1. இரமதான் முடிவடைவதையொட்டி திருப்பீட பல்சமய உரையாடல் அவை இஸ்லாமியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி
2. இந்தியாவில் வருகிற ஞாயிறு நீதியின் ஞாயிறாகக் கடைபிடிக்கப்படும்
3. பாகிஸ்தானின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறவில்லை
4. இராணுவத்தில் பணி புரிவோரும், காவல்துறையினரும் உண்மைக்கும் நீதிக்கும் போராட வேண்டும் - இந்தோனேசிய ஆயர்
5. Guinea நாட்டில் ஒப்புரவை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மேல்மட்டக் குழுவின் தலைவராக கத்தோலிக்கப் பேராயர் நியமனம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இரமதான் முடிவடைவதையொட்டி திருப்பீட பல்சமய உரையாடல் அவை இஸ்லாமியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி
ஆக.19,2011. சமயங்களை மறந்து, செல்வம் பொருள் இவைகளையே அதிகம் நாடி வரும் இவ்வுலகிற்கு ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வதில் கிறிஸ்தவமும், இஸ்லாமிய மதமும் உழைக்க முடியும் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது.
இஸ்லாமியர் மேற்கொண்டு வரும் இரமதான் மாத நோன்புகள் முடிவடையும் நிலையில், அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை இவ்வேள்ளியன்று அனுப்பியுள்ள திருப்பீட அவை இவ்வாறு கூறியுள்ளது.
இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தாலும், உரிமைகளும் கடமைகளும் கொண்ட தனிமனித மாண்பினை இவ்விரு சமயங்களும் வலியுறுத்துகின்றன என்பதை திருப்பீட அவையின் செய்தி கூறுகிறது.
அடுத்தத் தலைமுறையினர் நன்னெறி மதிப்பீடுகளை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு நல்ல வழிகளை உருவாக்கித் தருவது நமது கடமை என்பதை இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் உணர வேண்டும் என்றும் திருப்பீட அவையின் இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது.
2. இந்தியாவில் வருகிற ஞாயிறு நீதியின் ஞாயிறாகக் கடைபிடிக்கப்படும்
ஆக.19,2011. இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பணிக்குழு வருகிற ஞாயிறை நீதியின் ஞாயிறாகக் கடைபிடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளையடுத்து வரும் ஞாயிறு, நீதியின் ஞாயிறென கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
'உலகமயமாக்கலும் இந்தியாவில் நீதியும்' என்ற கருத்தில் இவ்வாண்டின் நீதி ஞாயிறு கடைபிடிக்கப்படும் என்று இப்பணிக்குழு அறிவித்துள்ளது.
அனைத்து மறைமாவட்டங்களும் இந்த நீதி ஞாயிறைச் சிறப்பான முறையில் கடைபிடிப்பதற்கு உதவியாக, இக்கருத்தை மையப்படுத்திய விளம்பர அட்டைகளையும், பிற பிரசுரங்களையும் ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் அனுப்பியுள்ளதாக நீதி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பணிக்குழு தெரிவித்துள்ளது.
உலகமயமாக்கல் என்ற போக்கால் சமுதாயத்தின் விளிம்பில் இருப்போர் சமுதாயம் பெறும் பயன்களிலிருந்து இன்னும் புறம்பே தள்ளப்படுவதை இப்பணிக்குழுவின் பிரசுரங்கள் வலியுறுத்தியுள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.
3. பாகிஸ்தானின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறவில்லை
ஆக.19,2011. பாகிஸ்தானின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சராகப் பணிசெய்து கொலையுண்ட Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறாதது குறித்து தலத்திருச்சபை தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசுத்தலைவர் Asif Ali Zardari, நாட்டின் தலை சிறந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் 185 பெயர்களை இச்செவ்வாயன்று வெளியிட்டார். 2012ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இவ்விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் சிறுபான்மையினர் நாள் பாகிஸ்தானில் கடைபிடிக்கப்பட்டபோது சிறுபான்மையினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பதைக் குறித்தும், அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்க வழிமுறைகள் மேற்கொள்வது குறித்தும் பேசிய பாகிஸ்தான் அரசுத் தலைவர், இப்பட்டியலை வெளியிடும்போது சம உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறதென்று இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் Rufin Anthony கூறினார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களில் அமைச்சர் Shahbaz Bhattiம் பஞ்சாப் ஆளுநர் Salman Taseerம் முக்கியமானவர்கள். இவ்விருவரும் இவ்வாண்டு சனவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொலையுண்டனர்.
கொலையுண்ட இவ்விரு அரசு அதிகாரிகளில் இஸ்லாமியரான Salman Taseer பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்போது, கிறிஸ்தவரான Shahbaz Bhattiன் பெயர் இடம்பெறாமல் போனது கிறிஸ்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்திற்குப் பிறகும் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் இடையே வேறுபாடுகள் காட்டும் பாகிஸ்தான் அரசின் இந்தச் செயல்பாடு குறித்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
4. இராணுவத்தில் பணி புரிவோரும், காவல்துறையினரும் உண்மைக்கும் நீதிக்கும் போராட வேண்டும் - இந்தோனேசிய ஆயர்
ஆக.19,2011. இராணுவத்தில் பணி புரிபவர்களும், காவல்துறையினரும் கத்தோலிக்க விசுவாசக் கோட்பாடுகளின் அடிப்படையில் உண்மைக்கும் நீதிக்கும் போராட வேண்டும் என்று இந்தோனேசிய ஆயர் ஒருவர் கூறினார்.
மரியாவின் விண்ணேற்புத் திருநாளையொட்டி, இப்புதனன்று Jakartaவில் உள்ள விண்ணேற்பு மரியா பேராலயத்தில் 800க்கும் அதிகமான இராணுவ வீரர்கள், மற்றும் காவல்துறையினருக்கென பேராயர் Ignatius Suharyo சிறப்புத் திருப்பலியொன்றை நிகழ்த்தி, மறையரையாற்றுகையில் இவ்விதம் கூறினார்.
நாட்டில் நிலவும் ஊழல், அதன் விளைவாக உருவாகும் ஏழ்மை ஆகியவற்றை துடைக்க கத்தோலிக்க விசுவாசக் கண் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்ட் 17 இப்புதனன்று இந்தோனேசியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், பேராயர் வெளியிட்ட ஒரு சுற்றுமடலில், நாடு அடைந்துள்ள முன்னேற்றங்கள் மகிழ்வைத் தந்தாலும், பல்வேறு சமுதாயப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5. Guinea நாட்டில் ஒப்புரவை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மேல்மட்டக் குழுவின் தலைவராக கத்தோலிக்கப் பேராயர் நியமனம்
ஆக.19,2011. Guinea நாட்டில் ஒப்புரவை உருவாக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு மேல்மட்டக் குழுவின் தலைவர்களாக அந்நாட்டின் கத்தோலிக்கப் பேராயர் ஒருவரையும், இஸ்லாமிய மத குரு ஒருவரையும் அந்நாட்டு அரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
Guinea அரசுத் தலைவர் Alpha Conde, பேராயர் Vincent Koulibalyயையும் இஸ்லாமிய மத குரு El Hadj Mamadou Saliou Camaraவையும் தலைவர்களாக நியமித்துள்ளார் என்பதை அந்நாட்டு பிரதமர் இப்புதன் மாலை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் Alpha Conde அரசுத் தலைவராகப் பதவியேற்கும் வரை Guinea நாட்டில் தொடர்ந்து பல சர்வாதிகாரிகள் இராணுவத்தின் துணை கொண்டு ஆண்டு வந்தனர். சர்வாதிகாரிகள் ஆண்ட காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. பல்லாயிரம் பேர் கொலையுண்டனர்.
இக்குற்றங்கள் குறித்து அலசி ஆராயவும், நாட்டில் உள்ள பல இனங்களுக்கிடையே ஒப்புரவு உருவாகவும் அரசுத் தலைவர் Conde உண்மை மற்றும் ஒப்புரவுக்கான குழுவை நியமித்துள்ளதை ஐ.நா.அவை பெரிதும் வரவேற்றுள்ளது.
No comments:
Post a Comment