Wednesday 24 August 2011

Catholic News - hottest and latest - 22 August 2011

1. இதயம்கனிந்த நன்றி நிறைந்த வார்த்தைகளுடன் உலக இளையோர் தினத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை

2. கருக்கலைப்பு, ஒப்புரவு அருட்சாதனம் இவை குறித்த மத்ரித் தலத்திருச்சபை செயலுக்கு பேராயர் டோலன் பாராட்டு

3. இளையோர்தினக் கொண்டாட்டத்தால் இஸ்பெயின் அரசுக்கு இலாபமேயொழிய நஷ்டமில்லை என்கிறது இளையோர்தின ஏற்பாட்டுக் குழு

4. இராக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பு குறைந்து வருகின்றது, பாக்தாத் துணை ஆயர் கவலை

5. பங்களாதேசில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்குவதற்கு முயற்சிகள்

6. தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு இலங்கை, நியுசிலாந்து ஊடகம்

------------------------------------------------------------------------------------------------------

1. இதயம்கனிந்த நன்றி நிறைந்த வார்த்தைகளுடன் உலக இளையோர் தினத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை

ஆக.22,2011. இஸ்பானிய மக்கள், உலக இளையோர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள், தன்னோடு செபித்த இலட்சக்கணக்கான திருப்பயணிகள் என எல்லாருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மத்ரித் நகரை விட்டுப் புறப்படுகிறேன் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மத்ரித்தில் நடைபெற்ற 26வது உலக இளையோர் தின நிகழ்வுகளை இஞ்ஞாயிறன்று நிறைவு செய்து உரோமைக்குப் புறப்படுவதற்கு முன்னர் மத்ரித் பரஹாஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
தன்னை வழியனுப்ப வந்திருந்த இஸ்பெயின் அரசர் ஹூவான் கார்லோஸ் மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் உரையாற்றிய திருத்தந்தை, மாபெரும் இஸ்பெயின் நாடு, தனது ஆழமான சமய மற்றும் கத்தோலிக்க உணர்வைக் கைவிட்டு விடாமல், தனது மதிப்புமிக்க, பன்னமைத்தன்மை கலந்த மற்றும் திறந்த மனம் கொண்ட பண்புகளில் முன்னோக்கிச் செல்லும் திறமையைக் கொண்டிருக்கிறது என்றார்.
திருமுழுக்குப் பெற்ற பெரும்பாலான குடிமக்களைக் கொண்டுள்ள இஸ்பெயின் நாட்டின் பொதுவான கொள்கைகளில் கத்தோலிக்க விசுவாசம் குறைந்த அளவே எதிரொலிக்கின்றது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இஸ்பானிய சமுதாயம், உலக இளையோர் தினத்தை நடத்தியதைப் பார்க்கும் பொழுது, இளையோர் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் இன்னும் ஆழமாக வேரூன்ற அது உதவ முடியும் என்பதை எடுத்துக் காட்டியது என்ற திருத்தந்தை, மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒவ்வொருவருக்கும், அனைத்திற்கும் மேலாக, இந்த நாட்களை இத்தனை ஆர்வத்துடனும் அருளுடனும் கொண்டாட எனக்கு உதவிய நம் ஆண்டவருக்கும் நன்றி சொல்லும் இதயத்தோடும் இஸ்பெயினிலிருந்து புறப்படுகின்றேன் என்றார்.
திருத்தந்தை விமானநிலையத்திற்குப் புறப்படு முன்னர், இந்த 26வது உலக இளையோர் தினத்தில் தன்னார்வப் பணி செய்த பல நாடுகளின் 12 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
மத்ரித் பரஹாஸ் சர்வதேச விமானநிலையத்திற்கும் பல இளையோர் இஸ்பானியக் கொடிகளுடன் வந்து திருத்தந்தைக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.
அடுத்த உலக இளையோர் தினம் பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும்.


2. கருக்கலைப்பு, ஒப்புரவு அருட்சாதனம் இவை குறித்த மத்ரித் தலத்திருச்சபை செயலுக்கு பேராயர் டோலன் பாராட்டு

ஆக.22,2011. பொதுவாக தல ஆயரே, கருக்கலைப்பு செய்வோருக்கு மன்னிப்பு வழங்கும்வேளை, இந்த 26வது உலக இளையோர் தினத்தில் மத்ரித் உயர்மறைமாவட்டம் இம்மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை அனைத்துக் குருக்களுக்கும் வழங்கியது குறித்துத் தனது பாராட்டைத் தெரிவித்தார் நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன்.
திருச்சபை இத்தகைய சிறப்பு நாட்களில், இத்தகைய மன்னிப்புக்களை வழங்கி மக்கள் சமாதானத்துடன் செல்வதற்கு வழி செய்கின்றது என்று சி.என்.எ. கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார் பேராயர் டோலன்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் இவ்வாறு மன்னிப்பு வழங்குவதன் மூலம், இத்தகைய உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் மக்கள் இறையருளுடன் பங்கு கொள்ள உதவ முடியும் என்றும் பேராயர் டோலன் கூறினார்.
ஆகஸ்ட் 16 முதல் 21 வரை மத்ரித்தில் நடைபெற்ற இந்த உலக இளையோர் தினம் சிறப்புற அமைவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு நெவாடா மாநிலத்தில் உள்ள உலகளாவிய இந்துமதக் கழகத்தலைவர் Rajan Zed தனது நல்வாழ்த்துக்களைத் திருத்தந்தைக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


3. இளையோர்தினக் கொண்டாட்டத்தால் இஸ்பெயின் அரசுக்கு இலாபமேயொழிய நஷ்டமில்லை என்கிறது இளையோர்தின ஏற்பாட்டுக் குழு

