Wednesday 24 August 2011

Catholic News - hottest and latest - 23 August 2011

1. மத்ரித் இளையோர் தினக் கொண்டாட்டங்களில் இளையோரின் நடவடிக்கைகள் குறித்து பெருமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

2. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணாமற்போன இரு தமிழ் கத்தோலிக்கக் குருக்களுக்கான நீதி கேட்டு விண்ணப்பம்

3. இலங்கையில் காரித்தாஸ் உதவியுடன் செங்கல் வீடுகள் கட்டும் முயற்சிகள்

4. கர்நாடகாவில் தொடர்ந்து இரு ஞாயிற்றுக் கிழமைகளில் திருவழிபாடுகள் நேரத்தில் வன்முறை கும்பலால் இடையூறு

5. Anna Hazareயின் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் - இந்தியத் திருச்சபை

6. விவிலியம் முழுவதையும் ஜப்பானின் பேச்சு வழக்கு மொழியில் மொழிபெயர்க்கும் பணி  நிறைவுற்றுள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. மத்ரித் இளையோர் தினக் கொண்டாட்டங்களில் இளையோரின் நடவடிக்கைகள் குறித்து பெருமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆக.23,2011. இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெற்ற இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இளையோரின் நடவடிக்கைகள் குறித்து பெருமைப்படுவதாக இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் அறிவித்துள்ளனர்.
இளையோர் தினக்கொண்டாட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டவர்களின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும், எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இந்நிகழ்வு இடம்பெற்றதும் பெருமைக்குரிய ஒன்றாக இருந்ததாக, இத்திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக இளையோர் தினத்திற்கான தகவல் தொடர்புத்துறை இயக்குனர் மரியெத்தா ஹௌரேகுயிசர் அறிவித்தார்.
இந்த இளையோர்தினக் கொண்டாட்டத்தில் பங்குபெற்றோர் அனைவரும் நல்லதொரு அனுபவத்தைப் பெற்றுச் சென்றுள்ளதாக தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார் அவர்.
மத்ரித் இளையோர் தினக் கொண்டாட்டங்கள், தாங்கள் எதிர்பார்த்தததைவிட சிறப்பாக இடம்பெற்றதாக இந்நிகழ்வுக்கு ஏற்பாடுச்செய்தோர் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.


2. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணாமற்போன இரு தமிழ் கத்தோலிக்கக் குருக்களுக்கான நீதி கேட்டு விண்ணப்பம்

ஆக 23, 2011. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் காணாமற்போன இரு தமிழ் கத்தோலிக்கக் குருக்கள் குறித்த விவரங்களைக்கேட்டு அரசை விண்ணப்பித்துள்ளனர் அக்குருக்களின் உறவினர்களும் பொதுநிலை விசுவாசிகளும்.
குருக்கள் திருச்செல்வம் நிகல் ஜிம் ப்ரவுன் மற்றும் வென்சஸ்லாஸ் விமலதாஸ், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பாதுகாப்பு துருப்புகளின் பிடியிலிருந்த பகுதியில்  காணாமற்போய் ஐந்து ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், இவர்கள் காணாமற்போனது எவ்விதம் என்பது குறித்த உண்மைகள் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என  அரசை விண்ணப்பித்துள்ளனர் விசுவாசிகள்.
சுதந்திரமான, நியாயமான விசாரணைகள் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இக்குருக்களுக்கென மண்டைத்தீவு தூய பேதுரு மற்றும் பவுல் கோவிலில் இடம்பெற்ற திருப்பலியில் கலந்து கொண்டோர் விண்ணப்பித்தனர்.
காணாமற்போவதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் அல்லைபிட்டி தூய ஃபிலிப் நேரி கோவிலின் பங்குகுருவாக நியமிக்கப்பட்ட குரு ஜிம், அவ்வாண்டு ஆகஸ்ட் 12ந்தேதி இடம்பெற்ற விமான குண்டு தாக்குதலில் காயமுற்ற மக்களுக்கு தன் பங்குதளத்தில் அடைக்கலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான மோதலில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் இழக்கப்பட்டதில் 6 குருக்களும், எண்ணற்ற திருச்சபைப் பணியாளர்களும் அடங்குவர்.


3. இலங்கையில் காரித்தாஸ் உதவியுடன் செங்கல் வீடுகள் கட்டும் முயற்சிகள்

ஆக.23,2011. இலங்கையில் மிகவும் ஏழ்மையில், பின்தங்கிய நிலையில் உள்ள சீமவேலியா எனும் பங்குத் தளத்தில் காரித்தாஸ் உதவியுடன் செங்கல் வீடுகள் கட்டும் முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் காரித்தாஸ் மற்றும் ஏனைய பிறரன்பு பணி நிறுவனங்களின் உதவியுடன் தற்போது 43 வீடுகள் உருவாகி வருகிறதென காரித்தாஸ் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Jude Nicholas Fernando கூறினார்.
இப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு காணப்படும் சேற்று மண் கொண்டு வீடுகள் அமைத்து வந்தனர். வியாபார ரீதியில் பல நிறுவனங்கள் அப்பகுதியில் இந்தச் சேற்று மண்ணை எடுத்து விற்று வந்ததை காரித்தாஸ் அமைப்பு இம்மக்களுக்குச் சுட்டிக் காட்டி, அவர்களே தங்கள் நிலத்து மண் கொண்டு செங்கல் உருவாக்கும் வழிகளை கற்றுத் தந்தனர் என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதுவரை மழைக் காலத்தில் சேற்று மண்ணால் அமைந்த வீடுகளில் குடியிருந்தோர், தற்போது இந்த உதவிகளால் நலமான நிரந்தரமான செங்கல் வீடுகளில் இருப்பது எவ்வளவோ மேல் என்று அருள்தந்தை Fernando மேலும் கூறினார்.


4. கர்நாடகாவில் தொடர்ந்து இரு ஞாயிற்றுக் கிழமைகளில் திருவழிபாடுகள் நேரத்தில் வன்முறை கும்பலால் இடையூறு

ஆக.23,2011. கர்நாடகாவில் கடந்த இரு ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்தவ சபையொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஞாயிறு வழிபாடுகளை இந்து தீவிரவாத அமைப்பினர் இடைமறித்து, கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவின் Mudhol எனும் இடத்தில் தொடர்ந்து இரு ஞாயிற்றுக் கிழமைகளில் திருவழிபாடுகள் நேரத்தில் வன்முறை கும்பல் ஒன்று வழிபாடுகளை நிறுத்தி, வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட அப்பம், இரசம் ஆகியவற்றை அவமரியாதைக்குரிய வகையில் கையாண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்த ஞாயிறு வழிபாட்டை தலைமையேற்று நிகழ்த்திய Sangappa Hosamani Shadrak என்ற போதகரையும் இவ்வன்முறை கும்பல் அடித்துத் துன்புறுத்தினர். வன்முறை கும்பல், போதகர் மீது அளித்த புகாரை அடுத்து, காவல் துறையினர் போதகரையும் அவருடன் இருந்த கிறிஸ்தவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.
கர்நாடகா, ஒரிஸ்ஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் காணும் போதும், இவ்வன்முறைகளுக்கு அரசே துணைபோவதைக் காணும் போதும், சுதந்திர, மத சார்பற்ற இந்தியாவில் வாழ்கிறோமா என்ற அச்சத்தை உருவாக்குகிறது என்று இந்தியக் கிறிஸ்தவ அகில உலக அவையின் தலைவர் Sajan George கூறினார்.


5. Anna Hazareயின் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் - இந்தியத் திருச்சபை

ஆக.23,2011. தற்போது இந்தியாவில் Anna Hazareயின் தலைமையில் நடைபெற்றுவரும் ஊழல் ஒழிப்பு உண்ணாநோன்பு போராட்டம் பல்லாயிரம் மக்களை ஈர்த்து வரும் அதே வேளையில், இந்தியத் திருச்சபை இந்தப் போராட்டத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
பல்வேறு கிறிஸ்தவ மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இந்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வரும் வேளையில், இந்தியத் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தாராமல் விலகி நிற்கிறது.
பாராளுமன்றம் மேற்கொண்டுள்ள மக்களாட்சி முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு Anna Hazare மேற்கொண்டுள்ள முயற்சிகள் மக்களாட்சிக்கு சரியான வழியாக அமையாது என்று ஆயர் பேரவை தன் கருத்தை வெளியிட்டுள்ளது.
Anna Hazare தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தைக் குறித்து பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், சமுதாய ஆர்வலர்களும் தங்கள் கவலைகளையும், எதிர்ப்பையும் ஊடகங்கள் வழியே வெளியிட்டு வருகின்றனர்.


6. விவிலியம் முழுவதையும் ஜப்பானின் பேச்சுவழக்கு மொழியில் மொழிபெயர்க்கும் பணி  நிறைவுற்றுள்ளது

ஆக 23, 2011.    விவிலியம் முழுவதையும் ஜப்பானின் பேச்சுவழக்கு மொழியில் மொழிபெயர்க்கும் பணி 55 ஆண்டுகால அயரா உழைப்பிற்குப்பின் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
1956ம் ஆண்டு டோக்கியோவில் நிறுவப்பட்ட பிரான்சிஸ்கன் துறவு சபையின் கிளையினால் முடிக்கப்பட்ட‌ ஜப்பான் வட்டார வழக்கு மொழியிலான விவிலியத்தை அச்சபையினரும், சலேசியர்களும் பவுலிஸ்ட் சபையினரும் இணைந்து வத்திக்கான் நூலகத்தலைவர் கர்தினால் ரஃபேல் ஃபரினாவிடம் ஒப்படைத்தனர். 
ஏற்கனவே 1950ம் ஆண்டுகளிலேயே இலத்தீன் மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஜப்பான் மொழி விவிலியம் பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், தற்போதுதான் மூலப்படிவத்திலிருந்து நேரடி மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது.
இம்மொழிபெயர்ப்புக்கான முழு நிதி உதவிகளையும், பிரான்சிஸ்கன் துறவு சபையும் அமெரிக்க ஐக்கிய நாடும் வழங்கியுள்ளன.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...