1. குரான் எரிப்புக்குக் காரணமான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் போதகர் கைது செய்யப்பட வேண்டும்-பாகிஸ்தான் பேராயர் வலியுறுத்தல்
2. ஆப்ரிக்காவை முன்னேற்றும் முயற்சிகளுக்கு ஜெர்மன் அரசுத் தலைவர் ஆதரவு வழங்குமாறு ஆப்ரிக்க ஆயர்கள் கோரிக்கை
3. Duekoue நகரில் சுமார் ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர் - சர்வதேச காரித்தாஸ்
4. தென் கொரிய சமயத் தலைவர்கள் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அரசிடம் விண்ணப்பம்
5. தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களும் அங்கம் வகிக்க வேண்டும்
6. நிலக்கண்ணி வெடிகள் உடன்பாட்டிற்கு நாடுகள் பணிந்து நடக்க வேண்டும் - பான் கி மூன்
7. தெற்காசியாவில் 65 விழுக்காட்டினருக்கு அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லை- யூனிசெப்
8. மெக்சிகோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற்போயுள்ளனர்
9. பீகாரில் இறந்த நிலையில் சிசுக்கள் கண்டுபிடிப்பு
10. முன்னாள் புலிப் போராளிகள் விடுதலை
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. குரான் எரிப்புக்குக் காரணமான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் போதகர் கைது செய்யப்பட வேண்டும்-பாகிஸ்தான் பேராயர் வலியுறுத்தல்
ஏப்ரல்05,2011. இசுலாமியப் புனித நூலான குரானை எரிப்பதற்குத் தீர்மானம் எடுத்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பிரிந்த கிறிஸ்தவ சபைப் போதகரைக் கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃப்ளோரிடா மாநிலத்தில் Gainesville, Dove World Outreach Center Church போதகர் Terry Jones ன் மேற்பார்வையில் அவரது உதவியாளர் போதகர் Wayne Sapp என்பவர் குரான் புனித நூலை எரித்தார். இந்நடவடிக்கை முஸ்லீம் உலகத்தைக் கடும் கோபமடையச் செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறைகளில் இருபதுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, போதகர் டெரி ஜோன்ஸைக் கைது செய்வதன் மூலம் முஸ்லீம் உலகெங்கும் ஏற்பட்டுள்ள கோபத்தைத் தணிக்க முடியும் என்று பேராயர் சல்தான்ஹா மேலும் கூறினார்.
இந்தக் குரான் எரிப்பு நடவடிக்கையால் மத்திய கிழக்குப் பகுதியெங்கும் முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து போராட்டங்கள் இடம் பெற்றன. அங்குள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டுத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2. ஆப்ரிக்காவை முன்னேற்றும் முயற்சிகளுக்கு ஜெர்மன் அரசுத் தலைவர் ஆதரவு வழங்குமாறு ஆப்ரிக்க ஆயர்கள் கோரிக்கை
ஏப்ரல்05,2011.ஆப்ரிக்கக் கண்டத்தை முன்னேற்றும் தங்களது முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜெர்மன் அரசுத்தலைவர் Christian Wulff ஐக் கேட்டுள்ளனர் ஆப்ரிக்க ஆயர்கள்.
தற்போது வட ஆப்ரிக்கா மற்றும் ஐவரி கோஸ்டில் இடம் பெற்று வரும் வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Polycarp Pengo, ஆப்ரிக்கக் கண்டத்தை முன்னேற்றுவதன் மூலம் ஐரோப்பாவில் குடியேறும் ஆப்ரி்க்கர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் கூறினார்.
பெர்லினில் ஜெர்மன் நாட்டு ஆயர்களுடன் நடத்திய அண்மைக் கூட்டத்தில் இவ்வாறு உரைத்த டான்சானியா நாட்டு Dar es Salaam கர்தினால் Pengo, ஐரோப்பிய அரசுகள், ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்களை அச்சுறுத்தலாக நோக்காமல், சக மனிதர்களாக நோக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டால் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, லிபியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறைகளால் வெளியேறி வரும் ஆப்ரிக்க அகதிகள் குறித்து ஐரோப்பிய சமுதாய அவை நாடுகள் மிகுந்த கவலை கொண்டுள்ளன.
இத்தாலியின் Lampedusa தீவில் Tunisia விலிருந்து ஏற்கனவே வந்த வட ஆப்ரிக்க அகதிகள் 20 ஆயிரம் பேர் இருக்கின்றனர். தற்சமயம் லிபியாவிலிருந்தும் அகதிகள் வந்து கொண்டிருக்கின்றனர்
3. Duekoue நகரில் சுமார் ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர் - சர்வதேச காரித்தாஸ்
ஏப்ரல்05,2011. ஆயுதம் தாங்கிய கடும் மோதல்கள் அதிகரித்து வரும் ஐவரி கோஸ்ட் நாட்டின் Duekoue நகரில் சுமார் ஆயிரம் அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர் என்று சர்வதேச காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.
உதவி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்டு வருகின்றன என்றுரைத்த சர்வதேச காரித்தாஸ், ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் அப்பாவி பொது மக்கள் மீதானத் தாக்குதல்களை வன்மையாயக் கண்டித்துள்ளது. அத்துடன் அந்நாட்டில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பர் 28ம் தேதியன்று இடம் பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் Alassane Ouattara வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த அப்போதைய அரசுத்தலைவர் Laurent Gbagbo பதவி விலக மறுத்து வருகிறார். இதனால் இவ்விருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் சண்டைகள் இடம் பெற்று வருகின்றன.
அபிஜான் பகுதியில் மட்டும் முப்பதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். மேலும், இருபதாயிரம் மக்கள் Duekoue கத்தோலிக்க மறைப்பணித்தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அந்நாட்டு ஆயர் Gaspard Beby Gneba கூறினார்.
4. தென் கொரிய சமயத் தலைவர்கள் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அரசிடம் விண்ணப்பம்
ஏப்ரல்05,2011. தென் கொரிய சமயத்தலைவர்கள் வட கொரியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்வதற்குத் தென் கொரிய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
Kwangju கத்தோலிக்க உயர்மறைமாவட்ட பேராயர் Hyginus Kim Hee-joong உட்பட KCRP என்ற கொரிய சமய மற்றும் அமைதி அவையின் ஏழு பிரதிநிதிகள், தென் கொரிய அமைச்சர் Hyun In-taek ஐச் சந்தித்து இந்தத் தங்களது கோரிக்கையை சமர்ப்பித்தனர்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுவதற்கு வட கொரிய அரசு மற்றும் வட கொரிய விசுவாசிகள் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தாங்கள் வலியுறுத்தவிருப்பதாகவும் இப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
KCRP அமைப்பு, புத்தம், கத்தோலிக்கம், கன்ஃபூசியம், புரோட்டஸ்டாண்ட், கொரியப் பூர்வீக மதங்கள், கொரியாவில் தொடங்கப்பட்ட Chondogyo மற்றும் Won-Buddhism ஆகியவற்றை உள்ளடக்கியது.
5. தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களும் அங்கம் வகிக்க வேண்டும்
ஏப்ரல்05,2011. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களும் அங்கம் வகிக்க வேண்டும் என்று அருட்சகோதரிகளும் சமூக ஆர்வலர்களும் கூறினர்.
ஒரிசாவில் பெண்களுக்கு ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த போது இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரிசாவில் 70.36 விழுக்காட்டு ஆண்களும் 37.67 விழுக்காட்டு பெண்களும் எழுத்தறிவு பெற்றவர்கள். இவர்களில் பூர்வீக இன மற்றும் தலித் இனப் பெண்களின் நிலை இன்னும் குறைவாக இருக்கின்றது.
6. நிலக்கண்ணி வெடிகள் உடன்பாட்டிற்கு நாடுகள் பணிந்து நடக்க வேண்டும் - பான் கி மூன்
ஏப்ரல் 05,2011. நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், அவற்றை சேமித்து வைத்தல் ஆகியவை குறித்த அனைத்துல உடன்பாட்டிற்கு நாடுகள் ஒத்திணங்க வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஏப்ரல் 4, இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு நாளையொட்டி இவ்வாறு வலியுறுத்திய பான் கி மூன், இவ்வுடன்பாட்டை 55 நாடுகள் அமல்படுத்தியுள்ளன என்றும் மேலும் 99 நாடுகள் இவ்வெடிகளால் ஊனமுற்ற மக்களின் உரிமைகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ள கூறுகளைச் செயல்படுத்துகின்றன என்றும் கூறினார்.
கடந்த ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்பட்டதையும் பான் கி மூன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் சண்டையின் போது புதைக்கப்பட்ட பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அழிக்கும் பணிகளில் 14,400 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
7. தெற்காசியாவில் 65 விழுக்காட்டினருக்கு அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லை- யூனிசெப்
ஏப்ரல்05,2011. தெற்காசிய நாடுகளில் போதுமான நலவாழ்வு வசதியின்மை, சுகாதாரமற்ற நடத்தைகள் போன்றவற்றால் அப்பகுதியின் ஆண்டு உற்பத்தியில் 5 விழுக்காடு இழப்பு ஏற்படுகின்றது என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பு அறிவித்தது.
இலங்கையின் கொழும்புவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள தெற்காசிய பொது நலவாழ்வு மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த யூனிசெப் நிறுவனம், சுமார் 150 கோடி மக்கள் வாழும் தெற்காசியாவில் ஏறக்குறைய 65 விழுக்காட்டினருக்கு இன்றும்கூட அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லை எனத் தெரிவித்தது.
தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 28 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் கடும் நலவாழ்வுப் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள் உட்பட அனைத்து தெற்காசிய நாடுகளின் நலவாழ்வுத்துறையின் மூத்த அமைச்சர்களும் செயலர்களும் கலந்து கொள்கின்றனர்.
வல்லுனர்களின் கணிப்புப்படி இலங்கையில் 95 விழுக்காட்டினருக்குப் போதுமான நலவாழ்வு வசதிகள் இருப்பதாகத் தெரிகிறது.
மேலும், 2015ம் ஆண்டுக்குள் அறுபதாயிரம் கிராமங்களைச் சுத்தம் செய்வதற்குச் சீனா தீர்மானித்திருப்பதாக அந்நாட்டு Xinhua செய்தி நிறுவனம் அறிவித்தது.
8. மெக்சிகோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற்போயுள்ளனர்
ஏப்ரல் 05,2011. மெக்சிகோ நாட்டில் 2006ம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற்போயுள்ளனர் என்று CNDH என்ற அந்நாட்டு மனித உரிமைகள் நிறுவனம் அறிவித்தது.
மெக்சிகோ அரசுத் தலைவர் Felipe Calderon, அந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளை அறிவித்ததற்குப் பின்னர் 5,397 பேர் காணாமற்போயுள்ளனர் என்று CNDH நிறுவனம் அறிவித்தது.
இவர்களில் 3,457 பேர் ஆண்கள் மற்றும் 1,885 பேர் பெண்கள்.
9. பீகாரில் இறந்த நிலையில் சிசுக்கள் கண்டுபிடிப்பு
ஏப்ரல் 05,2011. பீகாரில் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில், ரசாயனம் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஜாடிகளில் அடைக்கப்பட்டு, இறந்த நிலையில், 15 சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள்.
இது குறித்துப் பேசிய கிஷன்கஞ்ச் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆர்.கே. மிஷ்ரா, "ஒரு தனியார் மருத்துவமனை அருகே பிளாஸ்டிக் ஜாடிகளில் அடைக்கப்பட்டிருந்த சிசுக்களின் வயது 4 முதல் 6 மாதங்களுக்குள் இருக்கும். அனைத்தும் வேதியப் பொருட்கள் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு இருந்தன. சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து விசாரணை துவக்கியுள்ளோம்' என்றார்.
இதே போல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், வேதியப் பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஜாடிகளில் 16 சிசுக்கள் இறந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள பாபுநகரில், 12 சிசுக்கள், தெரு நாய்கள் பாதி சாப்பிட்ட நிலையில் சிதறி கிடந்தன. இவற்றில் 7 ஆண் மற்றும் 5 பெண் சிசுக்கள்.
10. முன்னாள் புலிப் போராளிகள் விடுதலை
ஏப்ரல் 05,2011. இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் இறுதிச் சண்டைகளின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 206 பேர் கொண்ட மேலும் ஒரு தொகுதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வவுனியாவில் வைத்து குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.
வீட்டுத் தலைவனின் உதவியின்றி வாழும் பெண்களைத் தலைவியாகக் கொண்ட குடும்பங்களுக்கு சமூகம் உதவி செய்ய வேண்டும் என புனர்வாழ்வு நிலையங்களில் வாடுபவர்கள் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் உதவிக்குப் பதிலாக துன்பங்களே அவர்களுக்குச் சமூகத்தினரால் செய்யப்படுவதை அறிந்து மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் ஊடகம் ஒன்றிற்கு ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கணவனையும், குடும்ப வருமானத்துக்கான உழைப்பாளியையும் புனர்வாழ்வு நிலையங்களில் பிரிந்து பிள்ளைகளுடனும், தனிமையிலும் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக, விடுதலை செய்யப்பட்ட தனது கணவனை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த இளம் மனைவி ஒருவர் தெரிவித்தார்.
இன்னும் 4,600 பேர் வரையில் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment