1. கர்தினால் விதயத்தில் இறைபதம் அடைந்தார், திருத்தந்தையின் இரங்கல் செய்தி
2. உலகின் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல்: வத்திக்கான் உயர் அதிகாரி
3. ஐவரி கோஸ்டின் ஆயுதம் தாங்கிய மோதல்களில் அருட்பணியாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : திருப்பீடத் தூதர்
4. கர்தினால் Naguib: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இரண்டு நிலைப்பாடுகளை எகிப்து எதிர்நோக்குகிறது
5. இந்தியாவின் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளிநாடுகளில் வேலை செய்வோர் பலர் விடப்பட்டுள்ளனர்-கோவா தலத்திருச்சபை
6. இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கத்தோலிக்கப் பெண்கள் உறுதிமொழி
7. குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் : மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வது பேச்சு சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது
8. ஐ.நா. அறிக்கை : உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையிலே வாழச் செய்துள்ளது
9. எய்ட்ஸ் நோயைக் க்டடுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் வேண்டுகோள்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. கர்தினால் விதயத்தில் இறைபதம் அடைந்தார், திருத்தந்தையின் இரங்கல் செய்தி
ஏப்.01,2011: கேரளாவின் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான கர்தினால் மார் வர்கி விதயத்தில் (Varkey Vithayathil) இறைபதம் அடைந்ததையொட்டி தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் Kakkanad சீரோ-மலபார் ரீதி தலைமையக நிர்வாகி ஆயர் Mar Bosco Puthurக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினாலின் பிரிவால் வருந்தும் சீரோ-மலபார் திருச்சபையின் குருக்கள், துறவிகள் மற்றும் பொது நிலையினருக்குத் தனது செபத்துடன்கூடிய அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
சீரோ-மலபார் திருச்சபைக்கும் அகிலத் திருச்சபைக்கும் இவர் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைகளையும் அதில் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
இவ்வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்த கர்தினால் விதயத்தில், கேரளாவின் பாரூரில் 1927ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். இவர் உலக இரட்சகர் துறவு சபையில் சேர்ந்து 1954ல் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1996ல் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1999ல் எர்ணாகுளம் அங்கமாலி பேராயராகவும் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2001ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2005ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற பாப்பிறைத் தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கர்தினால் விதயத்தில். 2008 முதல் 2010 வரை இந்திய ஆயர் பேரவையின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
கர்தினால் விதயத்திலின் இறப்போடு திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 200. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 116. இவர்களில் இந்தியக் கர்தினால்களின் எண்ணிக்கை 5. இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 3.
2. உலகின் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல்: வத்திக்கான் உயர் அதிகாரி
ஏப்.01,2011: உலகில் இடம் பெறும் உலகாயுத மற்றும் அடிப்படைவாதப் போக்குகளுக்கு மாற்றாக இருப்பது பல்சமய உரையாடல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இன்றைய உலகில் காணப்படும் உலகாயுத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் உண்மையான சுதந்திரத்திற்கும் ஆன்மீக விழுமியங்களுக்கும் எதிரியாக இருக்கும்வேளை, அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கும் ஒன்றிணைந்து உழைப்பதற்கும் பல்சமய உரையாடலை “மிக உயரிய பாதையாக” கைக்கொள்ளலாம் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
புத்த மதத்தினர் சிறப்பிக்கும் வேசாக் (Vesakh) விழாவை முன்னிட்டு உலகின் எல்லாப் புத்த மதத்தினருக்குமென திருப்பீட பல்சமய உரையாடல் அவை வெளியிட்ட செய்தியில், இவ்விழா, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரவேண்டுமென்று கத்தோலிக்கர் செபிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அமைதி, உண்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் உறவு பற்றிக் குறிப்பிட்டு, உண்மையான அமைதியைத் தேடும் பாதையில் உண்மையைத் தேடுவதற்கான அர்ப்பணம் மிகவும் அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வேசாக் விழா ஜப்பானில் ஏப்ரல் 8ம் தேதியும், கொரியா, சீனா, தாய்வான் வியட்நாம் ஆகிய நாடுகளில் மே 10ம் தேதியும், தாய்லாந்து, இலங்கை, கம்போடியா பர்மா, லாவோஸ் ஆகிய நாடுகளில் மே 17ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, புத்தரின் பிறப்பு, அவர் விழிப்புணர்வு அடைந்தது, அவரின் இறப்பு ஆகியவைகளைக் குறிக்கின்றது.
