசீரையும் வேண்டவிருப்பதாகக் கூறினார்.
கட்டக் புபனேஸ்வர் மறைமாவட்டத்தில் இளையோர் பணியில் ஈடுபட்டிருக்கும் அருள்தந்தை Rabindra Ranasingh இம்மாநாட்டில் தான் கலந்து கொள்வது, இளையோருக்கான தன் பணியை இன்னும் தீவிரமாக்கும் ஒரு உந்து சக்தியென்று கூறினார்.
இதற்கிடையே, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி லக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நினைவு 'இந்துமத விசுவாசத்தைக் காக்கும் நாளாக' கடைபிடிக்கப்படும் என்று  சங் பரிவார் குழுவினர் அறிவித்திருப்பதையடுத்து, ஒரிஸ்ஸாவில் மீண்டும் பதட்ட நிலை உருவாகும் என்று  அங்குள்ள அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் கவலையை வெளியிட்டுள்ளன.


3. Anna Hazare தலைமையில் நடைபெறும் போராட்டங்களுக்கு சில கிறிஸ்தவ அமைப்புக்கள் கண்டனம்

ஆக.17,2011. ஊழலுக்கு எதிராக இந்தியாவில் Anna Hazare தலைமையில் நடைபெறும் போராட்டங்களை இந்தியாவில் உள்ள சில கிறிஸ்தவ அமைப்புக்கள் கண்டனம் செய்துள்ளன.
நாட்டில் நிலவும் ஊழல் குறித்த சட்டங்கள் இயற்றும் முயற்சியாக தற்போதைய பாராளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதங்கள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், Hazare தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தவறான ஒரு போக்கு என்றும், சாலைகளிலும், தெருக்களிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மூலம் நாட்டை ஆள்வது இயலாத ஒன்று என்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய பாபு ஜோசப் கூறினார்.
இந்தியாவின் மக்களாட்சி நியதிகளுக்கு Hazareன் போராட்டம் தகுந்த மதிப்பு தருவதாகத் தெரியவில்லை என்று பொதுநிலையினரின் தலைவர்களில் ஒருவரான ஜான் தயாள் கூறினார்.
Anna Hazareம் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரும் இச்செவ்வாயன்று கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.


4. மியான்மாரில் Aung San Suu Kyiக்கும் அரசுக்கும் இடையே உருவாகியுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து கிறிஸ்தவக் குழுக்கள் கருத்து

ஆக.17,2011. மியான்மாரில் Aung San Suu Kyiக்கும் அரசுக்கும் இடையே உருவாகி வரும் பேச்சுவார்த்தைகள் நாட்டுக்கு நல்ல விளைவுகளைத் தருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.
ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய நாட்களில் Suu Kyi க்கும் மியான்மார் தொழில்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக அமைந்தன என்று அரசுத் தரப்பில் அறிக்கைகள் வெளியாயின.
பாதுகாப்பு கருதி தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள், இந்தச் சந்திப்புக்கள் குறித்து பேசுகையில், அகில உலகின் கண்டனங்களை இதுவரை பெற்றுவந்த மியான்மார் அரசு தற்போது இப்பேச்சு வார்த்த்கைகள் மூலம் பிற நாடுகளின் நல் மதிப்பைப் பெரும் ஒரு முயற்சியாக இப்பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவோ என்ற தங்கள் சந்தேகத்தைத் தெரிவித்துள்ளனர்.


5. நேபாளம் மதச்சுதந்திரம் பெற்றதிலிருந்து அங்குள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது

ஆக.17,2011. அனைவரும் அன்னை மரியாவைப் போல விசுவாசத்தில் வளர்ந்து, இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ வேண்டும் என்று காத்மாண்டு ஆயர் Anthony Sharma கூறினார்.
இத்திங்கள் கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாள் அன்று 30 குழந்தைகளுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் திருமுழுக்கு, திருநற்கருணை ஆகிய அருட்சாதனங்களை வழங்கிய ஆயர் Sharma, அவர்கள் அனைவரும் விசுவாசத்தில் வளர வேண்டுமென வலியுறுத்தினார்.
2006ம் ஆண்டு நேபாளம் மதச்சுதந்திரம் பெற்றதிலிருந்து அங்குள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்றும், தற்போது அந்நாட்டில் 2000000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
9000 பேரைக் கொண்ட கத்தோலிக்கத் திருச்சபை 31 கல்வி நிறுவனங்கள் வழியே அந்நாட்டில் பணிகள் செய்து வருகின்றது என்றும், தற்போது நேபாளத்தில் 65 குருக்களும் 160 துறவியரும் பணி செய்து வருகின்றனர் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


6. எத்தியோப்பிய முகாம்களில் குழந்தை இறப்புக்கள் அதிர்ச்சியூட்டுகின்றன ஐ.நா.

ஆக.17,2011. எத்தியோப்பிய அகதிகள் முகாம்களில் இடம் பெறும் குழந்தை இறப்புக்கள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருக்கின்றன என்றும் இங்கு ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் தினமும் பத்துப் பேர் வீதம் இறக்கின்றனர் என்றும் ஐ.நா.கூறியது.
ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேர் வாழும் Kobe முகாமில் தட்டம்மை நோயும் பரவியுள்ளதால் இவ்விறப்பு விகிதம் அதிகரித்திருக்கின்றது என்று ஐ.நா. மேலும் கூறியது.
2011ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 15 ஆயிரம் சொமாலியர்கள் உணவு மற்றும் தண்ணீர் கேட்டு கென்யா மற்றும் எத்தியோப்பிய முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்று ஐ.நா.கூறியது.
கிழக்கு ஆப்ரிக்காவில் சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் வறட்சியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளனர்.   
சொமாலியாவில் Siad Barreவின் அரசு கவிழ்ந்ததிலிருந்து அந்நாடு கடந்த 20 வருடங்களாக கலவரங்களின் பூமியாக இருந்து வருகிறது எனக் கூறப்படுகின்றது.


7. தீவிரமாகும் உணவுப் பிரச்சனை: உலக வங்கி

ஆக.17,2011. உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்வாகவும், உறுதியற்ற நிலையிலும் தொடர்வது வளர்ந்து வரும் நாடுகளில் ஏழை மக்களுக்கு ஆபத்தாக அமையும் என்றும், ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளில் காணப்படும் பஞ்சம், வறட்சி ஆகியவற்றுடன் இது மேலும் ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும் என்றும் உலக வங்கி கூறுகிறது.
சராசரி உணவு விலையானது கடந்த பிப்ரவரியில் மிகவும் கடுமையாக அதிகரித்திருந்ததை விட சிறிதளவு குறைவாகவே இப்போது இருக்கின்ற போதிலும், ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததை விட மூன்றில் ஒரு மடங்கு அதிகமாக அது இருக்கின்றது என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
உலகில் சோளத்தின் விலை 84 விழுக்காடும், கோதுமையின் விலை 55 விழுக்காடும் அதிகரித்துள்ளன என்றும் உலக வங்கியின் அந்த அறிக்கை கூறுகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா, சொமாலியா, ருவண்டா ஆகிய நாடுகளில் சோளத்தின் விலை 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
 

No comments:

Post a Comment