1. திருத்தந்தை பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் மரண தண்டனை முற்றிலும் ஒழிப்பு
2. இஸ்பெயின் நாட்டில் உள்ள Pilar de la Horadada என்ற நகரின் ஒரு சாலைக்கு பாப்பிறை 16ம் பெனடிக்ட் பெயர் சூட்டப்படும்
3. கொலம்பியத் திருச்சபையின் அமைதி வாரம்
4. வியட்நாம் விடுதலை நாளையொட்டி, 10,000க்கும் அதிகமான கைதிகள் விடுதலை
5. பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் உயரவையில் அந்நாட்டின் சிறுபான்மையினருக்கென நான்கு இடங்கள் ஒதுக்கப்படும்
6. உலகில் மதக்கட்டுப்பாடுகளின் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது
7. காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
8. இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் மரண தண்டனை முற்றிலும் ஒழிப்பு
ஆக.30,2011. திருத்தந்தை வருகிற நவம்பர் மாதம் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் இச்சூழலில், அந்நாடு மரண தண்டனையை முற்றிலும் ஒழித்துவிட்டதாக அண்மையில் அறிவித்துள்ளது.
இத்துடன் ஆப்ரிக்காவில் மரண தண்டனையை ஒழித்துள்ள 17வது நாடாகவும், உலகில் 74வது நாடாகவும் பெனின் மாறுகிறது.
பெனின் நாட்டில் நற்செய்திப் பணி ஆரம்பமானதன் 150ம் ஆண்டு நிறைவையொட்டி, வருகிற நவம்பர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
2. இஸ்பெயின் நாட்டில் உள்ள Pilar de la Horadada என்ற நகரின் ஒரு சாலைக்கு பாப்பிறை 16ம் பெனடிக்ட் பெயர் சூட்டப்படும்
ஆக.30,2011. இஸ்பெயின் நாட்டில் உள்ள Pilar de la Horadada என்ற நகரின் ஒரு சாலைக்கு பாப்பிறை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது.
அண்மையில் இஸ்பெயின் நாட்டில் நடந்து முடிந்த அகில உலக இளையோர் நாளையொட்டி, இந்நகர மக்கள் மற்ற நாடுகளில் இருந்து வந்திருந்த இளையோரைத் தங்கள் வீடுகளில் தங்கவைத்ததைப் பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அகில உலக இளையோர் நாளுக்கென பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு இந்நகரம் விருந்தோம்பல் மேற்கொண்டதைக் குறித்து தான் பெருமைப்படுவதாக அந்நகர மேயர் Jose Fidel Ros கூறினார்.
இந்நகரில் ஏற்கனவே ஒரு சாலைக்கு முன்னாள் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3. கொலம்பியத் திருச்சபையின் அமைதி வாரம்
ஆக 30, 2011. 'மனித மாண்பு காக்கப்படுதல் மற்றும் அமைதிக்கான அர்ப்பணத்திற்கான அழைப்பு' என்பதை மையக் கருத்தாகக் கொண்டு கொலம்பியாவில் செப்டம்பர் மாதம் 4 முதல் 11 வரை தலத்திருச்சபையில் அமைதி வாரம் சிறப்பிக்கப்படுகின்றது.
அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்தும் இக்கொண்டாட்டங்கள், உள்நாட்டு மோதல்களுக்கு அரசியல் தீர்வு காண்பதையும், மக்களிடையே ஒப்புரவை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இவ்வாண்டின் அமைதி வாரச் சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு மறை மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள கல்வி நிறுவனங்கள், பங்குத்தளங்கள், மற்றும் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தலத்திருச்சபைத் தலைவர்கள்,தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் இதில் பங்குபெற அழைப்பை முன்வைத்துள்ளனர்.
ஏழைகளின் வாழ்வு மேம்பாட்டிற்கெனத் தன்னை அர்ப்பணித்து உழைத்த புனித பீட்டர் கிளாவரின் திருவிழா செப்டம்பர் 9ம் தேதி இடம்பெறுவதையொட்டி, கொலம்பியத் திருச்சபையால் அவ்வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
4. வியட்நாம் விடுதலை நாளையொட்டி, 10,000க்கும் அதிகமான கைதிகள் விடுதலை
ஆக.30,2011. வருகிற செப்டம்பர் 2ம் தேதி வெள்ளியன்று வியட்நாம் விடுதலை நாள் இடம்பெறுவதையொட்டி, அந்நாட்டு அரசுத் தலைவர் Truong Tan Sang, 10,000க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்வதற்கு கட்டளைப் பிறப்பித்துள்ளார்.
சிறு குற்றங்கள் புரிந்து சிறைபடுத்தப்பட்டுள்ள பலர் விடுவிக்கப்படும் இந்த நேரத்தில், தங்கள் மனசாட்சிக்காகவும், விடுதலை, நீதி இவைகளுக்காகவும் போராடியவர்கள் இன்னும் சிறையில் வாடுவது வேதனைக்குரியது என்று வியட்நாம் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Paul Nguyen Thai Hop, FIDES செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
எனினும், தற்போது விடுதலையாக உள்ளவர்களில் பழங்குடியினர் பலர் உள்ளனர் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் ஆயர் Thai Hop கூறினார்.
வியட்நாமில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளவர்களுக்காக, நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறதென்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர், தற்போது வியட்நாம் சிறைகளில் தங்கள் மனசாட்சிக்கென சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 258 பேர் என்று கூறினார்.
5. பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் உயரவையில் அந்நாட்டின் சிறுபான்மையினருக்கென நான்கு இடங்கள் ஒதுக்கப்படும்
ஆக.30,2011. பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் உயரவையில் அந்நாட்டின் சிறுபான்மையினருக்கென நான்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் உயர் அவையில் இடம் பெறுவது அந்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த முடிவு வரும் ஆண்டு மார்ச் மாதம் உயரவைக்கு நடக்கவிருக்கும் தேர்தல்களின்போது கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கச் சிறுபான்மையினர் அமைச்சராகப் பணி புரிந்து, கொலை செய்யப்பட்ட Shahbaz Bhatti உட்பட பல பாகிஸ்தான் தலைவர்கள், இந்நாட்டுச் சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோருக்கெனப் போராடி வந்ததன் பலன் சிறிது சிறிதாக வெளிவருகிறதென்று பாகிஸ்தான் சிறுபான்மையினர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் Anjum James Paul, அரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அரசியல் மற்றும் பொது வாழ்வில் அதிக இடங்கள் தரப்பட வேண்டுமென்றும், சிறுபான்மையினர் சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்கள் நாட்டிலிருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டுமென்றும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6. உலகில் மதக்கட்டுப்பாடுகளின் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது
ஆகஸ்ட் 30, 2011. 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட 3ஆண்டுகளில் உலகில் மதக்கட்டுப்பாடுகளின் அளவு குறிப்பிடத்தகும் வகையில் அதிகரித்திருந்ததாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலகின் 198 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்த மூன்றாண்டுகளில் 23 நாடுகளில் மதத்தின் மீதானக் கட்டுப்பாடுகள் அதிகரித்திருந்ததாகவும், 12 நாடுகளில் குறைந்து காணப்பட்டதாகவும், ஏனைய நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லையெனவும் தெரியவந்துள்ளது. மதக்கட்டுப்பாடுகளை அனுபவிக்கும் நாடுகள், அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளே என்பதால், உலகின் 220 கோடி மக்களுக்கு மேல் மதக்கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்வதாக 'மதமும் பொது வாழ்வும்' குறித்த PEW ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment