Wednesday, 13 April 2011

Catholic News - hottest and latest - 12 April 2011


1. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருவிழா போலந்திலும் உரோம் நகரிலும் அக்டோபர் 22ந்தேதி சிறப்பிக்கப்படும்.

2. படகு விபத்தில் சிக்கிய ஆப்ரிக்க அகதிகளுக்கான செபத்திற்கு விண்ணாப்பிக்கிறார் திருப்பீடப்பேச்சாளர்.

3. ஐவரி கோஸ்ட் நாட்டின் பதட்ட நிலைகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளது குறித்து தலத்திருச்சபை கவலை.

4. இடைக்கால போர் நிறுத்தம் அமைதிக்கான நம்பிக்கை என்கிறார் லிபிய ஆயர்.

5. இலஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய தலத்திருச்சபையின் ஆதரவு.

6. சிறார்களின் கல்விக்கான அருட்கன்னியர்களின் பணியைப் பாராட்டியுள்ளது UNICEF.

7. ஐரோப்பாவில் மக்கள்தொகைக் குறைவால் பொருளாதாரப் பாதிப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருவிழா போலந்திலும் உரோம் நகரிலும் அக்டோபர் 22ந்தேதி சிறப்பிக்கப்படும்.

ஏப்ரல் 12, 2011.   மேமாதம் முதல் தேதி அருளாளராக திருச்சபையில் அறிவிக்கப்பட உள்ள திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருவிழா போலந்து நாட்டிலும் உரோம் நகரிலும் அக்டோபர் 22ந்தேதி சிறப்பிக்கப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் அருளாளர் பட்டமளிப்பு விழாவிற்கான நன்றித்திருப்பலி உலகம் முழுவதும் ஒராண்டு காலத்திற்குள் எந்த நாளிலும் நிறைவேற்றப்படலாம் என்ற அனுமதியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வழிபாடு மற்றும் அருளடையாளங்களுக்கான  திருப்பேராயம்அக்டோபர் 22ந்தேதியை அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலிற்கென திருவழிபாட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நாளாக போலந்து திருச்சபையும் உரோமை மறைமாவட்டமும் மட்டுமே கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. இதே நாளில் அவ்விழாவைச் சிறப்பிப்பதற்கும் மற்றும் அவர் பெயரால் கோவில்களை, பங்குதளங்களை அர்ப்பணிப்பதற்கும் விரும்பும் ஏனைய மறை மாவட்டங்கள், திருப்பீடத்தின் சிறப்பு அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2. படகு விபத்தில் சிக்கிய ஆப்ரிக்க அகதிகளுக்கான செபத்திற்கு விண்ணாப்பிக்கிறார் திருப்பீடப்பேச்சாளர்.

ஏப்ரல் 12, 2011.   அண்மைக்காலங்களில் வட ஆப்ரிக்காவின் மோதல்களால் தப்பியோடும் அகதிகள் மத்தியதரைக் கடலில் மரணமடைந்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.
கடந்த வாரத்தில் 250 அகதிகளை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது பற்றிக் குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர், பஞ்சம், பட்டினி, ஏழ்மை, அடக்குமுறை, வன்முறை மற்றும் போரால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ள மக்கள், இத்தகைய விபத்துக்களால் அடையாளம் தெரியாமலேயே மறைவது ஆழ்ந்த கவலை தருவதாக உள்ளது என்றார்.
தொலைக்காட்சியில் வாரந்தோறும் தான் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியின்போது இதனைக்குறிப்பிட்ட அவர்,  இவ்வுலகின் ஏழைகளுடன் நம் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக அவர்களை நினைவுகூர்ந்து செபிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.
பகைமை உணர்வுகளைக் கைவிட்டு, அநீதி, பாராமுகம், சுயநலம் ஆகியவைகளை அகற்ற நம்மை அர்ப்பணிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் இயேசு சபை குரு லொம்பார்தி.

3. ஐவரி கோஸ்ட் நாட்டின் பதட்ட நிலைகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளது குறித்து தலத்திருச்சபை கவலை.

