Saturday, 9 April 2011

Catholic News - hottest and latest - 08 April 2011

1. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் விசுவாசிகளின் வெகுஜன வழிபாடுகள் புறக்கணிக்கப்படக் கூடாது - திருத்தந்தை

2. லிபியாவை விட்டு வெளியேறிய சுமார் 250 குடியேற்றதாரர்களின் இறப்பு குறித்து திருத்தந்தை கவலை

3. ஐவரி கோஸ்ட் ஆயர்களுக்கு ஐரோப்பிய ஆயர்கள் ஆதரவு

4. அரபு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவது குறித்து ஐரோப்பிய ஆயர்கள்  கலந்துரையாடல்

5. எருசலேமில் ஆங்லிக்கன் ஆயர் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எருசலேம் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கண்டனம்

6. சூடான் மக்கள் அமைதிக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு ஆயர்கள் வேண்டுகோள்

7. இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி

----------------------------------------------------------------------------------------------------------------

1. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் விசுவாசிகளின் வெகுஜன வழிபாடுகள் புறக்கணிக்கப்படக் கூடாது - திருத்தந்தை

ஏப்ரல்08,2011. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் புதிய நற்செய்தி அறிவிப்பு நடவடிக்கைகளில் விசுவாசிகளின் வெகுஜன  வழிபாடுகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இந்த வழிபாடுகள் சரியான பாதையில் வழிநடத்தப்பட்டால்,  கடவுளோடு ஆழமான உறவு, திருநற்கருணை ஆராதனை, அன்னைமரியா மீதான பக்தி, திருத்தந்தை மற்றும் திருச்சபையில் ஈடுபாடு போன்றவைகளில் விசுவாசிகள் வளருவதற்கு அவை உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை வத்திக்கானில் இவ்வெள்ளிக்கிழமை நிறைவு செய்த நான்கு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் ஐம்பது பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
விசுவாசிகளின் வெகுஜன  வழிபாடுகளில் வெளிப்படுத்தப்படும் விசுவாசம், திருவழிபாட்டு ஆண்டின் பெரிய திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களோடு தொடர்புடையதாக இருக்கின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருக்கின்ற எண்ணற்ற திருத்தலங்கள், இயேசுவின் குழந்தைப்பருவம், அவரின் பாடுகள் மரணம் உயிர்ப்பு ஆகியவற்றுக்கும் அன்னைமரியாவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட அவர், வெகுஜன  வழிபாடுகள் அக்கண்டத்தின் கலாச்சாரத்தை மட்டும் வெளிப்படுத்துகின்றன என்பதோடு நிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இலத்தீன் அமெரிக்காவில் இறைவார்த்தையை வாசித்துத் தியானிக்கும் lectio divina வளர்ந்து வருவதையும், அது மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவி வருவதையும் திருத்தந்தை குறிப்பிட்டு அதற்குத் தலத்திருச்சபைகள் எடுத்து வரும் முயற்சிகளைப் பாரா்டடினார்.

2. லிபியாவை விட்டு வெளியேறிய சுமார் 250 குடியேற்றதாரர்களின் இறப்பு குறித்து திருத்தந்தை கவலை

ஏப்ரல்08,2011. மேலும், வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் வன்முறைகளுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 250 குடியேற்றதாரர்கள் பரிதாபமாக இறந்துள்ளது குறித்து திருத்தந்தை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
லிபியாவில் இடம் பெறும் சண்டைக்குப் பயந்து இத்தாலிக்குத் தப்பி வந்த சுமார் 300 பேர் பயணம் செய்தப் படகு இப்புதன் காலை கவிழ்ந்ததில் சுமார் 250 பேர் இறந்தனர்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, அண்மைக் காலங்களாக இடம் பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் குடியேற்றதாரர் குறித்த கவலைதரும் விடயங்களைத் திருத்தந்தை கேட்டு வருகிறார் என்றார்.
லிபியாவின் வன்முறைகளுக்குப் பயந்து வெளியேறிய குடியேற்றதாரர்களில் சுமார் 22 ஆயிரம் பேர் கடந்த வாரத்தில் இத்தாலிக்கு வந்துள்ளனர்.

3. ஐவரி கோஸ்ட் ஆயர்களுக்கு ஐரோப்பிய ஆயர்கள் ஆதரவு

ஏப்ரல்08,2011. ஐவரி கோஸ்ட் நாட்டு வரலாற்றில் கடும் துயர காலமாக இருக்கும் இந்நாட்களில் துன்புறும் அந்நாட்டு மக்களுடனான தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.
CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் உதவித் தலைவரான Zagreb பேராயர் கர்தினால் Josip Bozanić, ஐவரி கோஸ்ட் நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha வுக்கு எழுதிய கடிதத்தில், ஐவரி கோஸ்டில், குறிப்பாக அபிஜானில் நடக்கும் நிகழ்வுகள் தங்களுக்கு மிகுந்த கவலை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
CCEE என்பது 33 ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும். 
மேலும், ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பரில் நடை பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றியடைந்த Alassane Ouattara வின் ஆதரவாளர்கள், தற்போதைய பிரச்சனைக்குரிய முன்னாள் அரசுத் தலைவர் Laurent Gbagbo வின் மாளிகை மீது நடத்திய தாக்குதலில் திருப்பீடத் தூதரகக் கண்ணாடிச் சன்னல்கள் சேதமடைந்திருப்பதாக பேராயர் Madtha இவ்வெள்ளிக்கிழமை கூறினார்.
இன்னும், இதே நாளில், 24 மணி நேரங்களுக்குள் உயிரோடு எரிக்கப்பட்ட மற்றும் கிணறுகளில் வீசப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சடலங்களைக் கண்டதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

