Wednesday, 6 April 2011

Catholic News - hottest and latest - 06 April 2011

1. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வைக் குறித்து புதுத் தகவல்கள்

2. லிபியாவின் பிரச்சனையில் துருக்கி எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆயரின் பாராட்டு

3. சத்ய சாய் பாபாவின் உடல் நலத்திற்காக கிறிஸ்தவர்கள் எழுப்பி வரும் செபங்கள்

4. ஊழலை எதிர்த்து Kisan Baburao Hazare மேற்கொண்டுள்ள சாகும் வரை உண்ணாநோன்புக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு

5. என் சகோதரரைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் பாகிஸ்தானில் கொலையுண்ட Shabbaz Bhattiயின் சகோதரர்

6. புகுஷிமா அணு உலைகளில் போராடி வரும் பத்து கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களையும் வாழ்த்தும் ஆயர் Tetsuo Hiraga

7. குரான் எரிக்கப்பட்டது, ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு முரணான ஒரு செயல் - ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்

----------------------------------------------------------------------------------------------------------------


1. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வைக் குறித்து புதுத் தகவல்கள்

ஏப்ரல் 06,2011. இறையடியார் இரண்டாம் ஜான்பால் பரிந்துரையால் Parkinson நோயிலிருந்து குணமான பிரெஞ்ச் நாட்டு அருள்சகோதரி Marie-Simon-Pierre மற்றும் இரண்டாம் ஜான்பாலுக்குத் தனிப்பட்டச் செயலராக பணிபுரிந்த Krakow பேராயர் கர்தினால் Stanislaw Dziwisz ஆகியோர் ஏப்ரல் மாதம் 30ம் தேதி உரோம் நகர் Circus Maximus பொதுத் திடலில் நடைபெறும் திருவிழிப்புச் சடங்கில் தங்கள் சாட்சிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று திருத்தந்தையின் உரோம் நகரப் பிரதிநிதியான கர்தினால் Agostino Vallini கூறினார்.
மே மாதம் முதல் தேதியன்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்வைக் குறித்து இச்செவ்வாயன்று வத்திக்கானில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் கர்தினால் Vallini இவ்வாறு கூறினார்.
திருச்சபையில் ஒருவர் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்டதும், அவர் பெயரால் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலிகள் முத்திபேறு பெற்றவரோடு தொடர்புடைய ஒரு சில இடங்களிலேயே கொண்டாடாப்படுவது திருச்சபையின் வழிமுறை. அவர் புனிதராக உயர்த்தப்பட்ட பிறகே, அவரது திருப்பலி உலகெங்கும் கொண்டாடப்படும். ஆனால், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உலகமனைத்திற்கும் அறிமுகமானவர் என்பதால், இவரது திருப்பலிகள் இன்னும் பல இடங்களில் கொண்டாடப்படுவதற்கு வத்திக்கான் உத்திரவு வழங்கக்கூடும் என்று கர்தினால் Vallini இக்கூட்டத்தில் அறிவித்தார்.
இரண்டாம் ஜான்பாலின் உடல் அடங்கிய பெட்டியானது புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் தரைமட்டப் பகுதியில் உள்ள புனித செபஸ்தியாரின் பீடத்திற்குக் கொண்டுவரும் பணி நடைபெற உள்ளதால், பேராலயத்தின் கீழ்மட்டப் பகுதியானது ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
இந்த முழு நிகழ்ச்சியின் வர்ணனைகள் வத்திக்கான் வானொலியின் பண்பலை 105ல் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பல்வேறு மொழிகளில் ஒலிபரப்படும் என்றும் அருள்தந்தை Lombardi கூறினார்.


2. லிபியாவின் பிரச்சனையில் துருக்கி எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆயரின் பாராட்டு

ஏப்ரல் 06,2011. லிபியாவின் பிரச்சனையில் துருக்கி எடுத்துள்ள முயற்சிகள் தனக்கு மிகவும் நம்பிக்கைத் தருகிறதென Tripoliயில் உள்ள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Matinelli கூறினார்.
லிபியாவின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் Abdelati Laabidi இத்திங்களன்று துருக்கியின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சருடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளைக் குறித்து இச்செவ்வாயன்று Fides செய்திக்குப் பேட்டியளித்த ஆயர் Martinelli இவ்வாறு கூறினார்.
இத்திங்கள் நிலவரப்படி லிபியாவின் 22 மாநிலங்களில் Moammar Gadhafiன் கட்டுப்பாட்டில் 11  மாநிலங்களும், அவருக்கு எதிராகப் போரிடுபவர்களின் கட்டுப்பாட்டில் 6 மாநிலங்களும், மீதி ஐந்து மாநிலங்கள் இழுபறி நிலையில் உள்ளதாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இது வரை லிபியாவின் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள்படி இந்த எண்ணிக்கை 2500 முதல் 10500 வரை என்று கூறப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.


3. சத்ய சாய் பாபாவின் உடல் நலத்திற்காக கிறிஸ்தவர்கள் எழுப்பி வரும் செபங்கள்

ஏப்ரல் 06,2011. இந்து மதத் தலைவர்களில் மிகவும் புகழ்பெற்றவரும், மனிதாபிமானச் செயல்களில் அதிகம் ஈடுபட்டவருமான சத்ய சாய் பாபாவின் உடல் நலத்திற்காக கிறிஸ்தவர்களும் தங்கள் செபங்களை எழுப்பி வருகின்றனர்.
மார்ச் 28ம் தேதி நோயுற்று, மருத்துவ மனையில் உள்ள 84 வயதான சாய் பாபாவின் உடல் நிலை தற்போது ஓரளவு நிலைபெற்றுள்ளதென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பல ஏழை மக்களுக்கு இலவச இருதய அறுவைச் சிகிச்சைகளையும், ஏழை மாணவர்களுக்கு கல்வி வசதிகளையும் செய்துள்ள சாய்பாபாவின் உடல் நலனுக்காக தான் செபித்து வருவதாக நெல்லூர் மறைமாவட்ட ஆயர் மோசஸ் பிரகாசம் கூறினார்.
ஹிந்துப்பூரில் உள்ள ஒரு இயேசு சபை கல்லூரியின் முதல்வரான அருள்தந்தை சந்தனசாமி, சாய்பாபாவின் உடல் நலனுக்காக, தன் கல்லூரியில் அனைத்து மாணவர்களும் இணைந்து செப வழிபாடு நடத்துவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர் என்று கூறினார்.
சாய்பாபாவினால் புகழ்பெற்ற புட்டப்பருத்திக்கருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பணிசெய்து வரும் இயேசு சபை குரு செல்வராஜ், கடந்த ஞாயிறன்று திருப்பலி நேரத்தில் சத்ய சாய்பாபாவுக்கென செபங்கள் எழுப்பப்பட்டன என்றும், இத்திருப்பலி நேரத்தில் அங்கிருந்த இந்துக்களும் இக்கருத்துக்காகச் செபித்தனர் என்றும் கூறினார்.
சாய்பாபா நோயுற்றிருப்பதால் இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட தெலுங்கு புத்தாண்டு விழா ஆடம்பரங்கள் அதிகம் இல்லாமல் கொண்டாடப்பட்டதென அருள்தந்தை செல்வராஜ் மேலும் கூறினார்.


4. ஊழலை எதிர்த்து Kisan Baburao Hazare மேற்கொண்டுள்ள சாகும் வரை உண்ணாநோன்புக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு

ஏப்ரல் 06,2011. ஊழலை முற்றிலும் ஒழிக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கோரிக்கையுடன் 'சாகும் வரை உண்ணாநோன்பு' மேற்கொண்டுள்ள சமுதாய ஆர்வலர் ஒருவரது முயற்சிக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
72 வயதான Kisan Baburao Hazare என்ற சமூக ஆர்வலர் இச்செவ்வாயன்று புது டில்லியில் Jantar Mantar எனும் இடத்தில் தனது உண்ணா நோன்பை ஆரம்பித்தார். குருக்கள், துறவியர், பொது மக்கள் என்று 3000 பேருக்கும் அதிகமானோர் Hazare யுடன் உண்ணாநோன்பில் கலந்து கொண்டனர்.
"ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற அமைப்பை உருவாக்கியுள்ள பல சமய மற்றும் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான புது டில்லியின் பேராயர் Vincent Concessao, மற்றும் சமூக நீதி ஆர்வலாரான இயேசு சபைக் குரு அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் ஆகியோரும் இந்த உண்ணா நோன்பில் கலந்து கொண்டனர்.
புது டில்லியில் மட்டுமின்றி, இந்தியாவின் 200க்கும் அதிகமான நகரங்களில் இந்த உண்ணாநோன்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதென UCAN செய்தி கூறுகிறது.
சட்டங்களைக் காக்க வேண்டிய சட்ட மன்ற உறுப்பினர்களே சட்டங்களை உடைக்கும் அவல நிலை இந்தியாவில் உருவாகியிருப்பதால், ஊழல் விவகாரங்களை முற்றிலும் ஒழிக்க மிகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று கோரி தான் இந்த மிகக் கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருந்ததென Hazare கூறினார்.
72 வயதான Kisan Baburao Hazare, ஆசியாவின் நொபெல் பரிசு என்று வழங்கப்படும் மகசேசே விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.


5. என் சகோதரரைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் பாகிஸ்தானில் கொலையுண்ட Shabbaz Bhattiயின் சகோதரர்

ஏப்ரல் 06,2011. கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்குச் சொல்லித் தந்துள்ளதுபோல், என் சகோதரரைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் என்று பாகிஸ்தானின் மறைந்த அமைச்சர் Shabbaz Bhattiயின் சகோதரர் Paul Bhatti கூறினார்.
மார்ச் 2ம் தேதி கொல்லப்பட்ட Shabbaz Bhattiயின் மரணத்தை நினைவு கூறும் வகையில் உரோம் நகரில் Sant'Egidio என்ற அமைப்பினரால் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் பேசுகையில் Paul Bhatti இவ்வாறு கூறினார்.
எடுத்துக்காட்டான வாழ்வுக்கும், நன்னெறிக்கும் வழிகாட்டியாக இருந்த ஒரு நல்ல தலைவரை நாங்கள் இழந்து விட்டோம் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பைசலாபாத் ஆயர் Joseph Coutts இக்கருத்தரங்கில் கூறினார்.
இச்சம்பவத்தையொட்டி, தன் செபங்களையும், ஆதரவையும் தெரிவித்தத் திருத்தந்தைக்கு தங்கள் குடும்பத்தின் சார்பிலும், பாகிஸ்தான் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக Paul Bhatti கூறினார்.
இதற்கிடையே, கொலையுண்ட பாகிஸ்தான் அமைச்சர் Shabbaz Bhattiயின் மறைவால் காலியாகியுள்ள பாராளுமன்ற இடம் யாருக்கு வழங்கப்படும் என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன.
சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பிற்கு இந்துத் தலைவரான Khatu Mal Jeewan அல்லது  கத்தோலிக்கரான Javed Michael என்ற இருவரில் யார் வரக்கூடும் என்று கேள்விகளும், பிரச்சனைகளும் எழுந்துள்ளன.


6. புகுஷிமா அணு உலைகளில் போராடி வரும் பத்து கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களையும் வாழ்த்தும் ஆயர் Tetsuo Hiraga

ஏப்ரல் 06,2011. தங்கள் உயிருக்கு ஆபத்து என்று முழுமையாகத் தெரிந்தும், பொது நலனுக்காக அணுக்கதிர் வீச்சு  ஆபத்தைக் குறைக்க புகுஷிமாவில் போராடி வரும் பத்து கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களையும் தான் வாழ்த்துவதாக Sendai ஆயர் Tetsuo Hiraga கூறினார்.
மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவற்றைத் தொடர்ந்து அணு உலைகளில் ஏற்பட்ட கசிவைத் தடுப்பதற்கு உழைத்து வரும் தொழிலாளர்கள் இரண்டாவது அணு உலையின் கான்க்ரீட் சுவரில் ஏற்பட்ட 20 செ.மி. விரிசலை இச்செவ்வாயன்று நிறுத்தியுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இருந்தாலும், இந்த அணு உலைகளால் உருவாகியுள்ள ஆபத்துக்கள் இன்னும் முற்றிலும் தீரவில்லை என்றும் கூறப்படுகிறது.
நான்கு அணு உலைகளின் கசிவினால் அப்பகுதியின் நிலம், மற்றும் கடல் நீரில் மிக அதிக அளவு கதிரியக்கம் காணப்படுகிரதென்றும், எனவே ஜப்பானில் இருந்து வரும் உணவுப் பொருட்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.


7. குரான் எரிக்கப்பட்டது, ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு முரணான ஒரு செயல் - ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்

ஏப்ரல் 06,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் இஸ்லாமியரின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டது, ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு முரணான ஒரு செயல் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
உலகளாவிய இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களை இச்செவ்வாயன்று ஐ.நா.தலைமையகத்தில் சந்தித்துப் பேசிய பான் கி மூன், சகிப்புத் தன்மை, பன்முகக் காலாச்சாரங்களை ஏற்றுக் கொள்தல், மதங்களுக்கு உரிய மரியாதையை வழங்குதல் என்ற ஐ.நா.வின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக இருந்த இந்தச் செயல் எந்த ஒரு மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்று கூறினார்.
குரான் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறைகளில் ஐ.நா.ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன், இந்த வன்முறையையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
ஐ.நா. பொதுச்  செயலரும், இஸ்லாமிய அமைப்பினரும் மேற்கொண்ட இந்தச் சந்திப்பில் மத்திய தரைப் பகுதி, மற்றும் ஆப்ரிக்காவின் பல இஸ்லாமிய நாடுகளில் உருவாகியுள்ள பதட்ட நிலைகளும் விவாதிக்கப்பட்டன என்று UN செய்திக் குறிப்பு கூறுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...