Tuesday, 30 August 2011

Catholic News - hottest and latest - 29 August 2011

1. கடவுளைப் புறக்கணித்து வாழ்வோருக்குத் திருத்தந்தை எச்சரிக்கை

2. அர்ஜென்டினாவில் கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிகளுக்கு ஆயர்கள் எதிர்ப்பு

3. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் நிறுவனங்கள் மூலம் சேவையாற்றி வருகிறது நியூயார்க் உயர் மறைமாவட்டம்

4. துருக்கியில் மத சிறுபான்மையினரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் ஒப்படைக்க முடிவு

5. வன்முறைக் குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு நேபாள தலத்திருச்சபை எதிர்ப்பு

6. மத்திய பிரதேசக் கிறிஸ்தவர்கள் கடைபிடித்த இந்திய கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாள்

7. பாகிஸ்தானில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளைப் புறக்கணித்து வாழ்வோருக்குத் திருத்தந்தை எச்சரிக்கை

ஆக.29,2011. பணத்தையும் வெற்றியையும் தேடுவது உலகத்தின் போக்குப்படிச் சிந்திப்பதாகும், அதேநேரம் கடவுளை விலக்கி வைப்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, உலகின் கண்களுக்குத் தோல்வியாகத் தெரிந்த சிலுவையை அன்புடன் ஏற்று கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார். 
ஒருவரின் வாழ்வு, சமூகத்தில் அவரடையும் வெற்றி, உடல் மற்றும் பொருளாதார நலவாழ்வு ஆகியவற்றின் நிறைவில் மட்டும் கவனம் செலுத்தப்படும் போது கிறிஸ்து தமது சிலுவைப்பாடுகள் பற்றித் தெரிவித்த போது பேதுரு அதற்கு எதிர்ப்புக் கூறியது, இக்காலத்தில் மீண்டும் இடம்பெறுகின்றது என்பதைக் காட்டுகின்றது என்று விளக்கினார் திருத்தந்தை.
ஆயினும் கிறிஸ்தவர்கள் தங்களது சிலுவைத் துன்பங்களைத் தனியாக அல்ல, மாறாக இயேசுவுடன் சேர்ந்து சுமக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இம்முவேளை செப உரையைக் கேட்கச் சென்றிருந்த இளம் குருத்துவ மாணவர்களிடம், கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கப் பயப்பட வேண்டாம் என்று கூறினார் திருத்தந்தை  16ம் பெனடிக்ட்.


2. அர்ஜென்டினாவில் கருக்கலைப்பைச் சட்டமாக்கும் முயற்சிகளுக்கு ஆயர்கள் எதிர்ப்பு

ஆக.29,2011. கருக்கலைப்பைச் சட்டமாக்க அர்ஜென்டினா பாராளு மன்றம் தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவாதங்களால் அந்நாட்டு மக்கள் பிரிக்கப்படுவதையும், அவர்கள் மத்தியில் வன்முறைகள் வளர்வதையும் குறித்து தங்கள் கவலைகளையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
கருவுற்றுள்ள பெண்களைப் பற்றிச்  சிந்திக்கும்போது, ஓர் உயிர் அல்ல, இரு உயிர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றும், இரு உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் Buenos Aires பேராயர் கர்தினால் Jorge Bergogolio கூறினார்.
பெண்கள் கருவுற்றபின், மூன்றாம் மாதம் துவங்கி குழந்தைக்கான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு அண்மையில் வலியுறுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டிய ஆயர்கள், கருக்கலைப்பைச் சட்டமாக்குவது குறித்து சிந்திக்கும்போதும், உயிர்களை மதிக்கும் எண்ணங்களுடன் பேச வேண்டும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.


3. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் நிறுவனங்கள் மூலம் சேவையாற்றி வருகிறது நியூயார்க் உயர் மறைமாவட்டம்

ஆகஸ்ட் 29, 2011.     அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐரீன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் கத்தோலிக்கப் பங்குத்தளங்களும், பள்ளிகளும் மருத்துவ மனைகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருவதாக தலத்திருச்சபை அறிவிக்கின்றது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் செபத்தில் ஒன்றித்திருப்பதுடன், உதவி தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தர தலத்திருச்சபை தயாராக உள்ளது என்றார் நியூயார்க்கின் பேராயர் திமோத்தி டோலன்.
பொதுமக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அரசு அதிகாரிகளுடன் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்குத்தளங்கள், பள்ளிகள், பிறரன்பு நிறுவனங்கள், நலவாழ்வு அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார் பேராயர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவசரகாலத் துயர்துடைப்பு முகாம்களில் நியூயார்க் உயர்மறைமாவட்ட சுயவிருப்பப்பணியாளர்கள் உதவிப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார் பேராயர் டோலன்.


4. துருக்கியில் மத சிறுபான்மையினரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் ஒப்படைக்க முடிவு

ஆக.29,2011. துருக்கியில் 1936ம் ஆண்டு மத சிறுபான்மையினரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை இஸ்லாம் அல்லாத ஒரு மத அறக்கட்டளையின் மேற்பார்வையில் ஒப்படைப்பதற்கு துருக்கியின் பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இஞ்ஞாயிறு இரவு சிறுபான்மை மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் துருக்கியின் பிரதமர் இப்தார் விருந்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன் தன் முடிவை அறிவித்தார்.
இந்த முடிவினால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், ஆர்மீனியர்கள், மற்றும் யூதர்கள் பயன் பெறுவர் என்றும், சிறுபான்மை மதத்தவர் என்ற குழுவில் உரோமன் கத்தோலிக்கர்கள் அதிகாரப்பூர்வமாய் சேர்க்கப்படவில்லை என்றும் ஆசிய செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறியது.
பிரதமர் அறிவித்துள்ள இந்த முடிவின்படி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு 1000 சொத்துக்களும், ஆர்மீனியர்களுக்கு 100 சொத்துக்களும் கல்தேயக் கத்தோலிக்கர் மற்றும் யூதர்களுக்கு பல சொத்துக்களும் திரும்பத் தரப்படும்.
பிரதமரின் இந்த செயல்பாடு சிறுபான்மை மதத் தலைவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதென்றும் உரோமன் கத்தோலிக்க சொத்துக்களும் விரைவில் திரும்ப அளிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக இத்தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


5. வன்முறைக் குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு நேபாள தலத்திருச்சபை எதிர்ப்பு

ஆகஸ்ட் 29, 2011.     கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டுவரும் நேபாளப் புரட்சிக்குழு ஒன்று அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படும் அபாயம் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளது நேபாளத் தலத்திருச்சபை.
'தேசியப் பாதுகாப்பு இராணுவம்' என்ற பெயருடன் இயங்கிவரும் NDA புரட்சிக் குழு, மதம் தொடர்பான பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க நடக்கும் முயற்சிகள் குறித்து கவலையை வெளியிட்ட ஆயர் அந்தோனி சர்மா, நேபாளத்தின் வளர்ச்சிக்காக இவ்வளவு காலமும் பொறுமையுடன் உழைத்து வரும் கிறிஸ்தவர்கள், அரசின் இந்த நடவடிக்கையினால், ஆதரவற்ற சிறுபான்மையினராக உணர்வதாக தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என வன்முறைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த NDA புரட்சி குழுவின் முன்னாள் தலைவர் இராம் பிரசாத் மைனாலி, 2009ல் நேபாளக் கத்திதோலிக்கக் கோவிலைக் குண்டு வைத்துத் தாக்கியது, இரு மசூதிகளைக் குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டது, இந்திய சலேசிய குரு ஜான் பிரகாஷைக் கொலை செய்தது போன்றவைகளுக்காக சிறையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


6. மத்தியப்பிரதேசக் கிறிஸ்தவர்கள் கடைபிடித்த இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாள்

ஆக.29,2011. இவ்வார இறுதி நாட்களான சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில் மத்தியப்பிரதேசக் கிறிஸ்தவர்கள் இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாளைக் கடைபிடித்தனர்.
பல்வேறு செப வழிபாடுகள் மற்றும் இரத்ததான முகாம்கள் வழியாக இந்த நாள் கடைபிடிக்கப்பட்டதென்று மத்தியப் பிரதேசக் கத்தோலிக்கத் தலத்திருச்சபையின் சார்பில் பேசிய அருள்தந்தை ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.
ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் 28 வரை நடைபெற்ற வன்முறைகளில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக சென்ற வாரம் வழிபாடுகளை மேற்கொள்ளவிருந்த கந்தமால் பகுதி மக்கள் அச்சம் காரணமாக வழிபாடுகளை மேற்கொள்ளவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த வன்முறைகளால் 100 பேரளவில் கொல்லப்பட்டனர், மற்றும் 50000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் நாள் கடைபிடிக்கப்பட்டது என்று அருள்தந்தை முட்டுங்கல் கூறினார்.
மத்தியப்பிரதேச இசை மகாசங் என்ற அமைப்பு இந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. பாகிஸ்தானில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது

ஆகஸ்ட் 29, 2011.     கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தானின் கராச்சி தூய வளன் கோவில் கல்லெறிந்து தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தங்கள் கவலையையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கர்கள்.
மரச்சன்னல்கள், பளிங்கு கற்கள், சன்னல் கண்ணாடிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார் குரு ரிச்சர்டு டி சூசா.
1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழும் நஸ்ராத் நகரின் ஏழு கோவில்களுள் ஒன்றான இக்கோவிலைத் தாக்கியவர்கள் யார் என்பது தெளிவில்லாத நிலையில், காவல் துறையிடம் புகார் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment