Wednesday, 20 April 2011

Catholic News - hottest and latest - 18 April 2011

1.  தொழிற்நுட்பம் கடவுளுக்கு மாற்றுப் பொருளாக இருக்க முடியாது - திருத்தந்தை

2.  திருத்தந்தை - மத்ரித் உலக இளையோர் தினத்தில் பங்கு பெற அழைப்பு

3.  கொலம்பியாவில் வன்முறை முடிவுக்கு வர திருத்தந்தை வேண்டுகோள்

4  வருகிற மே மாதம் அயர்லாந்தில் நடைபெறும் தேர்தலையொட்டி அயர்லாந்து ஆயர் பேரவை விசுவாசிகளுக்கு விண்ணப்பம்

5.  லிபியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா. ஒப்பந்தம்.

6.  சர்க்கசில் குழந்தை தொழிலாளர்களுக்கு தடை.

7.  இந்தியாவில் இறந்து பிறக்கும் குழந்தைகள் அதிகம்

8.  ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம், உலக வங்கி பாராட்டு.


----------------------------------------------------------------------------------------------------------------
1. தொழிற்நுட்பம் கடவுளுக்கு மாற்றுப் பொருளாக இருக்க முடியாது - திருத்தந்தை

ஏப்ரல் 18, 2011. தொழிற்நுட்பம் கடவுளின் சக்திகளைத் தனக்கு வழங்கும் என்று மனிதன் நம்பினால் அவன் தனது தற்பெருமைக்கு விலை கொடுக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எச்சரித்தார்.
புனித வாரத்தின் தொடக்கமாகிய குருத்தோலை ஞாயிறுத் திருப்பலி மறையுரையில் இவ்வாறு எச்சரித்த திருத்தந்தை, கடவுளோடு மனிதனுக்கு உள்ள உறவு குறித்தும் இந்த உறவானது சிலநேரங்களில் தொழிற்நுட்பத்தால் எவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றது என்பது குறித்தும் விளக்கினார்.
இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் சுமார் ஐம்பதாயிரம் விசுவாசிகள் பங்கு கொண்ட திருப்பலியில், உலகின் தொடக்கமுதல், ஆண்களும் பெண்களும் கடவுளைப் போல் ஆக வேண்டும் என்ற ஆவலால் நிறைந்து தங்களின் சொந்த வல்லமையால் கடவுளின் வல்லமையை எட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள், இது  இன்றும்கூட உண்மையாக இருக்கின்றது என்றார் அவர்.
தொழிற்நுட்பத்தின் மாபெரும் முன்னேற்றங்கள் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன, அதேசமயம் தீமைகளுக்கான வாய்ப்புக்களையும் அதிகரித்துள்ளன என்றும் கூறிய திருத்தந்தை, அண்மை இயற்கைப் பேரிடர்கள் இவற்றை நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும் கூறினார்.
மனித சமுதாயம் சர்வ சக்தியும் படைத்தது அல்ல என்பதையும் இந்தப் பேரிடர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன என்ற திருத்தந்தை, மனிதன் கடவுளோடு நல்லுறவு கொள்ள விரும்பினால் தான் கடவுளைப் போல் மாற வேண்டும் என்ற தற்பெருமையை முதலில் அவன் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கிறிஸ்து வெற்றியோடு எருசலேமில் நுழைந்ததை நினைவுகூரும் விதமாக குருத்தோலைப் பவனி மேற்கொண்ட அவர், இந்தத் திருவழிபாடு வெறும் சடங்காக மட்டும் இருக்கின்றதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இந்தப் பவனி ஓர் ஆழமான ஆன்மீக அடையாளத்தைக் கொண்டுள்ளது, வாழும் கடவுளை நோக்கி இட்டுச் செல்லும் உன்னதப் பாதை வழியாக நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து பயணம் தொடர இது அழைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் கலந்து கொண்ட பெருமளவான இளையோர் உட்பட அனைத்து விசுவாசிகளும் இச்சனிக்கிழமை தனது 84வது பிறந்த நாளைச் சிறப்பித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

2.  திருத்தந்தை - மத்ரித் உலக இளையோர் தினத்தில் பங்கு பெற அழைப்பு

ஏப்ரல் 18,2011. ஞாயிறு திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை வழங்கிய மூவேளை  செப உரையில், வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் நடைபெற இருக்கும் உலக இளையோர் தினத்தில் பங்கு கொள்ளுமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.
இயேசு கிறிஸ்துவில் நடப்பட்டு கட்டப்படுவீர்கள், விசுவாசத்தில் உறுதியாக இருங்கள் என்ற இந்த இளையோர் தினக் கருப்பொருள் பற்றியும் குறிப்பிட்ட அவர், மத்ரித்தில் நாம் சந்திக்கும்வரை கடவுளுக்குப் பிரியமுள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள் என்றார்.
பல மொழிகளில் இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை, உள்ளார்ந்த அமைதியில் கடவுளின் குரலுக்குச் செவிமடுக்கவும், தூய இதயத்தோடு பிறரை நோக்கவும் அன்னை மரியாவிடமிருந்து கற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

3.  கொலம்பியாவில் வன்முறை முடிவுக்கு வர திருத்தந்தை வேண்டுகோள்

ஏப்ரல் 18, 2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வன்முறை முடிவுக்கு வரவும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, அந்நாட்டில் புனித வெள்ளியன்று வன்முறையில் பலியானவர்களுக்காகச் செபிக்கும் மக்களுக்கானத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கொலம்பிய ஆயர் பேரவை எடுத்துள்ள இந்த நல்ல முயற்சியில் பலர் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.
கொலம்பியாவில் புனித வெள்ளியை வன்முறையில் பலியானவர்களுக்காகச் செபிக்கும் நாளாக அர்ப்பணித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை.
இது குறித்துப் பேசிய ஆயர் பேரவை பொதுச் செயலர் ஆயர் ஹூவான் விசென்த்தே கோர்தோபா, கொலம்பியாவின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் வன்முறை பல்வேறு முறைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

4  வருகிற மே மாதம் அயர்லாந்தில் நடைபெறும் தேர்தலையொட்டி அயர்லாந்து ஆயர் பேரவை விசுவாசிகளுக்கு விண்ணப்பம்

ஏப்ரல் 18, 2011. வருகிற மே மாதம் 5ம் தேதி அயர்லாந்தில் நடைபெறும் தேர்தலில் வறுமை குறித்த கேள்விகளை, சிறப்பாக வறுமையில் வாடும் சிறார் குறித்த கேள்விகளை மக்கள் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அயர்லாந்து ஆயர் பேரவை விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டது.
"ஆபத்திலிருந்து நம்பிக்கை நோக்கி: பொதுவான நலனுக்காக உழைப்பது" என்ற தலைப்பில் அயர்லாந்து ஆயர் பேரவையின் சமுதாய விவகாரங்கள் பணிக்குழு இவ்வியாழனன்று Belfast நகரில் நடத்திய ஒரு கருத்தரங்கில் இந்த வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.
உலகில் உருவாகியுள்ள பொருளாதாரச் சரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று என்றும், இந்தச் சரிவிலிருந்து வருங்காலத்தைக் காப்பது நம் கடமை என்றும் சமுதாய விவகாரங்கள் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Noël Treanor கூறினார்.
வட அயர்லாந்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் என்று சுட்டிக் காட்டிய ஆயர் Treanor, இது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு துன்பம் என்று கூறினார்.
இச்சூழலில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்தப் பிரச்சனைகளை மனதில் கொண்டு தன் மனசாட்சியின் அடிப்படையில் பொது நலனை முன்னிறுத்தும் முயற்சிகளுக்கு வாக்களிக்குமாறு ஆயர் Treanor கேட்டுக் கொண்டார்.

5. லிபியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா. ஒப்பந்தம்.

ஏப்ரல் 18, 2011.   உள்நாட்டுப் போரால் துன்ப‌ங்க‌ளை அனுப‌வித்து வ‌ரும் லிபியாவில் ம‌னிதாபிமான‌ப் ப‌ணிக‌ளை மேற்கொள்ள‌ அர‌சுட‌ன் ஒப்பந்த‌ம் ஒன்றை உருவாக்கியுள்ள‌தாக‌ அறிவித்தார் ஐநா பொதுச்செய‌ல‌ர் பான் கி மூன்.
ம‌னிதாபிமானப் ப‌ணிக‌ள் த‌லைந‌க‌ர் Tripoli-யிலிருந்து செய‌ல்ப‌டும் என்றார் அவ‌ர்.
இத‌ற்கிடையே, புர‌ட்சியாள‌ர்க‌ள் வ‌ச‌ம் இருக்கும் Misrata ந‌க‌ரிலும் ம‌னிதாபிமானப் ப‌ணிக‌ளுக்கான‌ மைய‌ம் ஒன்றை ஆர‌ம்பிக்க‌ ஐநாவுட‌ன் ஒப்பந்த‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ அர‌சின் அதிகார‌ப்பூர்வப் பேச்சாள‌ர் Moussa Ibrahim கூறினார்.
மூன்று இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் தொகையைக் கொண்ட‌ இந்ந‌க‌ரில் உண‌வு ம‌ற்றும் ம‌ருத்துவ‌ உத‌விக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வும், ம‌க்க‌ள் பாதுகாப்புட‌ன் வெளியேற‌வும் இவ்வொப்ப‌ந்த‌ம் வ‌ழி செய்கிற‌து.

6. சர்க்கசில் குழந்தை தொழிலாளர்களுக்கு தடை.

ஏப்ரல் 18, 2011.   சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தவும், அவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டவும் இந்திய உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
இத்த‌டை உத்த‌ர‌வை இத்திங்களன்று வ‌ழ‌ங்கிய‌ உச்ச நீதி ம‌ன்ற‌ம், ஏற்க‌ன‌வே ச‌ர்க்க‌சில் ப‌ணிய‌ம‌ர்த்த‌ப்ப‌ட்டுள்ள‌ சிறார்க‌ள், அங்கிருந்து மீட்க‌ப்ப‌ட்டு அவர்க‌ளுக்கான‌ ம‌றுவாழ்வுப் ப‌ணிக‌ள் துவ‌க்க‌ப்ப‌ட‌வேண்டும் என‌ அரசுக்கு ஆணை பிற‌ப்பித்துள்ள‌து.
14 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌ சிறார் ப‌ணியில் அம‌ர்த்த‌ப்ப‌டுவ‌தை இந்திய‌ ச‌ட்ட‌ம் த‌டைச்செய்கின்ற போதிலும், ச‌ர்க்க‌சில் ப‌ணிபுரிவ‌த‌ற்கு க‌டந்த‌ ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்பு வ‌ரை அனும‌தி வ‌ழ‌ங்கியிருந்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

7.  இந்தியாவில் இறந்து பிறக்கும் குழந்தைகள் அதிகம்

ஏப்ரல் 18, 2011. ஒவ்வொரு நாளும் உலகில் 7000 குழந்தைகள் பிரசவத்திலேயே இறந்து பிறக்கின்றனர் என்றும் இந்த மரணங்களில் 98 விழுக்காடு வறிய, மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சமுதாயத்தினர் மத்தியிலேயே நிகழ்கிறதென்றும் அண்மையில் வெளியான ஓர் மருத்துவ ஆய்வறிக்கை  கூறுகிறது.
பிரசவத்தின்போது, இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று பிரிட்டிஷ் மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், இறந்து பிறக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையான 18 இலட்சத்தில் 66 விழுக்காடு மரணங்கள் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, சீனா, வங்கதேசம், காங்கோ, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், தான்சானியா ஆகிய 10 நாடுகளில் ஏற்படுவதாக அவ்வாய்வு கூறுகிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் 50 விழுக்காடு மரணங்களுக்குக் காரணமாகின்றன.
இந்தியாவில், மாநிலத்துக்கு மாநிலம் இந்த இறப்பு வீதம் மாறு படுகிறது. அதாவது, ஆயிரம் குழந்தைகளுக்கு 22 முதல் 66 குழந்தைகள் வரையான குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன.
இறந்து பிறக்கும் குழந்தைகளின் மரணங்களில் சுமார் 50 விழுக்காடு,  பிரசவ நேரத்தில் தான் ஏற்படுகிறதென்றும், சிக்கலான நேரத்தில் தரமான மருத்துவ வசதி கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமென்றும் கூறப்படுகிறது.
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத கிராமப் புறங்களில் தான், இந்த இறப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் தகுந்த மருத்துவ உதவிகளைப் பெருக்கினால், இந்த மரணங்கள் 2020ம் ஆண்டிற்குள் பாதி அளவு குறைக்க முடியும் என்றும் லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

8.  ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம், உலக வங்கி பாராட்டு.

ஏப்ரல் 18, 2011.   உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாகச் சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன. இதில், இந்தியாவும் ஒன்று  என,  உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளன.
உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாகச் சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வரும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஏழ்மையை ஒழிப்பதில் அபார முன்னேற்றம் கண்டுள்ளதுடன், மேம்பட்ட பொருளாதார கொள்கைகள், விரைவான வளர்ச்சிகளால், 2015ம் ஆண்டிற்குள் அவை இன்னும் மேம்பட்ட வளர்ச்சியைப் பெறும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் ஒரு நாளைக்கு 56 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 2015ல், 88 கோடியே 30 இலட்சமாக இருக்கும். இதுவே, 2005ல், 140 கோடியாகவும், 1990ல், 180 கோடியாகவும் இருந்தது.

No comments:

Post a Comment