4. அரபு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவது குறித்து ஐரோப்பிய ஆயர்கள்  கலந்துரையாடல்

ஏப்ரல் 08,2011. அரசியல் பதட்டநிலைகளை எதிர்நோக்கும் அரபு நாடுகளுக்கும் அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கும் உதவுவது குறித்து ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளின் ஆயர் பேரவைகளின் ஒன்றியம் விவாதித்து வருகின்றது.
பெல்ஜிய நாட்டு பிரசல்லஸில் " Maghreb மற்றும் Mashriq ல் கிறிஸ்தவத் திருச்சபைகள்" என்ற தலைப்பில் கூட்டம் நடத்தி வரும் ஆயர்கள், நெருக்கடி நிலைகளில் இருக்கும் இந்நாடுகளில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது குறித்து சிந்தித்து வருகின்றனர்.
டுனிசியா, எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா போன்ற அரபு நாடுகளில் நடந்து முடிந்த மற்றும் தற்போது நடந்து வரும் அரசியல் பதட்ட நிலைகள் குறித்துப் பேசிய நெதர்லாந்து ஆயர் Adrianus van Luyn, இந்த 2011ம் ஆண்டின் திருப்புமுனையாகச் செயல்படுகிறவர்கள் இளையோரே என்றார்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க  நாடுகளில் 60 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் ஆயர் குறிப்பிட்டார். 
Mashriq என்பதற்கு கிழக்கு என்று பொருள். இது எகிப்துக்கு கிழக்கேயும் அரேபிய தீபகற்பத்திற்கு வடக்கேயும் உள்ள பகுதியைக் குறிக்கின்றது. Maghreb என்பது மேற்கு என்று பொருள். இது வட ஆப்ரிக்காவின் மேற்கில் அரபு மொழிப் பேசும் பகுதிகளைக்   குறிக்கின்றது.  


5. எருசலேமில் ஆங்லிக்கன் ஆயர் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எருசலேம் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கண்டனம்

ஏப்ரல்08,2011. இஸ்ரேல் நாட்டு எருசலேமில் ஆங்லிக்கன் ஆயர் Suheil Dawani  தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது மற்றும் ஆலயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் குறித்து எருசலேமிலுள்ள எல்லாக் கிறிஸ்தவ சபைத் தலைவர்களும் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள், ஐ.நா. விதிமுறைக்கு ஒத்து வராதது என்றும் இத்தகைய நடவடிக்கை இதுவரை ஒரு பொழுதும், ஏன் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட போதுகூட இடம் பெற்றதில்லை என்றும் கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை குறை கூறுகிறது.
முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள், புனிதபூமி காவலர் உட்பட எல்லாத் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, ஆங்லிக்கன் ஆயர் Dawani  தனது குடும்பத்துடன் இந்தப் புனித நகரத்தில் தங்குவதற்கு உரிமையைக் கொண்டுள்ளார் என்று கூறுகிறது.
West Bank லுள்ள Nablus ல் பிறந்த ஆயர் Dawani, இஸ்ரேல் ஆக்ரமிப்பின் கீழுள்ள கிழக்கு எருசலேமில் வெளிநாட்டவராகக் கருதப்படுகிறார். இங்குதான் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை பேராலயமும் தலைமையகமும் இருக்கின்றன.

6. சூடான் மக்கள் அமைதிக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு ஆயர்கள் வேண்டுகோள்

ஏப்ரல் 08,2011. தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகும் காலம் நெருங்கி வரும்வேளை, அந்நாட்டு மக்கள் வன்முறையை ஒதுக்கி அமைதிக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு சூடான் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வருகிற ஜூலை 9ம் தேதியன்று தென் சூடான் தனிநாடு என அறிவிப்பதற்கானத் தயாரிப்புக்கள் இடம் பெற்று வரும்வேளை, தென் சூடான் தலைநகர் Juba வில் கூட்டம் நடத்தி வரும் ஆயர்கள் இவ்வேண்டுகோளை முன்வைத்தனர்.
உண்மையில் இரண்டு புதிய நாடுகள் உருவாக இருக்கும் இந்தச் சூழலில் அனைத்துக் குடிமக்களும், அரசியல் கட்சிகளும் ஆயுதம் தாங்கிய குழுக்களும் பொறுமை, புரிந்து கொள்ளுதல், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கடைபிடிக்குமாறு கேட்டுள்ளனர் ஆயர்கள்.
கடந்த சனவரியில் நடைபெற்ற பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் 98 விழுக்காட்டு மக்கள் தென் சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

7. இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி

ஏப்ரல்08,2011. இந்திய ஆசிரியர்களின் பணி சிங்கப்பூரில் அதிகமாகத் தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்திய மொழிகள் மட்டுமல்லாது பிற பாடத்திட்டங்களுக்குமானத் தேவையும் காரணமாகும் என்று சிங்கப்பூர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பெலிண்டா சார்லஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் கல்வி நிறுவனம் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட அகாடமி ஆப் புரொபசனல் எக்சலன்ஸ் அமைப்பும் இணைந்து திறமைவாய்ந்த ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இதன்படி கடந்த 2006-ல் எட்டு ஆசிரியர்கள், 2007 முதல் 2009 வரை 30 ஆசிரியர்கள் என சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ஆசிரியர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்களாவர்.
சிங்கப்பூரில் பொதுவாக பொருளாதாரம் போன்ற பாடங்களைச் சொல்லித் தருவதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...