Sunday 28 August 2011

Catholic News - hottest and latest - 27 August 2011

1. டொரோன்ட்டோ முன்னாள் பேராயர் கர்தினால் அம்புரோஜிச் மரணம்

2. அபுஜாவில் ஐ.நா. கட்டிடம் தாக்கப்பட்டதற்குத் திருத்தந்தை வருத்தம்

3. Monterrey நகரில் சூதாட்ட அரங்கம் தீ வைத்து தாக்கப்பட்டதற்குத் திருச்சபை அதிகாரிகள் கண்டனம்

4. லிபியாவில் கத்தோலிக்கருக்குத் தொடர்ந்து சுதந்திரம் கிடைக்கும், கத்தோலிக்கர் நம்பிக்கை

5. போஸ்னிய அமைதிக்குப் புதிய அச்சுறுத்தல்கள், ஆயர் எச்சரிக்கை

6. ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது

7. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 700 கருக்கலைப்புக்கள்

8. வைட்டமின் A சத்துணவு ஆயிரக்கணக்கானக் குழந்தைகளைக் காப்பாற்றும் - WHO

----------------------------------------------------------------------------------------------------------------

1. டொரோன்ட்டோ முன்னாள் பேராயர் கர்தினால் அம்புரோஜிச் மரணம்

ஆக.27,2011. கானடா நாட்டு டொரோன்ட்டோ முன்னாள் பேராயர் கர்தினால் அலாய்சியுஸ் அம்புரோஜிச் இறைபதம் அடைந்ததையொட்டித் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டொரோன்ட்டோ பேராயர் தாமஸ் கொலின்சுக்கு இத்தந்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் அம்புரோஜிச், அந்நாட்டுத் திருச்சபைக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளைப் பாராட்டியுள்ளார்.
அத்துடன் அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும், அவரின் மறைவால் வருந்தும் தலத்திருச்சபைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த கர்தினால் அம்புரோஜிச் தனது 81வது வயதில் இவ்வெள்ளிக்கிழமை காலமானார். சுலோவேனியா நாட்டில் பிறந்த இவரது குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது 1948ல் கானடாவுக்குக் குடிபெயர்ந்தது. 1955ல் குருவாகவும், 1976ல் டொரோன்ட்டோ துனண ஆயராகவும் நியமிக்கப்பட்ட இவர், 1998ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் அம்புரோஜிச்சின் மரணத்தோடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 194. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 114.  

2. அபுஜாவில் ஐ.நா. கட்டிடம் தாக்கப்பட்டதற்குத் திருத்தந்தை வருத்தம்

ஆக.27,2011. அபுஜாவில் ஐக்கிய நாடுகள் நிறுவனக் கட்டிடம்  தாக்கப்பட்டதற்குத் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்திகளை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரிய அரசுத்தலைவர் குட்லக் ஜோனத்தான், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் ஆகிய இருவருக்கும் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இத்தந்திச் செய்திகளை அனுப்பியுள்ளார்.
மரணத்தையும் வன்முறையையும் தேடுவோர் அவற்றைக் கைவிட்டு வாழ்வைப் பாதுகாப்பதையும் மதிப்புமிக்க உரையாடலையும் கைக்கொள்ளுமாறு அச்செய்திகளில் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை.
அத்துடன், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கானத் திருத்தந்தையின் செபமும் ஆறுதலும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நைஜீரியாவின் அபுஜாவிலுள்ள 26 மனிதாபிமான மற்றும் வளர்ச்சித் திட்ட ஐ.நா. அலுவலகங்கள் இருக்கும் கட்டிடம் இவ்வெள்ளி காலை 11 மணியளவில் தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உள்ளானது. அனைத்துப் பணியாளர்களும் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் ஐ.நா.பணியாளர்கள் சுமார் 20 பேர் இறந்தனர், 68 பேர் காயமடைந்தனர் மற்றும் 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
இதற்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாக, இச்சனிக்கிழமையிலிருந்து மூன்று நாள்களுக்கு ஐ.நா.கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

3. Monterrey நகரில் சூதாட்ட அரங்கம் தீ வைத்து தாக்கப்பட்டதற்குத் திருச்சபை அதிகாரிகள் கண்டனம்

ஆக.27,2011. மெக்சிகோ நாட்டு Monterrey நகரில் சூதாட்ட கேளிக்கை அரங்கம் தீ வைத்து தாக்கப்பட்டதற்குத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுத் திருச்சபை அதிகாரிகள்.
ஆபரணங்கள் தொழிற்சாலை என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட Monterrey நகர் தற்சமயம் திட்டமிட்ட வன்முறைக் கும்பலின் நகரமாக மாறி வருவதாக மேலும் கூறியுள்ளனர் அத்தலைவர்கள்.
இவ்வன்முறைத் தாக்குதல் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்ட  Monterrey பேராயர் கர்தினால் Francisco Robles Ortega, குற்றக் கும்பல்கள் செய்வது அனைத்தையும் பார்த்து வருகிறோம், ஆனால் இந்தத் தாக்குதல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றார்.
மெக்சிகோவில் குற்றக் கும்பல்களால் அந்நாட்டின் 15 ஆயிரம் குருக்களில் குறைந்தது ஆயிரம் பேர் மறைமுகமாகவும் குறைந்தது 300 பேர் நேரிடையாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆயர் பேரவையின் பொதுநல உறவு ஆணையச்  செயலர் கூறினார்.
மெக்சிகோ அரசுத்தலைவர் Felipe Calderon மூன்று நாள் துக்கம் அனுசரிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுள்ளார். மேலும், அவர் மெக்சிகோவில் இடம் பெறும் திட்டமிட்ட குற்றக் கும்பலின் வன்முறைச் செயலுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டையும் குறை கூறியுள்ளார். இத்தாக்குதலில் சுமார் 52 பேர் இறந்தனர்.

4. லிபியாவில் கத்தோலிக்கருக்குத் தொடர்ந்து சுதந்திரம் கிடைக்கும், கத்தோலிக்கர் நம்பிக்கை

ஆக.27,2011. லிபியாவில் கடாஃபி அரசு வீழ்ந்துள்ளது போல் தெரியும் இவ்வேளையில் இந்த ஆப்ரிக்க நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை சுதந்திரமாகத் தொடர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் லிபியக் கத்தோலிக்கத் தலைவர்கள்.
கடாஃபி அரசில் கத்தோலிக்கர் சுதந்திரமாக வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறும் அத்தலைவர்கள், லிபியாவில் தற்சமயம், அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் புரட்சிப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாகச் செல்ல முடிகின்றது என்று கூறினர்.
லிபியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்த டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி, தற்சமயம் நாட்டின் உயர்ந்தோர் குழுமம், நிலைமையைத் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து எதிர்காலம் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார். 
லிபியாவில் 25 அருட்பணியாளர்கள் உள்ளனர். சுமார் 60 அருட்சகோதரிகள் மருத்துவமனைகளில் பணிசெய்கின்றனர். 

மேலும், தற்போது டிரிப்போலி நகரில் பெரும்பாலான மக்கள் தண்ணீர், மின்சாரம், சுகாதார வசதிகள் இன்றி கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

5. போஸ்னிய அமைதிக்குப் புதிய அச்சுறுத்தல்கள், ஆயர் எச்சரிக்கை

ஆக.27,2011. போரினால் பாதிக்கப்பட்ட பால்கன் நாடான போஸ்னியாவில் சர்வதேச சமுதாயம் எல்லாருக்கும் நீதியையும் மனித உரிமைகளையும் வழங்கத் தவறியுள்ளதால் அந்நாட்டில் அமைதி மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறினார்.
போஸ்னியாவில் முடிவடைந்த போர் தொடர்புடைய அமைதி ஒப்பந்தமும் அரசியல் அமைப்பும் போஸ்னிய எர்செகோவினா மக்களாலோ அல்லது நாடாளுமன்றத்தாலோ அமைக்கப்படவில்லை, மாறாக அவை அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டன என்று கூறினார் போஸ்னிய ஆயர் பேரவைச் செயலர் ஆயர் Ivo Tomasevic.
எல்லா இடங்களிலும் அரசியல்வாதிகளுக்கு மிகவும் முக்கியமானது அதிகாரம் என்றும் இவர்கள் மக்களின் பயம் உட்பட அனைத்தையும் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறிய ஆயர் தோமாசெவிச், போஸ்னிய மக்கள் பிற இன மக்களால் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றார்.
1995ல் Daytonல் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் மூலம் போஸ்னியாவின் மூன்றாண்டு காலப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் நாட்டின் கத்தோலிக்கரின் நிலை மோசமாகியுள்ளது என்றார் ஆயர்.

6. ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது

ஆக.27,2011. ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும், இந்நோயைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கின்றது என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
ஆசிய-பசிபிக் பகுதியில் எய்ட்ஸ் நோய்க் குறித்து கொரியாவில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் அறிக்கை சமர்ப்பித்த UNAIDS என்ற ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆசிய-பசிபிக் பகுதியில் 2009ல் சுமார் 49 இலடசம் பேர் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கூறியது.
இவர்களில் பெரும்பாலானோர் கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், நேபாளம், பாகிஸ்தான், பாப்புவா நியு கினி, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 11 நாடுகளில் உள்ளனர் என்றும் அவ்வறிக்கை கூறியது.
2001க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியில் இந்நோயால் புதிதாகத் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்துள்ளது, இதற்கு 2006ல் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையே காரணம் என்றும் அவ்வறிக்கை கூறியது.
2009ல் ஆசிய-பசிபிக் பகுதியில் 30 நாடுகளில் எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டுக்கு 110 கோடி டாலர் செலவழிக்கப்பட்டதாகவும் ஐ.நா. தெரிவித்தது.

7. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 700 கருக்கலைப்புக்கள்

ஆக.27,2011. இலங்கையில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 பாதுகாப்பற்ற கருக்கலைப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமாக சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருக்கலைப்புச் சம்பவங்களினால், பலர் கருப்பைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
கொழும்பில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும் நலவாழ்வுப் பிரச்சனையாக இந்த நிலைமை மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

8. வைட்டமின் A சத்துணவு ஆயிரக்கணக்கானக் குழந்தைகளைக் காப்பாற்றும் - WHO

ஆக.27,2011. வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் A சத்துணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அந்நாடுகள் ஆண்டுக்கு ஆறு இலட்சம் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது.
பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் வல்லுனர்கள், ஒரு பிரிட்டன் மருத்துவ இதழில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 19 கோடிச் சிறாருக்கு வைட்டமின் A சத்துணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் இச்சத்துணவுப் பொருட்களைக் கொடுப்பதன் மூலம் இதனால் ஏற்படும் இறப்புக்களை 24 விழுக்காடு குறைக்கலாம் என்றும் அவ்வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...