“விடுதலையில் உண்மையைத் தேடுதல்: கிறிஸ்தவர்களும் புத்த மதத்தினரும் அமைதியில் வாழ” என்ற தலைப்பில் இச்செய்தி இவ்வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
3. ஐவரி கோஸ்டின் ஆயுதம் தாங்கிய மோதல்களில் அருட்பணியாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : திருப்பீடத் தூதர்
ஏப்.01,2011: மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் தற்போது இடம் பெற்று வரும் கடும் மோதல்களில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் கத்தோலிக்க அருட்பணியாளர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறார்கள் என்று அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha கூறினார்.
ஐவரி கோஸ்ட் நாட்டுத் தலைநகர் அபிஜான் காரித்தாஸ் இயக்குனர் Richard Kissi, இச்செவ்வாயன்று ஆயுதம் தாங்கிய குழுக்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பேட்டியளித்த பேராயர் Madtha, தற்சமயம் அந்நாட்டில் நடப்பதை உள்நாட்டுப் போர் என்று சொல்ல முடியாது, ஆனால் புரட்சிப்படைகள் முக்கிய நகரங்களைத் தாக்கி வருகின்றன என்றார்.
இந்த மோதல்களில் இரண்டு தரப்பினருமே பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களை மதிக்கின்றனர், எனினும் படைவீரர்கள் புரட்சிப்படைவீரர்களைத் தேடி குறைந்தது ஓர் ஆலயத்தில் நுழைந்துள்ளனர் என்றார் பேராயர்.
இதற்கிடையே, ஐவரி கோஸ்ட் நாட்டில் ஆலயங்களில் புகலிடம் தேடியுள்ள சுமார் பத்தாயிரம் அப்பாவி பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென அவ்விடங்களுக்கு ஐ.நா.அமைதிகாக்கும் படைகள் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் Duékoué நகர் பகுதியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.கூறியது.
4. கர்தினால் Naguib: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இரண்டு நிலைப்பாடுகளை எகிப்து எதிர்நோக்குகிறது
ஏப்.01,2011: இசுலாமியமா? சனநாயகமா? ஆகிய இந்த இரண்டு நிலைப்பாடுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலையைத் தற்போது எகிப்து நாடு எதிர்நோக்குவதாக அந்நாட்டு முதுபெரும் தந்தை கர்தினால் Antonios Naguib தெரிவித்தார்.
எகிப்தை முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்ததற்குப் பின்னர் அந்நாட்டின் நிலவரம் குறித்துப் பேட்டியளித்த கர்தினால் Naguib, தற்சமயம் நாடு, சுதந்திரம், சம உரிமைகள், சனநாயகம் ஆகியவைகளை நோக்கிச் செல்கின்றதா அல்லது இந்த விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாக இசுலாமிய நாடாக மாறும் நிலையில் இருக்கின்றதா என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றது என்றார்.
இந்த மார்ச் 19ம் தேதி நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில், சமய அடித்தளத்தினின்று அரசு நடவடிக்கைகளைப் பிரித்துப் பார்ப்பதற்கு மக்களில் ஒருவித தயக்கம் தெரிவது வெளிப்பட்டுள்ளது.
5. இந்தியாவின் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளிநாடுகளில் வேலை செய்வோர் பலர் விடப்பட்டுள்ளனர்-கோவா தலத்திருச்சபை
ஏப்.01,2011: இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளவேளை, வெளிநாடுகள் மற்றும் கப்பல்களில் வேலை செய்யும் கோவா மாநில மக்களில் பலர் இந்தப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கோவா மறைமாநில சமூகநீதி மற்றும் அமைதிப்பணிக்குழு இயக்குனர் அருட்பணி Valeriano Vaz குறை கூறினார்.
வெளிநாடுகள் வேலை செய்யும் கோவா மாநில மக்கள் இந்தப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடப்பட்டுள்ளவேளை, தற்போது கோவாவில் வேலைசெய்யும் குடியேற்றதாரர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்.
சரியாக எடுக்கப்படாத இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, பின்னாளில் அரசின் பல சலுகைத் திட்டங்களிலிருந்து கத்தோலிக்கர் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணமாக அமையக்கூடும் என்றும் அருட்பணி Valeriano Vaz எச்சரித்தார்.
இவ்வியாழனன்று வெளியான அறிவிப்பின்படி, இந்த மார்ச் முதல் தேதியோடு இந்தியாவின் புதிய மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடியே 10 இலட்சமாக அதிகரித்துள்ளது.
ஆயினும் கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 விழுக்காடாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு 17.64 விழுக்காடாகக் குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது என்று தெரிகிறது.
இப்போதைய இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உலக மக்கள்தொகையில் 17.5 விழுக்காடாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால் அதை விட அதிகமாக இந்தியாவின் மக்கள்தொகை உள்ளது.
ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 இலட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 இலட்சம்.
ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது எனவும் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது எனவும் இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதம் எனவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
6. இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கத்தோலிக்கப் பெண்கள் உறுதிமொழி
ஏப்.01,2011: இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகப் போர் ஒன்றை அறிவித்துள்ளனர் ஆஜ்மீர் மறைமாநிலக் கத்தோலிக்கப் பெண்கள்.
எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, தகவல் உரிமை பெறும் சட்டம் உள்ளிட்ட சமூக விவகாரங்கள் குறித்து இவ்வாரத்தில் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர் மறைமாநிலம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட கத்தோலிக்கப் பெண்கள் இவ்வாறு உறுதி எடுத்தனர்.
ஒவ்வொரு நாளும் பெண்சிசுக்கருக்கள் கருக்கலைப்பு செய்யப்படுவது பற்றியும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.
இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட இந்தியாவின் மக்கள்தொகை குறித்தப் புள்ளிவிபரங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் வீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலை 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைவான விகிதமாகும். உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன.
7. குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் : மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வது பேச்சு சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது
ஏப்.01,2011: இந்தியாவில் மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தைத் தடை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பேச்சுரிமைக்கு ஊறு விளைவிப்பதாய் இருக்கின்றது என்று குஜராத் தலத்திருச்சபைத் தலைவர்கள் குறை கூறினர்.
“மாபெரும் ஆன்மா: மகாத்மா காந்தியும் அவரது விடுதலைப் போராட்டமும்” (Great Soul: Mahatma Gandhi and his Struggle with India) என்ற தலைப்பில் Pulitzer விருது பெற்ற Joseph Lelyveld என்பவர் எழுதிய புத்தகம் விநியோகம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்கு குஜராத் அரசு திட்டமிட்டு வருகிறது.
அரசின் இந்நடவடிக்கை, இந்திய அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு முரணாக இருக்கின்றது என்று திருச்சபைத் தலைவர்கள் கூறினர்.
நமது நாட்டின் தந்தையை வெறுக்கத்தக்க விதத்தில் இந்தப் புத்தக ஆசிரியர் விமர்சித்துள்ளார் என்று குஜராத் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
8. ஐ.நா. அறிக்கை : உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையிலே வாழச் செய்துள்ளது
ஏப்.01,2011: உலகில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஆசிய-பிசிபிக் பகுதியில் ஒரு கோடியே 90 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சென்ற ஆண்டில் தங்கள் வறுமையிலிருந்து வெளிவருவதற்குத் தடையாய் இருந்ததென்று ஐ.நா.வின் புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
உணவு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் இந்த 2011ம் ஆண்டிலும் அம்மக்களை வறுமையிலே வைக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், நேபாளம் போன்ற நாடுகளில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கான ஐ.நா.வின் மில்லென்ய இலக்கு நிறைவேறுவதற்கு இந்த விலைவாசி உயர்வுத் தடங்கலாக இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்த விலை உயர்வுகளால் மேலும் ஒரு கோடி முதல் நான்கு கோடியே இருபது இலட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
9. எய்ட்ஸ் நோயைக் க்டடுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் வேண்டுகோள்
ஏப்.01,2011: உலகில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகள் தைரியமுடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
உலகில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுக்ள் ஆகியிருக்கும் வேளை வருகிற ஜூனில் இவ்விவகாரம் குறித்து ஐ.நா. பொதுஅவை கூடவிருப்பதையொட்டி வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் இவ்வாறு கேட்டுள்ளார் மூன். 182 நாடுகளில் எடுத்த ஆய்வின் அடிப்படையில் இவ்வறிக்கைத் தயாரிக்கப்பட்டது.
2001க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த 22 நாடுகள் உட்பட 33 நாடுகளில் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது 25 விழுக்காடு குறைந்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2010ம் ஆண்டின் இறுதியில் அறுபது இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment