Thursday, 28 April 2011

Catholic News - hottest and latest - 28 April 2011

1. திருச்சபையின் கருத்துக்களைப் பரப்புவதில் வானொலியின் ஒரு முக்கிய பங்கு - வத்திக்கான் அதிகாரி

2. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பணிகளில் சிபிஐ விசாரணைக்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு

3. கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து வன்முறைகளைச் சந்திக்க வேண்டும் - மங்களூர் ஆயர்

4. அமல அவை அருட்சகோதரிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர்

5. சத்ய சாய் பாபாவின் அடக்கத்தை அடுத்து, கிறிஸ்தவத் தலைவர்களின் செய்திகள்

6. இறைவனின் அருளோடு கிறிஸ்தவர்கள் ஈராக்கில் ஒப்புரவை வளர்க்க முடியும் - தலத் திருச்சபை ஆயர்

7. லிபியாவில் தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும், மக்கள் கோவில்களில் நிறைந்திருந்தனர் -  பேராயர் Martinelli

8. தோற்று நோயற்ற பிற நோய்களால் 3,61,00000 மக்கள் இறந்துள்ளனர் - ஐ.நா.அறிக்கை

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருச்சபையின் கருத்துக்களைப் பரப்புவதில் வானொலியின் ஒரு முக்கிய பங்கு - வத்திக்கான் அதிகாரி

ஏப்ரல் 28,2011. திருச்சபையின் கருத்துக்களைப் பரப்பும்  ஒரு முக்கிய கருவியாக வானொலி இருக்கிறது; பல புதிய தொடர்புச் சாதனங்கள் வளர்ந்திருந்தாலும், வானொலிக்கென ஒரு முக்கிய பங்கு இன்றைய உலகிலும் உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் வத்திக்கான் வானொலியும், ஐரோப்பிய வானொலி ஒன்றியமும் இணைந்து வத்திக்கானில் நடத்தும் ஒரு கருத்தரங்கின் துவக்க விழாவில் உரையாற்றிய சமூகத் தொடர்பு சாதனங்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli இவ்வாறு கூறினார்.
காலம் இடம் ஆகிய எல்லைகளைக் கடந்து, வானொலியின் செய்திகள் பல்வேறு புதியத் தொழில் நுட்பங்களின் உதவியால் பல கோடி மக்களை ஒவ்வொரு நாளும் அடைந்து வருகிறதென்று பேராயர் செல்லி சுட்டிக் காட்டினார்.
பிற பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் நாம் வானொலியைக் கேட்கும் வசதி இருப்பதால், தாராள மனம் கொண்ட ஒரு கருவியாக வானொலியை நாம் காணலாம் என்று கூறிய பேராயர், இவ்வூடகத்தினால் நமது சிந்தனைகள் மெருகேறும் வாய்ப்பு அதிகம் உள்ளதென்று எடுத்துரைத்தார்.
அனைத்தையும் அவசரமாக ஆற்றும் வலிமை கொண்ட பல ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு இடையே, வானொலி இன்னும் நம்மை சிந்திக்கவும், தியானிக்கவும் அழைக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறதென்று பேராயர் சுட்டிக் காட்டினார்.
எந்த ஒரு தொடர்புத் துறையிலும் பணிபுரிவோர் உண்மை, முற்சார்பற்ற நடுநிலையான நிலை இவைகளின் அடிப்படையில் தங்கள் செய்திகளையும், கருத்துக்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதே உலகில் உண்மை மற்றும் நல்ல மதிப்பீடுகளை நிலை நிறுத்தும் ஒரு வழி என்று பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.


2. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பணிகளில் சிபிஐ விசாரணைக்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு

ஏப்ரல் 28,2011. கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தைக் குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டுமென்று நீதி மன்றம் கூறியுள்ளதை ஒரிஸ்ஸா கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒரிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றப்பணிகளை கந்தமால் ஊராட்சியிடம் ஒரிஸ்ஸா அரசு அளித்திருந்தது. இந்தப் பணிகளில் காணப்பட்ட பல ஊழல்களை சிபிஐ தீர விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றம் அண்மையில் கட்டளை பிறப்பித்தது.
கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை ஊராட்சியிடம் ஒப்படைத்தது சரியல்ல என்பதை இந்தக் கட்டளை நிரூபித்துள்ளது என்றும், இது போன்ற திட்டத்தை அரசு அதிகாரிகள் மேற்கொள்வது இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தோல்வியுறச் செய்யும் என்றும் பெர்ஹாம்பூர் ஆயர் சரத் சந்திர நாயக் கூறினார்.
2006 - 2007 ஆகிய இரு ஆண்டுகளில் பெர்ஹாம்பூர் மறைமாவட்டப் பகுதியில் முன்னேற்றத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டத் தொகையில் 75 விழுக்காட்டுத் தொகையை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தியதை ஓர் அரசு சாராத் தன்னார்வக் குழு கண்டுபிடித்து, நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, உச்ச நீதி மன்றம் இந்த விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


3. கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து வன்முறைகளைச் சந்திக்க வேண்டும் - மங்களூர் ஆயர்

ஏப்ரல் 28,2011. கிறிஸ்தவர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் நாம் இன்னும் பல தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலை அதிகமாகும், எனவே நாம் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தைச் சந்திப்போம் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
புனித வாரத்தில் கர்நாடகாவின் இரு இடங்களில் சங்பரிவார் என்ற அடிப்படை வாத இந்துக் குழுவினரால் நடைபெற்ற வன்முறைகளின் எதிரொலியாக ஒன்றுகூடிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்தில் பேசிய மங்களூர் ஆயர் Aloysius Paul D'Souza இவ்வாறு கூறினார்.
அனைத்து கிறிஸ்தவர்களின் கர்நாடகா ஒருங்கிணைப்புக் குழு இப்புதனன்று மங்களூரில் நடத்திய இந்தக் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிறிஸ்தவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்து அடிப்படை வாதிகளால் தாக்கப்படும்வரை காத்திருக்காமல், இன்னும் பல வழிகளிலும் ஒற்றுமையை வளர்த்து, ஒருவருக்கொருவர் உதவிகள் செய்வது சிறந்தது என்று கிறிஸ்தவ சபைகள் ஒன்றின் ஆயர் யாக்கூப் கூறினார்.
2008ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைத்தபின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன என்றும், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மூன்று குழந்தைகள் காப்பகங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்றும் UCAN செய்தி கூறுகிறது.


4. அமல அவை அருட்சகோதரிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர்

ஏப்ரல் 28,2011. தமிழ் நாட்டைச் சேர்ந்த அமல அவை அருட்சகோதரிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கானத் திருப்பீடத் தூதர் சால்வதோரே பென்னாக்கியோ கலந்து கொண்டார்.
கடந்த மூன்று நாட்களாய் மதுரையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் இத்துறவுச் சபையின் நூறு ஆண்டுகளுக்கான சேவைகளை விளக்கும் கண்காட்சியை பேராயர் பென்னாக்கியோ திறந்து வைத்தார்.
இப்புதனன்று நடைபெற்ற இறுதி நாள் நிறைவு விழாவில் பேராயர் பென்னோக்கியோ, பல ஆயர்கள், குருக்கள் ஆகியோருடன் நிர்மலா பள்ளி வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தினார். விழாவின் ஒரு பகுதியாக, நூற்றாண்டு விழா நினைவு மலர் மற்றும் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன.
600க்கும் அதிகமான அருட்சகோதரிகள் கலந்து கொண்ட இவ்விழாவில் இச்சபையை நிறுவிய அருள்தந்தை அகஸ்டின் பெரேரா குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் சிலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
1911ம் ஆண்டு அருள்தந்தை அகஸ்டின் மற்றும் இயேசுசபை குருக்கள் யூஜின், ஜூலியஸ் ஆகிய மூவராலும் இத்துறவறச் சபை நிறுவப்பட்டது. தற்போது தமிழ் நாடு, பீகார், ஜார்க்கன்ட், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலும், தென் ஆப்ரிக்கா, சாம்பியா, இலங்கை, இத்தாலி ஆகிய நாடுகளிலும் 1000 அருட்சகோதரிகளுக்கும் மேலாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


5. சத்ய சாய் பாபாவின் அடக்கத்தை அடுத்து, கிறிஸ்தவத் தலைவர்களின் செய்திகள்

ஏப்ரல் 28,2011. சத்ய சாய் பாபாவின் உடல் இப்புதனன்று அடக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தங்கள் ஆழ்ந்த வருத்தங்களையும், கருத்துக்களையும் கிறிஸ்தவத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
சத்யா சாய் பாபாவின் மறைவுக்குப் பிறகும் அவர் ஆரம்பித்து வைத்த பல மனித நலச் சேவைகள் தொடரும் என்று நம்புவதாக நெல்லூர் ஆயர் மோசஸ் பிரகாசம் கூறினார்.
சாய்பாபாவின் வழியைப் பின்பற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார் இந்திய ஆயர்கள் பேரவை சார்பாகப் பேசிய அருள்தந்தை பாபு ஜோசப்.
அனைவருக்கும் அன்பு, அனைவருக்கும் சேவை என்ற வழிகளைப் பின்பற்றிய சத்ய சாய்பாபா இயேசுவின் உயிர்ப்புத் திருநாளன்று இவ்வுலகை விட்டுச் சென்றது ஒரு வகையில் பொருத்தமாக உள்ளதென்று இயேசு சபைக் குருக்களான தேவதாஸ், செல்வராஜ் ஆகியோர் கூறினர்.
இந்துக்களின் மரபுப்படி இறந்தோரின் உடல் தகனம் செய்யப்படும். ஆனால், தெய்வத் தன்மை கொண்டவர்களாய் கருதப்படுவோர் அடக்கம் செய்யப்படுவர். இந்த பழக்கத்தின்படி, 85 வயதான சத்ய சாய்பாபாவின் உடல் புட்டப்பர்த்தியில் உள்ள ஆசிரமத்தின் மைய மண்டபத்தில் அரசு மரியாதையுடன் இப்புதனன்று அடக்கம் செய்யப்பட்டது.


6. இறைவனின் அருளோடு கிறிஸ்தவர்கள் ஈராக்கில் ஒப்புரவை வளர்க்க முடியும் - தலத் திருச்சபை ஆயர்

ஏப்ரல் 28,2011. கிறிஸ்துவின் மரணம் உயிர்ப்பு இவைகளின் வழியே உலகைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவனின் அருளோடு கிறிஸ்தவர்களும் ஈராக் நாட்டில் ஒப்புரவை வளர்க்க முடியும் என்று ஈராக் தலத் திருச்சபை ஆயர் ஒருவர் கூறினார்.
Aid to Church in Need என்ற அமைப்பிற்கு இச்செவ்வாயன்று பேட்டியளித்த Erbil உயர் மறைமாவட்டப் பேராயர் Bashar Warda ஈராக்கில் தொடரும் வன்முறைகளால் புனித வாரத் திருச்சடங்குகள் பல நிறுத்தப்பட்டதைச் சுட்டிக் காட்டினார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல வன்முறைகளைக் கண்ட Mosul பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, மக்கள் பல மைல் தூரம் நடந்து புனித வெள்ளித் திருச்சடங்குகளில் கலந்து கொண்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஈராக் அரசு விரும்பினால், அந்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒப்புரவை வளர்க்க பல வழிகளிலும் உதவ முடியும் என்று பேராயர் Warda தன் நம்பிக்கையை வெளியிட்டார்.


7. லிபியாவில் தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும், மக்கள் கோவில்களில் நிறைந்திருந்தனர் -  பேராயர் Martinelli

ஏப்ரல் 28,2011. உயிர்ப்புத் திருநாளுக்கு அடுத்த நாள் திங்களன்று லிபியாவின் பல இடங்களில் குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தபோதிலும், மக்கள் கோவில்களில் நிறைந்திருந்தது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சிறந்த ஒரு சாட்சியாக இருந்ததென்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி பேராயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
கோவில்களுக்கு வரும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய பேராயர், இவர்கள் செபிக்க மட்டுமின்றி, வழிபாட்டிற்குப் பின் மக்களைச் சந்தித்து, அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்கவும் கோவிலுக்கு வருகின்றனர் என்று வத்திக்கான் FIDES செய்தி நிறுவனத்திற்கு இப்புதனன்று அளித்த பேட்டியில் கூறினார்.
லிபியாவின் பிரச்சனைக்கு ஐ.நா.உட்பட அனைத்துத் தரப்பினரும் போரையும், ஆயுதங்களையும் நம்பியிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறதென்று கூறிய பேராயர் Martinelli, வன்முறைகள் எக்காலத்திலும் மனித குலத்திற்கு தீர்வுகளைக் கொண்டு வரமுடியாது என்றுரைத்தார்.


8. தோற்று நோயற்ற பிற நோய்களால் 3,61,00000 மக்கள் இறந்துள்ளனர் - ஐ.நா.அறிக்கை

ஏப்ரல் 28,2011. இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், நீரழிவு நோய் ஆகிய தொற்று நோயற்ற பிற காரணங்களால் 2008ம் ஆண்டு 3,61,00000 மக்கள் இறந்துள்ளனர் என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
"தொற்று நோயற்ற பிற நோய்களின் அதிகரிப்பு, ஒரு பெரும் சவால்" என்ற தலைப்பில் இரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின் சார்பில் இவ்வியாழன் துவக்கப்பட்ட ஒரு கருத்தரங்கில் இவ்வறிக்கை வெளியானது.
இதய நோய், புற்று நோய் ஆகியவைகள் பெரும்பாலும் நடுத்தர வருவாயுள்ள அல்லது, அதற்கும் கீழான வருவாய் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தோற்று நோயற்ற இவ்வியாதிகளில் இதய நோய் மிக அதிகமான மக்களைக் கொல்கிறதென்றும் அதற்கு அடுத்தபடியாக புற்று நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய் ஆகியவை அதிக மக்களின் உயிர்களைப் பறிக்கிறதென்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
புகையிலை பயன்பாடு, மது பானம் அருந்துதல், தவறான உணவு வகைகள், மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை இந்நோய்களை அதிகப்படுத்தும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
இவ்வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மாஸ்கோவில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள 300க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...