Friday 19 August 2011

Catholic News - hottest and latest - 18 August 2011

1. உலக இளையோர் தின நிகழ்வுகளில் அமெரிக்க ஆயர்களின் உரை

2. கடவுளை இழந்துள்ளதே கலவரங்களுக்குக் காரணம் - இங்கிலாந்து ஆயர்

3. மும்பையில் கிறிஸ்துவக் கலைப்படைப்புக்கள் அடங்கிய அருங்காட்சியகம்

4. மதமாற்றத் தடை சட்டமாவதைத் தடுக்க நேபாள கிறிஸ்தவர்கள் முயற்சி

5. பூனே நகருக்கருகே கோவில் தாக்கப்பட்டது, சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் செயல்

6. அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் வழக்கு

7. ஜப்பானிய மக்களிடம் காணப்படும் நேர்மைக்கு மற்றொரு சான்று

------------------------------------------------------------------------------------------------------

1. உலக இளையோர் தின நிகழ்வுகளில் அமெரிக்க ஆயர்களின் உரை

ஆக.18,2011. உணர்வுகளின் அடிப்படையில் மட்டும் கிறிஸ்துவுடன் நமது உறவை வளர்ப்பது உண்மையாகவும், உறுதியாகவும் இராது என்று Philadephia உயர் மறைமாவட்டத்திற்கு நியமனம் பெற்றுள்ள பேராயர் Charles Chaput கூறினார்.
உலக இளையோர் தின நிகழ்வுகளையொட்டி மத்ரிதில் கூடியிருக்கும் இளையோரில் ஆங்கிலம் பேசும் ஆயிரக்கணக்கான இளையோருக்கு இப்புதன் மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் பேராயர் Chaput இவ்வாறு கூறினார்.
கிறிஸ்துவை எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்ற முடியும் என்பதிலும், அவரை பிறருக்கு எடுத்துச் சொல்லும் மன உறுதியுமே நாம் எவ்விதம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்பதை உறுதி செய்யும் என்று பேராயர் Chaput இளையோரிடம் கூறினார்.
இதற்கிடையே, மத்ரிதில் கூடியுள்ள அமெரிக்க இளையோரிடம் பேசிய நியூயார்க் பேராயர் Timothy Dolan அண்மையில் நியூயார்க் மாநிலம் ஒரே பாலின திருமணங்களை சட்டமாக்கியது அங்குள்ள கத்தோலிக்கக் குடும்பங்களையும், இளையோரையும் பெரிதும் பாதிக்கும் என்று எச்சரித்தார்.
நன்னெறிகளுக்கு எதிராக உலக அரசுகள் உருவாக்கும் பல சட்டதிட்டங்களுக்கு ஒரு மாற்றாக, ஆண், பெண் திருமண உறவில் நிலைத்திருந்து உலகிற்கு மாற்று சாட்சிகளாக வாழ்வது இளையோருக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்று பேராயர் Dolan சுட்டிக் காட்டினார்.


2. கடவுளை இழந்துள்ளதே கலவரங்களுக்குக் காரணம் - இங்கிலாந்து ஆயர் 

ஆக.18,2011. கடவுளையும், கிறிஸ்துவத்தையும் இங்கிலாந்து இழந்துள்ளதால், நன்னெறி மதிப்பீடுகளையும் இழந்து நிற்கிறது என்று இங்கிலாந்தின் லீட்ஸ் மறைமாவட்ட ஆயர் Arthur Roche கூறினார்.
மத்ரிதில் நடைபெறும் உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்றிருக்கும் ஆயர் Roche, வத்திக்கான் வானொலிக்கு இப்புதனன்று அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மைய இங்கிலாந்து கலவரங்கள் பற்றி ஆயர் அவர்களிடம் கேட்டபோது, இங்கிலாந்தில் உள்ள இளையோர், கடவுள் மதம் ஆகியவற்றை இழந்து வாழ்வதால் அவர்களிடம் வளர்ந்து வரும் ஏமாற்றம், விரக்தி ஆகியவைகளே இக்கலவரங்களில் அவர்களை ஈடுபடுத்தியது என்று ஆயர் Roche தெளிவுபடுத்தினார்.
இளையோர் மாநாட்டைப் பற்றி அவர் கூறுகையில், மத்ரிதில் தற்போது நிகழ்வன இளையோர் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள் என்றும், இந்தக் காட்சிகளை உலகிற்கு விளம்பரப்படுத்த உலகின் முக்கியமான தொடர்புசாதன நிறுவனங்கள் அங்கு இல்லாதது பெரும் குறையே என்றும் லீட்ஸ் ஆயர் Arthur Roche மேலும் கூறினார்.
இதற்கிடையே, இங்கிலாந்து கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கென முதல்தர கிறிஸ்தவ வானொலி (Premier Christian Radio) என்ற நிறுவனம் Westminsterல் இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த திருவிழிப்புச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளும் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழிப்பு, சமுதாயத்தில் நம்பிக்கையை வளர்க்க நாம் எடுத்துள்ள முதல் முயற்சியே என்று இக்கூட்டத்தில் பேசிய Southwark ஆயர் Christopher Chessun கூறினார்.


3. மும்பையில் கிறிஸ்துவக் கலைப்படைப்புக்கள் அடங்கிய அருங்காட்சியகம்

ஆக.18,2011. கிறிஸ்துவக் கலைப்படைப்புக்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்று மும்பையில் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.
மும்பை Goregaonல் உள்ள புனித பத்தாம் பத்திநாதர் குருமடத்தில் 2000 சதுர அடி பரப்பில் இந்த அருங்காட்சியகம் உருவாகி வருகிறது.
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பலிப்பீடம், முன்னாள் திருத்தந்தை ஒருவர் அணிந்திருந்த தொப்பி ஆகியவை உட்பட, 150 பழமை வாய்ந்த பொருட்கள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
கி.பி.முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை கிறிஸ்தவம் கலை, கலாச்சாரம் இவற்றிற்கு ஆற்றிவரும் சேவைகளை விளக்கும் பல அரும்பொருட்களை மக்கள் பார்வையிடுவதால், கிறிஸ்துவத்தைப் பற்றி மக்கள் இன்னும் அறிந்து கொள்ள இவ்வருங்காட்சியகம் பெரும் உதவியாக இருக்கும் என்று அருங்காட்சியகக் குழுவின் தலைவரான அருள்தந்தை Warner D'Souza கூறினார்.
மக்களுக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினரான பள்ளி மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் ஒரு கருவூலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அருள்தந்தை D'Souza மேலும் கூறினார்.


4. மதமாற்றத் தடை சட்டமாவதைத் தடுக்க நேபாள கிறிஸ்தவர்கள் முயற்சி

ஆக.18,2011. மதமாற்றத்தைத் தடை செய்வதற்கும், பசுக்களைக் கொல்வது குற்றம் என்று சொல்வதற்கும் நேபாள பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மசோதா சட்டமாவதைத் தடுக்க அந்நாட்டு கிறிஸ்தவர்களும், மதசார்பற்ற அமைப்பினரும் முயன்று வருகின்றனர்.
ஜூன் 23ம் தேதி இந்த மசோதா பாராளு மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மத சார்பற்ற அமைப்பினரும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்தனர்.
இந்த மசோதா சட்டமானால், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் தங்கள் மதங்கள் பற்றி பேசுவதும், மதம் குறித்த அச்சுப்பதிப்புக்களை வழங்குவதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 700 டாலர் அபராதமும் வழங்கப்படும்.
இந்த மசொதாவுக்குப் பதிலாக, சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் அமைக்கப்பட வேண்டுமென்று கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர் அனைவரும் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


5. பூனே நகருக்கருகே கோவில் தாக்கப்பட்டது, சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் செயல்

ஆக.18,2011. இந்தியாவில் பூனே நகருக்கருகே வார்ஜே மல்வாடி என்ற இடத்தில் புனித மரியன்னை மலங்கரா கத்தோலிக்கக் கோவில் இத்திங்களன்று தாக்கப்பட்டது, சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களின் செயல் என்று தலத்திருச்ச்சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் இதுவரை இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றும், தற்போது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் கண்டனத்திற்குரியதென்றும் பூனே மறைமாவட்ட ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.
இவ்வன்முறையில் ஈடுபட்டக் குழுவினரை விரைவில் கண்டுபிடிக்குமாறு பூனே கத்தோலிக்கர்கள் மகாராஷ்டிரா அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தாக்குதலால் கோவிலுக்கும், பீடத்திற்கும் நிகழ்ந்த அவமரியாதையை போக்கும் விதமாக, இச்செவ்வாயன்று கோவிலைப் புனிதமாக்கும் சடங்கையும், திருப்பலியையும் அருள்தந்தை வர்கீஸ் வலிகோடத் நிகழ்த்தினார்.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணமோ, வேறு பொருட்களோ திருடப்படாமல் இருப்பதும், கோவிலில் எழுதப்பட்டிருந்த அவமரியாதைக்குரிய வாசகங்களும் சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளோர் இதைச் செய்திருப்பர் என்பதற்கு சான்றுகள் என்று அருள்தந்தை வலிகோடத் கூறினார்.


6. அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் வழக்கு

ஆக.18,2011. அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன.
2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமெரிக்காவில் விற்கப்படுகின்ற புகையிலை உற்பத்திப் பொருட்களில், புகைப்பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைக் கைவிடத் தூண்டும் வகையான எச்சரிக்கைப் படங்கள் இடம்பெற வேண்டும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விதிகளை வகுத்துள்ளது.
புகைப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர் ஒருவரின் சடலம், புகைப்பழக்கத்தால் அரித்துப்போன பல்வரிசை போன்ற படங்களும் இவற்றில் அடங்கும்.
புகைப்பழக்கத்துக்கு எதிரான அரசின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு சின்ன விளம்பர அட்டையாக சிகரெட் அட்டைகள் மாற வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று  சிகரெட் நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.
வர்த்தக ரீதியில் செயல்படுவதற்கு தமக்குள்ள உரிமையை இந்த புதிய விதிமுறைகள் தடுக்கின்றன என்றும், புதிய விதிமுறைகள் தமது பேச்சுரிமையை மீறுவதாகவும் வாதிடக்கூடிய வழக்கு ஒன்றை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் புகையிலை நிறுவனங்கள் தொடுத்துள்ளன.
ஆனால் அரசில் உள்ளவர்களும், புகைப்பழக்கத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களும் இந்த புதிய விதிமுறைகளை வரவேற்கிறார்கள்.


7. ஜப்பானிய மக்களிடம் காணப்படும் நேர்மைக்கு மற்றொரு சான்று

ஆக.18,2011. மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றைத் தொடர்ந்து அப்பகுதியில் உண்டான சேதங்கள் மத்தியில் கண்டெடுக்கப்பட்ட 5 கோடி பவுண்ட், அதாவது, 375 கோடி ரூபாய் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அவை உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்டப் பகுதியில் இருந்த வங்கிகளில் 5700 காப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தை, அப்பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வப் பணியாளர்கள் அப்படியே காவல் துறையிடம் ஒப்படைத்தனர் என்றும், இவ்விதம் கொடுக்கப்பட்ட பணம் அதன் உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வங்கிக் காப்பறைகள் சில ஒரு வேளை சூறையாடப்பட்டிருக்கலாம். ஆனால், அப்பகுதியின் அழிவுகளிலிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை அவற்றை இழந்த உரிமையாளர்களைச் சென்று அடைந்து வருவது ஜப்பானிய மக்களிடம் இன்றும் காணப்படும் நேர்மையைப் பறைசாற்றுகிறதென்று Yokohama பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் Ryuji Ito கூறினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...