Friday 12 August 2011

Catholic News - hottest and latest - 10 August 2011

1. திருத்தந்தையின் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி இசை நிகழ்ச்சி

2. இங்கிலாந்தில் வெடித்துள்ள வன்முறைகள் குறித்து பேராயர் நிக்கோல்ஸின் கவலையும், கண்டனமும்

3. சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைப்பதில்லை - மத்தியப் பிரதேச ஆயர்கள் புகார்

4. சீனாவில் ஆரம்பமாகும் Universiadeக்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்க சீனத் தலத்திருச்சபை தயார்

5. பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhatti, குடும்பத்தில் உருவான ஒரு தகராறினால் கொலை செய்யப்பட்டார் - காவல்துறையின் தவறான அறிக்கை

6. பூர்வீகக்குடியினரின் அனைத்துலக நாளன்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட அறிக்கை

7. ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சுனாமியால் தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் பெரும் பாதிப்புக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி இசை நிகழ்ச்சி

ஆக.10,2011. Antonio Vivaldi, Johann Sebastien Bach ஆகிய இரு புகழ்பெற்ற மேற்கத்திய இசையமைப்பாளர்கள் மிக ஆழமான இறைபக்தி கொண்டவர்கள் மற்றும் அவர்களின் சமய உணர்வு அவர்களின் திருஇசைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று புகழாரம் சூட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காஸ்தல் கந்தோல்ஃபோவிலுள்ள  பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகையில் தனது அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி இச்செவ்வாய் மாலை வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
"New Seasons" என்ற ஜெர்மானிய இசைக்குழுவினரால் நடத்தப்பட்ட இந்தக் கச்சேரியில் Vivaldi, Bach ஆகிய இருவரின் இசைப் படைப்புகள் இடம் பெற்றன.
இதன் நடத்துனர் Albrecht Mayer மற்றும் வயலின் புகழ் Arabella Steinbecher உட்பட அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்த திருத்தந்தை, Vivaldi யும், Bachம் 18ம் நூற்றாண்டின் மாபெரும் இசையின் பிரதிநிதிகள் என்றும் பாராட்டினார்.
கத்தோலிக்கக் குருவான விவால்தியின் இசையில் அவரின் ஆழமான மத உணர்வும், லூத்தரன் கிறிஸ்தவரான பாக்கின் இசையில், கடவுள் தமது படைப்பில் பதித்துள்ள நல்லுணர்வும் வெளிப்படுகின்றன என்று மேலும் கூறினார் திருத்தந்தை.

2. இங்கிலாந்தில் வெடித்துள்ள வன்முறைகள் குறித்து பேராயர் நிக்கோல்ஸின் கவலையும், கண்டனமும்

ஆக.10,2011. சமுதாயம் கடைபிடிக்க வேண்டிய பல ஒழுங்கு முறைகள் இவ்வளவு எளிதாக மீறப்படுவதும், சீரழிக்கப்படுவதும் மிகந்த வருத்தத்தையும், கவலையையும் தருகிறது என்றும், இந்த வன்முறைகள் கண்டனத்திற்குரியன என்றும் இங்கிலாந்தின் Westminster உயர்மறைமாவட்டப் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
கடந்த சில நாட்களாக இங்கிலாந்தின் பல நகரங்களில் வெடித்துள்ள வன்முறைகள் குறித்து தன் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்ட பேராயர் நிக்கோல்ஸ், இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான வகையில் செபிக்குமாறு அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கலவரங்கள் விரைவில் தீரும்படியாக அனைத்து மதத்தினரும் இணைந்து இத்திங்கள் இரவு வடலண்டன் பகுதியில் Tottenham என்ற இடத்தில் உள்ள புனித மரியா ஆலயத்தில் இரண்டு மணி நேரம் திருவிழிப்புச் செப வழிபாட்டை மேற்கொண்டனர்.
அருளாளரான கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் பரிந்துரையை நாடி, கலவரங்கள் ஓய்வதற்குச் செபிக்கும்படி Birmingham உயர்மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வியாழன், ஆகஸ்ட் 11ம் நாள், அருளாளர் நியூமன் இறையடி சேர்ந்த நாள் என்பதை நினைவுறுத்தி, இவ்வுயர் மறைமாவட்டம் இவ்வழைப்பை விடுத்துள்ளது.

3. சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைப்பதில்லை - மத்தியப் பிரதேச ஆயர்கள் புகார்

ஆக.10,2011. சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல சலுகைகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைப்பதில்லை என்று மத்தியப் பிரதேச ஆயர்கள் மாநில அரசிடம் புகார் கூறியுள்ளனர்.
சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் கிறிஸ்தவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்றும், இன்னும் பிற சலுகைகளும் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும் தலத் திருச்சபை ஆயர்கள் புகார் அளித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத் தலத் திருச்சபை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அண்மையில் போபாலில் நடைபெற்ற ஆயர்கள் கூட்டத்தின் இறுதியில் இந்தப் புகாரை போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அரசிடம் அளித்தார்.
பள்ளிக் குழந்தைகளின் சீருடையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், மற்றும் பள்ளிகளில் சொல்ல வேண்டிய சூரிய வழிபாடு போன்ற விதிகளை நடைமுறைப்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டும் மாநில அரசு, பள்ளிகளில் தரமான கல்வியை கொண்டு வர ஆர்வம் காட்டுவது மிகுந்த பயனளிக்கும் என்று ஆயர்களின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4. சீனாவில் ஆரம்பமாகும் Universiadeக்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்க சீனத் தலத்திருச்சபை தயார்

ஆக.10,2011. ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று தென் சீனாவின் Shenzhen நகரில்  ஆரம்பமாகும் Universiade, அதாவதுஅனைத்துலக பல்கலைக்கழக வீரர்களின் விளையாட்டுப் போட்டிகளையொட்டி, சீனாவிற்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்க சீனத் தலத்திருச்சபை தயாராக உள்ளது.
ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ள அனைத்துலக பலகலைக் கழகங்களின் கோடை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தினமும் ஆங்கிலத் திருப்பலிகளும் பிற செப வழிபாடுகளும் நடைபெறுவதற்கு Shenzhen நகரின் பல பங்குத்தளங்கள் உதவி செய்ய முன் வந்துள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைகழகங்களிலிருந்து 12000 வீரர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும், இவர்களில் 8000க்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பல்வேறு மதங்களின் சேவைகள் நாள் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று 2008ம் ஆண்டு Beijing ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நேரத்தில் பணி செய்த அருள்தந்தை Paul Liu Zhentian கூறினார்.

5. பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhatti, குடும்பத்தில் உருவான ஒரு தகராறினால் கொலை செய்யப்பட்டார் - காவல்துறையின் தவறான அறிக்கை

ஆக.10,2011. இவ்வாண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் கொலையுண்ட அமைச்சர் Shahbaz Bhatti, குடும்பத்தில் உருவான ஒரு தகராறினால் கொலை செய்யப்பட்டார் என்று காவல் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையை பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
காவல் துறையின் இந்த அறிக்கை மிகவும் கேவலமானது என்றும், அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் குற்றவாளிகளைக் காக்கும் ஒரு முயற்சி என்றும் லாகூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தானா கூறினார்.
சிறுபான்மையினர் துறையின் அமைச்சராகப் பணியாற்றி வந்த Shahbaz Bhatti, சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தானில் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேவநிந்தனை சட்டத்தை நீக்குமாறு போராடி வந்தார்.
மார்ச் 2ம் தேதி இஸ்லாமாபாதில் இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.   அல்கெய்தா அமைப்புடன் தொடர்புடைய Tehrik-i-Taliban குழுவினர் இந்தக் கொலைக்கு தாங்களே காரணம் என்று கூறியிருந்தது.
Shahbaz Bhattiயின் கொலை குறித்து வெளியான இந்த அறிக்கையை அனைத்து பாகிஸ்தான் சிறுபான்மையினர் ஒருங்கமைவு என்ற அமைப்பினரும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 11ம் தேதி தேசிய சிறுபான்மையினர் நாள் என்று Shahbaz Bhatti அறிவித்திருந்ததை நினைவு கூறும் வண்ணமாக, அனைத்து பாகிஸ்தான் சிறுபான்மையினர் ஒருங்கமைவு தங்கள் பாதுகாவலரான Shahbaz Bhattiக்கு இவ்வியாழனன்று மரியாதை செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

6. பூர்வீகக்குடியினரின் அனைத்துலக நாளன்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்ட அறிக்கை

ஆக.10,2011. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் பூர்வீகக்குடியினர் தங்கள் கலாச்சாரத்தைக் காப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒவ்வோர் அரசும் உதவிகள் செய்யவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட பூர்வீகக் குடியினரின் அனைத்துலக நாளன்று அறிக்கை வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
பூர்வீகக்குடியினர் தங்கள் தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளதென்று கூறிய பான் கி மூன், இம்மக்களின் கலாச்சாரக் கூறுகளை வர்த்தக உலகம் பெரும்பாலும் தவறான வழிகளில் சீரழித்து வருவதையும் சுட்டிக் காட்டினார்.
உலகின் 90 நாடுகளில் 5000க்கும் அதிகமான பூர்வீகக் குடியினரின் குழுக்கள் உள்ளதென்றும், உலகில் இன்று 37 கோடி பூர்வீகக் குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் தன் அறிக்கையில் கூறினார்.

7. ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சுனாமியால் தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் பெரும் பாதிப்புக்கள்

ஆக.10,2011. மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், அதைத் தொடர்ந்த சுனாமி ஆகியவை தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
தென் துருவத்தில் கடந்த 46 ஆண்டுகள் உறுதியாக இருந்த Sulzenberger என்று அழைக்கப்படும் பனிப்பரப்பில் 125 சதுரக் கி.மீ. அளவான பனிப்பரப்பு சிதறுண்டு, கடலில் கலந்துள்ளதை செயற்கைக் கொள் மூலம் பதிவான புகைப்படங்கள் காட்டுகின்றன.
ஜப்பானில் உருவான சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் 13000 கி.மீ. தூரம் பசிபிக் பெருங்கடலில் பயணித்து, Sulzenberger பனிப்பரப்பை அடைந்து அதன் ஒரு பகுதியை உடைத்துள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...