Saturday 6 August 2011

Catholic News - hottest and latest - 04 August 2011

1. கிழக்கு ஆப்ரிக்காவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் முனைப்பாய்ச் செயல்படுகின்றன

2. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பொதுவில் கணபதி சிலை வைப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு

3. கொச்சியில் CCI ன் 11வது பொதுக்குழுக் கூட்டம்

4. மட்டுகாமாவில் திருச்சிலுவை மீண்டும் நாசப்படுத்தப்பட்டுள்ளது

5. இலங்கைப் போரின் போது மாயமான 630 சிறுவர்கள் எங்கே?

6. யாழில் மீள்குடியமர்ந்த மக்களின் உளநலம் மோசமாகப் பாதிப்பு! அமெரிக்க மருத்துவர் சங்கம்

7. பக்கவாதத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் பாதிப்பு

8. இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு இரஷிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1. கிழக்கு ஆப்ரிக்காவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் முனைப்பாய்ச் செயல்படுகின்றன

ஆக.04,2011. பஞ்சம் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை  வழங்குவதில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் முனைப்பாய்ச் செயல்படுகின்றன என்று கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகளின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஜேஆர்எஸ் என்ற இயேசு சபை அகதிகள் அமைப்பு, சிஆர்எஸ் என்ற கத்தோலிக்க நிவாரணப் பணிகள் அமைப்பு, காரித்தாஸ் எத்தியோப்பியா, காரித்தாஸ் கென்யா போன்றவை வட கென்யாவில் முகாம்களிலுள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுக்கும், சொமாலியாவில் புலம் பெயர்ந்த மக்களுக்கும் உதவி வருகின்றன என்று அவ்வுறுப்பினர்கள் கூறினர்.
எத்தியோப்பியா, சொமாலியா, கென்யா ஆகிய நாடுகளில் ஏறக்குறைய ஒரு கோடியே இருபது இலட்சம் பேருக்கு உணவு, சுத்தநீர் மற்றும் அடிப்படை நலவாழ்வு வசதிகள் தேவைப்படுகின்றன. அதேவேளை, தென் சொமாலியாவில் சுமார் 37 இலட்சம் பேர் பசிச்சாவை எதிர்நோக்குகின்றனர்.
சொமாலியாவின் சில பகுதிகளைப் பஞ்சப்பகுதி என்று ஐ.நா.அறிவித்துள்ளது. ஐ.நா.நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளில் இவ்வாறு அறிவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மேலும், இப்புதனன்று சொமாலியாவின் இன்னும் சில பகுதிகளையும் பஞ்சப்பகுதி என்று ஐ.நா.அறிவித்துள்ளது.

2. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பொதுவில் கணபதி சிலை வைப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு

ஆக.04,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்துமதக் கடவுளான கணபதி சிலை பொதுவான இடத்தில் வைக்கப்படுவதற்கு பல்வேறு குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Coeur d’Alene நகரில் பொதுவில் கணபதி சிலை வைக்கப்படுவது குறித்துக் கருத்து தெரிவித்த, நெவாடா பங்குத்தந்தை சார்லஸ் துராந்தே, எமது   கத்தோலிக்க விசுவாசம் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்ளவும், ஒருவர் ஒருவரில் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கவும் அழைப்பு விடுக்கின்றது என்றார்.
இந்தச் சிலையை வைப்பதை வரவேற்று யூத, புத்த மற்றும் இந்துமதத் தலைவர்கள் ஏற்கனவே தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

3. கொச்சியில் CCI ன் 11வது பொதுக்குழுக் கூட்டம்

ஆக.04,2011. CCI என்ற இந்திய கத்தோலிக்க அவையின் 11வது பொதுக்குழுக் கூட்டம், கொச்சியில் வருகிற நவம்பர் 24 முதல் 27 வரை நடைபெறுகின்றது.
நல்லதோர் இந்தியாவை உருவாக்குவதில் திருச்சபையின் பங்கு என்ற தலைப்பில் இடம் பெறும் இக்கூட்டத்தில்,  இந்தியாவின் 164 மறைமாவட்டங்களிலிருந்து ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
திருச்சபை மற்றும் நாட்டைப் பாதிக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்தத் தங்கள் அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் பரிந்துரைகளை இப்பிரதிநிதிகள் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த CCI அமைப்பானது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான பிரதிநிதித்துவக் குழுவாகும். 

