Friday 12 August 2011

Catholic News - hottest and latest - 06 August 2011

1. வீட்டுவேலைசெய்யும் குடியேற்றதாரர் மீது மதிப்பும் தோழமையும் காட்டப்பட ஆசிய ஆயர்கள் வேண்டுகோள்

2. சீனாவில் ஓர் இளம்குரு, நான்கு மாதங்கள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுதலை

3. புரட்சிக்குழுக்களால் நடத்தப்படும் ஆள்கடத்தல் செயல்களுக்கு வெனெசுவேலா காரித்தாஸ் இயக்குனர் கண்டனம்

4. மிசியோ ஆஸ்ட்ரியாவின் உதவியால் 45 இலட்சம் தொழுநோயாளிகள் பயன்

5. புர்கா அணியத் தடைவிதிப்பது, தனிப்பட்டவரின் சமய சுதந்திரத்தை மீறுவதாக இருக்கின்றது

6. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 விழுக்காடாகக் குறைவு

7. 2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : கலாம் உறுதி

8. வெனெசுவேலாவில் சுமார் இருபதாயிரம் கைதிகளை விடுதலை செய்யப் பரிந்துரை

9. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. வீட்டுவேலைசெய்யும் குடியேற்றதாரர் மீது மதிப்பும் தோழமையும் காட்டப்பட ஆசிய ஆயர்கள் வேண்டுகோள்

ஆக.06,2011. வீட்டுவேலைசெய்யும் குடியேற்றதாரர் மற்றும் பூர்வீக இன மக்கள் மீது மதிப்பும் தோழமையும் காட்டப்படுமாறு ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
"Caritas In Veritate" அதாவது உண்மையில் பிறரன்பு என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருமடல் ஆசியச் சூழலில் அறிவுறுத்தும் கருத்துக்கள் குறித்து தாய்லாந்து நாட்டு பட்டாயாவில் அண்மையில் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
ஆசியாவில் 5 கோடியே 30 இலட்சம் வீட்டுவேலைசெய்யும் குடியேற்றதாரர் உள்ளனர் என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 12 ஆசிய நாடுகளிலிருந்து 35 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2. சீனாவில் ஓர் இளம்குரு, நான்கு மாதங்கள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுதலை

ஆக.06,2011. சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் ஓர் இளம்குரு, ஏறக்குறைய நான்கு மாதங்கள் தடுப்புக்காவலில் துன்புறுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டதிலிருந்து Yanqin பங்குக் குருவாகப் பணியாற்றி வந்த அருட்பணி Joseph Chen Hailong, சீருடை அணியாத காவல்துறை உறுப்பினர்களால் கடந்த ஏப்ரல் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஏறத்தாழ இரண்டு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அருட்பணி Chen, திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுவிட நச்சரிக்கப்பட்டார் எனவும், பசியாலும் ஊட்டச்சத்து இல்லாமையாலும் துன்புற்றார் எனவும் ஊடகங்கள் கூறுகின்றன. மேலும், கடந்த ஜூனில் கைதான வேறு மூன்று குருக்கள் பற்றிய விபரங்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

3. புரட்சிக்குழுக்களால் நடத்தப்படும் ஆள்கடத்தல் செயல்களுக்கு வெனெசுவேலா காரித்தாஸ் இயக்குனர் கண்டனம்

ஆக.06,2011. வெனெசுவேலா நாட்டில் இருந்து கொண்டு ஆள்கடத்தல் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கொலம்பிய நாட்டுப் புரட்சிக் குழுக்களுக்கு எதிராகத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் வெனெசுவேலா காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி ஒர்லாந்தோ நெய்ரா.
FARC என்ற கொலம்பிய ஆயுதப் புரட்சிப் படையும், ELN என்ற தேசிய விடுதலைப் படையும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத நிறுவனங்கள் என்றும், இவை, ஆள்கடத்தல் மற்றும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் செயல்களால் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளன என்றும் அக்குரு தெரிவித்தார்.
இந்தப் புரட்சிப் படைகளின் அடாவடிச் செயல்களை நிறுத்துவதற்கு அரசு எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குறை கூறினார்.
கொலம்பியாவில் 2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 89 பேர் கடத்தப்பட்டனர்.

4. மிசியோ ஆஸ்ட்ரியாவின் உதவியால் 45 இலட்சம் தொழுநோயாளிகள் பயன்

ஆக.06,2011. உலகின் சுமார் 45 இலட்சம் தொழுநோயாளிகள் பயனடையும் விதத்தில் மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளதுமிசியோ ஆஸ்ட்ரியா என்ற ஆஸ்ட்ரியாவிலுள்ள தேசிய பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் அமைப்பு.
தொழுநோயை ஒழிப்பதற்கும் தொழுநோயாளிகளின் நலவாழ்வுக்குமென  2010ம் ஆண்டில் 72 திட்டங்களை ஊக்குவித்துள்ளது இந்த ஆஸ்ட்ரிய அமைப்பு.
இவ்வாண்டில் மட்டும் ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள 29 மறைபோதக மருத்துவமனைகளுக்கு 3,200 பெட்டிகளில் மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இவ்வமைப்பு அனுப்பியுள்ளது. இதனால் சுமார் 45 இலட்சம் பேர் பயனடைவார்கள்.
தொழுநோயை ஒழிப்பதற்கென கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது இந்த ஆஸ்ட்ரிய அமைப்பு. 

5. புர்கா அணியத் தடைவிதிப்பது, தனிப்பட்டவரின் சமய சுதந்திரத்தை மீறுவதாக இருக்கின்றது

ஆக.06,2011. பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா, நிகாப் அணிவதற்குத் தடைவிதிக்கும் மசோதாவுக்கு இத்தாலிய நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புக் குழு அங்கீகாரம் அளித்திருப்பது, சமய சுதந்திரத்தை மீறுவதாக இருக்கின்றது என்று இந்தியத் திருச்சபையின் சமூகநல ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது, ஆழமான கலாச்சார நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் தனிப்பட்டவரின் வாழ்வில் நேரிடையாகத் தலையிடுவதாக இருப்பதால் தனிப்பட்டவரின் சமய சுதந்திரத்தை இது மீறுவதாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் பிரான்சும் பெல்ஜியமும், இஸ்பெயினில் ஒரு நகரமும்  ஏற்கனவே புர்காவுக்குத் தடைவிதித்துள்ளன.
இத்தாலியில் சுமார் மூவாயிரம் பெண்கள் முகத்திரை அணிவதாகக் கூறப்பட்டுள்ளது.

6. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 விழுக்காடாகக் குறைவு

ஆக.06,2011. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம், கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பான யுனிசெப் அறிவிக்கிறது.
யுனிசெப் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், 40 விழுக்காட்டுப் பெண்களே  6 மாதங்கள் வரை, தாய்ப்பால் கொடுக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தை தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக ஐ.நா. கடைபிடித்து வருவதையொட்டி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட யுனிசெப், ஆறு மாதங்கள்வரை  துணை உணவு இல்லாமல், தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 20 விழுக்காடுதான் என்று கூறியது.
"பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த மருந்து; தாய்ப் பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மேம்படுகிறது. இதனால், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள், தாய்ப்பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 20 விழுக்காடுவரை குறைகிறது' எனப்  பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும்  இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளில் ஆகஸ்ட் முதல் வாரம், தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 1998ம் ஆண்டில் 50 விழுக்காடாகவும், 2005ல் 55 விழுக்காடாகவும் உயர்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு, தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 விழுக்காடாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

7. 2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : கலாம் உறுதி

ஆக.06,2011. "இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடந்த நிர்வாக கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாம், மாணவர்களே உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது ஒவ்வொரு மாணவன், மாணவியின் முக்கியமான விடயம். மாணவர்கள் கனவுகள் காண வேண்டும். அதன் மூலம் தங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். உங்கள் அனைவரையும் 2030 ல் சந்திரனில் சந்திக்கிறேன். அப்போது எனக்கு வயது 100 ஆக இருக்கும் என்றார்.
நாம் உழைத்துத் தான் நாட்டை வளமான நாடாக ஆக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை, கிராமங்களின் வளர்ச்சிதான். கிராம எழுச்சி இந்தியாவின் வளர்ச்சி. கிராமங்களில் சாலைகள் மூலம் இணைப்பு, தகவல் தொடர்பு இணைப்பு, அறிவு சார்ந்த இணைப்பு இவை மூன்றும் சேர்ந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இன்னும் ஒன்பது ஆண்டுகளில் அதாவது 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் கலாம் கூறினார்.
உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் இந்தியா முன்னேறும். அனைத்து வசதிகளிலும் மேம்பட்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்  என்றார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

8. வெனெசுவேலாவில் சுமார் இருபதாயிரம் கைதிகளை விடுதலை செய்யப் பரிந்துரை

ஆக.06,2011. வெனெசுவேலா நாட்டுச் சிறைகள் கொள்ளவுக்கு அதிகமாக நிரம்பி வழிவதைச் சரிப்படுத்தும் நோக்கத்தில்  சுமார் இருபதாயிரம் கைதிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அந்நாட்டுச் சிறைத்துறையின் புதிய அமைச்சர் இரிஸ் வரேலா பரிந்துரை செய்துள்ளார்
வெனெசுவேலா நாட்டுச் சிறைகளில் தற்சமயம் 50 ஆயிரம் கைதிகள் இருப்பதால் இருபதாயிரம் கைதிகள் கட்டாயமாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று வரேலா தெரிவித்தார்.
வெனெசுவேலா நாட்டுச் சிறைகளில் 14 ஆயிரம் கைதிகள் மட்டுமே இருக்க முடியும் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு அந்நாட்டுச் சிறைகளி்ல் இடம் பெற்ற வன்முறையில் 300க்கும் அதிகமான கைதிகள் இறந்தனர். அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததே இந்தக் கலவரத்திற்கு காரணம் என அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன.

9. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆக.06,2011. செவ்வாய்க்‍ கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் நான்காவது கிரகமாக கருதப்படும் செவ்வாய்க்‍ கிரகத்தில், தண்ணீர் இருப்பதைக் கடந்த 10 ஆண்டுக்‍கு முன்பே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். இருந்த போதிலும், அது உறைந்து இருப்பதாகவே இதுவரை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், செயற்கைக்‍கோள் மூலம் மார்ட்டியன் எரிமலைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரத்தை தற்போது அமெரிக்‍காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நிலத்துக்‍கடியில் இருந்த நீரோட்டம் இருப்பதற்கானப் படிமங்கள் தங்களுக்‍குக் கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்‍கும் படுகைகள், பின்னர் வெப்ப காலத்தில் உருகித் தண்ணீராக ஒடுவதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதுள்ள இந்தப் படுகைகள் உருகித் தண்ணீராக மாறினால், அது செவ்வாய்க் கிரகம் முழுவதையும் ஆக்கிரமித்து கடல்போன்று இருக்‍குமென்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இத்தகவல்கள் விஞ்ஞான ஆராயச்சி குறித்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...