Saturday, 9 April 2011

Catholic News - hottest and latest - 09 April 2011


1. குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய வாரிசுரிமை பேராயர்

2. பிரேசிலில் பள்ளிச் சிறார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துத் திருத்தந்தை ஆழ்ந்த வருத்தம்

3. Bloggers களுக்கென வத்திக்கானில் கூட்டம்

4. அண்ணா ஹஸாரேவின் கோரிக்கையை அரசு ஏற்றது "மக்களுக்குக் கிடைத்த வெற்றி" - டெல்லி பேராயர்

5. இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் - தலத்திருச்சபை வேண்டுகோள்

6. இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

7. டெலஸ்கோப் கருவி முதன்முறையாக காண்பிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிகழ்வுகள்

8. மலேசியாவில் எல்லா மொழிகளிலும் விவிலியங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி

----------------------------------------------------------------------------------------------------------------

1. குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய வாரிசுரிமை பேராயர்

ஏப்ரல்09,2011. இந்தியாவின் குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை பேராயராக, இந்நாள்வரை Diphu ஆயராகப் பணியாற்றிய ஆயர் John Moolachira ஐ இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கேரளாவின் புதுச்சேரிகடவு என்ற ஊரில் 1951ம் ஆண்டு பிறந்த ஆயர் John Moolachira, 1978ம் ஆண்டு தேஜ்பூர் மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2007ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி Diphu மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 
அசாம் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய குவாஹாட்டி உயர்மறைமாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கு அதிகமான கத்தோலிக்கர் வாழ்கின்றனர்.
குவாஹாட்டி வடகிழக்கு இந்தியாவுக்கு வாயில்கதவு என அழைக்கப்படுகிறது.

2. பிரேசிலில் பள்ளிச் சிறார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துத் திருத்தந்தை ஆழ்ந்த வருத்தம்

ஏப்ரல்09,2011 மேலும், பிரேசில் நாட்டு ரியோ தெ ஜெனெய்ரோவில் பள்ளி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, ரியோ தெ ஜெனெய்ரோ பேராயர் Orani João Tempesta வுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் தங்களையே பாதுகாத்துக் கொள்ள இயலா நிலையிலிருக்கும் இந்தப் பள்ளிச் சிறாரின் இழப்பால் வருந்தும் அவர்களின் குடும்பங்களுக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் திருத்தந்தையின் செபத்துடன்கூடிய ஒருமைப்பாட்டுணர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ தெ ஜெனெய்ரோ நகரசபை பள்ளி ஒன்றில் அப்பள்ளியின் பழைய மாணவர் Wellington Menezes de Oliveira என்பவர் இவ்வியாழன் காலை சென்று தான் மாணவர்களுடன் ஒரு கருத்தரங்கு குறித்துப் பேச வேண்டியிருக்கிறது என்று பள்ளி அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அப்பள்ளியின் மூன்றாவது மாடிக்குச் சென்று சரமாரியாகச் சுட்டார். இதில் 12 மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இந்தப் பழைய மாணவர் வாழ்க்கை எந்தவிதப் பற்றும் இல்லாதவர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகின்றது.
திருத்தந்தையின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள செய்தியில், மக்கள் வன்முறையைப் புறக்கணித்து நீதி மற்றும் ஒருவர் ஒருவரை மதிக்கும், குறிப்பாக நலிந்தவர்களை மதிக்கும் பண்புகள் மீது சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முயற்சிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரியோ தெ ஜெனெய்ரோ பேராயர் Orani João Tempesta வும் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். 

3. Bloggers களுக்கென வத்திக்கானில் கூட்டம்

ஏப்ரல்09,2011. இணையதளத்தில் தங்களது படைப்புக்களை வெளியிடும் bloggers களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் அவர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்குமென வருகிற மே 2ம் தேதி உரோமையில் வத்திக்கான் சர்வதேச கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவிக்கப்படும் மே ஒன்றாந்தேதி நிகழ்ச்சிக்கு Blogger கள் பெருமளவில்  வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு அடுத்த நாள் அவர்களுடன் கூட்டத்தை நடத்துவதற்கு வத்திக்கான் திட்டமிட்டுள்ளது.
திருப்பீட கலாச்சார அவையும் சமூகத் தொடர்பு அவையும் இணைந்து இக்கூட்டத்தை நடத்துகின்றன.
இக்கூட்டத்தில் யாரும் பங்கெடுக்கலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் blogmeet@pccs.it என்ற மின்னஞ்சலுக்கு எழுதி பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். அக்கூட்டத்தின் நிகழ்ச்சிகள், இத்தாலியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், போலந்து, ஸ்பானியம் ஆகிய மொழிகளில் உடனுக்குடன் வழங்கப்படும். மொத்தம் 150 பேர் கலந்து கொள்வதற்கென வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

4. அண்ணா ஹஸாரேவின் கோரிக்கையை அரசு ஏற்றது "மக்களுக்குக் கிடைத்த வெற்றி" - டெல்லி பேராயர்

ஏப்ரல்09,2011.  இந்தியாவில் ஜன் லோக்பால் மசோதா குறித்து சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அண்ணா ஹஸாரே முன்வைத்த கோரிக்கைகளை நடுவண் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சஸ்சாவோ தெரிவித்தார்.
72 வயதான அண்ணா ஹஸாரே, இந்தியாவைக் கடுமையாய்ப் பாதிக்கும் ஊழலை எதிர்த்து 4 நாள்களாக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
ஜன் லோக்பால் மசோதாவை வரையறுக்கக் கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதையடுத்து அண்ணா ஹஸாரே தனது போராட்டத்தை இச்சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.
இது குறித்துப் பேசிய அண்ணா ஹஸாரே,  "எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று கூறினார்.
இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து கிறிஸ்தவத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன.

5. இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் - தலத்திருச்சபை வேண்டுகோள்

ஏப்ரல்09,2011. இலங்கையில் இடம் பெற்ற நீண்டகாலப் போரில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று தலத்திருச்சபை மற்றும் சட்ட அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் முடிந்து ஈராண்டுகளும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தி ஓராண்டும் ஆகியிருக்கும் இவ்வேளையில், நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவதால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் மக்கள் தங்களது சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றனர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு மேலும் பணியாளர்களை அமர்த்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளார் மன்னார் மறைமாவட்ட முதன்மைக் குரு சூசை விக்டர்.
மேலும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளைத் தாமதப்படுத்துவது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கின்றது என்று யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் கழகத் தலைவர் அருட்பணி அருளானந்தம் யாவிஸ் தெரிவித்தார்.

6. இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

ஏப்ரல்09,2011. மேலும், இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது கைது செய்யப்பட்டுக் காணாமல்போன அனைவர் குறித்தும் இலங்கை அரசு பொறுப்பு ஏற்று அவர்கள் குறித்த விபரங்களைக் கூறவேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்கான இயக்குனர் Brad Adams  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்த இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் பலர் குறித்து அவர்களது குடும்பத்தினர் பல தடவைகள் முறையிட்ட போதிலும், இலங்கை அரசு தரப்பிலிருந்து உரிய பதில் வரவில்லை என்று கூறினார்.
வெறுமனே மறுப்பதை மாத்திரம் செய்யாமல், காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இலங்கை அரசு பதிலுரைக்க வேண்டும் என்றும், காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து அறிய அவர்களது குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெரும்பாலும் வட்டுவாகல் பகுதியில் இவ்வாறு இராணுவத்தினரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
இதற்கிடையே, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது.

7. டெலஸ்கோப் கருவி முதன்முறையாக காண்பிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிகழ்வுகள்

ஏப்ரல்09,2011. இத்தாலிய அறிவியலாளர் கலிலேயோ கலிலி, தான் கண்டுபிடித்த டெலஸ்கோப் என்ற தொலைநோக்கு கருவியை முதன்முறையாக, அக்காலத்தில் இத்தாலியின் கலாச்சார மையமாக இருந்த உரோம் நகரின் அறிவாளர்க்கு வெளிப்படையாகக் காண்பித்த 400ம் ஆண்டு நிகழ்வுகள் உரோம் அமெரிக்கக் கல்வி கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்கக் கல்வி கழகம் அமைந்துள்ள இடத்திலுள்ள grassy குன்றில் 1611ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கலிலேயோ நின்று தனது டெலஸ்கோப் கருவியைக் காண்பித்தார்.
இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்நிகழ்வுகளில் விசுவாசம், அறிவியல் போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன.

8. மலேசியாவில் எல்லா மொழிகளிலும் விவிலியங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி

ஏப்ரல்09,2011. மலேசியாவில் எல்லா மொழிகளிலும் விவிலியங்களை இறக்குமதி செய்து அவை அந்நாட்டில் அச்சிடப்படுவதற்கு அனுமதியளித்துள்ளது மலேசிய அரசு.
மலேசியாவில் விவிலியங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கமாட்டோம் என அரசு கிறிஸ்தவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
மலாய் மொழியில் விவிலியங்களை வெளியிடுவது குறித்த விவாதத்தில் அரசு  நிறைவேற்றியுள்ள பத்து தீர்மானங்களில் இந்த அனுமதிகளும் உள்ளடங்கும்
Kuching மற்றும் Port Klang நகரங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35,100 விவிலியங்களை பணம் கட்டாமல் எடுத்துக் கொள்வதற்கும் மலேசிய அரசு அனுமதியளித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...