Friday 12 August 2011

Catholic News - hottest and latest - 08 August 2011

1. வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது இறைவனில் நம்பிக்கை வைத்து வாழத் திருத்தந்தை அழைப்பு

2. சிரியாவிலும் லிபியாவிலும் ஒப்புரவும் அமைதியும் ஏற்பட திருத்தந்தை அழைப்பு

3. பிலிப்பீன்ஸில் அரசுக்கும் இஸ்லாமியப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்த உண்மைத் தகவல்களுக்குத் தலத்திருச்சபை அழைப்பு

4. சீனாவில் மேலும் நான்கு குருக்கள் கைது

5. இந்தோனேசியாவில் மதங்களிடையே புரிந்துகொள்ளுதலை ஊக்குவிக்கும் கருத்தரங்கு

6. நேபாளத்தில் ஏழைகளுக்கு உதவப் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது காரித்தாஸ் அமைப்பு

7. பேராயர் எலஞ்சிக்கல் இறைபதம் அடைந்தார்

----------------------------------------------------------------------------------------------------------------

1. வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது இறைவனில் நம்பிக்கை வைத்து வாழத் திருத்தந்தை அழைப்பு

ஆக.08,2011. இவ்வுலக வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது தங்களது நம்பிக்கையை இறைவனில் வைத்து வாழுமாறு இயேசு தமது சீடர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறார் என்று  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
காஸ்தல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்துப் பேசினார்.
கடல், இன்றைய மனித வாழ்க்கையையும் இவ்வுலகின் உறுதியற்ற தன்மையையும் புயல், மனிதனை நசுக்கும் பல துன்பங்களையும் குறித்து நிற்கின்றன, அதேவேளை, படகு, கிறிஸ்துவின் மீது கட்டப்பட்டு திருத்தூதர்களால் வழிநடத்தப்பட்ட திருச்சபையையும் குறித்து நிற்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
இந்நற்செய்திப் பகுதிக்குப் புனித அகுஸ்தீன் அளித்த விளக்கத்தையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, புனித பேதுருவை இயேசு காப்பாற்ற முனைந்த போது இயேசு தம்மைத் தாழ்த்தித் தமது கரங்களால் பேதுருவைத் தூக்கி விட்டார் என்றும், நாம் நமது சொந்த வல்லமையால் நிமிர்ந்து நிற்க முடியாது என்றும் உரைத்தார்.
இறைவன் நம் அருகில் எப்போதும் இருக்கிறார், நாம் அவரில் முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென்று நமக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் திருத்தந்தை எடுத்துக் கூறினார்.
இறைவனில் முழுநம்பிக்கை வைத்து வாழ்ந்த அன்னைமரியை நம் வாழ்க்கையின் எடுத்துக்காட்டாகக் கொள்வோம், நான்தான், துணிவோடிருங்கள் பயப்படாதீர்கள், என்ற இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்க்கையின் துயரங்களின் போது நினைவுகூருவோம் என்று சொல்லி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. சிரியாவிலும் லிபியாவிலும் ஒப்புரவும் அமைதியும் ஏற்பட திருத்தந்தை அழைப்பு

ஆக.08,2011. சிரியாவில் அதிகரித்து வரும் கடும் வன்முறைகள் பல உயிரிழப்புக்களையும் பெரும் துன்பங்களையும் ஏற்படுத்தி வரும்வேளை இந்நிலை குறித்துத் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் இவ்வாறு  அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, சிரிய நாட்டு அரசும் மக்களும் அந்நாட்டில் எவ்வளவு விரைவில் அமைதியைக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் அதனை மீண்டும் கொண்டுவருமாறும், சிரிய அரசு, அந்நாட்டுக் குடிமக்களின் நியாயமான ஏக்கங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காண முடியாத லிபியாவிலும் செயல்திறமிக்கப் பேச்சு வார்த்தைகள் மூலம் அமைதிக்கானத் தீர்வைக் காணுமாறு, சர்வதேச நிறுவனங்களையும் அரசியல் மற்றும் இராணுவத்திற்குப் பொறுப்பானவர்களையும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
டுனிசியாவிலும் எகிப்திலும் இடம் பெற்ற ஜாஸ்மின் எழுச்சியைத் தொடர்ந்து கடந்த மார்ச் பாதியில் சிரியாவில் தொடங்கிய மக்கள் எழுச்சியில் இதுவரை 1650க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிபியாவில் கடந்த பிப்ரவரியிலிருந்து உள்நாட்டுக் கலவரம் இடம் பெற்று வருகிறது. பென்காசியிலுள்ள புரட்சியாளர்கள் நேட்டோ அமைப்பின் போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உதவியுடன் அதிபர் கடாஃபிக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

3. பிலிப்பீன்ஸில் அரசுக்கும் இஸ்லாமியப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்த உண்மைத் தகவல்களுக்குத் தலத்திருச்சபை அழைப்பு

ஆக.08, 2011. பிலிப்பீன்ஸில் அரசுக்கும் இஸ்லாமியப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான அமைதி முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, இரு தரப்பினருக்கும் இடையேயானப் பேச்சுவார்த்தைகள் ஒளிவு மறைவு இன்றி இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள்.
இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் அரசுத்தலைவர் பெனினோ அகீனோவிற்கும் இடையே எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜப்பானில் இடம்பெற்ற இரகசியக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிலிப்பீன்ஸின் ஓய்வுபெற்ற பேராயர் ஆஸ்கார் குரூஸ், இஸ்லாமியப் புரட்சியாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என அரசுத்தலைவரை விண்ணப்பித்துள்ளார்.‌
அரசு எடுக்கும் முடிவுகளால் பாதிக்கப்படும் வாய்ப்புடைய பூர்வீக குடிமக்கள், மற்றும்  இஸ்லாமிய, கிறிஸ்தவச் சமூகங்களுக்கு, இப்பேச்சுவார்த்தைகளின் போது பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் தலைநகர் மணிலாவின் துணை ஆயர் Broderick Pabillo.

4. சீனாவில் மேலும் நான்கு குருக்கள் கைது

ஆக.08, 2011. சீனாவின் Heze மறைமாவட்டத்தைச் சேர்ந்த நான்கு குருக்கள் அரசால் கைதுச்செய்யப்பட்டு, உணவின்றி தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களின் விடுதலைக்காகத் தலையிடுமாறு அகில உலகத்திருச்சபையிடம் விண்ணப்பித்துள்ளனர் சீனக் கத்தோலிக்கர்.
உடன் குருக்களுக்குத் தியானம் வழங்கிவிட்டு தூங்கிக்கொண்டிருந்த குருக்கள் Wang Chengli, Zhao Wuji, Xianyang, Sun Guichun ஆகிய நான்குபேரையும் சுவரேறிக் குதித்து கைது செய்த காவல்துறை, அவர்களைச் சந்திக்க எவரையும் அனுமதிக்காததுடன், அவர்கள் சீன அரசின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ சபையில் இணையக் கட்டாயப்படுத்தி வருகின்றது.

5. இந்தோனேசியாவில் மதங்களிடையே புரிந்துகொள்ளுதலை ஊக்குவிக்கும் கருத்தரங்கு

ஆக 08, 2011.  இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களிடையே புரிந்துகொள்ளுதலை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தோனேசியாவில் இம்மாதம் ஏழாம் தேதி முதல் 17ம் தேதி வரை கருத்தரங்கு ஒன்றை நடத்திவருகின்றது வின்சென்ட் தெ பால் கத்தோலிக்கத் துறவு சபை.
இவ்விரு மதங்களின் பாரம்பரியங்கள் குறித்து ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும், மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் 32 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

6. நேபாளத்தில் ஏழைகளுக்கு உதவப் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது காரித்தாஸ் அமைப்பு

ஆக.08, 2011. நேபாளத்தில் ஏழைகளுக்கு உதவும் தங்கள் அர்ப்பணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் மேற்குப் பகுதியில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது நேபாள காரித்தாஸ் அமைப்பு.
ஏழைகள் நிரம்பியுள்ள பகுதிகளுக்கு இந்த அலுவல‌கம் மூலம் மேலும் திறமையுடன் பணியாற்ற முடியும் என்றார் அந்நாட்டு ஆயர் அந்தோனி சர்மா.
மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் அவசரகால உதவிகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் நேபாளத்தில் காரித்தாஸ் அமைப்பு செயல்படுத்தி வருவதாக அறிவித்தார் ஆயர்.

7. பேராயர் எலஞ்சிக்கல் இறைபதம் அடைந்தார்

ஆக.08, 2011. கேரளாவின் வேராப்போளி முன்னாள் பேராயர் கொர்னேலியஸ் எலஞ்சிக்கல் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியத் திருச்சபை மற்றும் அரசியல் தலைவர்கள், தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கற்தந்திகளை அனுப்பியுள்ளனர்.
சிறுநீரகம் செயலிழந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பேராயர் எலஞ்சிக்கல் இஞ்ஞாயிறு தன் 92ம் வயதில் காலமானார்.
வேராப்போளியின் தூய பிரான்சிஸ் அசிசிப் பேராலயத்தில் இச்செவ்வாயன்று இவரின் அடக்கச்சடங்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1918ம் ஆண்டு கேரளாவின் கரல் எனுமிடத்தில் பிறந்த பேராயர் எலஞ்சிக்கல்  1945ல் குருவாகவும் 1971ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். விஜயபுரம் ஆயராகவும் பின்னர் வேராப்போளி பேராயராகவும் பணியாற்றியுள்ள இவர் 1996ம் ஆண்டு ஆயர் நிர்வாகப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
பேராயர் கொர்னேலியஸ் எலஞ்சிக்கல்லின் மரணம் குறித்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து இந்திய மத்திய அமைச்சர்கள் கே.வி. தாமஸ், ஏ.கே. ஆன்டனி, கேரள முதல்வர் ஓமன் சாண்டி ஆகியோரும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...