Saturday 13 August 2011

Catholic News - hottest and latest - 12 August 2011

1. திருப்பீட குருக்கள் பேராயம் திருத்தலங்களின் அதிபர்களுக்குக் கடிதம்

2. மத்ரித் உலக இளையோர் தினத்தையொட்டி ‘Living World Faces’ என்ற புதிய இணையபக்கம்

3. ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளுக்கு உதவுமாறு அமெரிக்கத் தலத்திருச்சபை வேண்டுகோள்

4. வட இந்தியாவில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை முயற்சி

5. ஒரேபாலினத் திருமணத் தம்பதியரைக் கணக்கெடுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஆஸ்திரேலிய ஆயர் எதிர்ப்பு

6. சீனாவில் பாலினப் பாகுபாடு கருக்கலைப்பைத் தடை செய்ய அரசு உறுதி

7. தென்னாப்ரிக்க மாணவர் அமைப்பு இஸ்ரேல் இனவெறிக்கு எதிர்ப்பு

8. இலங்கையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்படுவதற்கு  சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தல்

9. "ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'


----------------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட குருக்கள் பேராயம் திருத்தலங்களின் அதிபர்களுக்குக் கடிதம்

ஆக.12,2011. திருத்தலங்கள், மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிப்பதால் அவற்றைத் தரிசிக்க வரும் பக்தர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு திருப்பீட குருக்கள் பேராயம், உலகத் திருத்தலங்களின் அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Mauro Piacenza வும், அதன் செயலர் பேராயர் Celso Morga Iruzubietaம் கையெழுத்திட்டு உலகிலுள்ள அனைத்துத் திருத்தலங்களின் அதிபர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கேட்டுள்ளனர்.
இறைவன், திருத்தலங்களை, பலரின் மனமாற்றத்திற்கான அசாதாரண இடங்களாகப் பயன்படுத்தியிருப்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம் என்றுரைக்கும் அக்கடிதம், திருத்தலங்கள் பலருக்கு ஆறுதலும் தேறுதலும் தருகின்ற இடங்களாகவும் அமைந்துள்ளன என்றும் கூறுகிறது.
இன்றும் பலருக்கு, இப்புனித இடங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தூண்டிவிடுவதாயும் தூய்மையான வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கும் இடங்களாயும் அமைந்துள்ளன என்றும் அக்கடிதம் கூறுகிறது.
இதனால் இவற்றைக் கண்காணிக்கும் அருட்பணியாளர்கள், ஒப்புரவு அருட்சாதனத்தைக் கேட்டல், பிற அருட்சாதனங்களையும் திருவழிபாடுகளையும் நிகழ்த்துதல், திருமறைக்கல்வி புகட்டல், திருக்கலைகள் பற்றி எடுத்துரைத்தல் போன்றவற்றிற்கு முழுமையான முக்கியத்துவம் கொடுக்குமாறு அக்கடிதம் வலியுறுத்துகிறது.
திருத்தலங்களை எப்போவாவது தரிசிப்பவர்களுக்கும் இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு திருப்பீட குருக்கள் பேராயம் உலகத் திருத்தலங்களின் அதிபர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2. மத்ரித் உலக இளையோர் தினத்தையொட்டி ‘Living World Faces’ என்ற புதிய இணையபக்கம்

ஆக.12,2011. இஸ்பெயின் நாட்டு மத்ரித்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் உலக இளையோர் தினம் தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் வேளை Pope2you.net, என்ற இணையதள முகவரியில் ‘Living World Faces’ என்ற பக்கத்தைத் திறந்துள்ளது வத்திக்கான்.
திருப்பீட சமூகத் தொடர்பு அவையும் இத்தாலிய ஆயர் பேரவையும் இணைந்து திறந்துள்ள இந்த பன்வலை அமைப்பு, புகைப்படங்களைக் கொண்ட ஒரு சமூகத்தள அமைப்பாகும். 
மத்ரித்தில் இளையோர் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இளையோர் தங்களது புகைப்படங்களுடன் தங்களது அனுபவங்களையும் இந்த இணையப் பக்கத்தில் பகிர்ந்து கொள்வதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்று திருப்பீடம் அறிவித்தது.
மேலும், இவ்வுலக தினத்தில் கலந்து கொள்வதற்கென 30 தாய்வான் கத்தோலிக்க இளையோர் ஏழாயிரம் மைல் நடைப்பயணத்தையும் தொடங்கியுள்ளனர். 
இவ்விளையோர் தின நிகழ்வையொட்டி திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம் 18 முதல் 21 வரை மத்ரித்தில் இருப்பார்.

3. ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளுக்கு உதவுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை வேண்டுகோள்

ஆக.12,2011. கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளுக்கான இடர்துடைப்புப் பணிகளுக்கு ஆதரவு கொடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலனும்  CRS என்ற அமெரிக்கக் கத்தோலிக்க நிவாரணப் பணிகள் அமைப்புத் தலைவர் ஆயர் ஜெரால்டு கிகானாசும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்ரிக்க நாடுகளுக்காக அமெரிக்கப் பங்கு மக்களிடம் நிதி திரட்டுமாறு மேய்ப்பர்களைக் கேட்டுள்ளனர்.
கென்யா, சொமாலியா, எத்தியோப்பியா ஆகிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.  
இந்நாட்டு மக்கள் பசி, தாகம், நோய், வறட்சி போன்றவற்றால் கடுமையாயத் துன்புறுவதாக ஆயர்களின் அறிக்கை கூறுகிறது. 

4. வட இந்தியாவில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை முயற்சி

ஆக.12,2011. வட இந்தியாவில் இந்தி மற்றும்பிற உள்ளூர் மொழிகள் வழியாக பாரம்பரியங்களையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதற்கு அப்பகுதி கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
இந்தி மொழி பேசும் பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள் பேரவை, அலகாபாத்தில் இவ்வாரத்தில் இரண்டு நாள் கூட்டத்தை நடத்திய போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தி மொழி பேசும் பகுதிகளில் நிலவும் முக்கிய விவகாரங்களைக் களைவதற்கு இந்தி மொழியை ஊக்குவிக்க வேண்டியது இன்றியமையாதது என்று அலகாபாத் ஆயர் Isidor Fernandez கூறினார்.

5. ஒரேபாலினத் திருமணத் தம்பதியரைக் கணக்கெடுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஆஸ்திரேலிய ஆயர் எதிர்ப்பு

ஆக.12,2011. ஒரே பாலினத்தில் திருமணம் செய்து கொண்டவர்களையும் திருமணம் செய்தவர்கள் பட்டியலில் இணைக்கும் ஆஸ்திரேலியாவின் புதிய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் Peter Comensoli.
ஆஸ்திரேலியாவில் திருமணத்திற்குப் புதிய விளக்கம் கொடுப்பதற்கு முயற்சிக்கும் அந்நாட்டுத் திருமண சமத்துவ அமைப்பு, சேர்ந்து வாழும் எல்லாப் பாலின உறவுகளையும் ஆஸ்திரேலிய தேசியப் புள்ளி விபரக் கணக்கெடுப்பு பட்டியலில் இணைப்பதற்கானத் திட்டத்தை அண்மையில் அறிவித்துள்ளது.
இதனையொட்டி கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் திருமணப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Comensoli, திருமணம் என்பது, ஒரு தனிப்பட்ட ஆள், தனது விருப்பம் போல் விளக்கம் அளிப்பதல்ல என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவில் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இடம் பெறும் திருமணமே சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள திருமணமாகும். மற்ற திருமணங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் ஆயர் Comensoli சுட்டிக் காட்டியுள்ளார்.

6. சீனாவில் பாலினப் பாகுபாடு கருக்கலைப்பைத் தடை செய்ய அரசு உறுதி

ஆக.12,2011. சீனாவில் சில மாநிலங்களில் 130 சிறுவர்களுக்கு 100 சிறுமிகள் என்ற விகிதம் இருப்பதாக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து பாலினத்தைத் தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கையைத் தடை செய்வதற்கு அரசு உறுதி அளித்துள்ளது.
சீனச் சிறாரின் வளர்ச்சிக்கான அரசின் புதிய திட்டம் என்ற தலைப்பில் அரசு எடுத்து வரும் முயற்சியின் ஒரு கட்டமாக,   பாலினப் பாகுபாடு கருக்கலைப்பைத் தடை செய்ய உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தேசிய அளவில் 119 சிறுவர்களுக்கு 100 சிறுமிகள் என்ற விகிதம் இருப்பதாகத் தெரிவித்த, அனைத்துலக மனித வாழ்வு அமைப்பின் Joseph Meaney, சீனாவில் சில மரபு மதங்களில் ஆண்வாரிசுகளே அடக்கச்சடங்குகளை நிறைவேர்ற முடியும் என்பதால் ஆண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றார்.

7. தென்னாப்ரிக்க மாணவர் அமைப்பு இஸ்ரேல் இனவெறிக்கு எதிர்ப்பு

ஆக.12,2011. இஸ்ரேல் அரசு, அந்நாட்டின் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பே மேலும் குடியிருப்புக்களை அமைப்பதற்கு அனுமதியளித்திருப்பதையடுத்து இஸ்ரேல் பொருட்களையும் அந்நாட்டின் சேவைகளையும் புறக்கணிப்பதற்கு முடிவு செய்துள்ளது தென்னாப்ரிக்க மாணவர் அமைப்பு.
உலகில் இஸ்ரேல் பற்றிப் பதிந்துள்ள மோசமான பிம்பத்தை அகற்றும் நோக்கத்தில் 150 இஸ்ரேல் பிரச்சாரதாரிகள், ஐந்து கண்டங்களுக்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்
இதனையொட்டி தென்னாப்ரிக்கப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நிறவெறிப் பாகுபாட்டுத்  தழும்புகளை ஏற்றுள்ள தாங்கள், உலக அளவில் நசுக்கப்படும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இஸ்ரேலில் காட்டப்படும் இனவெறியும், ஒடுக்கப்படுவதின் ஒரு வடிவமே எனவும் தாங்கள் முழுவிடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வருவதாகவும் தென்னாப்ரிக்கப் மாணவர் அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் ஆக்ரமிக்கப்பட்ட கிழக்கு எருசலேமில் மேலும் 1,600 குடியிருப்புக்களை அமைப்பதற்கு அனுமதியளித்துள்ளது. இன்னும் 2,700 குடியிருப்புக்களை அமைக்கவும் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

8. இலங்கையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்படுவதற்கு  சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தல்

ஆக.12,2011. இலங்கையில் கடந்த இருபது ஆண்டுகளில் இருபதாயிரத்துக்கு அதிகமான விவசாயிகள் இறப்பதற்குக் காரணமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்படுவதற்கு ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விவசாய நிலங்களில் தூவப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் அரிதார நஞ்சு, சையனைட், பாதரசம் போன்ற நச்சுப்பொருட்கள் முதலில் நினைத்ததைவிட அதிக அளவில் கலந்துள்ளதாக அவ்வமைப்புக் கூறியது.
மலேசியாவில் செய்யப்பட்ட பரிசோதனைக்கூட ஆய்வுகள், இலங்கையில் முன்பு செய்த ஆய்வுகளை உறுதி செய்துள்ளன என்று சொல்லி இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடனடியாகத் தடை செய்யப்படுமாறு, நச்சுப்பொருட்களுக்கு  எதிரான இலங்கை தேசிய இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

9. "ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'

ஆக. 12,2011"வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை, இந்திய மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு தீபஒளி ஏற்ற வேண்டும்,'' என ஹசாரே குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்னா ஹசாரே குழுவினரின் உயர்மட்டக் குழு கூட்டம் இவ்வியாழனன்று டில்லியில் நடத்திய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும் என ஹசாரே குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஊழல், ஏழ்மை மற்றும் எழுத்தறிவின்மையால் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை. எனவே இதை உணர்த்தும் வகையில் இத்திங்கள் இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை, நாட்டு மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீப ஒளி ஏற்ற வேண்டும் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...