Tuesday, 12 April 2011

Catholic News - hottest and latest - 11 April 2011

1.      தாய்நாட்டிற்கானப் பணிகளும் திருச்சபைக்கான அர்ப்பணமும் ஒத்திணங்கிச் செல்லமுடியும் என்கிறார் பாப்பிறை

2.      திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.

3.      சீனத்திருச்சபையின் பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகிறது சிறப்பு அவை.

4.    தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு துன்புறும் பலருக்காக புனித வாரப் புதனன்று மேற்கொள்ளப்படும் சிறப்புச் செபங்கள்

5.      விவிலியம் கிழிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறைகள் வேண்டாம் என்கிறது பாகிஸ்தான் திருச்சபை.

6.      உல‌கில் அக‌திக‌ளுக்கான‌ அக்க‌றை குறைந்து வ‌ருவ‌தாக‌க் க‌வ‌லையை வெளியிட்டுள்ள‌து JRS அமைப்பு.


----------------------------------------------------------------------------------------------------------------


1.  தாய்நாட்டிற்கானப் பணிகளும் திருச்சபைக்கான அர்ப்பணமும் ஒத்திணங்கிச் செல்லமுடியும் என்கிறார் பாப்பிறை

ஏப்ரல் 11, 2011.   அறிவியல் துறைகளிலும் ஆன்மீக விடயங்களிலும் சிறந்து விளங்கிய குரோவேசிய இயேசு சபை குரு Ruđer Josip Boškovićக்கென இவ்வாண்டை அர்ப்பணிப்பதாக குரோவேசிய அரசு அறிவித்துள்ளது, அறிவிய‌லும் விசுவாசமும், தாய்நாட்டிற்கான பணிகளும் திருச்சபைக்கான அர்ப்பணமும் ஒத்திணங்கிச் செல்லமுடியும் என்பதை வெளிக்காட்டி நிரூபிப்பதாய் உள்ளது  என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான குரோவேசிய நாட்டின் புதியதூதுவர் Filip Vučakடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை, ஓர் இயற்பியலாளராக, வானவியலாளராக, கணிதஇயல் வல்லுனராக, கட்டிடக்கலை நிபுணராக, மெய்யியலாளராக, அரசியல் வல்லுனராக விளங்கிய இயேசுசபை குரு Bošković,  இவ்வுலகில் சாதிக்க வேண்டியவைகளைச் சாதித்து அதேவேளை, ஒரு விசுவாசியாகவும் நாம் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதைக் காட்டி நிற்கிறார் என்றார்.
ஐரோப்பிய சமுதாய அவையில் விரைவில் முழுமையாக ஐக்கியமாக உள்ள குரோவேசிய நாடு, தனக்கேயுரிய வரலாறு, மத மற்றும் கலாச்சார தனித்தன்மைகளுடன் ஐரோப்பிய சமுதாய அவையில் நல்ல தாக்கங்களைக் கொணர முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை. எக்காலத்திலும் ஐரோப்பிய சமுதாயம் தன் கிறிஸ்தவ மூலத்தை மறந்து விடக்கூடாது என்ற விண்ணப்பத்தையும் அவர் முன்வைத்தார்.
இன்னும் சில வாரங்களில் தான் குரோவேசிய நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்தும் திருத்தந்தை, திருப்பீடத்திற்கான குரோவேசியாவின் புதிய தூதுவருடன் ஆன தன் சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார். வரும் ஜூன் மாதத்தின் 4 மற்றும் 5 தேதிகளில் அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொள்கிறார் பாப்பிறை.

2.   திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.

ஏப்ரல் 11, 2011.   பாவத்திலிருந்து விடுதலைப் பெற்ற ஆன்மீக வாழ்வு மற்றும் இறப்பிற்கு பின்னான வாழ்வு, என இயேசு கொணர்ந்த வாழ்வில் மேன்மேலும் விசுவாசம் கொண்டு வாழுமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தை மேற்கோள் காட்டி உயிர்த்தெழுதல் பற்றி தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையில் குறிப்பிட்ட பாப்பிறை, கிறிஸ்தவர்கள் மத்தியிலும் கூட உயிர்த்தெழுதல் குறித்த விசுவாசம், சந்தேகங்களையும் குழப்பத்தையும் எதிர்கொள்வதுண்டு, ஏனெனில் இது பகுத்தறிவு வாதங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்று உரைத்தார்.
மரணம் என்பது ஒரு சுவர் போன்று அதற்கு பின்னால் இருப்பதை மறைத்து நிற்கின்றது, இருப்பினும் நம் இதயம் அச்சுவரையும் தாண்டிச்செல்ல ஆவல் கொள்கின்றது என்றார் திருத்தந்தை.
சாவு எனும் சுவரை தகர்த்தெறிந்த கிறிஸ்து மீது மரணத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்ற திருத்தந்தை, ஆனால் பாவம் எனும் ஆன்மீகச் சாவே அவருக்கு மிகப்பெரும் துன்பகர போராட்டத்தை வழங்கியது என்று கூறினார்.
இந்தச் சாவை தோல்வியுறச்செய்யவே இயேசு கிறிஸ்து மரணத்திற்கு தன்னை கையளித்தார், அவரின் உயிர்ப்பு என்பது முந்தைய வழ்விற்குத் திரும்பிச்செல்லும் ஒன்றல்ல, மாறாக ஒரு புதிய உலகிற்கும் உண்மைத்தன்மைக்கும் வழி திறப்பதாகும் என்றார்.
பாஸ்கா மறையுண்மையை திருச்சபையோடு இணைந்துக் கொண்டாட நம்மைத் தயாரித்து வரும் இவ்வேளையில், கிறிஸ்துவின் வாக்குறுதிகளிலான நம் விசுவாசத்தைப் புதுப்பிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்து தன் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை.

3.   சீனத்திருச்சபையின் பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகிறது சிறப்பு அவை.

ஏப்ரல் 11, 2011.   சீனத்திருச்சபையின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கென திருத்தந்தையால் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவை தற்போது இத்திங்கள் முதல் வத்திக்கானில் மூன்று நாள் கூட்டத்தை நடத்தி வருகின்றது.
சீனத்திருச்சபையுடன் தொடர்புடைய திருப்பீட அவைகளின் தலைவர்கள் மற்றும் சீனத்திருச்சபைப் பிரதிநிதிகளுடன் இக்கூட்டம் இடம்பெற்று வருவதாக அறிவிக்கிறது திருப்பீடப் பத்திரிகைத்துறை.
ஏற்கனவே 2008, 2009 மற்றும் 2010 மார்ச் மாதங்களில் சீனத்திருச்சபை குறித்து கூடி விவாதித்துள்ள இவ்வவை, இந்த நான்காம் கூட்டத்தில், சீனாவின் இன்றைய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் நற்செய்தியை எடுத்துரைப்பதில் தலத்திருச்சபை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதித்து வருகிறது.

4.    தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு துன்புறும் பலருக்காக புனித வாரப் புதனன்று மேற்கொள்ளப்படும் சிறப்புச் செபங்கள்

ஏப்ரல் 11,2011. ஆசியா பீபி உட்பட தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு துன்புறும் பலருக்காக வருகிற ஏப்ரல் 20ம் தேதி புனித வாரப் புதனன்று பாகிஸ்தானிலும் இன்னும் உலகின் பிற நாடுகளிலும் சிறப்புச் செபங்கள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தானில் உள்ள Masihi அமைப்பு FIDES செய்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளது. இந்த முயற்சி குறித்த அனைத்து விவரங்களும் இச்செவ்வாயன்று வெளியிடப்படும் என்றும் இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் விசுவாசிகள் கையில் உள்ள ஒரு தலை சிறந்த ஆயுதம் செபம் என்றும், இதன் வழியே கடவுளின் செயல்பாடுகளைப் பாகிஸ்தானும், இந்த உலகமும் காணும் என்றும் இந்த முயற்சி குறித்து பேசிய Multan ஆயர் Andrew Francis கூறினார்.
Masihi அமைப்பினர் FIDES செய்தி நிறுவனத்தின் மூலம் இந்த செப நாளுக்கென உலகின் பல கத்தோலிக்க, மற்றும் கிறிஸ்தவ அமைப்பினருக்குத் தங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
ஆசியா பீபியின் காவல் தூதர்கள் என்று அழைக்கப்படும் ஒரு செபக் குழுவையும் சேர்த்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள பல துறவறக் கன்னியர்கள் சபையினர் இந்த முயற்சிக்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 20ம் தேதி சமயங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Jean Louis Tauran தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் இந்த செப நாள் இத்தாலியில் ஆரம்பமாகும் என்று FIDES செய்தி கூறுகிறது.

5.    விவிலியம் கிழிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறைகள் வேண்டாம் என்கிறது பாகிஸ்தான் திருச்சபை.

ஏப்ரல் 11, 2011.   அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் ஒரு சிறு குழுவால் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்மையில் லாகூர் பேராலயம் முன் விவிலியப்பிரதி ஒன்று கிழிக்கப்ப்பட்டது குறித்து கிறிஸ்தவர்கள் எவரும் வன்முறைகளிலோ எதிர்ப்புப் போராட்டங்களிலோ ஈடுபடக்கூடாது என பாகிஸ்தான் தலத்திருச்சபை அழைப்பு விடுத்துள்ளது.
முகமது அக்தர் என்பவர் அண்மையில் லாகூர் பேராலயம் முன் விவிலியப்பிரதி ஒன்றை கிழித்தெறிந்ததைப் பற்றிக் குறிப்பிட்ட அந்த உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு ஆன்ட்ரூ நிசாரி, பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு வந்துள்ள இந்த சோதனையிலும் இயேசுவின் பாடுகளை பொறுமையுடன் பின்பற்றி வெற்றி காண்போம் என விண்ணப்பித்ததுடன், எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம் என்ற தீர்மானத்தை கிறிஸ்தவர்கள் எடுக்கவேண்டும் என்ற‌ விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
அக்தரின் இந்த நடவடிக்கையை பெரும் பிரச்னையாக்க தாங்கள் விரும்பவில்லை என்ற லாகூர் முன்னாள் பேராயர் இலாரன்ஸ் சல்தான்ஹா, கிறிஸ்தவர்களுக்கு எதிரான விரோதப்போக்குகள் பாகிஸ்தானில் பெருகி வருவது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவிலியத்தை லாகூர் பேராலயம் முன் எரித்த அக்தர் என்ற இஸ்லாமியர் தற்போது காவல்துறையால் தேவ நிந்தனைக குற்றத்திறகாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவரின் இச்செயலை மன்னித்து விட்டதாக தலத்திருச்சபை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6.    உல‌கில் அக‌திக‌ளுக்கான‌ அக்க‌றை குறைந்து வ‌ருவ‌தாக‌க் க‌வ‌லையை வெளியிட்டுள்ள‌து JRS அமைப்பு.

ஏப்ரல் 11, 2011.   அடைக்கலம் தேடி இங்கிலாந்துக்குள் நுழைவோர்களுக்கானப் பணிகளில் 60 விழுக்காட்டிற்கு மேல் தற்போது அந்நாடு குறைத்துள்ளது, அகதிகளில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக கவலையை வெளியிட்டுள்ளது இயேசு சபையினரின் அகதிகளுக்கான அமைப்பு.
நிதி நெருக்கடிகளால் செலவீனங்களைக் குறைப்பதற்காக இந்நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும், ஏழை எளியோராய் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கான நம் கடமைகள் மறக்கப்பட்டுவிடக்கூடாது என்றார் இயேசு சபை குரு Stephen Powers.
JRS  என்ற இயேசு சபை அகதிகள் அமைப்பைச் சேர்ந்த இவர் பேசுகையில், இன்றைய உலகில் பல நாடுகளின் அகதிகள் பிரச்னைகள், பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வராததாலேயே அவைகளுக்கு தீர்வு கிட்டிவிட்டது என்று அர்த்தம் கொண்டுவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
லிபியாவிலிருந்து வெளியேறி வரும் மக்கள், எரித்ரியா மற்றும் டார்ஃபூர் அகதிகள், ஜப்பான் சுனாமியாலும் ஐவரி கோஸ்ட் போராலும் குடிபெயர்ந்துள்ள மக்கள் போன்றவர்களின் துன்பநிலைகள் பற்றியும் குறிப்பிட்ட இயேசு சபை குரு Powers,  அக‌திக‌ளுக்குத் த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ உத‌விக‌ளை ஒவ்வொருவ‌ரும் ஆற்றுவ‌த‌ன் மூல‌ம் மிக‌ப்பெரும் மாற்ற‌த்தை இவ்வுல‌கில் ந‌ம்மால் கொண்டு வ‌ர‌முடியும் என‌வும் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...