Monday 15 August 2011

Catholic News - hottest and latest - 15 August 2011

1. அன்னை மரியைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பது, நம் வாழ்வையே ஆழமாகச் சென்றுப் பார்க்க உத‌வுகிறது - திருத்தந்தை

2.இறைவனின் கொடைகளை சுதந்திரமாகப் பெறும் வகையில் விசுவாசத்தில் வளர அழைக்கிறார் திருத்தந்தை

3. நேபாளத்தின் வளமையான வருங்காலத்திற்கென 40 நாள் சிறப்பு செப வழிபாடு

4. சட்டசபை தீர்மானம் பற்றி விமர்சித்த கோத்தபாயாவிற்கு சிறுபான்மைக் கிறிஸ்தவ கூட்டமைப்பு கண்டனம்

5. ஐந்து மாதங்கள் கடந்தும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மக்கள் கவலை

6. பெண்கள் மீதான வன்முறை வளர்ச்சியை தடுக்கிறது: சூரிக் மாநாட்டில் வலியுறுத்தல்

7. சிக்குன் குனியா நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு


----------------------------------------------------------------------------------------------------------------

1. அன்னை மரியைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பது, நம் வாழ்வையே ஆழமாகச் சென்றுப் பார்க்க உத‌வுகிறது - திருத்தந்தை

ஆக 15, 2011.   அன்னை மரியைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பது, நம் வாழ்வையே ஆழமாகச் சென்றுப் பார்ப்பதற்கு உத‌வுகிறது என இத்திங்களன்று அன்னைமரியின் விண்ணேற்புவிழாத் திருப்பலியின்போது வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
நம் வாழ்வின் பிரச்சனைகளும் நம்பிக்கைகளும், அன்னைமரியின் ஒளியையும், ஆன்மீகப் பாதையையும், மகிமைக்கான இறுதி நோக்கத்தையும் பெறுவதோடு, அவரின் பாதையும் நோக்கமும் நம்முடையதாக மாறவும் உதவுகிறது என்றார்.
மக்களிடையே இறைவனின் பிரசன்னத்திற்கு அடையாளமாக இருக்கும் பழைய ஏற்பாட்டின் 'உடன்படிக்கை பெட்டகம்' குறித்தும் காஸ்தல் கந்தோல்ஃபோ தூய வில்லனோவா தாமஸ் பங்குத்தளத்தில் நிறைவேற்றிய திருப்பலியின்போது உரைத்த பாப்பிறை, இயேசுவைக் கருவில் தாங்கிய அன்னைமரியே அந்த உடன்படிக்கைப் பெட்டகம் எனவும் எடுத்துரைத்தார்.
வாழும் உடன்படிக்கைப் பெட்டகமான அன்னை மரியாள், இறைமகனுடன் மிக நெருங்கிய விதத்தில் ஒன்றித்திருந்தார் என்ற பாப்பிறை, திருவெளிப்பாட்டு நூலில் அனனைமரி குறித்து எடுத்துரைத்திருப்பவைகளையும் மேற்கோள் காட்டினார்.
இயேசு தன் வயிற்றில் மகனாகப் பிறக்க உள்ள செய்தி அறிந்தவுடன் அன்னை மரி, முதிர்ந்த வயதில் கருத்தாங்கியிருந்த எலிசபெத்தைப் பார்க்கச் சென்றதையும், அன்னைமரி எனும் உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பார்த்ததும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியதையும் இம்மறையுரையில் குறிப்பிட்ட பாப்பிறை, அந்த அன்னை மரியே நமக்கு நம்பிக்கையையும், வருங்கால மகிழ்வையும் தருவதோடு, அவைகளைப் பெறுவதற்கான வழிகளையும் கற்றுத்தருகிறார் என்றார்.

2.இறைவனின் கொடைகளை சுதந்திரமாகப் பெறும் வகையில் விசுவாசத்தில் வளர அழைக்கிறார் திருத்தந்தை

ஆக 15, 2011.   விசுவாசத்தில் வளர்ந்து, இறைவனின் கொடைகளைச் சுதந்திரமாகப் பெறும் வகையில் நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அனைத்து விசுவாசிகளும் அழைப்புப் பெறுகிறார்கள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் மகளுக்கு குணம் தரும்படி இறைவனை வேண்டிய கானானியப் பெண் குறித்த இஞ்ஞாயிறு வாசகத்தின் அடிப்படையில் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் தனித்தன்மையையும், அவரின் வார்த்தைகளையும் , இறைவனின் கொடைகளையும் அறிந்து ஏற்றுக்கொள்ள நம் விசுவாசம் உதவுகிறது என்றார்.
மனமாற்றம் எனும் அனுபவத்தை ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கான தேவை நம் இதயங்களுக்கு உள்ளது எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
இறைவார்த்தைகளுக்கு செவிமடுத்தல், திருவருட்சாதன நிறைவேற்றல், தனி செபங்கள் மற்றும் நம் அயலாருக்கான பிறரன்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நம் விசுவாசம் ஊட்டம் பெறட்டும் என்ற பாப்பிறை, உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் தனக்கு செபங்கள் மூலம் உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தச் செவ்வாய் முதல் ஞாயிறு வரை இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் 6 நாள் கொண்டாட்டங்களின் இறுதி 4 நாட்களும் இளைஞர்களுடன் இருப்பார் பாப்பிறை.

3. நேபாளத்தின் வளமையான வருங்காலத்திற்கென 40 நாள் சிறப்பு செப வழிபாடு

ஆக 15, 2011.   நேபாளத்தின் வளமையான வருங்காலத்திற்கான 40 நாள் சிறப்பு செபத்தை நிறைவுக்குக் கொணர்ந்தனர் அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.
காத்மண்டுவின் இயேசு சபை தூய சேவியர் பள்ளியில் இடம்பெற்ற இந்த 40 நாள் செப  நிறைவு வழிபாட்டில் கலந்து கொண்டோர், கடந்த நாட்களின் செப நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
மகளிர்க்கான உரிமைகள், போதைப்பொருள் பயன்பாடு நிறுத்தம், பாலர் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகியவை குறித்து இந்த நாட்களில் சிறப்பான விதத்தில் செபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
40 நாள் சிறப்பு செப வழிபாடுகள் நிறைவுற்றுள்ளபோதிலும், அனைவரின் உரிமைகளும் சரிசமமாக மதிக்கப்படும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து செபிக்குமாறு செபவழிபாடுகளுக்கு ஏற்பாடுச் செய்தவர்களுள் ஒருவரான கிறிஸ்தவ மறைப்போதகர் பிஷ்னு கானல் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, நேபாள பிரதமர் இஞ்ஞாயிறன்று தன் பதவிவிலகலை அறிவித்துள்ளார்.
அமைதி முன்னேற்ற நடவடிக்கைகளிலும், புதிய அரசியலமைப்பு வரைதல்களிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படாமையால் பிரதமர் ஜல்நாத் கானல் பதவி விலகுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.

4. சட்டசபை தீர்மானம் பற்றி விமர்சித்த கோத்தபாயாவிற்கு சிறுபான்மைக் கிறிஸ்தவ கூட்டமைப்பு கண்டனம்

ஆக 15, 2011.   தமிழகச் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கீழ்த்தரமாக விமர்சித்த இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியச் சிறுபான்மைக் கூட்டமைப்பின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ், இலங்கையில் நடைபெற்ற  உள்நாட்டு போரில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று அறிவிக்கும்படி ஐ.நா. அவையை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் 8-ந்தேதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கொண்டுவந்து நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் நம்பிக்கையையும், பேரானந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனறார்.
அரசின்  இந்தத் தீர்மானத்தை இலங்கை அதிபர் ராஜபக்சாவின் தம்பியும், அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கீழ்த்தரமாக விமர்சித்திருப்பதற்கு, இந்தியச் சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவக் கூட்டமைப்பு, இந்தியத் தன்னாட்சி திருச்சபைகள் மாமன்றம், மற்றும்  இந்திய ஆயர்கள் அவை சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பேராயர் பிரகாஷ் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

5. ஐந்து மாதங்கள் கடந்தும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மக்கள் கவலை

ஆக 15, 2011.   போரினால் இடம்பெயர்ந்த வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாகிவிட்ட போதிலும், தமது சொந்த இடங்களுக்கு இன்னும் தங்களை அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக்கேணி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து ஏறத்தாழ 18 மைல் தொலைவில் உள்ள கொக்கிளாய் பகுதியில் அதிகாரிகள் தங்களை ஒரு வெட்டவெளியில் கூடாரங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அங்கு தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பன பற்றாக்குறையான நிலையிலேயே இருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் அறிவித்திருந்ததையடுத்தே, கடந்த மார்ச் மாதம் தங்களை தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வந்த போதிலும், இன்னும் தங்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

6. பெண்கள் மீதான வன்முறை வளர்ச்சியை தடுக்கிறது: சூரிக் மாநாட்டில் வலியுறுத்தல்

ஆக 15, 2011.   பெண்கள் மீதான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என சூரிக் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சுவிஸ் அரசுத் தலைவர் மிச்சேலின் கள்மி ரே மற்றும் மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நவநீதம்பிள்ளை கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசிய தலைவர்கள், காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டனர்.
யுகோசுலோவியாவில் போர் நடந்த போது 50 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாயினர், மற்றும் காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பாலியல் கொடுஞ்செயலை எதிர்நோக்குகின்றனர் என்று சுவிஸ் அரசுத் தலைவர் கள்மி ரே கவலையுடன் தெரிவித்தார்.

7. சிக்குன் குனியா நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு

ஆக 15, 2011.   கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிக்குன் குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ள அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த மருந்து ஆய்வுக்கூடங்களில் எலிக்கு பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றி காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன் குனியா நுண்கிருமியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்து, மனிதர்களில் எவ்விதத்தில் வேலை செய்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின் இதற்கு அனுமதி கிட்டும் எனவும், இந்தத் தடுப்பூசி தயாரிப்புச் செலவு குறைவு எனவும் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்காட் வீவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...