Sunday, 17 April 2011

Catholic News - hottest and latest - 15 April 2011

1. சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவை ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை

2. சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவை வெளியிட்ட அறிக்கை குறித்து திருப்பீடப் பேச்சாளர்

3. சர்க்கஸ் உலக நாளையொட்டி திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான அவை வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி

4. திருத்தந்தை முன்னின்று நடத்தும் புனிதவாரத் திருச்சடங்குகள் குறித்த விவரங்கள்

5. ஏப்ரல் 16 அன்று தன் 84வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

6. அண்ணா ஹசாரேயின் முயற்சிகளிலிருந்து கிறிஸ்தவத் தலைவர்கள் விலகல்

7. புனித வெள்ளியன்று மும்பையில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் 20000 கிறிஸ்தவர்கள் பங்கு பெறுவர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவை ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை

ஏப்ரல் 15,2011. திருச்சபையின் விசுவாசத்தைக் காக்கும் முயற்சியில் உயிரை இழக்கவும் மக்கள் தாயாராக இருக்க வேண்டும் என்று சீன கத்தோலிக்க மக்களுக்கு வத்திக்கான் அழைப்பு விடுத்துள்ளது.
இத்திங்கள் முதல் புதன் வரை வத்திக்கானில் நடைபெற்ற சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவையின் நான்காம் ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2007ம் ஆண்டு உருவாக்கிய திருப்பீடத்தின் இந்தச் சிறப்பு அவை, இவ்வாரத் துவக்கத்தில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் தற்போது சீனாவில் நிலவி வரும் இறுக்கமான சூழ்நிலையை மனதில் கொண்டு 11 அம்சங்கள் அடங்கிய ஓர் அறிக்கையை இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.
சீனக் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் வளர்க்கும் படிப்பினைகளில் கவனம் செலுத்துவதும், வழிபாட்டுத் தலங்களை எழுப்புவதும் ஆயர்களின் கடமைகள் என்று எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, குருக்கள் அன்புக்கும், மன்னிப்பிற்கும் எடுத்துக்காட்டுகளாய் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சீன அரசுடன் மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தை முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என்பதையே திருத்தந்தை விரும்புகிறார் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சீனாவில் உழைத்த இயேசு சபை குரு மத்தேயோ ரிச்சியை முத்திபேறு பெற்றவராக உயர்த்தும் முயற்சிகளுடன், Paul Xu Guangqiயையும் முத்திபேறு பெற்றவராக உயர்த்துவதற்கு Shanghai மறைமாவட்டம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்து இவ்வறிக்கை தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளது.


2. சீனத் திருச்சபைக்கான திருப்பீட அவை வெளியிட்ட அறிக்கை குறித்து திருப்பீடப் பேச்சாளர்

ஏப்ரல் 15,2011. முறையான அனுமதியின்றி சீனத் திருச்சபையில் ஆயர் ஒருவர் திருநிலைப்படுத்தப்பட்டது, மற்றும் சீனத் திருச்சபை மீது தன் தலைமைத்துவத்தைப் புகுத்த முயலும் அவ்வரசின் முயற்சி ஆகியவைகளால் கடந்த சில மாதங்களாக சீனக் கத்தொலிக்கர்களிடையே குழப்பங்களும் பதட்ட நிலைகளும் நிலவி வருவதாகக் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi.
முறையான அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட ஆயர் திருநிலைப்பாடு என்ற காயம் குணப்படுத்தப்பட்டு, திருத்தந்தையின் நம்பிக்கைக்குரியதாக சீனத் தலத் திருச்சபை மாறுவதுடன், தலத் திருச்சபை மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்று அருள்தந்தை Lombardi கேட்டுக் கொண்டார்.
சீனக் கத்தோலிக்க நிலைகள் குறித்து ஆராய திருத்தந்தையால் உருவாக்கப்பட்ட அவை அந்நாட்டு கத்தோலிக்கர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள செய்திபற்றி குறிப்பிட்டத் திருப்பீடப் பேச்சாளர், ஒருவர் மற்றவருக்கான மதிப்புடன் கூடிய பேச்சு வார்த்தைகளால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், பேச்சு வார்த்தைகளுக்குத் திருப்பீடம் எப்போதும் தயாராகவே உள்ளதென்றும் எடுத்துரைத்தார்.


3. சர்க்கஸ் உலக நாளையொட்டி திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான அவை வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி

ஏப்ரல் 15,2011. சர்க்கஸ் கேளிக்கைகளுக்கான உலக நாளையொட்டி திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான அவை சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
மனித கலாச்சாரத்தின் ஒன்றிணைந்த ஒரு பகுதியாக சர்க்கஸின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த உலக நாள் இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்படுகிறது என்று இத்திருப்பீட அவையின் செய்தி கூறுகிறது.
சர்க்கஸ் என்பது ஒரு கல்வி புகட்டும் அமைப்பாக, குறிப்பாக, சிறார்களுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் திருச்சபை ஏற்றுக் கொள்கிறது எனக்கூறும் பேராயர் Antonio Mario Veglioவின் செய்தி, சமூக வாழ்வுக்கும் படைப்பு மற்றும் கற்பனை வளத்திற்கும் சர்க்கஸ் வழங்கி வரும் ஊக்கத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
சர்க்கஸில் ஈடுபடும் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்து நாடுகளுக்கும் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் ஒரு நாளாக இவ்வுலக நாள் இருக்கும் என்ற நம்பிக்கையையும் திருப்பீடத்தின் குடியேற்றதாரருக்கான அவையின் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.


4. திருத்தந்தை முன்னின்று நடத்தும் புனிதவாரத் திருச்சடங்குகள் குறித்த விவரங்கள்

ஏப்ரல் 15,2011. திருத்தந்தை முன்னின்று நடத்தும் புனிதவாரத் திருச்சடங்குகள் குறித்த விவரங்களைத் திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகம் இவ்வியாழனன்று வெளியிட்டது.
வருகிற ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குருத்துக்களை மந்திரித்த பின் நடைபெறும் ஊர்வலத்தையும், அதைத் தொடரும் திருப்பலியையும் திருத்தந்தை முன்னின்று நடத்துவார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் காலத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் குருத்து ஞாயிறு உலக இளையோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு கொண்டாடப்படும் 26வது உலக இளையோர் நாளுக்கென வழங்கப்பட்டுள்ள மையக் கருத்து: "இயேசு கிறிஸ்துவில் வேரூன்றி, உறுதியான விசுவாசத்தில் கட்டப்படுவோம்" என்று கூறப்பட்டுள்ளது.
புனித வியாழனன்று காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை எண்ணெய் மந்திரிக்கும் Chrism திருப்பலியையும், மாலையில் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலியையும் திருத்தந்தை நடத்துவார்.
புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவில் இயேசுவின் பாடுகள் திருச்சடங்கையும் இரவு 9.15 மணிக்கு Colosseum அரங்கில் சிலுவைப் பாதையையும் திருத்தந்தை நடத்துவார்.
புனித சனிக்கிழமை இரவு 9 மணிக்குப் பாஸ்கா திருவிழிப்புத்  திருச்சடங்குகளையும், உயிர்ப்பு ஞாயிறு காலை 10.15 மணிக்குப் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருப்பலியையும் நிகழ்த்துவார். இத்திருப்பலிக்குப் பின்னர் திருத்தந்தை நகருக்கும் உலகுக்கும் என்ற "Urbi et orbi" செய்தியை நடுப்பகல் வேளையில் வழங்குவார்.


5. ஏப்ரல் 16 அன்று தன் 84வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

ஏப்ரல் 15,2011. இச்சனிக்கிழமை ஏப்ரல் 16 அன்று தன் 84வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அனுப்புவதற்காக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவை ஒரு மின் வாழ்த்துமடலைத் தயாரித்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன் திருத்தந்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் ஒரு தொடர்ச்சியாகவும், அவருக்குத் தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதேன்று ஆயர்கள் பேரவையின் சார்பில் பேசியவர் கூறினார்.
Facebook என்ற இணையத்தள வசதியின் மூலம் திருத்தந்தைக்கு வாழ்த்துக்களையும், செபங்களையும் அனுப்பலாம் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி புனித சனிக்கிழமையன்று பிறந்த Joseph Alois Ratzinger அதே நாளில் திருமுழுக்கும் பெற்றார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட கர்தினால் Ratzinger, திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலுக்குப் பின் திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.