4. மட்டுகாமாவில் திருச்சிலுவை மீண்டும் நாசப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக.04,2011. இலங்கையின் புத்தமத நகரமான மட்டுகாமாவில் புனித மரியன்னை ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள திருச்சிலுவை மீண்டும் ஒருமுறை நாசப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் தீ வைக்கப்பட்ட இத்திருச்சிலுவை மீண்டும் அவ்விடத்தில் வைக்கப்பட்டது. தற்சமயம் நாசவேலைக்காரர்கள் இதனை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளனர் என்று பங்குக்குரு தேவ்ஷன் சங்கா கூறினார்.
கொழும்பு உயர் மறைமாவட்டத்திலுள்ள புனித மரியன்னை ஆலயக் கல்லறைத் தோட்டமும் அங்குள்ள சிற்றாலயமும் அண்மை ஆண்டுகளில் தொடர்ந்து குறிவைத்து அவமானப்படுத்தப்படுகின்றன என்று அக்குரு மேலும் கூறினார்.
மட்டுகாமாவில் சுமார் 250 தமிழ் மற்றும் சிங்களக் குடும்பங்கள் உள்ளன. மற்றவர்கள் புத்தமதத்தினர்.

5. இலங்கைப் போரின் போது மாயமான 630 சிறுவர்கள் எங்கே?

ஆக.04, 2011.  வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற போதும் அதன் பின்னர் அரசப் படையினரால் வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் காணாமல் போன 630 சிறுவர்கள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தத் தகவலும் இல்லை என அரசத் தகவல் திரட்டில் இருந்து தெரியவருகின்றது என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வன்னியில் நடைபெற்ற கொடூரமானப் போரின் போது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுள் 600 பேர் கடந்த காலங்களில் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மேலும் 630 சிறுவர்களைக் காணவில்லை என்று பெற்றோர்களாலும் உறவினர்களாலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
யுனிசெப் ஆதரவுடன் வவுனியா பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டறியும் பிரிவின் ஊடாக இதுவரை 600 சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 630 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை.

6. யாழில் மீள்குடியமர்ந்த மக்களின் உளநலம் மோசமாகப் பாதிப்பு! அமெரிக்க மருத்துவர் சங்கம்

ஆக.04, 2011.  இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் குறித்துக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் செப்டம்பர் வரையில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை தமிழ் மக்களிடையேயான உளநலப் பாதிப்பு, உள நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின் உளவியல் நிலைமையுடன் ஒப்பு நோக்கத்தக்கது என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
யாழ் மாவட்டத்தில் உள்ள இடம் பெயர்ந்த மக்களில் 68 விழுக்காட்டினர், ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

7. பக்கவாதத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் பாதிப்பு

ஆக.04, 2011.  பக்கவாதத்தால் ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் பாதிக்கப்படுவதாக, இந்திய மருத்துவ கழகம் கம்பம் பள்ளத்தாக்கு கிளை சார்பில் நடத்தப்பட்ட, தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
"பக்கவாதத்தில் இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளின் பங்கு' குறித்து உரையாற்றிய நரம்பியல் சிறப்பு நிபுணர் டாக்டர் சுதன்வாராவ், இந்தியாவில் ஆண்டிற்கு 10 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 12 சதவீதம் பேர் 40 வயதிற்குக் குறைவாக உள்ளவர்கள் என்றார்.
"த்ரோம்பாலிசிஸ்' என்ற புதிய சிகிச்சை முறையில், நூற்றுக்கு 33 பேரை முற்றிலும் குணப்படுத்தவோ, அல்லது இறப்பில் இருந்து மீட்கவோ முடியும், ஆனால், இம்முறையிலான சிகிச்சையை நோய் கண்ட நான்கரை மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற அவர், 1995ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய சிகிச்சை முறை இந்தியாவில் இன்னும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என மேலும் கூறினார்.
8. இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு இரஷிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆக.04,2011: இந்தியாவிலிருந்து இரஷ்யாவுக்கும் இரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கும் செல்வதற்கான அனுமதி விசா வழங்குவதில் எளிய மற்றும் விரைவான முறைகள் உள்ளிட்ட ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இரு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குச் சிக்கல் இன்றி விரைவாக விசா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இரஷ்ய நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்துக்கு இரஷ்ய அமைச்சரவை இப்புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இது அந்நாட்டு மக்களவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இரஷ்ய அதிபரின் இசைவுக்கு பிறகு சட்டமாக்கப்படும்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...