Thursday, 28 April 2011

Catholic News - hottest and latest - 25 April 2011


1.   திருத்தந்தை : இயேசுவின் உயிர்ப்பு உண்மையில் கிறிஸ்தவம் தனது அடித்தளத்தைக் கொண்டுள்ளது

2.   மே 7,8 தேதிகளில் திருத்தந்தை வெனிஸ் நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார்

3.   சிறார் எதிர்நோக்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் திருத்தந்தை ஆதரவு 

4.    சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பேராயர் பார்வா

5.    சைனாவில் கிறிஸ்து உயிர்ப்பு வழிபாட்டை நிறைவேற்ற முயன்ற கிறிஸ்தவர்கள் கைது.

6.    மக்கள் போராட்டங்கள் நன்மையைக் கொணரும் என்கிறார் எருசலேம் முதுபெரும் தலைவர்.

7.    மணிப்பூர் மாநிலத்தின் சிறுபான்மையினர்க்கான அவையில் கிறிஸ்தவப் பிரதிநிதி நியமனம்.

8.   இந்துகோவிலை புதுப்பிப்பதிக்க கத்தோலிக்கர்கள் உதவி.

----------------------------------------------------------------------------------------------------------------


1.  திருத்தந்தை : இயேசுவின் உயிர்ப்பு உண்மையில் கிறிஸ்தவம் தனது அடித்தளத்தைக் கொண்டுள்ளது

ஏப்ரல்25,2011. நம் ஆண்டவரின் உயிர்ப்பு, நமது மனித நிலைமையின் புதுப்பித்தலின் அடையாளமாக இருக்கின்றது என்று தனது அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நிகழ்வுகளை நிறைவு செய்து பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் அமைந்திருக்கின்ற காஸ்தெல் கன்டோல்போவுக்குச் சிலநாட்கள் ஓய்வெடுக்கச் சென்றுள்ள திருத்தந்தை, அங்கு இத்திங்கள் நண்பகலில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார்.
நம் பாவங்களுக்காக இறந்த கிறிஸ்து அதன்மீது வெற்றி கண்டார் மற்றும் அழியாத வாழ்வை நமக்குக் கொண்டு வந்தார் என்றுரைத்த திருத்தந்தை, இந்நிகழ்வு வழியாகத் திருச்சபை மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கிறிஸ்து முழுவாழ்வு வழங்கினார் என்றும் கூறினார்.
கிறிஸ்துவின் உயிர்ப்பில் அடங்கியுள்ள விசுவாசத்தின் அடையாளப் பண்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவர் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார் என்று நாம் சொல்வது விசுவாசத்தை அறி்க்கையிடுவதாகவும், கிறிஸ்தவ வாழ்வின் பணியைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது என்று கூறினார்.
அன்னைமரியா, மரிய மதலேனாள் மற்றும் திருத்தூதர்கள் போல நாமும் உயிர்த்த கிறிஸ்துவை நம் இதயங்களிலும் வாழ்க்கையிலும் வரவேற்போம் என்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருப்பயணிகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

2.  மே 7,8 தேதிகளில் திருத்தந்தை வெனிஸ் நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார்

ஏப்ரல்25,2011. வருகிற மே 7,8 தேதிகளில் வெனிஸ் நகருக்குத் தான் மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையும் இவ்வுரையில் தெரிவித்தார்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்திங்களன்று திருச்சபை கிழக்கிலும் மேற்கிலும் நற்செய்தியாளர் புனித மாற்குவின் திருவிழாவைச் சிறப்பிக்கின்றது, இவர் வெனிஸ் நகரின் பாதுகாவலர், இறைவனுக்கு விருப்பமானால், மே 7 மற்றும் 8 ம் தேதிகளில் வெனிஸ் நகரத்தில் மேய்ப்புப்பணிப் பயணத்தை மேற்கொள்வேன் என்பதை இந்த நாளில் அறிவிக்கிறேன், உயிர்த்த கிறிஸ்து நமக்குத் தந்துள்ள பணியை விசுவாசம் மற்றும் மகிழ்ச்சியுடன் செய்வதற்கு அன்னைமரியா உதவுவாராக என்றும் கூறினார் அவர்.

3.  சிறார் எதிர்நோக்கும் வன்முறைகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் திருத்தந்தை ஆதரவு 

ஏப்ரல்25,2011. சிறாரைப் பாதிக்கும் இழிபொருள் இலக்கியங்கள் மற்றும் சிறார் எதிர்நோக்கும் வன்முறைகள், பாராமுகம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைத் தான் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வன்முறைக்குப் பலியாகும் சிறார்க்கு ஆதரவான தேசிய தினம் இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு இத்திங்கள் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இதில் கலந்து கொண்ட “Meter” என்ற கழகத்தினரின் முயற்சிகளுக்குத் தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.
இந்தக் கழகமானது வன்முறைக்குப் பலியாகும் சிறார்க்கு ஆதரவாக உழைத்து வருகிறது.

4.   சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பேராயர் பார்வா

ஏப்ரல்25,2011. சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களை இந்து மதத்திலிருந்து தான் மதம் மாற்றியதாக இந்து தீவிரவாத அமைப்புத் தலைவர் பிரவீன் டோகாடியா கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார் கட்டாக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்ட புதிய பேராயர் ஜான் பார்வா.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேசப் பொதுச் செயலரான பிரவீன் பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர் என்றுரைத்த ஒரிசா பேராயர் பார்வா, இத்தகையக்  குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை மற்றும் இவை வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
டோகாடியாதான், ரூர்கேலா மறைமாவட்டத்தில் சில கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றியுள்ளார் என்ற பேராயர் பார்வா, டோகாடியா போன்ற ஆட்களால் திருச்சபை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்றார்.
இந்தியாவில் மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ள சுமார் ஆறு மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று.

5.    சைனாவில் கிறிஸ்து உயிர்ப்பு வழிபாட்டை நிறைவேற்ற முயன்ற கிறிஸ்தவர்கள் கைது.

ஏப்ரல் 25, 2011.   சைனாவில் கிறிஸ்து உயிர்ப்பு வழிபாட்டை வெளிஅரங்கில் நிறைவேற்ற முயன்ற கிறிஸ்தவர்களைத் தடைசெய்ததுடன் அவர்களை விசாரணைக்கென காவல்நிலையம் எடுத்துச் சென்றுள்ளது அந்நாட்டு காவல்துறை. சைனாவில் அரசால் அங்கீகரிக்கப்படாமல் மறைந்து வாழும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவ சபைகளுள் ஒன்றான இந்த Shouwang எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் பாடகர் குழுவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.இக்கிறிஸ்தவசபையின் தலைவர்கள் எவரும் கடந்த இரு வாரங்களாக வீட்டை விட்டு வெளியேறவும் காவல்துறையால் அனுமதிக்கப்படவில்லை. சைன அரசின் அங்கீகாரம் பெற்ற கிறிஸ்தவ சபையில் 2கோடி அங்கத்தினர்கள் இருக்கும் வேளை, சைனாவின் கத்தோலிக்கத் திருச்சபை உட்பட, மறைந்து வாழும் கிறிஸ்தவ சபைகளில் 5கோடி அங்கத்தினர்கள் வரை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

6.   மக்கள் போராட்டங்கள் நன்மையைக் கொணரும் என்கிறார் எருசலேம் முதுபெரும் தலைவர்.

ஏப்ரல் 25, 2011.   அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிராக மத்தியகிழக்கு நாடுகளிலும் வட ஆப்ரிக்காவிலும் இடம்பெறும் அரசியல் போராட்டங்கள், முன்னேற்றத்தை நோக்கிய ஒரு நடவடிக்கை எனினும், அதன் இறுதி முடிவை குறித்த கவலை உள்ளது என்றார் எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal.
ஜனநாயகம் நோக்கிய இப்போராட்டங்களின் முடிவுகள் பொதுநலனையும் நல்ல வருங்காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அவர்.
அரபு நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிர்துடிப்பையும் பலத்தையும் உணர்ந்து வருங்காலம் மற்றும் இறுதி இலக்கு பற்றிய விழிப்புணர்வுடன் செயல்படுவது மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது என்றார் பேராயர் Fouad Twal.
மக்களிடமிருந்த பயம் அகன்று அது அரசுகளிடம் இடம் மாறியுள்ளதாக உரைத்த முதுபெரும் தலைவர், சமூகத்தில் மக்கள் கருத்து எழுச்சிப் பெற்று வருகின்றது என்றார். தனக்கென தனிப்பணியைக் கொண்டிருக்கும் எருசலேம் தலத்திருச்சபை, தன் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் தலையீடுகள் மூலம், நீடித்த அமைதிக்கான முயற்சிகளில் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் கூறினார் பேராயர் Twal.

7.    மணிப்பூர் மாநிலத்தின் சிறுபான்மையினர்க்கான அவையில் கிறிஸ்தவப் பிரதிநிதி நியமனம்.

ஏப்ரல் 25, 2011.   மணிப்பூர் மாநிலத்தின் சிறுபான்மையினர்க்கான அவையில் கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அகில இந்திய கிறிஸ்தவர் அமைப்பு தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
மூன்றாண்டிற்கு கிறிஸ்தவ குரு திபேந்திர சிங்கை மணிப்பூரின் சிறுபான்மையினருக்கான அவையின் கிறிஸ்தவப் பிரதிநிதியாக அரசு நியமித்துள்ளது, கிறிஸ்தவர்களை தாக்குதலிலிருந்து பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளதாக தெரிவித்தனர் அகில இந்திய கிறிஸ்தவ அமைப்பின் அதிகாரிகள்.
அண்மைக் காலங்களில் மணிப்பூரில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வந்துள்ளது குறித்துக் கவலையை வெளியிட்ட அகில இந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச்செயலர் ஜான் தயாள், கிறிஸ்தவப் பிரதிநிதிக்கான தேவை குறித்த விண்ணப்பம் கடந்த செப்டம்பரிலேயே மணிப்பூர் தலைமைச் செயலரிடம் முன்வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

8.   இந்துகோவிலை புதுப்பிப்பதிக்க கத்தோலிக்கர்கள் உதவி.

ஏப்ரல் 25, 2011.   மங்களூர் மறைமாவட்டத்தின் இந்துக் கோவில் ஒன்றைப் புதுப்பிக்கவும் அதன் திருவிழாவிற்கெனத் தாயரிக்கவும் உதவ அப்பகுதி கத்தோலிக்கர்கள் முன்வந்துள்ளனர்.
மங்களூரின் நராவியிலுள்ள சூரிய நாராயண கோவிலின் இவ்வாண்டுத் திருவிழாவிற்கு முன்னர் அதனைப் புதுப்பிப்பதில் ