Saturday 27 August 2011

Catholic News - hottest and latest - 24 August 2011

1. அர்ஜென்டினா பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தாராளமாகப் பதிலளிக்கத் திருத்தந்தை வலியுறுத்தல்

2. கட்டக்-புபனேஷ்வர் பேராயர் : ஒரிசாவில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட  அழைப்பு

3. புரட்சியாளர்களுக்கும் Gaddafiக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதே அந்நாட்டிற்கு பயனுள்ள ஒரு தீர்வாகும் - ஆயர் மார்திநெல்லி

4. ஆனாதைக் குழந்தைகளுடன் இப்தார் மாலை விருந்தில் கலந்து கொண்ட ஈராக் நாட்டு பேராயர்

5. அனைத்துலக அடிமை வர்த்தகமும் அதன் ஒழிப்பும் என்ற நாளையொட்டி UNESCO தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை

6. அகில உலக பெண் காவல்துறை சமாதானம் காக்கும் விருது பெற்ற பாகிஸ்தான் பெண் அதிகாரி

7. இமயமலையின் சிகரங்களை அடைவதில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெண் உலகச் சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1. அர்ஜென்டினா பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தாராளமாகப் பதிலளிக்கத் திருத்தந்தை வலியுறுத்தல்

ஆக.24,2011. அர்ஜென்டினா நாட்டில் எடுக்கப்பட்டு வரும் பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தாராளமாகப் பதிலளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வருகிற செப்டம்பர் 11ம் தேதி அனைத்துப் பங்குகளிலும் நடத்தப்படவிருக்கும், “Más por Menos” அதாவது இல்லாதோர்க்கு அதிக உதவி என்ற பொருள்படும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை.
அர்ஜென்டினா ஆயர் பேரவையின் ஏழைகளுக்கு உதவும் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Adolfo Urionaவுக்குத்  திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், கிறிஸ்தவப் பிறரன்பின் முக்கியவத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
அர்ஜென்டினாவில் அடுத்த மாதத்தில் எடுக்கப்படும் நன்கொடைகள் அந்நாட்டின் 25 மறைமாவட்டங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.


2. கட்டக்-புபனேஷ்வர் பேராயர் : ஒரிசாவில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட  அழைப்பு

ஆக.24,2011. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் கட்டக்-புபனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா.
ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான கடும் வன்முறை ஆரம்பித்த மூன்றாமாண்டு நினைவையொட்டி இவ்வாறு அழைப்பு விடுத்த பேராயர் பார்வா, 2008ம் ஆண்டின் கடும் துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவர்களாகிய தாங்கள் எமது மண்ணில் அமைதியாக வாழ விரும்புகிறோம் என்றார்.
கிறிஸ்தவர்களாகிய தாங்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருந்தாலும், காழ்ப்புணர்வையோ பழிவாங்குதலையோ மனத்தில் இருத்த விரும்பவில்லை என்றுரைத்த அவர், கடந்த காலத்தில் வன்முறையில் இறந்தவர்களை நினைக்கின்றோம், ஒரிசாவின் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கின்றோம் என்று கூறினார்.
இதற்கிடையே, பயப்படாதீர்கள், உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் இரு அருள்மொழிகளை பேராயர் பார்வா விசுவாசிகளுக்குக் கூறி வருவதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான கடும் வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரைப் புலம் பெயர்ந்தனர். 170க்கும் அதிகமான ஆலயங்களும் சிற்றாலயங்களும் தாக்கப்பட்டன.
எனினும் புலம் பெயர்ந்த மக்களில் பலர் சொந்த இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும் இவ்வாண்டு இறுதிக்குள் நான்காயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


3. புரட்சியாளர்களுக்கும் Gaddafiக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதே அந்நாட்டிற்கு பயனுள்ள ஒரு தீர்வாகும் - ஆயர் மார்திநெல்லி

ஆக.24,2011. லிபியாவின் அரசுத் தலைவர் Gaddafiக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதே அந்நாட்டிற்கு பயனுள்ள ஒரு தீர்வாகுமேயொழிய, படைபலம் கொண்டு NATO நாடுகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் பயனற்றவை என்று Tripoli ஆயர் ஜியோவான்னி இன்னோசென்சோ மார்திநெல்லி கூறினார்.
புரட்சியாளர்கள் Tripoliயைக் கைப்பற்றியதாகக் கூறும் அறிக்கைகள் சரியானவை அல்ல என்றும், தலைநகரைப் புரட்சியாளர்கள் கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறிய ஆயர் மார்திநெல்லி, இதுபோன்ற அறிக்கைகளால் மக்கள் பெரிதும் குழப்பத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.
லிபியாவில் புரட்சிகள் ஆரம்பமானதிலிருந்து, கிறிஸ்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர், தான் கூறுவது அறிவுக்குப் புறம்பான ஒரு கூற்றாகத் தெரிந்தாலும், Gaddafiயும் புரட்சியாளர்களும் சமரச முயற்சிகளில் ஈடுபடுவது ஒன்றே நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த ஆறு மாதங்களாய் அந்நாட்டில் நிலவி வரும் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு லிபியாவில் பணி புரியும் கத்தோலிக்கக் குருக்களும், துறவியரும் இடைவிடாமல் உதவிகள் செய்து வருகின்றனர் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகும் FIDES செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
NATO உதவியுடன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள புரட்சியாளர்களுக்கும், Gaddafi படையினருக்கும் இடையே ஆகஸ்ட் 19 முதல் ஆரம்பமான தாக்குதல்கள் இன்னும் தீராததால், பொதுமக்கள், முக்கியமாக, கிறிஸ்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


4. ஆனாதைக் குழந்தைகளுடன் இப்தார் மாலை விருந்தில் கலந்து கொண்ட ஈராக் நாட்டு பேராயர்

ஆக.24,2011. இரமதான் பண்டிகையையொட்டி, ஈராக் நாட்டில் கிர்குக் உயர்மறைமாவட்டப் பேராயர் லூயிஸ் சாக்கோவும், கிர்குக் இஸ்லாமியத் தலைவரும் இத்திங்கள் மாலை 30 ஆனாதைக் குழந்தைகளுடன் இப்தார் (Iftar) எனப்படும் மாலை விருந்தில் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் மையம் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில் கலந்து கொண்ட பேராயர் சாக்கோ, கிறிஸ்தவர்கள் இஸ்லாமியருடன் கொண்டிருக்கும் உறவுக்கு அடையாளமாக ஒரு தொகையை அக்குழந்தைகளுக்கு அளித்தார்.
பேராயரின் இச்செயலைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட இஸ்லாமியத் தலைவர் Sheikh Ahmed Mohammed Amin பிறரன்புச் சேவை என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் காணக்கிடக்கும் ஒரு முக்கிய பண்பு என்று கூறினார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்துவரும் பல வன்முறைகளுக்கு மத்தியில், இரமதான் மாத நோன்பும், இப்தார் உணவுப் பகிர்வும் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் இணைக்க உதவும் என்று பேராயர் சாக்கோ கூறினார்.


5. அனைத்துலக அடிமை வர்த்தகமும் அதன் ஒழிப்பும் என்ற நாளையொட்டி UNESCO தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை

ஆக.24,2011. அடிமை வர்த்தகம் பற்றிய நமது வரலாற்றை அறிந்து கொள்வது நாம் வாழும் நாட்களில் புதிய, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய வழியாக அமையும் என்று ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக அடிமை வர்த்தகமும் அதன் ஒழிப்பும் என்ற நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova கூறினார்.
உலகமயமாக்கல் என்ற வழியில் நடைபயிலும் இவ்வுலகம் பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட உலகை அமைக்கும் அவசியத்தில் உள்ளது என்றும், இங்கு அனைத்து வழிகளிலும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்றும் UNESCO இயக்குனர் வலியுறுத்தினார்.
ஆப்ரிக்க வழி வந்த மக்களுக்கான  அகில உலக ஆண்டாக 2011 விளங்குவதால், இந்த ஆண்டில் அடிமை வர்த்தகம் குறித்து இன்னும் ஆழமாக நாம் அறிந்து கொள்ளவும், மனித குலம் இழைத்துள்ள பல தவறுகளைக் களையவும் இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்றும் Irina Bokova கூறினார்.
இந்த நாளையொட்டி அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, செனெகல், அர்ஜென்டினா உட்பட பல நாடுகளில் கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஐ.நா.செய்தி ஒன்று கூறுகிறது.


6. அகில உலக பெண் காவல்துறை சமாதானம் காக்கும் விருது பெற்ற பாகிஸ்தான் பெண் அதிகாரி

ஆக.24,2011. ஐ.நா. வழங்கும் விருதுகளில் ஒன்றான அகில உலக பெண் காவல்துறை சமாதானம் காக்கும் விருது பாகிஸ்தானைச் சேர்ந்த Shazadi Gulfamக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் பாரம்பரியம் மிக்க ஒரு கிராமத்தில் பெண்ணாகப் பிறந்து வளர்ந்த தனக்கு காவல்துறையில் சேர்வதற்கும், பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் பல்வேறு பிரச்சனைகளும், தடைகளும் எழுந்தன என்றும், அவற்றையெல்லாம் தாண்டி இன்று தான் இந்நிலையை அடைந்துள்ளது எவ்வகையிலும் எளிதானதாக இருந்ததில்லை என்றும் Gulfam கூறினார்.
1985ம் ஆண்டு பாகிஸ்தான் காவல் துறையில் இணைந்த Gulfam, இன்று ஐ.நா.காவல் துறையில் ஒரு பிரிவின் தலைவராகப் பணி செய்து வருகிறார். போஸ்னியா, கோசொவோ ஆகிய நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த Gulfam, கோசொவோ நாட்டில் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Atifete Jahjaga ஒரு பெண் காவல்துறை அதிகாரியாக இருந்தார் என்றும், அவர் தனக்கு ஒரு பெரும் தூண்டுதலாக இருந்தார் என்றும் எடுத்துரைத்தார்.


7. இமயமலையின் சிகரங்களை அடைவதில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெண் உலகச் சாதனை

ஆக.24,2011. ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் இமயமலையின் சிகரங்களை அடைவதில் இச்செவ்வாயன்று மாலை உலகச் சாதனை படைத்துள்ளார்.
Gerlinde Kaltenbrunner என்ற ஆஸ்திரிய நாட்டுப் பெண் இச்செவ்வாய் மாலை 6 மணி 18 நிமிடங்களுக்கு எவரெஸ்ட் மலை சிகரத்திற்கு அடுத்தபடியாக  உலகின் இரண்டாவது அதிக உயரமான K2 என்ற சிகரத்தை அடைந்தார்.
இமய மலையில் 8000 அடிகளுக்கும் மேலாக உயரமுள்ள 14 சிகரங்களையும் இதுவரை இரண்டு பெண்கள் அடைந்து சாதனை படைத்துள்ளனர். Gerlinde Kaltenbrunner  இச்சிகரங்களை அடைந்த மூன்றாவது பெண். ஆயினும் ஆக்சிஜன் கவசங்கள் ஏதும் அணியாமல் இச்சிகரங்களை அடைந்த முதல் பெண் இவரே என்ற அளவில் இவர் உலகச் சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் உட்பட மற்ற 13 சிகரங்களை அடைந்து விட்ட Gerlinde Kaltenbrunner, K2 என்ற இச்சிகரத்தை அடைய ஆறு முறை முயன்றும் வெற்றி பெற முடியாமல், இச்செவ்வாய் மாலை அச்சிகரத்தையும் அடைந்ததால், தான் உலகின் உச்சியில் இருப்பதை போன்ற உணர்வு பெற்றுள்ளதாகக் கூறினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...