Sunday, 17 April 2011

Catholic News - hottest and latest - 16 April 2011

1. 84வது பிறந்த நாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

2. உலக இளையோர் தினம், இளையோருக்கும் ஸ்பெயினுக்கும் மிகுதியான ஆன்மீகப் பலன்களைக் கொண்டு வரும் - திருத்தந்தை

3. நாடோடி இனமக்களின் மாண்பும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதற்குத் திருப்பீட அதிகாரி வலியுறுத்தல்

4. கொரிய ஆயர்கள் - கருக்கலைப்பு ஒரு கொலை

5. வடகொரியாவில் 50 ஆயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறைகளில் உள்ளனர்

6. வினாயக் சென்னுக்கு முன்பிணையல், திருச்சபைத் தலைவர்கள் வரவேற்பு

7. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா ஒரே நாளில் கொண்டாடப்பட முயற்சி எடுக்குமாறு எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு

8. ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு ஜப்பானில் இழப்பீட்டு நிதி தர முடிவு

----------------------------------------------------------------------------------------------------------------

1. 84வது பிறந்த நாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

ஏப்ரல் 16,2011 : ஏப்ரல் 16ம் தேதி இச்சனிக்கிழமையன்று தனது 84வது பிறந்த நாளைக் கொண்டாடிய திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு உலகத் திருச்சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் தங்களது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் திருத்தந்தைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியிருப்பதோடு கடந்த செப்டம்பரில் திருத்தந்தை பிரிட்டனுக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின் பசுமையான நினைவுகளையும்  அதில் குறிப்பிட்டுள்ளார்.
வத்திக்கான் வானொலி இயக்குனரும் வத்திக்கான் தொலைகாட்சி நிலையத் தலைவரும் திருப்பீடப் பேச்சாளருமான இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இம்மூன்று நிறுவனங்களின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 19ம் தேதி தனது பாப்பிறைப் பணியின் ஆறாம் ஆண்டையும் சிறப்பிக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. உலக இளையோர் தினம், இளையோருக்கும் ஸ்பெயினுக்கும் மிகுதியான ஆன்மீகப் பலன்களைக் கொண்டு வரும் - திருத்தந்தை

ஏப்ரல் 16,2011 : வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், உலக இளையோருக்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் மிகுதியான ஆன்மீகப் பலன்களைக் கொண்டு வரும் என்பதில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்துக்கான ஸ்பெயின் நாட்டுப் புதிய தூதர் María Jesús Figa López-Palop ஐ இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் என அனைத்து அதிகாரிகளும் இந்த இளையோர் தினம் சிறப்புற அமையத் தங்களது பங்கை வழங்குவார்கள் என்பதிலும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
ஸ்பெயின் தலத்திருச்சபை மனிதனின் ஒருங்கிணைந்த ஆளுமையை வளர்ப்பதில் ஆற்றி வரும் சேவையைக் குறிப்பிட்ட அவர், தாயின் கருவறை முதல் இயற்கையான மரணம் அடையும் வரை மனிதனின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
ஒரு நாட்டின் பெரும்பாலான மக்களின் தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் சமய அடையாளங்களையும் வரலாற்றையும் வெளிப்படுத்துவதைப் புறக்கணிப்பது மனிதனின் இன்றியமையாத சமய சுதந்திர உரிமையை மீறுவதாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
ஸ்பெயினின் அனைத்துப் பள்ளிகளிலும் கத்தோலிக்க மதத்தின் போதனைகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஸ்பெயின் நாட்டுத் தூதரிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. நாடோடி இனமக்களின் மாண்பும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதற்குத் திருப்பீட அதிகாரி வலியுறுத்தல்

ஏப்ரல் 16,2011 : ஜிப்சிஸ் என்றழைக்கப்படும் நாடோடி இனமக்கள் மனித சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் என்பதால் அவர்களின் ஒட்டுமொத்தத் தனித்துவமும் மாண்பும் மதிக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார் பேராயர் அந்தோணியோ மரிய வேலியோ.
உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள குரோத்தாஃபெராத்தா எனுமிடத்தில் ஜிப்சிகள் : மனித சமுதாயத்தில் நம் சகோதர சகோதரிகள் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இச்சனிக்கிழமை உரையாற்றிய திருப்பீடக் குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயரும் மக்களுக்கான மேய்ப்புப்பணி அவையின் தலைவர் பேராயர் வேலியோ இவ்வாறு வலியுறுத்தினார்.
சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் இத்தகைய மக்களுக்கென நல்லதோர் அரசியல் அமைப்பு அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் வேலியோ, இந்த இன மக்களுக்கு எதிரான நாத்சி அடக்குமுறையில் கடந்த நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஜிப்சிகள் வதைப்போர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட கொடுமையையும் நினைவு கூர்ந்தார்.
தற்சமயம் ஐரோப்பாவில் பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் ஏறக்குறைய அறுபது இலட்சம் ஜிப்சி சிறார் இருப்பதையும் குறிப்பிட்ட பேராயர், வருங்கால ஐரோப்பியத் திட்டத்தில் இச்சிறாருக்குக் கல்வி வழங்குவது இணைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.

4. கொரிய ஆயர்கள் - கருக்கலைப்பு ஒரு கொலை

ஏப்ரல் 16,2011 : மனித வாழ்வை புண்படுத்தும் குற்றங்களில் மிகவும் கடுமையான குற்றம் கருக்கலைப்பு என்று கொரிய ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்கொரியத் தலைநகர் செயோலில் முதல் முறையாகக் கடைபிடிக்கப்பட்ட வாழ்வுக்கான ஞாயிறையொட்டி திருப்பலி நிகழ்த்திய அந்நாட்டு ஆயர் பேரவையின் உயிர் நன்னெறியியல் பணிக்குழுத் தலைவரான ஆயர் கபிரியேல் சாங் போங்-ஹன், கருக்கலைப்பு செய்வது கொலை செய்வதாகும் என்பதை விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தினார்.
மக்கள் வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புமாறும் கேட்டுக் கொண்ட ஆயர் சாங்,  தென் கொரியாவில் ஒரு நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கருக்கலைப்புகள் இடம் பெறுவதைக் கவலையோடு சுட்டிக் காட்டினார்.
கருக்கலைப்பு செய்வது ஒரு தனிப்பட்ட நபரின் உரிமை என்றும் பெண்களின் நலவாழ்வுக்கான உரிமை என்றும் சிலர் சொல்லி வருகின்றனர் என்றும் ஆயர் குறை கூறினார்.
மேலும், கொரியத் திருச்சபை வாழ்வின் நற்செய்தியை அறிவித்து வருகின்றது என்றும் கல்வியறிவு மூலம் வாழ்வின் மேன்மையை மக்களுக்குப் புகட்டத் திருச்சபை முயற்சிக்கின்றது என்றும் தலத்திருச்சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


5. வடகொரியாவில் ஐம்பதாயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறைகளில் உள்ளனர்

ஏப்ரல்16,2011 : வடகொரியாவில் தங்களது விசுவாசத்திற்காக 50 ஆயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறைகளில் இருப்பதாக அண்மையில் வெளியான ஒரு புள்ளி விபரம் அறிவித்துள்ளது.
வடகொரியாவில் சாதாரண நீதித்துறை அமைப்பைத் தவிர அதற்கு இணையான நீதித்துறை அமைப்பும் இயங்குகின்றது என்றும் இது குற்றம் சாட்டப்பட்டவரின் மனுக்களை மதிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.
உலகில் சமய மற்றும் மனசாட்சியின் சுதந்திரம் குறித்து ஆய்வு செய்யும் "Open Doors" என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டில் மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன மற்றும் சமய சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.   
இத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் வடகொரியாவில் சுமார் நான்கு இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் சுமார் 2 விழுக்காடு என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

6. வினாயக் சென்னுக்கு முன்பிணையல், திருச்சபைத் தலைவர்கள் வரவேற்பு
 
ஏப்ரல்16,2011. தேசதுரோகம் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் வினாயக் சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றம் முன்பிணையல் வழங்கியுள்ளதைத் திருச்சபைத் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.
இதே மாதிரியான மனித உரிமை விவகாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல செய்தியாக இருக்கின்றது என்று இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையச் செயலர் அருள்திரு சார்லஸ் இருதயம் கருத்து தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விநாயக் சென் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அடிப்படையில் நீதிமன்றம் இவ்வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
முன்பிணையல் வழங்குவதற்கு குறிப்பான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவரை முன்பிணையலில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள்.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசதுரோக நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் இன்றையச் சுதந்திர இந்தியாவில் பொருத்தமானதுதானா என்ற விவாதம் நடைபெறும் நிலையில், இது குறித்து மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டிருப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

7. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா ஒரே நாளில் கொண்டாடப்பட முயற்சி எடுக்குமாறு எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு

ஏப்ரல் 16,2011 : இவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா கிழக்கு மற்றும் மேற்குத் திருச்சபைகளுக்கு ஒரே நாளில் இடம் பெறுகின்றது என்று கூறிய WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலர் Olav Fykse Tveit, இவ்வாண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டம் தெளிவானக் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கொண்டாட்டமாக அமைவதற்கு ஆவன செய்யுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளார்
வருங்காலத்தில் ஒரே தேதியில் இப்பெருவிழா இடம் பெறுவதற்குக் கிறிஸ்தவர்கள் அனைவரும் உழைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
பெரும்பாலான ஆர்த்தடாக்ஸ் சபைகள் பயன்படுத்தும் ஜூலியன் நாட்காட்டி அல்லது கிரகோரியன் நாட்காட்டியை வைத்து கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா தீர்மானிக்கப்படுவதால் இவ்விழா வெவ்வேறு ஞாயிறுகளில் சிறப்பிக்கப்படுகின்றது. 
கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தடவைகள் இப்பெருவிழா ஒரே தேதியில் கடைபிடிக்கப்ட்டுள்ளது. வருங்காலத்தில் 2017 மற்றும் 2025ல் இப்பெருவிழா ஒரே தேதியில் சிறப்பிக்கப்படும்.

8. ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு ஜப்பானில் இழப்பீட்டு நிதி தர முடிவு

ஏப்ரல் 16,2011 : புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து இலட்சம் என் ஜப்பானியப் பணத்தைத்   தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று அந்த அணு மின்நிலையத்தை இயக்கி வரும் "டெப்கோ' நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது ஜப்பான் அரசு.
புக்குஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திற்கு முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த ஏறக்குறைய 48 ஆயிரம் குடும்பங்கள் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதி பெற்றதாக இருக்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இம்மாதம் 28ம் தேதி முதல் இந்த இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் என "டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்துப் பேசிய டெப்கோ தலைவர் மசாடாகா ஷிமிஷு,  "ஆட்குறைப்பு மற்றும் வெளிநாட்டுத் திட்டங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் பணத்தில் இழப்பீடு வழங்கப்படும், இழப்பீடு வழங்குவதில் பின்வாங்க மாட்டோம்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...