1. அணுஆயுதங்கள் இல்லாத வருங்காலத்தை உருவாக்குவதில் அனைத்து மனித சமுதாயமும் ஆர்வமுடன் செயல்பட ஜெர்மன் ஆயர் வலியுறுத்தல்
2. துன்பங்களின் மத்தியிலும் விசுவாசத்தை இழக்க மாட்டோம் - ஃபுக்குஷிமா சிறார் திருத்தந்தையிடம் உறுதி
3. சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் முதலில் தாய்மார், தந்தையர், மகன்கள் மற்றும் மகள்கள் – அமெரிக்கப் பேராயர்
4. மதம் அரசியலைச் சுத்தப்படுத்துகின்றது - கர்தினால் புர்க்கே
5. மத்திய பிரதேச அரசு, உண்மையான விவகாரங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சித்து வருகின்றது – போபால் பேராயர்
6. உண்மையைக் கொண்டு வரும் எந்தவிதமான விசாரணைகளையும் திருச்சபை வரவேற்கின்றது
7. நைஜீரியாவில் எண்ணெய் மாசுக்கேட்டைத் துப்புரவு செய்வதற்கு 30 ஆண்டுகள் எடுக்கக்கூடும் – ஐ.நா
8. இலட்சக்கணக்கான ஏழைகள் கைபேசி வசதிகள் பெறுவதற்கு ஐ.நா. முயற்சி
9. சொமாலியாவிற்கு இந்தியா உணவுப் பொருட்கள் வழங்க முடிவு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. அணுஆயுதங்கள் இல்லாத வருங்காலத்தை உருவாக்குவதில் அனைத்து மனித சமுதாயமும் ஆர்வமுடன் செயல்பட ஜெர்மன் ஆயர் வலியுறுத்தல்
ஆக.05,2011. அணுஆயுதங்கள் இல்லாத வருங்காலத்தை உருவாக்குவதில் ஐரோப்பா மட்டுமல்ல, அனைத்து மனித சமுதாயமும் ஆர்வமுடன் செயல்படுமாறு ஜெர்மன் ஆயர் Heinz Josef Algermissen வலியுறுத்தினார்.
அணுஆயுதகளைத் தடைசெய்வதும் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதும் உலகின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கென ஓர் அடி முன்னோக்கி வைப்பதாகவும், இவ்வாறு செயல்படுவது ஒவ்வொருவரின் மனித உரிமை எனவும் ஜெர்மன் பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் தலைவரான ஆயர் Algermissen கூறினார்.
உலகெங்கிலுமுள்ள பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பினர், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும் 9ம் தேதி நாகசாகியிலும் உலகின் முதல் அணுகுண்டுகள் வீசப்பட்டதன் நினைவை, செபம், கலந்துரையாடல் மற்றும் செயல்திட்டங்கள் மூலம் கடைபிடிக்கவிருக்கின்றனர்.
இந்த அணுகுண்டுகள் வீசப்பட்டு 66 ஆண்டுகள் ஆகியும் இந்நகரங்களின் மக்கள் இன்னும் அவற்றின் தாக்கத்தை அனுபவிக்கின்றனர். இந்தத் தாக்குதல்களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் இறந்தனர்.
2. துன்பங்களின் மத்தியிலும் விசுவாசத்தை இழக்க மாட்டோம் - ஃபுக்குஷிமா சிறார் திருத்தந்தையிடம் உறுதி
ஆக.05,2011. துன்பங்களின் மத்தியிலும் தாங்கள் ஒருபோதும் விசுவாசத்தை இழக்க மாட்டோம் என்று வடகிழக்கு ஜப்பானைச் சேர்ந்த இருபது ஆரம்பப்பள்ளி சிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் தெரிவித்தனர்.
ஜப்பானின் Ofunato நகரைச் சேர்ந்த பள்ளிச்சிறார் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்த போது இவ்வாறு கூறியதோடு, தாங்கள் துடிப்புடன் வாழ்ந்து தங்களது நகரை இன்னும் அழகானதாக அமைப்பதற்கு உறுதி கொண்டுள்ளதாகக் கூறினர்.
Ofunato கடற்கரை நகரத்தைச் சேர்ந்த இந்தச் சிறார், கடந்த மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சேதமடைந்த ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சுக்களின் தாக்கத்தை அனுபவித்தவர்கள்.
3. சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் முதலில் தாய்மார், தந்தையர், மகன்கள் மற்றும் மகள்கள் – அமெரிக்கப் பேராயர்
ஆக.05,2011. சட்டத்துக்குப் புறம்பே குடியேறும் பல குடியேற்றதாரர்கள், தங்களது குடும்பங்களுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் தாயகத்தைவிட்டுக் கட்டாயமாக வெளியேறுகிறார்கள் என்று லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் ஹோசே கோமஸ் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறியிருப்பவர்களில் பலர், தங்கள் உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்திருப்பவர்கள் என்றும் பேராயர் கோமஸ் கூறினார்.
Knight of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கத் தொண்டு நிறுவனம் டென்வரில் நடத்திய 129வது மாநாட்டில் உரையாற்றிய பேராயர், சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் முதலில் தாய்மார், தந்தையர், மகன்கள் மற்றும் மகள்கள் என்றார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஹிஸ்பானியர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
4. மதம் அரசியலைச் சுத்தப்படுத்துகின்றது - கர்தினால் புர்க்கே
ஆக.05,2011. இவ்வியாழனன்று நிறைவடைந்த Knight of Columbus நிறுவனத்தின் மாநாட்டில் உரையாற்றிய வத்திக்கான் உச்சநீதிமன்றத் தலைவர் கர்தினால் ரெய்மண்ட் புர்க்கே, மதம் அரசியலைச் சுத்தப்படுத்துகின்றது என்றார்.
சமுதாயத்தில் சமய உணர்வு அற்றுப்போகும் போது அரசியல்வாதிகள், குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள் என்றார் கர்தினால் புர்க்கே.
இரண்டாயிரத்துக்கு அதிகமான பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய கர்தினால் புர்க்கே, மதத்தைச் சுதந்திரமாய்க் கடைபிடிப்பதற்கு அனைத்து நாடுகளும் உறுதி வழங்குமாறு வலியுறுத்தினார்.
5. மத்திய பிரதேச அரசு, உண்மையான விவகாரங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சித்து வருகின்றது – போபால் பேராயர்
ஆக.05,2011. பள்ளிச் சீறுடைகளின் ஒரு பகுதியான “டை” கட்டுவதைத் தடை செய்தல் போன்ற சாரமற்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கல்வியின் தரத்தை முன்னேற்றுவதில் மத்திய பிரதேச அரசு கவனம் செலுத்துமாறு போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கேட்டுக் கொண்டார்.
மாணவியர் டைகள் அணியும் பழக்கம், மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் வந்தது என்று சொல்லி அவை பள்ளிச் சீறுடைகளில் இனிமேல் இடம்பெறாது என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்திருப்பதையடுத்து பேராயர் கொர்னேலியோ இவ்வாறு கூறினார்.
மத்திய பிரதேச அரசு, உண்மையான விவகாரங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சித்து வருகின்றது என்று பேராயர் லியோ கொர்னேலியோ மேலும் கூறினார்.
6. உண்மையைக் கொண்டு வரும் எந்தவிதமான விசாரணைகளையும் திருச்சபை வரவேற்கின்றது
ஆக.05,2011. மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரிசா மாநிலத்தில் இந்துமதத் தலைவரும் அவரோடு சேர்ந்த நான்கு பேரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைய மீண்டும் தொடங்குமாறு காவல்துறைக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது குறித்து தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர் தலத்திருச்சபை அதிகாரிகள்.
உண்மையைக் கொண்டு வரும் எந்தவிதமான விசாரணைகளையும் திருச்சபை வரவேற்கின்றது என்று புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட அருட்பணியாளர் சந்தோஷ் திகால் கூறினார்.
கந்தமாலில் சுவாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புதியக் குற்றப்பத்திரிகையைத் தயார் செய்யுமாறு ஒரிசா உயர்நீதிமன்றம் காவல்துறையைக் கேட்டுள்ளது.
சுவாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொலை செய்யப்பட்டதற்கு மாவோயிஸ்டுகள் தொடக்கத்தில் பொறுப்பேற்றதையும் விடுத்து இந்துமதத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைக் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இடம் பெற்ற வன்முறையில் 90க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இறந்தனர் மற்றும் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.
7. நைஜீரியாவில் எண்ணெய் மாசுக்கேட்டைத் துப்புரவு செய்வதற்கு 30 ஆண்டுகள் எடுக்கக்கூடும் – ஐ.நா
ஆக.05,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒகோனிலாண்ட் எண்ணெய்வளப் பகுதியில் எண்ணெய் எடுப்புத் தொழிற்சாலைகளால் சிந்தப்பட்டுள்ள எண்ணெய்யைச் சுத்தம் செய்வதற்கு 25 முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கக்கூடும் என்று இவ்வியாழனன்று வெளியான ஐ.நா.அறிக்கை கூறுகின்றது.
உலகில் எண்ணெய் மாசுக்கேடு தலைநகர் என்று பெயர் பெற்றுள்ள இந்நாட்டில், எண்ணெய் மாசுகேட்டினால் அசுத்தமடைந்துள்ள குடிநீர், நிலம் மற்றும்பிற சுற்றுச்சூழல் பாதிப்புக்களைச் சரிப்படுத்துவதற்கு முதல் ஐந்தாண்டுகளுக்கு மட்டும் நூறு கோடி டாலர் தேவைப்படும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
நைஜர் டெல்ட்டா பகுதியில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெறும் எண்ணெய் எடுப்புத் தொழிற்சாலைகளால் விவசாயமும் கிணற்று நீரும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதியப் பொருட்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகின்றது.
8. இலட்சக்கணக்கான ஏழைகள் கைபேசி வசதிகள் பெறுவதற்கு ஐ.நா. முயற்சி
ஆக.05,2011. ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் ஏழ்மையைக் குறைக்கும் நோக்கத்தில் முப்பது இலட்சம் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் கைபேசி எண் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு ஐ.நா.ஆதரவுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐ.நா.ஆதரவுடன் Movirtu தொழில்நுட்ப நிறுவனம் இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது அண்டை வீட்டாருடன் ஒரே தொலைபேசியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, குறைந்த விலையில் கைபேசி வசதிகள் அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒருநாளைக்கு 2 டாலர் வரை வருமானம் பெறும் நூறு கோடிப் பேரின் வாழ்க்கைத்தரத்தையும் வருவாயையும் பெருக்குவதற்கு இத்தகைய கைபேசிகள் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9. சொமாலியாவிற்கு இந்தியா உணவுப் பொருட்கள் வழங்க முடிவு
ஆக.05,2011. பசி, பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியவிற்கு இந்தியா சார்பில் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்க உள்ளதாகவும், இதற்கான முறையான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்ரிக்க நாடான சொமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவின் சில பகுதிகளி்ல் பஞ்சத்தால் 75 இலட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்காக ஏங்கி வரும்வேளை, இந்தியா சொமாலியாவிற்கு போர்க்கால அடிப்படையில் விரைவில் உணவுபொருட்களை அனுப்பி வைக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்ட போது இந்தியா அரசியினை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment