Wednesday 3 August 2011

Catholic News - hottest and latest - 01 August 2011

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. பவேரியப் பகுதி குழுவுக்குத் திருத்தந்தையின் உரை

3. திருத்தந்தையின் இஸ்பெயின் நாட்டிற்கானத் திருப்பயணம் புதிய உயிர்த்துடிப்பை வழங்கும்

4. பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக கிறிஸ்தவக் குருக்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து உழைக்க அழைப்பு  

5. இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் 1700 பேர் கடத்திச் செல்லப்பட்டனர்

6.   அம்ராவதி மறைமாவட்ட முதல் ஆயர் ரொசாரியோ இறைபதம் சேர்ந்தார்

7. Jowai ஆயர் மாரடைப்பால் மரணம்


----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஆக.01, 2011. பசி, மற்றும் தாகத்தால் துயருறுவோர் குறித்து எவரும் பாராமுகமாய் இருக்க முடியாது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்து இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, அப்பமும் மீனும் பலுகிய புதுமை குறித்து எடுத்துரைத்து, பசியால் வாடுவோருக்கு உதவ நம் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் ஆற்றவேண்டியது நம் கடமை என்றார். இறைவன் மனுவுருவானதும், மீட்பு நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை என்ற பாப்பிறை, இயேசுவின் அப்பம் பலுகச்செய்த புதுமை, மக்கள் மீதான அவரின் கருணையின் வெளிப்பாடாகவும் நமக்கான எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்றார்.
பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஆப்ரிக்க மக்கள் குறித்து எவரும் பாராமுகமாய் இருக்க முடியாது என மேலும் கூறினார் அவர்.
இஞ்ஞாயிறு திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட இயேசு சபை நிறுவனர் புனித இஞ்ஞாசியார் குறித்தும் எடுத்தியம்பி, அவரும் ஏழைகள் மீது கொண்டிருந்த தணியாதத் தாகத்தையும் மேற்கோள்காட்டினார் பாப்பிறை.

2. பவேரியப் பகுதி குழுவுக்குத் திருத்தந்தையின் உரை

ஆக.01, 2011.கத்தோலிக்கர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு தங்களைத் திறந்தவர்களாக‌, சகோதரத்துவத்தில் வாழ்பவர்களாய், சகிப்புத்தன்மையுடையவர்களாய் வாழவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் 60வது குருத்துவ விழாக்கொண்டாட்டங்களையொட்டி தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்திருந்த ஜெர்மனியின் பவேரியாப் பகுதிக் குழுவை இஞ்ஞாயிறன்று காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, அவர்கள் தனக்கு வழங்கிய அப்பகுதிக்கேயுரிய கௌரவ மோதிரம் குறித்த தன் நன்றியை வெளியிட்டார். 1969ல் உருவாக்கப்பட்ட இந்தக் கௌரவ விருதானது இதுவரை 7 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிறந்து வளர்ந்த பூமியான பவேரியாப் பகுதியிலிருந்து அவருக்கு வாழ்த்துச் சொல்ல வந்த 300 பேர் அடங்கிய குழுவிற்குத் தன் நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை, அப்பகுதியின் கோவில்கள் மற்றும் தெருக்களில் நாட்டப்பட்டுள்ள சிலுவைகளை நினைவுகூராமல் அப்பகுதி குறித்துச் சிந்திக்க முடியாது என்றார்.
ஜெர்மனியின் பவேரியாப் பகுதியின் இசைவளம், கவித்திறன், வரவேற்புப்பண்பு மற்றும் மகிழ்வு மனப்பான்மை ஆகியவை குறித்தும் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார் பாப்பிறை.

3. திருத்தந்தையின் இஸ்பெயின் நாட்டிற்கானத் திருப்பயணம் புதிய உயிர்த்துடிப்பை வழங்கும்

ஆக.01, 2011. இஸ்பெயின் நாட்டின் சமூக வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தின் தாக்கம் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நிலையில், திருத்தந்தையின் அந்நாட்டிற்கான இம்மாதத் திருப்பயணம் புதிய உயிர்த்துடிப்பை வழங்கும் என கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளன.
இம்மாதம் 18 முதல் 21 வரை இடம் பெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களையொட்டி இஸ்பெயினில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, அந்நாட்டின் அரசக் குடும்பம், பிரதமர் ஆகியோரையும் சந்தித்து உரையாட உள்ளார்.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில், அண்மைக்காலத்தில் மணமுறிவுச்சட்டம் தளர்த்தப்பட்டது, கருக்கலைத்தல் மீதான தடைகள் அகற்றப்பட்டது, ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது போன்ற திருச்சபை விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிடும் செய்தி நிறுவனங்கள், உலக இளையோர் தின நடவடிக்கைகளிலிருந்து இஸ்பெயின் நாடு நிறைய மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளன.

4. பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக கிறிஸ்தவக் குருக்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து உழைக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுந‌ர்.

ஆக.01, 2011. இந்தோனேசியாவில் தாயக் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக கிறிஸ்தவக் குருக்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை உள்ளது என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டின் மேற்கு கலிமான்டன் ஆளுந‌ர்.
ஆளுனர் மாளிகையில் இந்தோனேசியாவின் குருக்களுள் ஏறத்தாழ் 110 பேருடன் இடம்பெற்ற விருந்தில் உரை நிகழ்த்திய ஆளுந‌ர் கொர்னேலிஸ், தாயக் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் நல மேம்பாட்டிற்காக உழைப்பதுடன் அவர்களுக்கான விழிப்புணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வருங்காலத்தை மனதிற்கொண்டு இப்பழங்குடியினர் தங்கள் குழந்தைகளைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்ப உதவும் வகையில் குருக்களின் மறையுரைகள் விழிப்புணர்வை ஊட்டுவதாக இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் ஆளுநர் கொர்னேலிஸ். 

5. இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் 1700 பேர் கடத்திச் செல்லப்பட்டனர்

ஆக.01, 2011. இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1700 பேர் கடத்திச் செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டில் 926 பேரும் 2010 ம் ஆண்டில் 774 பேரும் கடத்தப்பட்டனர்.
இதில் 202 சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
275 சம்பவங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

6.   அம்ராவதி மறைமாவட்ட முதல் ஆயர் ரொசாரியோ இறைபதம் சேர்ந்தார்

ஆக.01, 2011. இந்தியாவின் அம்ராவதி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஜோசப் ஆல்பர்ட் ரொசாரியோ இஞ்ஞாயிறன்று காலை இறைபதம் சேர்ந்தார்.
1915ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி பிறந்த ஆயர் ரொசாரியோ, 1944ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1955ம் ஆண்டு அம்ராவதி மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார்.
தன் 80 வயது வரை அம்மறைமாவட்ட ஆயர் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வந்த ஆயர் ரொசாரியோ, 1995ம் ஆண்டு ஏப்ரல் முதல்தேதி அப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இஞ்ஞாயிறன்று காலமான 96 வயதான ஆயரின் அடக்கச்சடங்கு இச்செவ்வாய் காலை அம்ராவதி பேராலயத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7. Jowai ஆயர் மாரடைப்பால் மரணம்

ஆக.01, 2011.மெகாலயாவின் Jowai மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் கிம்பாட் இச்சனிக்கிழமை நண்பகல் மாரடைப்பால் காலமானார்.
காலை 11.30 வரை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்த 64 வயதான ஆயர் கிம்பாட் நண்பகல் 12 மணிக்கு குழியலறையில் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார்.
1946ம் ஆண்டு மௌசுரோங்கில் பிறந்த இவர், 1977ல் ஷில்லாங் மறைமாவட்டக் குருவாகவும் 2006ல் Jowai ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...