ஆக.22,2011. திருத்தந்தையுடனான உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களுக்கு இஸ்பானிய அரசு மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளது என்ற சில குழுக்களின் குற்றச்சாட்டிற்குப் பதில் வழங்கும் விதமாக, இக்கொண்டாட்டங்களின் வரவு செலவு கணக்கை வெளியிட்டுள்ளது இளையோர் தின ஏற்பாட்டுக் குழு.
இத்தினக் கொண்டாட்டங்களின் மொத்தச் செலவு ஏறத்தாழ‌ 5 கோடி யூரோக்கள் எனக்கூறும் இந்த ஏற்பாட்டுக் குழு, திருப்பயணம் மேற்கொண்ட இளையோரின் பதிவுத்தொகையாக 3 கோடியே 15 இலட்சம் யூரோக்கள் கிட்டியதாகவும், இந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய சில நிறுவனங்களின் ஊக்கத்தொகையாக 1 கோடியே 65 இலட்சம் யூரோக்கள் கிட்டியதாகவும், தனியார் நிதியுதவிகள் மற்றும் இளையோர் தினம் தொடர்புடைய பொருட்களின் விற்பனைகள் மூலம் 24 இலட்சத்து 82 ஆயிரத்து 621 யூரோக்கள் கிட்டிய‌தாகவும் தெரிவித்துள்ளது.
இளையோருக்கு வழங்கியப் பொருட்கள், வரவேற்பு மற்றும் பயண ஏற்பாடுகள், நகர் சுற்றுச்சூழல் காப்பு நடவடிக்கைகள், தங்கும் வசதிகள் அமைத்தல், என பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு என இத்தொகை முழுவதும் செலவழிக்கப்பட்டதாகவும், இஸ்பானிய அரசோ, மத்ரித் நகர சபையோ இதற்கு எவ்வித நிதி உதவியையும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது இந்த இளையோர் தின ஏற்பாட்டுக் குழு.
இளையோர் வருகையால் இஸ்பானிய பொருளாதாரத்திற்கு 10 கோடி டாலர் வருமானம் கிட்டியிருக்கும் என நம்புவதாகவும் இக்குழு தன் கருத்தை வெளியிட்டுள்ளது.


4. இராக்கில் கிறிஸ்தவர்களின் இருப்பு குறைந்து வருகின்றது, பாக்தாத் துணை ஆயர் கவலை

ஆக.22,2011. இராக்கில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையினால் அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது என்று பாக்தாத் கல்தேய ரீதி கத்தோலிக்கத் துணை ஆயர் ஷெல்மான் வர்தூனி (Shlemon Warduni) கூறினார்.
மத்ரித்தில் Aid to the Church in Need என்ற பிறரன்பு உதவி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு உரைத்த ஆயர் வர்தூனி, இம்மாதம் 15ம் தேதி இடம் பெற்ற வன்முறையில் 65 பேர் இறந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்றார்.
இராக்கில் நாடெங்கும் இடம் பெற்ற சுமார் 17 தாக்குதல்களில் பல தாக்குதல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடத்தப்பட்டன என்றும் ஆயர் குறிப்பிட்டார்.
கடந்த 300 ஆண்டுகளில் பார்த்திராத அளவில் தற்சமயம் கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் பாக்தாத் துணை ஆயர் கூறினார்.
தற்சமயம் இராக்கில் 2 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவ்வெண்ணிக்கை 2003ம் ஆண்டு ஆக்ரமிப்புக்கு முன்னர் 12 இலட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


5. பங்களாதேசில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்குவதற்கு முயற்சிகள்

ஆக 22, 2011.  பங்களாதேசில் கத்தோலிக்கப் பலகலைக்கழகம் ஒன்றைத் துவக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தலத்திருச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டின் கத்தோலிக்கக் கல்விக்கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு பேராயர்கள், பல குருக்கள், கன்னியர்கள் மற்றும் பொதுநிலையினர் உட்பட ஏறத்தாழ 100 பேரிடையே உரையாற்றிய டாக்காவின் வாரிசுரிமை பேராயர் பேட்ரிக் டி ரொசாரியோ, கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றை நாட்டில் திறப்பது தலத்திருச்சபையின் நீண்ட காலக் கனவாக இருந்து வருகிறது என்றார். பங்களாதேசின் கல்வியாளர்கள் நீண்ட காலமாக விடுத்து வரும் விண்ணப்பம் இதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
பங்களாதேசில் முக்கிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்தி வரும் திருச்சிலுவை துறவு சபையின் நிர்வாகத்தின் கீழ் தலத்திருச்சபையால் உருவாக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகம் 'Notre Dame பல்கலைக்கழகம்' என அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு இலங்கை, நியுசிலாந்து ஊடகம்

ஆக.22,2011. தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப்படைகள் வணிக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியுசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
நியுசிலன்ட் ஹெரால்ட்என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் இராணுவத் தலைமைகள் விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இராணுவ உயர்மட்டத்தின் கட்டுப்பாட்டில் பில்லியன் கணக்கிலான டாலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது, குடியியல் அதிகாரத்தை மறைப்பதாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையைக் குறிப்பிட்டுள்ள நியுசிலன்ட் ஹெரால்ட், அங்கு ஒவ்வொரு 10 இலட்சம் மக்களுக்கும் 8000த்திற்கும் அதிகமான ஆயுதப்படையினர் இருப்பதாகக் கூறியுள்ளது.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 300,000 ஆயுதப்படையினரைக் கொண்டுள்ள இலங்கையில் மகிந்த ராஜபக்ச நிர்வாகம், மரக்கறிகள் விற்பனை, பயண முகவரகங்கள், விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், குப்பை சேகரிப்பு போன்ற தொழில்களில் படையினரை ஈடுபத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் நியுசிலன்ட் ஹெரால்ட் குறிப்பிட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...