6. அண்ணா ஹசாரேயின் முயற்சிகளிலிருந்து கிறிஸ்தவத் தலைவர்கள் விலகல்

ஏப்ரல் 15,2011. ஊழலை ஒழிப்பதற்கென புது டில்லியில் சாகும் வரை உண்ணா நோன்பை மேற்கொண்ட அண்ணா ஹசாரேயின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தக் கிறிஸ்தவத் தலைவர்களும், பல சமூக ஆர்வலர்களும் தற்போது அவரது முயற்சிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர்.
ஊழலை எதிர்த்துப் போராட்டத்தை ஆரம்பித்த அண்ணா ஹசாரே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துரைத்தது இந்தக் கருத்து வேறுபாட்டிற்கு காரணம் என்று UCAN செய்தி கூறுகிறது.
2002ம்  ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடைபெற்ற கலவரத்தில் 2000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட பொது, அந்தக் கலவரத்தில் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்ற முறையில், ஊழல் ஒழிப்புப் போராட்டத்திற்கு என் முழு அர்ப்பணமும் உண்டு எனினும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் நச்சு சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதையும் அதே மூச்சில் சொல்லிக்கொள்ள விழைகிறேன் என்று புது டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செச்சாவோ கூறினார். 
ஊழலில் ஊறிப்போயிருக்கும் குஜராத் அரசைத் தலைமையேற்று நடத்தும் நரேந்திர மோடியை அண்ணா ஹசாரே பாராட்டியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்றும், ஊழலுக்கு எதிராக அவர் மேற்கொண்ட இந்த நாடு தழுவிய போராட்டத்தின் சக்தியை இந்த பாராட்டு வெகுவாகக் குறைத்துள்ளது என்றும் மனித உரிமை ஆர்வலாரான இயேசு சபைக் குரு செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்குத் தன் ஆதரவை அளித்து வந்த புகழ்பெற்ற நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், நரேந்திர மோடியை ஹசாரே புகழ்ந்ததையடுத்து, தன் ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.


7. புனித வெள்ளியன்று மும்பையில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் 20000 கிறிஸ்தவர்கள் பங்கு பெறுவர்

ஏப்ரல் 15,2011. வருகிற புனித வெள்ளியன்று மும்பையில் நடைபெறவுள்ள மௌன ஊர்வலத்தில் 20000 கிறிஸ்தவர்கள் பங்கு பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி, புனித வெள்ளியன்று மேற்கொள்ளப்படும் உண்ணா நோன்பு, மற்றும் செபங்களுடன் இந்த மௌன ஊர்வலமும் மேற்கொள்ளப்படும் என்றும், ஆறு மைல் நீளமான இந்த ஊர்வலம் திரு இருதய ஆலயத்திலிருந்து கிளம்பி, புனித சார்லஸ் மடத்தில் முடிவடையும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வன்முறைகளில் பலியான, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மேற்கொள்ளப்படும் இந்த ஊர்வலத்தில் மும்பையில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளும் பங்கேற்கும் என்று தெரிகிறது.
கொடுமைகளுக்குள்ளாகி, இறுதியில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் புனித வெள்ளியன்று இந்தியாவிலும், இன்னும் உலகின் பல நாடுகளிலும் இன்றைய காலக் கட்டத்தில் கிறிஸ்தவர்கள் என்பதால் துன்பங்களைத் தாங்கி வரும் பல்லாயிரம் மக்களை இந்த மௌன ஊர்வலத்தில் நினைவுகூரவுள்ளோம் என்று ஊர்வலத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான Joseph Dias கூறினார்.
2011ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து, ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதைக் காண முடிகிறதென்றும் கிறிஸ்தவர்கள் எதிர் தாக்குதல்களில் ஈடுபாடாமல் இருப்பதால், அவர்கள் வன்முறைகளுக்கு எளிதில் இலக்காகின்றனர் என்றும் Joseph Dias விளக்கினார்.

No comments:

Post a Comment