Friday, 15 April 2011

Catholic News - hottest and latest - 13 April 2011

1. மெல்பர்ன் நகரில் நடைபெறும் மூன்றாவது தேசிய குடும்ப மாநாட்டிற்குத் திருத்தந்தை வழங்கிய வீடியோ செய்தி

2. 26வது உலகக் கத்தோலிக்க இளையோர் நாளுக்கான மெய்ப்புப் பணி வழிகாட்டுதல் நூல் அறிமுகம்

3. லிபியாவில் அமைதியை உருவாக்க இளையோரின் எண்ணங்களுக்கும் செவிமடுக்க வேண்டும் - Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி

4. மங்களூரில் சிறார் இல்லங்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல சமயங்களின் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

5. எகிப்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால், கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகள்

6. இயற்கைப் பேரழிவுகள் ஜப்பான் நாட்டு மக்களை மீண்டும் ஆன்மீக வழிகளுக்குத் திருப்பியுள்ளது டோக்யோவில் பணி புரியும் இறைபணியாளர்

7. பொலிவியாவில் 20 இலட்சம் குழந்தைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்

8. ஐ.நா.அமைப்பு கொண்டாடிய மனிதகுலத்தின் விண்வெளி பயணத்திற்கான முதல் அகில உலக நாள்

----------------------------------------------------------------------------------------------------------------
மெல்பர்ன் நகரில் நடைபெறும் மூன்றாவது தேசிய குடும்ப மாநாட்டிற்குத் திருத்தந்தை வழங்கிய வீடியோ செய்தி

ஏப்ரல் 13, 2011. ஒவ்வொருவரின் தனிப்பட்டக் குடும்பங்களில் அன்புறவுகளை வளர்க்க முயற்சிகள் எடுப்பதுபோல், இறைவனின் குடும்பமாகிய இந்த உலகச் சமுதாயத்திலும் அன்புறவுகளை வளர்க்க முயல வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறும் மூன்றாவது தேசிய குடும்ப மாநாட்டிற்கு திருத்தந்தை வழங்கிய இச்செய்தி, அந்நாட்டிற்கு வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டது.
அன்பின் மூலம் உருவாகும் ஒரு புதிய கலாச்சாரத்தை இறைவனின் குடும்பமாகிய திருச்சபையிலும், இந்த உலகிலும் வளர்ப்பது குடும்பத்தினர் ஒவ்வொருவரின் கடமை என்று திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்தினார்.
இந்த அன்பு சிறப்பாக இளையோருக்கும், நோயினால் துன்புறுவோருக்கும் அதிகமாக வழங்கப்பட வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, மெல்பர்ன் மாநாட்டில் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.


26வது உலகக் கத்தோலிக்க இளையோர் நாளுக்கான மெய்ப்புப் பணி வழிகாட்டுதல் நூல் அறிமுகம்

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 16 முதல் 21ம் தேதி வரை இஸ்பெயினின் மத்ரித் நகரில் இடம்பெறும் 26வது உலகக் கத்தோலிக்க இளையோர் நாளுக்கான மெய்ப்புப் பணி வழிகாட்டுதல் நூல் திருப்பீடப் பத்திரிகைத் துறை அலுவலகத்தில் இப்புதனன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
‘YouCat’ என்று அழைக்கப்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் இளையோருக்கான மறைக்கல்வி ஏடு மத்ரித்தில் பங்கு பெறும் ஒவ்வோர் இளையோருக்கும் வழங்கப்படும் நோக்கில் 7 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாக, பொது நிலையினருக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்புதனன்று அறிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கொடையாக இளையோருக்கு வழங்கப்படவுள்ள இவ்வழிகாட்டுதல் ஏடு இவ்வுலக கத்தோலிக்க இளையோர் நாட்களில் பயன்படுத்தப்படவுள்ள ஆறு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது.


லிபியாவில் அமைதியை உருவாக்க இளையோரின் எண்ணங்களுக்கும் செவிமடுக்க வேண்டும் - Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி

ஏப்ரல் 13, 2011. கலந்துரையாடல் மூலமே நாட்டில் அமைதியை உருவாக்க முடியும் என்றும், இந்தக் கலந்துரையாடலில் இளையோரின் எண்ணங்களுக்கும் முக்கியமாக செவிமடுக்க வேண்டுமென்றும் லிபியாவில் உள்ள Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி கூறினார்.
லிபியாவில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள உடன்பாட்டு முயற்சிகளில் இதுவரை ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளி வரவில்லை என்று ஆயர் ஜியோவான்னி இன்னோசென்சோ மர்த்தினெல்லி தன் கவலையை வெளியிட்டார்.
ஆயுதத் தாக்குதலைக் கைவிட்டு, பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆப்ரிக்க ஒன்றியம் முன்வைத்துள்ள திட்டத்தைப் புரட்சிக் குழுக்கள் ஏற்காமல் இருப்பது சமாதான முயற்சிகளுக்குப் பெரிதும் தடையாக உள்ளதென்று ஆயர் மர்த்தினெல்லி சுட்டிக் காட்டினார்.
இளையோரே இந்நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களது எண்ணங்களுக்கும் செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்று கூறிய ஆயர் மர்த்தினெல்லி, லிபியாவின் பிரச்சனைகளில் உதவுவதற்கு பல உலக அமைப்புக்கள் தாயாராக இருந்தாலும், அவைகளை ஏற்பதற்கு லிபியா இன்னும் தயாராக இல்லை என்பதையும் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.


மங்களூரில் சிறார் இல்லங்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல சமயங்களின் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 13, 2011. கடந்த வாரம் மங்களூரில் இந்து அடிப்படைவாதக் குழுக்களால் சிறார் இல்லங்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூர் மாவட்ட காவல் அதிகாரி அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழைக் குழந்தைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களை எதிர்த்து பல சமயங்களின் 37 அமைப்புக்களைச் சார்ந்த 4000 பேருக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற தவறான காரணத்தைச் சுட்டிக் காட்டி, இந்து அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் இப்புதிய தாக்குதல்கள் கண்டனத்திற்குரியதென்று அனைத்து சமயத்தினரும் கூறினர்.
மங்களூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் மட்டும் 80000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்; இதேபோல் இந்தியாவின் அனைத்து கிறிஸ்தவப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவியரை மதம் மாற்றும் முயற்சியில் கிறிஸ்தவ பள்ளிகள் ஈடுபட்டிருந்தால், இந்நேரம் இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால், உண்மை அதுவல்ல என்று கிறிஸ்தவத் தலைவர் Vincent Alva கூறினார்.
இந்தியாவில் வாழும் நாம் கிறிஸ்தவர்களாய், இஸ்லாமியர்களாய், இந்துக்களாய் இருக்கிறோம். ஆனால், இவை அனைத்திற்கும் மேலாக நாம் இந்தியர்களாய் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று இஸ்லாமியத் தலைவர் Ali Hasan கூறினார்.
2008ம் ஆண்டு கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.


எகிப்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால், கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகள்

ஏப்ரல் 13, 2011. எகிப்தில் அண்மைய நாட்களில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதென்றும், இதனால், கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் எகிப்தில் உள்ள தலத் திருச்சபையின் பத்திரிகைத் தொடர்புத் தலைவர் அருள்தந்தை Rafic Greich கூறினார்.
எகிப்தில் கடந்த சில வாரங்களாய் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் கெய்ரோவைச் சுற்றியுள்ள கிராமங்களில் Sharia எனப்படும் இஸ்லாமிய அடிப்படை நியதிகளை வலுக்கட்டாயமாகப் புகுத்தி வருவதால், ஒவ்வொரு நாளும் கெய்ரோவில் 70க்கும் மேற்பட்டோர் அந்நாட்டை விட்டு வெளியேறும் வழிகளைத் தேடி தங்கள் அலுவலகம் வருகின்றனர் என்று மனித உரிமைகளுக்கான எகிப்திய அமைப்பு கூறியுள்ளது.
நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை இராணுவத்தினர் அடக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதென்று கூறிய அருள்தந்தை Rafic Greich,  இவ்வாண்டு சனவரியில் எகிப்தில் ஏற்பட்ட புரட்சியால் நாட்டில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்று இளையோர் நம்பி வருகின்றனர் என்றும் சுட்டிக் காட்டினார்.
மதப் பாகுபாடுகள் ஏதுமின்றி நடத்தப்பட்ட இந்தப் புரட்சியால் இளையோரிடையே மத அடிப்படைவாதங்கள் அதிகம் இல்லை என்றும், அடிப்படைவாதத்தை வளர்க்க விரும்பும் மதப் பெரியோருக்கு இவர்கள் அதிகம் செவிமடுப்பதில்லை என்றும் அருள்தந்தை Rafic Greich மேலும் கூறினார்.


இயற்கைப் பேரழிவுகள் ஜப்பான் நாட்டு மக்களை மீண்டும் ஆன்மீக வழிகளுக்குத் திருப்பியுள்ளது டோக்யோவில் பணி புரியும் இறைபணியாளர்

ஏப்ரல் 13, 2011. ஜப்பான் சந்தித்துள்ள இயற்கைப் பேரழிவுகள் அந்நாட்டு மக்களை மீண்டும் ஆன்மீக வழிகளுக்குத் திருப்பியுள்ளதென்று டோக்யோ நகரில் பணி புரியும் இறைபணியாளரான அருள்தந்தை Olmes Milani கூறியுள்ளார்.
ஜப்பானில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அங்கு வாழும் மக்களில் 86 விழுக்காட்டினர் மதங்களையும் ஆன்மீகத்தையும் நம்பாமல் வாழ்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை Milani, இந்தப் பேரழிவுகளுக்குப் பின்னர் அங்குள்ள புத்த, ஷிண்டோ, மற்றும் கிறிஸ்தவ கோவில்களில் செபிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென்று கூறினார்.
சுயநலத்தையே பெரிதுபடுத்தி வாழ்ந்து வந்த ஜப்பானிய மக்கள், இப்பேரிடர்களால் ஒற்றுமை, பிறரன்பு என்ற உயரிய பாடங்களைக் கற்று வருகின்றனர் என்றும், ஜப்பான் இனி பெரிதும் மாறும் வழிகள் தெரிகிறதென்றும் FIDES செய்திக்கு அளித்த பேட்டியில் அருள்தந்தை Milani கூறியுள்ளார்.


பொலிவியாவில் 20 இலட்சம் குழந்தைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்

ஏப்ரல் 13, 2011. பொலிவியா நாட்டில் 20 இலட்சம் குழந்தைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 3,30,000 குழந்தைகள் தெருவோரக் குழந்தைகள் என்றும் அந்நாட்டில் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.
ஏப்ரல் மாதம் 12ம் தேதி பொலிவியாவில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தையொட்டி, இச்செவ்வாயன்று La Paz என்ற செய்தித் தாளில் இவ்வறிக்கை வெளியானது.
பொலிவியாவின் மக்கள் தொகையில் 46 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும், இவர்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 20 இலட்சம் குழந்தைகள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
குற்றவாளிகளாகச் சிறையில் இருக்கும் பல பெற்றோர் வேறு யார் கண்காணிப்பிலும் தங்கள் குழந்தைகளை விட முடியாததால், இக்குழந்தைகளையும் தங்களுடன் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.


ஐ.நா.அமைப்பு கொண்டாடிய மனிதகுலத்தின் விண்வெளி பயணத்திற்கான முதல் அகில உலக நாள்

ஏப்ரல் 13, 2011. மனிதகுலத்தின் விண்வெளி பயணத்திற்கான முதல் அகில உலக நாளை ஐ.நா.அமைப்பு இச்செவ்வாயன்று கொண்டாடியது.
1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி சோவியத் ஒன்றியத்தின் முதல் முயற்சியாக இரஷ்யாவைச் சேர்ந்த Yuri Gagarin விண்வெளிக்கு பயணித்த நாளின் பொன்விழாவைக் கொண்டாடும்போது, அந்நாளை விண்வெளி பயணத்திற்கான அகில உலக நாளாக ஐ.நா.அறிவித்துள்ளது.
விண்வெளிப் பயணம் என்பது மனிதப் பிறவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லைகளைக் கடந்து செல்லும் ஒரு மேலான முயற்சி என்றும், Yuri Gagarin மேற்கொண்ட இந்த 108 நிமிட விண்வெளிப் பயணத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 12ம் தேதி இந்நாள் கொண்டாடப்படும் என்றும் ஐ.நா.வின் உயர் அதிகாரி Mazlan Othman கூறினார்.
இதற்கிடையே, இந்த ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டங்கள் இரஷ்யாவின் கிரெம்லின் மாளிகையில் ஐம்பது துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுடன் நினைவுகூரப்பட்டது.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் வானியலாளர்களுடன் வீடியோ மூலம் பேசிய இரஷ்ய அரசுத்தலைவர் டிமித்ரி மெத்வதேவ், விண்வெளி ஆராய்ச்சி என்பது இரஷ்யாவின் முன்னணி இலக்குகளில் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தார். இதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகளை தமது நாடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐநூற்றுக்கும் அதிகமான விண்வெளி வீரர்கள் வான் மண்டலத்திற்கு சென்று திரும்பியிருக்கின்றனர் என்றும், Yuri Gagarin தன்னந்தனியாக ஒற்றையடிப்பாதையில் மேற்கொண்ட விண்வெளிப்பயணம் இன்று பலரும் பயணம் செய்யக்கூடிய நெடுஞ்சாலைப் பயணமாக வளர்ந்திருக்கிறது என்றும் BBC செய்தியொன்று கூறுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...