ஏப்ரல் 12, 2011.   ஐவரி கோஸ்ட் நாட்டின் அண்மை பதட்ட நிலைகளால் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளதாக கவலையை வெளியிட்டார் அந்நாட்டு ஆயர் பேரவைத்தலைவர் ஆயர் Laurent Akran Mandjo.
தற்போது அந்நாட்டு அரசுத்தலவர் Laurent Gbagbo கைதுச் செய்யப்பட்டுள்ள போதிலும் பதட்ட நிலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன என்றார் ஆயர்.
பல கடைகள் போரின் காரணமாக மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொருட்களை வாங்க முடியா நிலை உள்ளது எனவும் கூறினார் அவர்.
இதற்கிடையே, ஐவரி கோஸ்ட்டின் துன்பநிலைகள் குறித்து கவலையை வெளியிட்ட அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Ambrose Madtha, உள்நாட்டு போரால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் Abidjan நகரின் அனைத்துப் பங்குத்தளங்களிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு இலட்சம் மக்கள் ஐவரி கோஸ்ட் நாட்டிலிருந்து லிபேரியாவிற்குள் அகதிகளாகப் புகுந்துள்ளதாக லிபேரியாவின் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆயர் Sumoward Harris தெரிவித்துள்ளார்.

4. இடைக்கால போர் நிறுத்தம் அமைதிக்கான நம்பிக்கை என்கிறார் லிபிய ஆயர்.

ஏப்ரல் 12, 2011.   லிபியாவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைக்காலப் போர்நிறுத்தம், அமைதிக்கான புதிய நம்பிக்கைகளைக் கொணர்ந்துள்ளதாக அறிவித்தார் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli.
த‌ற்போது இடைக்காலப் போர்நிறுத்தத்தைப் பெற்றுள்ள நாடு, இரண்டாவது கட்டமாக, இருதரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை மற்றும்  ஆட்சிமாற்ற இசைவுக்குக் காத்திருக்கிறது என்றார் ஆயர். லிபியாவின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலும் அனைத்து நல்முயற்சிகளுக்கும் லிபியக் கிறிஸ்தவர்களின் ஆதரவு என்றும் உண்டு என்ற ஆயர் மர்த்தினெல்லி, நாட்டின் அமைதிக்கென இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து விண்ணப்பம் ஒன்றை தயாரித்து ஐ.நா. அமைப்புக்கு இப்புதனன்று அனுப்ப உள்ளதாகவும் அறிவித்தார். ஆயர் மர்த்தினெல்லியுடன் இணைந்து Tripoliயின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ், காப்டிக் ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைகளும் இவ்விண்ணப்பத்தைத் தயாரித்துள்ளன.

5. இலஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய தலத்திருச்சபையின் ஆதரவு.

ஏப்ரல் 12, 2011.   இலஞ்ச ஊழலுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள மசோதா, சட்டமாக்கப்படும்போது இந்தியா ஓர் ஊழலற்ற நாடாக திகழும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
ஊழ‌லுக்கு எதிராக‌ உண்ணாவிர‌த‌ம் இருந்த‌ அன்னா ஹ‌சாரேயின் விண்ண‌ப்ப‌த்தை ஏற்று புதிய‌ ம‌சோதாவை வ‌டிவ‌மைக்க‌ அமைச்ச‌ர்க‌ள் ம‌ற்றும் ச‌மூக‌ ந‌ட‌வ‌டிக்கையாள‌ர்களைக் கொண்ட‌ குழுவை உருவாக்க‌ உள்ள‌தாக இந்திய‌ அர‌சு இசைவு அளித்துள்ள‌தைப்ப‌ற்றி க‌ருத்து வெளியிட்ட‌ டெல்லி பேராய‌ர் வின்சென்ட் கொன்செசாவோ, த‌ற்போது முத‌ல் த‌டை தாண்ட‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும், இது ம‌க்க‌ளின் வெற்றி என‌வும் தெரிவித்தார்.
இல‌ஞ்ச‌ ஊழ‌ல் என்ப‌து நாட்டில் ஆழமாக‌ வேரூன்றியுள்ள‌போதிலும் அத‌னை முற்றிலுமாக‌ அக‌ற்ற‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன் ஒவ்வொருவ‌ரும் செய‌ல்ப‌ட‌வேண்டும் என்ற‌ அழைப்பையும் முன்வைத்தார் பேராய‌ர்.
ஒவ்வொரு ம‌னித‌னுக்குள்ளும் இடம்பெறும் மாற்றம் மூலமே இலஞ்ச ஊழலை முற்றிலுமாக அகற்ற முடியும் என்ற கருத்தையும் முன்வைத்தார் பேராயர்  கொன்செசாவோ.

6. சிறார்களின் கல்விக்கான அருட்கன்னியர்களின் பணியைப் பாராட்டியுள்ளது UNICEF.

ஏப்ரல் 12, 2011.   பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தும் இந்தியச் சிறார்கள் தங்கள் கல்வியைத் தொடர விழிப்புணர்வுக் கூட்டங்களை இந்தூர் நகரில் நடத்தும்  Holy Spirit துறவு சபை கன்னியர்களின் பணியைப் பாராட்டியுள்ளார் UNICEF அமைப்பின் ஆலோசகர் Jyoti Bhatia.
மிகவும் ஏழ்மை நிலையில் சேரிகளில் வாழும் சிறார்களின் கல்விக்கென சரியான நேரத்தில் சரியான முயற்சியை அருட்சகோதரிகள் எடுத்துள்ளதாகக் கூறினார் அவர்.
இந்தூர் நகரில் ஏறத்தாழ 150 சிறார்களிடையே இந்த விழிப்புணர்வு திட்டத்தை நடத்தி, 14 வயது வரை கல்வி கற்பதற்கென அச்சிறார்களுக்கு இருக்கும் உரிமையை வலியுறுத்தி வருகின்றனர் இக்கத்தோலிக்க கன்னியர். கல்விக்கான உரிமை குறித்த சட்டம் பற்றிய விழிப்புணர்வைச் சிறார்களில் ஏற்படுத்தவேண்டிய கடமையை உணர்ந்தே தாங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றி வருவதாக உரைத்தார் Holy Spirit துறவு சபை அருட்கன்னிகை ரோசிலி பஞ்சிகரண்.

7. ஐரோப்பாவில் மக்கள்தொகைக் குறைவால் பொருளாதாரப் பாதிப்பு.

ஏப்ரல் 11, 2011.   ஐரோப்பாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதமும், முதியோரின் இறப்பு விகிதமும் குறைந்து வருவது மிகப்பெரும் பொருளாதாரச் சவாலை இக்கண்டத்திற்கு முன் வைக்கக்கூடும் என்கிறது ஐரோப்பிய சமுதாய அவையின் அறிக்கை.
ஐரோப்பாவின் மக்கள்தொகை ஒரே சீரான அளவில் இருக்கவேண்டுமெனில் அக்கண்டத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் 2.1 குழந்தைக‌‌ள் என்ற விகிதம் இருக்கவேண்டிய சூழலில், தற்போது அது 1.6 என்றே உள்ளது என்ற இவ்வறிக்கை, ஏற்கனவே பல்கேரியா, லித்துவேனியா, லாத்வியா மற்றும் ருமேனியாவில் பிறப்புகளின் எண்ணிக்கையைவிட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் மக்களின் குடிபெயர்வுகளாலும் மக்கள்தொகை குறைந்து வருகிறது எனத் தெரிவிக்கிறது.
27 ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளுள் 13ல், பெண்கள் தங்களின் 30 வயதிலேயோ அல்லது அதற்கு மேலேயோதான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறுகிறது இவ்வறிக்கை.
ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் மக்கள்தொகை மிகப்பெரும் அளவில் குறையாமல் காப்பாற்றப்படுவதற்கு, அதற்கு வெளியேயிருந்து அந்நாடுகளில் குடியேறும் மக்களும் ஒரு காரணம் என மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment