Tuesday 16 August 2011

Catholic News - hottest and latest - 16 August 2011

1.  அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டம் 2013ம் ஆண்டு பிரசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில்

2.  உண்மை அன்பை நோக்கி வர அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் போலந்து மற்றும் ஜெர்மன் ஆயர்கள்.

3.  இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம். கர்தினால் மால்கம் ரஞ்சித் எச்சரிக்கை

4.  நவீன காலத்தின் மிகப்பெரும் அவல நிகழ்வு, கலாச்சாரங்களின் சீரழிவே என்கிறார்  பேராயர் மேனாம்பரம்பில்.

5.   ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்கிறது ஜெர்மன் குழு

6.   ஈராக்கின் சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆலயம் மீது வெடி குண்டு தாக்குதல்

7.   உலகின் மக்கள் தொகையுள் மூன்றில் ஒரு பகுதியினர், மதக் கட்டுப்பாடுகளை அனுபவித்தவர்கள்


----------------------------------------------------------------------------------------------------------------
1.  அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டம் 2013ம் ஆண்டு பிரசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில்

அடுத்த உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் 2013ம் ஆண்டு பிரசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களின் போது, அடுத்த கொண்டாட்டங்களுக்கான இடம் குறித்து திருத்தந்தை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில், இதனை முன்னதாகவே அறிவித்துள்ளது திருப்பீடம்.
2013ல் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்பட உள்ள ரியோ டி ஜெனீரோவின் ஆளுனரும் அந்நகரின் மேயரும் தற்போதைய மத்ரித் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் பிரசில் நாட்டிலிருந்து 14,000 இளையோரும் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்ரித் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உலகின் 137 நாடுகளிலிருந்து பதிவு செய்துள்ள நான்கு இலட்சத்து எண்பதாயிரம் மாணவர்களின் சராசரி வயது 22 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.  உண்மை அன்பை நோக்கி வர அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் போலந்து மற்றும் ஜெர்மன் ஆயர்கள்.

ஆக 16, 2011.    அன்பு ஒன்றே படைப்புத்திறன் கொண்டதால் அந்த உண்மை அன்பை நோக்கி அனைவரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் போலந்து மற்றும் ஜெர்மன் ஆயர்கள்.
புனித மாக்ஸிமில்லியன் மரிய கோல்பே மறைசாட்சியாய் உயிரிழந்ததன் 70ம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக போலந்தின் ஆஷ்விட்சில் கூடிய இவ்விரு நாட்டு ஆயர்களும், பிறருக்காக தன்னையே கையளிக்கும் அன்பின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
நம் இதயங்கள் அன்பால் ஆளப்படும்போது உலகில் அமைதி நிலவும் என உரைத்த ஆயர்கள், உலகம் முழுவதும் உள்ள நல்மனம் கொண்ட மக்கள் அனைவரும் இறைவனை நோக்கி திரும்பி வரவேண்டும் என இறைஞ்சுவதாகவும் தெரிவித்தனர்.
கடவுள் வாழ்கிறார், அவர் நம்மை தொடர்ந்து அன்பு கூர்கிறார் என்பதை தன் சாட்சிய நடவடிக்கை மூலம் வெளிப்படுத்திய தூய  மாக்ஸிமில்லியன் மரிய கோல்பேயின் வாழ்வு நம்மில் அன்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர் ஆயர்கள்.

3.  இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம். கர்தினால் மால்கம் ரஞ்சித் எச்சரிக்கை

ஆக 16, 2011.    சர்வதேச விமர்சனத்துக்கு மத்தியில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், சர்வதேச அழுத்தத்தின் தன்மையை அது உணரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
விண்ணேற்பு அன்னை விழாவையொட்டி, மன்னார் மடுமாதா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கொழும்பு கர்தினால், ஆயுதங்களுடனான போர் முடிவடைந்து விட்டநிலையில், தற்போது தேசத்தின் சுயநலபோக்குக்கு எதிரான போர் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
சட்டத்தினால் இலங்கை மக்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் இதயங்களால் பிரிக்கப்பட்டுள்ளதாக உரைத்த கர்தினால் இரஞ்சித், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இதயங்களை வெல்ல சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக உலகின் நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக குற்றம் சுமத்தி வருவதையும், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து வருவதையும் பற்றி குறிப்பிட்ட அவர், எல்லாவற்றையும் நிராகரித்தால், இந்த சிறிய தீவு நாடு முழுமையாக தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும், மற்றும், பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்ற நிலைப்பாடும்  மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால்.
இலங்கையின் அனைத்து பகுதியில் இருந்தும் ஏறத்தாழ 2 இலட்சம் விசுவாசிகள் பங்கேற்ற மடுமாதா விழாத் திருப்பலியை, கர்தினாலுடன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், திரிகோணமலை-பட்டிகோலா துணை ஆயர் ஜோசப் பொன்னையா, அனுராதபுர ஆயர் நார்பர்ட் அந்த்ராதி ஆகியோரும் எண்ணற்ற குருக்களும் இணைந்து நிறைவேற்றினர்.

4.  நவீன காலத்தின் மிகப்பெரும் அவல நிகழ்வு, கலாச்சாரங்களின் சீரழிவே என்கிறார்  பேராயர் மேனாம்பரம்பில்.

ஆக 16, 2011.    இன்றைய காலத்தின் மிகப்பெரும் அவல நிகழ்வு என்பது, கலாச்சாரங்களின் சீரழிவே என்றார் இந்தியாவின் கௌகாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில்.
உலகமயமாக்கல் என்ற கொள்கையின் கீழ் தங்கள் சொந்த கலாச்சாரத்திலிருந்து விலகிச்செல்லும் மக்கள், அதனோடு இணைந்து தங்கள் பாரம்பரிய அறநெறி மதிப்பீடுகளையும் இழக்கிறார்கள் என்ற பேராயர், சமூக உணர்வுகளும் உறவுகளும் காணாமற்போவதாகவும் கவலையை வெளியிட்டார்.
வடகிழக்கு இந்தியாவின் சமூகவியல் குறித்த ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மேனம்பரம்பில், இன்றைய நவீனப்போக்குகள் இப்படியேத் தொடர்ந்தால் அடிப்படை ஆதாரமற்ற தனிமனிதர்களையும், தனித்தன்மைகளை இழந்த குழுக்களையும் கொண்ட ஒரு சமூகத்தையே நாம் பிற்காலத்தில் கொண்டிருப்போம் என்றார்.

5.   ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்கிறது ஜெர்மன் குழு

ஆக 16, 2011.    பதட்ட நிலைகளுக்கு விரைவில் உள்ளாகும் ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வரை விண்ணப்பித்துள்ளது ஜெர்மன் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு ஒன்று.
கந்தமால் பகுதியில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட ஜெர்மன் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவுக்குத் தலைமைத் தாங்கிச் சென்ற வோல்கர் கௌடெர் பேசுகையில், ஒரிசா மாநிலைத்தில் கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பு, மீள்கட்டுமானப்பணிகள், தலித் மற்றும் பழங்குடியினரின் நிலைப்பாடு ஆகியவை குறித்து இப்பயணத்தின்போது விவாதித்ததாகக் கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளில் தாக்கப்பட்ட எண்ணற்ற மக்கள் இன்னும் நந்தகிரி புனர் வாழ்வு மையங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து அச்சத்திலேயே வாழ்ந்து வருவதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் அவர்.
வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பலர் இன்னும் தண்டனையின்றி வெளியிலேயே வாழ்ந்து வருவதால், ஒப்புரவிற்கான வாய்ப்புக்கு அது தடையாக இருப்பதாகவும் கூறினார் ஜெர்மன் பாராளுமன்ற குழுவைச் சேர்ந்த கௌடெர்.

6.   ஈராக்கின் சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆலயம் மீது வெடி குண்டு தாக்குதல்

ஆக 16, 2011.    ஈராக்கின் கிர்குக் நகரிலிலுள்ள தூய எஃப்ரேம் சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தை வெடி குண்டு வைத்து தாக்கியுள்ளனர் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.
எவரின் உயிருக்கும் ஆபத்து இல்லையெனினும், கோவிலின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.
ஏற்கனவே இம்மாதம் 2ம் தேதி திருக்குடும்ப சிரிய கத்தோலிக்க ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7.   உலகின் மக்கள் தொகையுள் மூன்றில் ஒரு பகுதியினர், மதக் கட்டுப்பாடுகளை அனுபவித்தவர்கள்

ஆக 16, 2011.    உலகின் மக்கள் தொகையுள் மூன்றில் ஒரு பகுதியினர், மதவழிபாடுகள் மற்றும் மத வெளிப்பாடுகள் குறித்த தங்கள் அரசுகளின் கட்டுப்பாடுகளை அனுபவித்தவர்களாக உள்ளார்கள் என்கிறது அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று.
'மதம் மீதான கட்டுப்பாடுகளின் அதிகரிப்பு' என்ற தலைப்பில் உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, உலகின் 198 நாடுகளில் 23 நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், 12 நாடுகளில் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதாகவும், 163 நாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கிறது.
மதங்கள் மீதான அரசுக் கட்டுப்பாடுகளை அதிகம் கொண்டுள்ள 10 நாடுகளாக, எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், சீனா, மாலத்தீவுகள். மலேசியா, மியான்மார், எரிட்ரியா மற்றும் இந்தோனேசியாவை சுட்டிக்காட்டியுள்ளது இவ்வறிக்கை.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...