1. உரோம் புனித பவுல் பசிலிக்காவில் அடைக்கலம் தேடியுள்ள ஜிப்சிகளைச் சந்தித்தார் திருத்தந்தையின் பிரதிநிதி
2. செயின்ட் லூயிஸ் பேராயர் : இறையழைத்தல்களை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது
3. அமெரிக்க ஆயர் ஹைமே : யூதஇன ஒழிப்புப் போன்றதோர் இருள் சூழ்ந்த தீமை வரலாற்றில் இனிமேல் இடம் பெறவே கூடாது
4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் DVD குறுந்தகடுகள் இலங்கையில் அமோக விற்பனையாகி வருகின்றன
5. பிரிட்டனில் கத்தோலிக்கத்துக்கு எதிரானச் சட்டம் குறித்த சர்ச்சை
6. செர்னோபில் அணு விபத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம், சமய மற்றும் நாடுகளின் தலைவர்கள் செய்திகள்
7. பான் கி மூன் : ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, மனக்கசப்பிலிருந்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புங்கள்
8. ஐ.நா.தூதர் : மலேரியா இறப்புக்களைத் தடுத்து நிறுத்த முடியும்
9. குறையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்: பாலின விகித ஏற்றத்தாழ்வால் விபரீதம்
10. அனைத்துலக ஆயுதக் குறைப்பு மாநாடு ஈரானில் நடக்கிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. உரோம் புனித பவுல் பசிலிக்காவில் அடைக்கலம் தேடியுள்ள ஜிப்சிகளைச் சந்தித்தார் திருத்தந்தையின் பிரதிநிதி
ஏப்ரல் 26,2011: ஜிப்சிகள் எனப்படும் நாடோடி இன மக்கள் வாழ்ந்த முகாம்கள் உரோம் மாநகர அதிகாரிகளால் அகற்றப்பட்ட பின்னர் புனித பவுல் பசிலிக்காவில் அடைக்கலம் தேடியுள்ள அம்மக்கள் மீதான தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தனது இந்தக் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாக, வத்திக்கான் நாட்டுச் செயலகத்தில் பொது விவகாரப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் பேராயர் Fernando Filoni யை திருத்தந்தை அங்கு அனுப்பினார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி தெரிவித்தார்.
இப்புனித வாரத்தில் உரோம் மாநகர அதிகாரிகள் இந்த ஜிப்சிகளின் நான்கு முகாம்களை அகற்றியதையொட்டி சுமார் ஆயிரம் ஜிப்சிகள் புலம் பெயர்ந்துள்ளனர், இவர்களில் ஏறக்குறைய நூறு ஜிப்சிகள் புனித வெள்ளியன்று புனித பவுல் பசிலிக்காவிலும் அதன் முன்பகுதி வளாகத்திலும் நுழைந்தனர் என்று உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் கூறியது.
வத்திக்கானின் நடவடிக்கைகள் எப்போதும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் வத்திக்கான் அதிகாரிகள் உரோம் மாநகர அதிகாரிகள் மற்றும் காரித்தாசுடன் இவ்விவகாரம் குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
2. செயின்ட் லூயிஸ் பேராயர் : இறையழைத்தல்களை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது
ஏப்ரல் 26,2011: இவ்வாண்டு அனைத்துலக இறையழைத்தல் ஞாயிறுக்கானத் திருத்தந்தையின் செய்தி, குருத்துவ மற்றும் துறவு வாழ்க்கைக்கு அழைத்தல்களை ஊக்குவிப்பதில் கத்தோலிக்கக் குடும்பங்களின் முக்கியமான பங்கைச் சுட்டிக் காட்டுகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு செயின்ட் லூயிஸ் பேராயர் Robert Carlson கூறினார்.
இறையழைத்தல் கலாச்சாரத்தைத் தலத்திருச்சபை எவ்வாறு வளர்க்கிறது என்பதைச் சிந்திக்கவும் திருத்தந்தை அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் என்றும் பேராயர் இராபர்ட் கார்ல்சன் கூறினார்.
இவ்வாண்டு இறையழைத்தல் ஞாயிறு, தலத்திருச்சபையில் இறையழைத்தல்களை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் வருகிற மே மாதம் 15ம் தேதி கடைபிடிக்கப்படும். கத்தோலிக்கர் இறையழைத்தல்களில் கவனம் செலுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் 1964ம் ஆண்டு இவ்வுலக நாளை ஏற்படுத்தினார் திருத்தந்தை ஆறாம் பவுல்.
3. அமெரிக்க ஆயர் ஹைமே : யூதஇன ஒழிப்புப் போன்றதோர் இருள் சூழ்ந்த தீமை வரலாற்றில் இனிமேல் இடம் பெறவே கூடாது
ஏப்ரல் 26,2011: யூதஇன ஒழிப்புப் போன்றதோர் இருள் சூழ்ந்த தீமை வரலாற்றில் இனிமேல் ஒருபோதும் இடம் பெறவே கூடாது என்ற நோக்கத்துடன் அந்த அழிப்பு நடவடிக்கை கட்டாயமாக நினைவுகூரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர், அந்நட்டின் முக்கிய யூதமதக் குருவுக்கு எழுதியுள்ள கடிதம் கூறுகின்றது.
1943ம் ஆண்டில் போலந்து நாட்டு வார்சாவில் யூதர்கள் வாழ்ந்த பகுதியில் இடம் பெற்ற வன்செயலை, யூதஇன ஒழிப்பு நினைவு நாளாக அமெரிக்க யூதர்கள் கடைபிடிக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு இந்நாளுக்கு முந்தைய ஞாயிறன்று இதனைக் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு இத்தினம் மே மாதம் முதல் தேதியன்று தொடங்கி எட்டு நாட்கள் வரை இடம் பெறுகிறது. ஆயினும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் சனவரி 27ம் தேதி இந்நாளைக் கடைபிடிக்கிறது.
இந்நாளில் யூதஇன ஒழிப்பு நடவடிக்கைக்குப் பலியானோரை நினைவுகூருவது மட்டுமல்ல, இத்தகைய இனப்படுகொலைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களைத் தவிர்ப்பதற்கு விழிப்புடன் இருக்கவும் இத்தினம் தூண்டுகின்றது என்று ஆயர் Jaime Soto, யூதமத ராபி Reuven Taff வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார்.
4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் DVD குறுந்தகடுகள் இலங்கையில் அமோக விற்பனையாகி வருகின்றன
ஏப்ரல் 26,2011: இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வருகிற மே ஒன்றாந்தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் வேளை அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் DVD குறுந்தகடுகள் இலங்கையில் அமோக விற்பனையாகி வருகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
1995ம் ஆண்டு சனவரியில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இலங்கைக்குத் திருப்பயணம் மேற்கொண்டதை பலர் நினைவுகூருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
“இலங்கையின் அப்போஸ்தலர்” என அழைக்கப்படும் அருள்திரு ஜோசப் வாஸ் அவர்களையும் அச்சமயத்தில் கொழும்புவில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தினார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் எய்திய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் சுமார் 27 வருடங்கள் பாப்பிறையாகப் பணியில் இருந்தார்.
5. பிரிட்டனில் கத்தோலிக்கத்துக்கு எதிரானச் சட்டம் குறித்த சர்ச்சை
ஏப்ரல் 26,2011: இம்மாதம் 29ம் தேதியான இவ்வெள்ளிக்கிழமை இங்கிலாந்தில் அரச குடும்பத் திருமண விழா நடைபெறவிருக்கும் வேளை, பிரிட்டன் அரச குடும்பத்தினர் கத்தோலிக்கராக மாறுவதோ அல்லது கத்தோலிக்கத்தில் திருமணம் செய்து கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ள நூற்றாண்டு பழமையான சட்டம் இரத்து செய்யப்படுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனுக்கு ஸ்காட்லாண்ட் முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த நவீன சமுதாயத்தில் இத்தகைய தடைச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் இந்தச் சட்டத்தில் சீர்திருத்தம் தேவைப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பம் கத்தோலிக்கம் தவிர வேறு மதத்தவரைத் திருமணம் செய்வதற்குத் தடை இல்லை என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
6. செர்னோபில் அணு விபத்தின் 25ம் ஆண்டு நினைவு தினம், சமய மற்றும் நாடுகளின் தலைவர்கள் செய்திகள்
ஏப்ரல் 26,2011: உலகையே அச்சுறுத்திய மிக மோசமான செர்னோபில் அணுஉலை விபத்தின் 25ம் ஆண்டு, ஏப்ரல் 26ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்ட வேளை, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் கிரில், இரஷ்ய புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தி அத்தினத்தை நினைவு கூர்ந்தார்.
உக்ரைன் நாடு முனனாள் சோவியத் யூனியோடு சேர்ந்திருந்த சமயம் உக்ரைய்னின் செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது உலை, 1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி காலை 1 மணி 23 நிமிடம் ஆன போது வெடித்தது. இதில் உடனடியாக சுமார் முப்பது பேர் இறந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேறி மேற்கு இரஷ்யாவிலும் பெலாருசிலும் தஞ்சம் தேடினர். இன்றும் அந்த அணுமின் நிலையத்திற்கு முப்பது கிலோ மீட்டர் தூரம் யாரும் செல்லக்கூடாத பகுதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடையாத நிலையில் இந்தச் செர்னோபில் அணுஉலை விபத்தின் 25ம் ஆண்டு நினைவு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்தச் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டவுடன் அதனைச் சுத்தம் செய்யவும் அதைச் சுற்றியிருந்த கிராமத்தினரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்ட சுமார் எட்டு இலட்சம் பேரை இந்த நினைவுத் திருப்பலியில் நினைவுகூர்ந்த இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தலைவர் கிரில், பிறருக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் கொடையை இந்த மனிதர்கள் கடவுளுக்கு அளித்துள்ளார்கள் என்றார்.
இந்த ஏப்ரல் 26ம் தேதி செர்னோபில் விபத்து மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைப் போன்ற 500 குண்டுகளின் அழிவு சக்திக்குச் சமம் என்றும் இரஷ்ய ஆர்த்தாடாக்ஸ் தலைவர் கூறினார்.
இந்தத் துப்புரவுப் பணியில் தப்பிப் பிழைத்த 700 பேர், உக்ரைய்ன் பிரதமர் Mykola Azarov உட்பட இந்தச் செர்னோபில் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மெழுகுதிரிகளை ஏற்றினர்.
மேலும், இந்தத் துப்புரவுப் பணியில் மொத்தம் எட்டு இலட்சத்து 29 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர், இவர்களில் 3 இலட்சத்து 56 ஆயிரம் பேர் உக்ரைய்னைச் சேர்ந்தவர்கள், இவர்களில் இரண்டு இலட்சத்து 19 ஆயிரம் பேர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர் என்று உக்ரைய்ன் செர்னோபில் கழகத் தலைவர் Yuri Andreev தெரிவித்தார்.
7. பான் கி மூன் : ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, மனக்கசப்பிலிருந்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புங்கள்
ஏப்ரல் 26,2011: “25 ஆண்டுகளுக்குப் பின்னர் செர்னோபில் : உறுதியான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் நியூயார்க்கில் இத்திங்களன்று திறக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலைய விபத்து குறித்த அருங்காட்சியக நிகழ்வுக்குச் செய்தி வழங்கினார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, “மனக்கசப்பிலிருந்து நம்பிக்கையைக்” கட்டி எழுப்புங்கள் என்று அச்செய்தியில் கூறியுள்ள பான் கி மூன், இதே மாதிரியான அழைப்பை இங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் முன்வைக்கின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
இந்தச் செர்னோபில் அணு உலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கென 2006ம் ஆண்டில் ஐ.நா.தொடங்கிய பத்தாண்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
நிர்வாகிகளின் கடும் பொறுப்பற்ற செயல் மற்றும் வடிவமைப்புக்களில் ஏற்பட்ட பெரும் தவறு காரணமாக இந்தச் செர்னோபில் அணுஉலை வெடித்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
‘செர்னோபையல் இன் ரஷ்யா ‘என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி கடந்த 2004ம் ஆண்டு வரை ஒன்பது இலட்சத்து 85 ஆயிரம் பேர் இந்த விபத்தால் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்று நோய்த் தாக்குதலால் இறந்துள்ளனர்.
8. ஐ.நா.தூதர் : மலேரியா இறப்புக்களைத் தடுத்து நிறுத்த முடியும்
ஏப்ரல் 26,2011: ஆப்ரிக்காவில் மலேரியா நோயைக் கட்டுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அக்கண்டத்தின் 11 நாடுகளில் மிகுந்த பலனைக் கொடுத்திருக்கின்றன என்றும் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களில் ஐம்பது விழுக்காடு குறைந்துள்ளது என்றும் ஐ.நா.தூதர் Ray Chambers தெரிவித்தார்.
உலகில் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களே இல்லை என்ற நிலையை 2015ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் Ray Chambers இத்திங்களன்று கூறினார்.
இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக மலேரியா தினத்திற்குச் செய்தி வெளியிட்ட பான் கி மூன், 2008ம் ஆண்டிலிருந்து அறுபது கோடிக்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்களை மலேரியாவிலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளது என்றார்.
கொசுக்களால் பரவும் மலேரியாவால் ஓராண்டில் ஏழு இலட்சத்து 81 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்றும் தடுத்து நிறுத்தக்கூடிய மற்றும் சிகிச்சை அளிக்கப்படக்கூடிய இந்நோயால் இறப்பவர்களில் பலர் இளம் சிறார் என்றும் பாந் கி மூன் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவில் முப்பது கோடிக்கு அதிகமான கொசுவலைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
9. குறையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்: பாலின விகித ஏற்றத்தாழ்வால் விபரீதம்
ஏப்ரல் 26,2011: இந்தியாவில் ஆண், பெண் பாலின விகிதம் மிகுந்த வேறுபாடுகளுடன் இருக்கும் நிலையில் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கவலையை அதிகரிப்பதாக உள்ளது. இதே நிலை தொடருமானால், சமூக உறவுகளில் விரும்பத்தகாத மாற்றங்களை வருங்காலத் தலைமுறை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, அதே வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் கடந்த 1961ம் ஆண்டில் 1000:978 என்ற விகிதத்திலும் 2001ல் 1000:927 என்ற விகிதத்திலும் இருந்தன. தற்போது இவ்விகிதம் 1000:914 என்ற அளவை எட்டி இருக்கிறது.
10. அனைத்துலக ஆயுதக் குறைப்பு மாநாடு ஈரானில் நடக்கிறது
ஏப்ரல் 26,2011: ஆயுதக்குறைப்பிற்கான சர்வதேச மாநாடு ஈரானி்ல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களை குறைத்துக்கொள்வது குறித்த சர்வதேச மாநாடு ஈரானின் தலைநகர் டெஹரானில் வரும் ஜூன் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஆயுதக் குறைப்பு தொடர்புடைய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment