1 இரம்ஜான் மாதத்தையொட்டி கிர்குக் கத்தோலிக்கச் சமுதாயம் உள்ளூர் மருத்துவமனைக்கு உதவி
2. சூடானில் இனஒழிப்பு ஒரு விதிமுறையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது - சூடான் ஆயர் குற்றச்சாட்டு
3. கென்ய அரசு உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ஆயர்கள் அறிவுரை
4. புதுடெல்லியில் தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள்
5. பங்களாதேஷில் திருமண வாழ்க்கையில் உளவியல் ஆலோசகர்கள் தேவை
6 இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்!- பகுப்பாய்வு அறிக்கையில் கோத்தபாய தெரிவிப்பு
7. இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி
8. குறுகிய இலட்சியங்கள் குற்றங்களே: கலாம்
9. மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சிவிடும்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1 இரம்ஜான் மாதத்தையொட்டி கிர்குக் கத்தோலிக்கச் சமுதாயம் உள்ளூர் மருத்துவமனைக்கு உதவி
ஆக.02,2011. முஸ்லீம்கள் தொடங்கியுள்ள இரம்ஜான் மாதத்தையொட்டி ஈராக்கின் கிர்குக் கத்தோலிக்கப் பேராயர் லூயிஸ் சாக்கோ தலைமையிலான குழு மருந்துகளையும் பிற உதவிகளையும் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொடுத்துள்ளது.
பேராயர் சாக்கோ தலைமையில், குருக்களும் பொதுநிலை விசுவாசிகளும் 300 கிலோ கிராமுக்கு அதிகமான மருந்துகளையும் பிற உதவிகளையும் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொடுத்துள்ளனர்.
நோன்பு மற்றும் செபத்தின் காலமாகிய இப்புனித மாதத்தில் முஸ்லீம் சகோதரர்களுடன் நாமும் இணைந்து இறைவனிடம் அமைதிக்காகச் செபிப்போம் எனத் தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் சாக்கோ.
20 கிர்குக் இளையோர் மத்ரித் உலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தினத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 4,000 மாற்றுத்திறனாளி இளையோர் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. சூடானில் இனஒழிப்பு ஒரு விதிமுறையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது - சூடான் ஆயர் குற்றச்சாட்டு
ஆக.02,2011. சூடானில் இனஒழிப்பு ஒரு விதிமுறையாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று குறைகூறிய அதேவேளை, நூபா மலைப் பகுதி மக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார் சூடானின் எல் ஒபெய்ட் ஆயர் Macram Max Gassis.
கென்ய நாட்டு நைரோபியில் இறந்த ஆயர் Ceasar Mazzolari ன் நினைவுத் திருப்பலியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஆயர் Gassis, நூபா மலைப்பகுதி மக்கள் பற்றி ஊடகங்கள் அதிகமாகப் பேச வேண்டும் என்றார்.
தற்போது சூடான் அரசு, கடந்த மே மாதத்திலிருந்து நூபா மலைப்பகுதி மக்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் இனஅழிப்பு நிலைக்கு அது வந்தடைந்துள்ளது என்றும் ஆயர் குறை கூறினார்.
3. கென்ய அரசு உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ஆயர்கள் அறிவுரை
ஆக.02,2011. கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்வேளை, இந்நெருக்கடியைக் கையாளுவதற்கு அரசு திறமையற்று இருக்கின்றது என்று கென்ய ஆயர் ஒருவர் அரசைக் குறை கூறினார்.
கென்யாவில் சிலர் பசியால் வாடும் வேளை, தனது மறைமாவட்டம் போன்ற பிற பகுதிகளில் மக்கள் ஏராளமானவற்றை அறுவடை செய்கின்றனர், சில காய்கறிகள் நிலங்களில் அழுகிப்போய்க் கிடக்கும் அளவுக்கு அறுவடை அதிகமாக இருக்கின்றது என்று Eldoret ஆயர் Cornelius Arap Korir கூறினார்.
இது எப்படி இருக்கிறதென்றால், அரசின் வலது கரம் செய்வது இடது கரத்திற்குத் தெரியாமல் இருப்பதையேக் காட்டுகின்றது என்று ஆயர் கூறினார்.
4. புதுடெல்லியில் தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள்
ஆக.02,2011. புதுடெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு இலட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்.
தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள் கடந்த ஜூலை 30ம் தேதி புதுடெல்லி இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில் வைக்கப்பட்டது. இப்பேராலயத்தில் ஏராளமான அருட்பணியாளர்களுடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்திய டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, இப்புனிதரின் நற்பண்புகளை அன்றாட வாழ்வில் கடைபிடிக்குமாறு விசுவாசிகளை வலியுறுத்தினார்.
சலேசிய சபையினர் கல்வித்துறையிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் ஆற்றி வரும் அரும்பணிகளையும் பேராயர் பாராட்டினார்.
2009ம் ஆண்டு இத்தாலியின் வால்தோக்கோவிலிருந்து உலகின் ஐந்து கண்டங்களுக்கும் தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள் கொண்ட பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. சலேசிய சபை தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டு மற்றும் 2015ல் இடம் பெறும் இப்புனிதர் பிறந்ததன் 200ம் ஆண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்தியா வந்தடைந்த இப்புனிதப் பெட்டி வடகிழக்கு மாநிலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு தற்சமயம் புதுடெல்லியில் வைக்கப்பட்டுள்ளது.
சலேசிய சபையைத் தொடங்கிய தூய ஜான் போஸ்கோ, இத்தாலியின் Piedmont ல் 1815ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். 1888ம் ஆண்டு சனவரி 31ம் தேதி இறந்தார். 1934ம் ஆண்டு புனிதர் என அறிவிக்கப்பட்டார்.
5. பங்களாதேஷில் திருமண வாழ்க்கையில் உளவியல் ஆலோசகர்கள் தேவை
ஆக.02,2011. திருமண வாழ்க்கையில் அதிகரித்து வரும் இணக்கமின்மை களையப்பட ஒப்புரவு முயற்சிகள் அதிகமாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் ஆயர் பேரவையின் குடும்பப் பணிக்குழு கூறியது.
பங்களாதேஷில் குடும்ப வன்முறைகள் பரவலாக இடம் பெறுகின்றன என்றும், இவை கொலை அல்லது தற்கொலைகளில் முடிகின்றன என்றும் கடந்த மாத இறுதியில் டாக்காவில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது.
வரதட்சணை கேட்டுக் கொலைகள் இடம் பெறுவதாயும், இவை கிராமங்களில் அதிகம் என்றும் அக்கருத்தரங்கில் மேலும் கூறப்பட்டது.
6 இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்!- பகுப்பாய்வு அறிக்கையில் கோத்தபாய தெரிவிப்பு
ஆக 02, 2011. இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான். விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொல்லப்படாமல் போர் ஒன்றை நடத்த முடியாது'' என்று கூறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, போரில் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கை வெளியிடவில்லை.
ஆனால் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.நாவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள் என்று மனித உரிமை அமைப்புக்களும் தெரிவிக்கின்றன.
வன்னியில் எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என்று இதுவரை தெரிவித்து வந்த இலங்கை அரசு தற்போது முதல் தடவையாக போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது.
7. இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி
ஆக 02, 2011. தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 5,500 பேருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
8. குறுகிய இலட்சியங்கள் குற்றங்களே: கலாம்
ஆக. 02, 2011. தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; அதே வேளை, குறுகிய இலட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,'' என, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நடந்த இளைஞர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், இந்த பூமியில், இளைஞர்களின் ஆற்றல்தான் பெரிய ஆற்றல். இந்தியாவின் சமூக பொருளாதார நிலையை மாற்றும் சக்தி மாணவர்களின் செழுமையான சிந்தனைக்கு மட்டுமே உண்டு. எனவே, தனித்துவம், படைப்பாற்றல், புதுமை மற்றும் சுதந்திர சிந்தனைகள் நிறைந்தவர்களாக மாணவர்கள் மாற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பெரிய பெரிய லட்சியங்கள், அறிவுத் தேடல், கடின உழைப்பு, விடா முயற்சி போன்றவை மாணவர்களுக்கு அவசியம் என்ற அவர், குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும் எனவும் கூறினார்.
என்னால் முடியும், நம்மால் முடியும் என்னும் எண்ணம் இந்தியாவால் முடியும் என்பதாக மாறும் என்ற கருத்தையும் மாணவர்களுடன் ஆன கேள்வி பதில் நேரத்தின்போது எடுத்துரைத்தார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்
9. மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சிவிடும்
ஆக.02,2011. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விஞ்சிவிடும், இதனால் இப்பூமியில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் 121 கோடிப் பேர் வாழ்கின்றனர் எனவும், அதிகமான மக்கள் வேலை தேடி நகரங்களில் குடியேறுகின்றனர் எனவும் அத்துடன் மக்கள்தொகையும் கூடும் எனவும் நிபுணர்கள் கூறினர்.
No comments:
Post a Comment