Wednesday, 20 April 2011

Catholic News - hottest and latest - 19 April 2011


1.  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்  பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஆறாம் ஆண்டு

2.  2011 ஜூன் 4,5 - குரோவேஷிய நாட்டிற்கானத் திருத்தந்தையின் முதல் திருப்பயணம்

3.   கொரிய மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால்.

4.   ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒரு நகரில் மட்டுமே 30,000பேர் கத்தோலிக்க மையத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

5.  மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அதிபர் ஒபாமா மிகுந்த ஈடுபாடு காட்டுமாறு பல்சமயத் தலைவர்கள் அழைப்பு

6.  பெய்ஜிங் இல்லச் சபையின் முப்பது உறுப்பினர்கள் கைது

7.  இங்கிலாந்து அரச குடும்பத் திருமணத்திற்கெனச் சிறப்புச் செபம்.

8.  இந்திய அமெரிக்கருக்கு புலிட்சர் விருது

9. கர்தினால் ஜொவான்னி சல்தரினி இறைபதம் அடைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஆறாம் ஆண்டு

ஏப்ரல்19,2011. ஏப்ரல் 19ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஆறாம் ஆண்டைச் சிறப்பித்தார்.
1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ஜெர்மனியில் பிறந்த Joseph Aloisius Ratzinger என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பின்னர் ஏப்ரல் 24ம் தேதி பாப்பிறையாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
தனது 78வது வயதில் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்ற பெயரையும் தெரிவு செய்தார்.
இவர் திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருக்கிறார்.

2.  2011 ஜூன் 4,5 - குரோவேஷிய நாட்டிற்கானத் திருத்தந்தையின் முதல் திருப்பயணம்

ஏப்ரல்19,2011. குரோவேஷிய நாட்டின் தேசிய கத்தோலிக்கக் குடும்ப தின விழாவில் கலந்து கொள்வதற்கென வருகிற ஜூன் 4,5 தேதிகளில் அந்நாட்டிற்கானத் தனது முதல் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஜூன் 4ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை, குரோவேஷியத் தலைநகர் சாக்ரப், Pleso அனைத்துலக விமான நிலையத்தை முற்பகல் 11 மணிக்குச் சென்றடைவார். பின்னர் அந்நாட்டின் அரசுத்தலைவர் Ivo Josipovic, பிரதமர் Jadranka Kosor ஆகியோரைச் சந்திப்பார். பின்னர் நாட்டின் அரசு, கல்வி, வணிகம் மற்றும் கலாச்சாரத் தலைவர்களைச் சந்திப்பார். அன்று மாலையில் சாக்ரப் வளாகத்தில் இளையோருடன் செப வழிபாட்டில் கலந்து கொள்வார்.
5ம் தேதி ஞாயிறன்று சாக்ரப் நகர் குதிரைப்பந்தயத் திடலில் குரோவேஷியக் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கெனத் திருப்பலி நிகழ்த்துவார். மாலையில், கர்தினால் Alojzije Stepinac கல்லறையில் செபித்து ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியருடன் சேர்ந்து மாலைத் திருப்புகழ்மாலை செபிப்பார் திருத்தந்தை.
1937 முதல் 1960 வரை சாக்ரப் பேராயராக இருந்த கர்தினால் Stepinac, இராணுவ அதிகாரி Tito வின் கம்யூனிச ஆட்சியில் துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக மரித்தவர்.
குரோவேஷியாவின் மொத்த மக்கட்தொகையில் 87.8 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

3.   கொரிய மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால்.

ஏப்ரல் 19, 2011.   பொருளாதார மற்றும் உலகாயுதச் செல்வங்களை அடிப்படையாகக் கொண்டதாய் வாழ்வு பற்றிய கொரிய மக்களின் கண்ணோட்டம் இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டுக் கர்தினால் Nicholas Cheong Jin-suk.
கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவிற்கான சிறப்புச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள கர்தினால், நுகர்வுக் கலாச்சாரத்தால் இன்றைய சமூகம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம் வாழ்வின் இறுதி முடிவு மரணமல்ல என்பதை இயேசுவிடமிருந்து கற்றுள்ள கிறிஸ்தவர்கள், நீதி, உண்மை மற்றும் அன்பின் மூலம் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளார்கள் எனத் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் Seoul பேராயர் கர்தினால் Cheong Jin-suk.

4.   ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒரு நகரில் மட்டுமே 30,000பேர் கத்தோலிக்க மையத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

ஏப்ரல் 19, 2011.   ஐவரி கோஸ்ட் நாட்டின் உள்நாட்டுச் சண்டையால் Duekoue  நகர் சலேசிய சபை மையத்தில் அடைக்கலம் தேடியிருக்கும் 30,000 அகதிகளும் மேலும் உதவிகள் கிடைக்காத நிலையில், காலரா நோயைப் பெறும் அபாயம் இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
47,000 மக்கள் தொகையைக் கொண்ட Duekoue  நகரில் 800 பேர் மோதலில் உயிரிழந்துள்ளனர், 30, 000 பேர் இக்கத்தோலிக்க மையத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
உணவு, குடிநீர், மருந்து மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், காலரா நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும்  சலேசிய சபை குரு விச்செந்தே குறுபெல்லி கூறினார்.
பாதுகாப்பின்மை காரணமாக சலேசிய மையத்தில் அடைக்கலம் தேடியுள்ள மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் இன்னும் அச்சத்திலேயே வாழ்வதாகவும் அவர் கூறினார்.

5.  மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அதிபர் ஒபாமா மிகுந்த ஈடுபாடு காட்டுமாறு பல்சமயத் தலைவர்கள் அழைப்பு

ஏப்ரல்19,2011 மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் பாரக் ஒபாமா மிகுந்த செயலூக்கத்துடன் ஈடுபடுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் தெயதோர் மெக்காரிக் உட்பட கிறிஸ்தவ, யூத மற்றும் முஸ்லீம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் ஒத்துக் கொண்ட 1967ம் ஆண்டின் உடன்பாட்டின் அடிப்படையில் வெஸ்ட் பாங்க் மற்றும் காசாவில் பாலஸ்தீனிய நாட்டை உருவாக்குமாறு இத்தலைவர்களின் கடிதம் கேட்டுள்ளது.
அகதிகள் குறித்த நியாயமான தீர்மானம் இஸ்ரேலின் மக்கள்தொகைக்கு அச்சுறுத்தலாக இருக்காது, இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் எருசலேமை தங்களது தலைநகரங்களாகப் பகிர்ந்து கொள்வதிலும் பிரச்சனை இருக்காது என்று அதிபர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் அத்தலைவர்கள்.
எருசலேம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு அதிபர் ஒபாமா விரைவில் பயணம் மேற்கொண்டு அப்பகுதியில் அமைதியைக் கொண்டு வருவது குறித்து கலந்து பேசுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

6.  பெய்ஜிங் இல்லச் சபையின் முப்பது உறுப்பினர்கள் கைது

ஏப்ரல்19,2011 சீனாவில் பொது இடத்தில் ஞாயிறு திருவழிபாடு நடத்த முயற்சித்த பெய்ஜிங் இல்லக் கிறிஸ்தவ சபையின் இரண்டு போதகர்கள் மற்றும் அச்சபையின் முப்பது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட சைனா எய்ட் என்ற மனித உரிமைகள் அமைப்பு அறிவித்தது.
போதகர்கள் Jin Tianming, Li Xiaobai ஆகிய இருவரும் இச்சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். மற்றவர்களும் இத்திங்கள் மாலை விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று அம்மனித உரிமைகள் அமைப்பு கூறியது.
அக்கிறிஸ்தவ சபையின் 169 பேர் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கேள்வி கேட்கப்பட்டனர் என்றும் இச்சபை பல ஆண்டுகளாகத் தனது நடவடிக்கைகளைப் பொது இடங்களிலே நடத்துகின்றது என்றும் அரசிடம் பதிவுக்காக அனுப்பிய மனு 2006ம் ஆண்டில் புறக்கணிக்கப்பட்டது என்றும் அவ்வமைப்பு குறை கூறியது.

7.  இங்கிலாந்து அரச குடும்பத் திருமணத்திற்கெனச் சிறப்புச் செபம்.

ஏப்ரல் 19, 2011.   வரும் வாரம் இலண்டனில் இடம்பெறவிருக்கும் அரச குடும்பத் திருமணத்திற்கெனச் சிறப்பு செபம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்.
புதுமணத் தம்பதியரின் அன்புநிறை வருங்கால வாழ்வுக்கும், நாட்டிற்கும் காமன்வெல்த் அமைப்பிற்கும் உழைப்பதற்கானப் பலத்திற்கும் என இறைவனை வேண்டியுள்ளனர் ஆயர்கள் அச்செபத்தில். இங்கிலாந்தின் இளவரசர் 28 வயதான வில்லியமிற்கும் 29 வயதான கேத்ரீன் மிடில்டனுக்கும் இடையேயான திருமணம் இம்மாதம் 29ந்தேதி கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸின் தலைமையில் வெஸ்ட்மின்ஸ்டர்  ஆலயத்தில் இடம்பெற உள்ளது. குடும்ப நண்பர்கள், உறவினர்கள் என 1900 பேரே இவ்வாலயத்திற்குள் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புப் பெற்றிருக்கும் வேளை, உலகம் முழுவதும் ஏறத்தாழ 200கோடிப் பேர் இதனைத் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

8.  இந்திய அமெரிக்கருக்கு புலிட்சர் விருது

ஏப்ரல்20,2011. இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது, இந்த ஆண்டு இந்திய அமெரிக்கரான சித்தார்த் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. The Emperor of All Maladies என்ற புத்தகத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நோயின் வரலாறு மற்றும் அந்நோய்க்கு எதிராக மருத்துவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பது குறித்து இப்புத்தகம் விளக்குகிறது.
கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் மருத்துவப் பேராசிரியராகவும் புற்றுநோய் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் சித்தார்த் முகர்ஜி.
கதை அல்லாத வகை - நான் பிக்ஷன் வகை புத்தகத்திற்கு வழங்கப்படும் புலிட்சர் விருது பத்தாயிரம் டாலரைக் கொண்டது.

9. கர்தினால் ஜொவான்னி சல்தரினி இறைபதம் அடைந்தார்.

ஏப்ரல் 19, 2011.   இத்தாலியின் தொரினோ நகர் முன்னாள் பேராயர் கர்தினால் ஜொவான்னி சல்தரினி இறைபதம் அடைந்ததையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தியை அந்த உயர் மறைமாவட்ட விசுவாசிகளுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கர்தினால் சல்தரினியின் மறைவால் துயருறும் விசுவாசிகளுக்கும், உறவினர்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், கர்தினாலின் ஆன்ம இளைப்பாற்றிக்கானச் செபத்திற்கும் உறுதி கூறும் திருத்தந்தையின் செய்தி, கர்தினால் உடல் சுகவீனம் அடைந்திருந்த கடைசிக் காலத்தில் அவருக்கு அன்புடன் பணிபுரிந்த அனைவரையும் நினைவு கூர்வதாகவும் தெரிவிக்கிறது.
மிலான் உயர்மறைமாவட்டத்தின் காந்து எனுமிடத்தில் 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ந்தேதி பிறந்த கர்தினால் சல்த‌ரினி, மிலான் துணை ஆயராகவும், பின்னர் தொரினோ பேராயராகவும் 1999ம் ஆண்டு வரைப் பணியாற்றியுள்ளார். காலம் சென்ற கர்தினாலின் உடல் இப்புதனன்று பிற்பகல் தொரினோ பேராலயத்தில் அடக்கம் செய்யப்படும்.
கர்தினால் சல்தரினியின் மரணத்துடன், திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 199ஆகக் குறைந்துள்ளது. இதில் 115 பேரே 80 வயதிற்கு உட்பட்டவர்கள்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...