1. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெட்டி மூடிய நிலையில் தூய பேதுரு கல்லறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது
2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் நிகழ்வையொட்டி புனித பூமியில் சிறப்புக் கொண்டாட்டங்கள்
3. கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் 79 திருத்தந்தையர் புனிதர்கள்
4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன
5. லிபியா மீதான நேட்டோ போர் அர்த்தமற்றது, இத்தாலிய அரசு பதவி விலக வேண்டும் – டிரிப்போலி ஆயர் மார்த்தினெல்லி
6. நைஜீரிய வன்முறைக்கு ஊழல் அரசியல் தலைவர்கள் முக்கிய காரணம் - ஆயர் கண்டனம்
7. நாம் எல்லாருமே ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – தென் கொரிய ஆயர் Lazzaro
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெட்டி மூடிய நிலையில் தூய பேதுரு கல்லறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது
ஏப்ரல்29,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களது கல்லறை இவ்வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெட்டியானது அப்படியே மூடிய நிலையில் தூய பேதுரு கல்லறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உடல் மூன்றடுக்குப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. முதல் பெட்டி மரத்தாலானது. அது அவர் அடக்கம் செய்யப்பட்ட திருப்பலியின் போது எல்லாரும் பார்த்தது. இரண்டாவது பெட்டி ஈய உலோகத்தாலானது. மூன்றாவது பெட்டி மரத்தாலானது.
இந்தச்சவப் பெட்டியை வெளியே எடுத்த வேலையானது இவ்வெள்ளி அதிகாலை தொடங்கப்பட்டது. காலை 9 மணி வரை வெளியே வைக்கப்பட்டு, கர்தினால் கொமாஸ்திரி, கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் திஷ்விஷ், அத்திருத்தந்தைக்கு உதவி செய்த அருட்சகோதரிகள் உட்பட சில திருப்பீட உய்ர அதிகாரிகள் செபித்தனர். பின்னர் அது தூய பேதுரு கல்லறைக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டு, தங்கநிற வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய துணியால் மூடப்பட்டது.
அவ்விடத்தில் ஞாயிறு காலை வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படும் திருப்பலியின் போது பசிலிக்காவின் மையப்பகுதிக்கு எடுத்து வரப்பட்டு அச்சடங்கு முடிந்த பின்னர் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கும் விசுவாசிகளுக்குமெனக் கொடையாக வழங்கப்படும். எனினும் தற்போது பசிலிக்காவின் கல்லறைப் பகுதிக்கு பொது மக்கள் செல்லாதவாறு அது அடைக்கப்பட்டுள்ளது.
மே 2 திங்கள் மாலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா அடைக்கப்பட்ட பின்னர் அருளாளரின் இப்பெட்டி புனித செபஸ்தியார் பீடத்தில் வைக்கப்படும். இப்பீடம் பியட்டா அன்னைமரியா பீடத்துக்கு அடுத்து இருக்கின்றது. திருத்தந்தையின் கல்லறையை தினமும் சுமார் இருபதாயிரம் பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் நிகழ்வையொட்டி புனித பூமியில் சிறப்புக் கொண்டாட்டங்கள்
ஏப்ரல்29,2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், விசுவாச மனிதர், பற்றுறுதி, உரையாடல், அமைதி ஆகியவற்றை ஊக்குவித்தவர், சாட்சிய மனிதர், துன்புறும் மனிதர் என்றவாறெல்லாம் புகழ்ந்து பத்து நாட்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் புனித பூமி கத்தோலிக்க ஆயர்கள்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களை அருளாளர் என்று அறிவிக்கும் திருவழிபாடு வத்திக்கானில் மே 1, இஞ்ஞாயிறன்று நடைபெறுவதை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று பத்து நாட்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ள புனித பூமி ஆயர்கள், அவற்றை வருகிற மே 8ம் தேதி நிறைவு செய்வர்.
இத்தகைய விசுவாச மனிதரை, சாட்சிய வாழ்வு வாழ்ந்த மனிதரைப் புனித பூமியில் சந்தித்து அவரது உரைகளைக் கேட்ட நாம் அவரது அருளாளர் திருப்பட்ட விழாவைக் கொண்டாடாமல் இருக்க முடியாது என்று புனித பூமிக் கிறிஸ்தவர்களுக்கு ஆயர்கள் எழுதிய மேய்ப்புப்பணி மடல் கூறுகிறது.
இச்சனிக்கிழமை மாலை ஜோர்டனில் இடம் பெறும் இளையோர் கூட்டம் உட்பட இசைக்கச்சேரிகள், திருப்பலி, அன்னைமரியா வழிபாடு என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், பாலஸ்தீனப் பிரதமர் சாலம் ஃபாயாட் பெத்லகேமில் உள்ள திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மையத்தில் இடம் பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்.
3. கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் 79 திருத்தந்தையர் புனிதர்கள்
ஏப்ரல்29,2011. இஞ்ஞாயிறன்று அருளாளர் என அறிவிக்கப்படவிருக்கும் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், கத்தோலிக்கத் திருச்சபையில் கடந்த 300 ஆண்டுகளில் அருளாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திருத்தந்தையருள் 11வது திருத்தந்தையாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் புள்ளி விபரங்களின்படி 1712ம் ஆண்டிலிருந்து இதுவரை திருத்தந்தையர் ஐந்தாம் பத்திநாதர்(1712), பத்தாம் பத்திநாதர் (1954) ஆகிய இருவரும் புனிதர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உட்பட 11 திருத்தந்தையர் இதுவரை அருளாளர் நிலைக்கும் 79 திருத்தந்தையர் புனிதர் நிலைக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.
இரண்டாயிரமாம் ஜூபிலி ஆண்டில் பாப்பிறை இரண்டாம் ஜான் பால், திருத்தந்தையர் 9ம் பத்திநாதரையும் 23ம் ஜானையும் அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
திருத்தந்தையர் பத்தாம் கிரகரி(1713), 11ம் பெனடிக்ட் ( 1736), 5ம் உர்பான் (1870), 3ம் யூஜின்(1872), 2ம் உர்பான்(1881), 3ம் விக்டர் (1887), 5ம் இன்னோசென்ட் (1898), 11ம் இன்னோசென்ட்(1956) ஆகியோர் அருளாளர்கள் ஆவர்.
மேலும், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் தாய்நாடான போலந்திலிருந்து மட்டும் சுமார் ஒரு இலட்சம் மக்கள், இஞ்ஞாயிறு நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் சிலர் தபமுயற்சியாக, போலந்திலிருந்து உரோமைக்குக் கால்நடையாக வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன
ஏப்ரல்29,2011. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டோர், பெண்கள், மனித வாழ்வு போன்றவைகளுக்கு ஆதரவாக திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தம்மை அர்ப்பணித்து குரல் கொடுத்தது, இன்றைய இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது என்று இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
அகமதாபாத்தில் இயங்கும் “பிரஷாந்த்” என்ற மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதிக்கான மையத்தின் இயக்குனராகிய அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ், “திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இந்தியா மற்றும் இந்தியத் திருச்சபையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்” பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அனைத்துலகத் தொழிலாளர் தினத்தன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படுவது மிகவும் பொருத்தமானது என்றுரைத்த அக்குரு, 1981ம் ஆண்டு செப்டம்பரில் மனித உழைப்பு என்ற திருமடலை வெளியிட்டதிலிருந்து 2005ம் ஆண்டு அவர் இறக்கும் வரை கத்தோலிக்கச் சமூகப் போதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தார் என்றும் கூறினார்.
5. லிபியா மீதான நேட்டோ போர் அர்த்தமற்றது, இத்தாலிய அரசு பதவி விலக வேண்டும் – டிரிப்போலி ஆயர் மார்த்தினெல்லி
ஏப்ரல்29,2011. லிபியாவில் நேட்டோ கூட்டமைப்புப் படைகள் நடத்தும் போர் அறிவற்றதாக இருக்கின்றது, மக்கள் அமைதியை விரும்புகின்றனர், இத்தகைய போருக்கு அப்பாவி மக்கள் செய்தது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்ஸோ மார்த்தினெல்லி.
கடந்த இரவு முழுவதும் டிரிப்போலியில் குணடுவீச்சுகள் நடத்தப்பட்டன, அப்பாவி மக்கள் செய்வதறியாது தெருக்களில் இங்குமங்கும் ஓடுகின்றனர், இந்தப் போரை நிறுத்துவதற்குத் திருத்தந்தை அழைப்பு விடுக்க வேண்டும் என்றுரைத்த ஆயர், இந்தப் போர் தொடர்ந்து இடம் பெற்றால் லிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடையேயான இடைவெளி பெரிதாகி, எதிர்பார்த்திராத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
குண்டுகள் எதற்கும் தீர்வு சொல்லாது, இந்தப் போர் அர்த்தமற்றது, நேட்டோவும் புரட்சிக் குழுவினரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தி லிபிய அரசோடு தூதரக அளவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் ஆயர் கேட்டுக் கொண்டார்.
பெண்களும் குழந்தைகளும் தெருக்களில் அழுது கொண்டு ஓடுவதைக் காண முடிகின்றது, பல முஸ்லீம் பெண்கள் ஆலயத்துக்கு வந்து போரை நிறுத்துவதற்குத் திருத்தந்தையிடம் கூறுமாறு தன்னிடம் கேட்பதாக ஆயர் மார்த்தினெல்லி தெரிவித்தார்.
6. நைஜீரிய வன்முறைக்கு ஊழல் அரசியல் தலைவர்கள் முக்கிய காரணம் - ஆயர் கண்டனம்
ஏப்ரல்29,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த வாரத்தில் இடம் பெற்ற வன்முறையில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டிருக்கும் வேளை, அவ்வன்முறையில் ஊழல் அரசியல் தலைவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறினார்.
வடக்கு நைஜீரியாவின் சில மாநிலங்களில் இடம் பெற்ற அறிவில்லா வன்முறைகளும், கொலைகளும், அழிவுகளும் அந்நாட்டை தொடர்ந்து ஊழலில் வைத்திருக்கும் மக்களாலும் சக்திகளாலும் ஏற்பட்டன என்று ஓயோ ஆயர் Emmanuel Ade Badejo கூறினார்.
நைஜீரியாவில் வன்முறையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட Kaduna, Bauchi ஆகிய மாநிலங்கள் தவிர பிற இடங்களில் இச்செவ்வாயன்று மாநில ஆளுனர்கள் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இவ்வன்முறையால் ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
7. நாம் எல்லாருமே ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – தென் கொரிய ஆயர் Lazzaro
ஏப்ரல்29,2011. இயற்கைப் பேரிடர்கள், உள்நாட்டுப் போர் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள், குடியேற்றதாரத் தொழிலாளர்கள், வடகொரியர்கள் என எல்லாருமே ஒரே மனிதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் எல்லாருமே நம்மோடு சேர்ந்து வாழ்கின்றவர்கள் என்று தென்கொரிய ஆயர் Lazzaro You Heung-sik கூறினார்.
மே ஒன்றாந்தேதி தென் கொரியாவில் 97வது குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதார ஆணையத் தலைவரான ஆயர் Lazzaro You Heung-sik, கொரியர்கள் அனைவரும் இயேசுவின் அன்புக்கட்டளையைக் கடைபிடித்து வாழுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார் என்று கூறியுள்ளார்.
தென் கொரியாவில் குடியேற்றதாரத் தொழிலாளர் மற்றும் குடியேற்றதாரப் பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் இருப்பதையும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியத் திருச்சபையில் 2005ம் ஆண்டிலிருந்து மே ஒன்றாந்தேதியன்று குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment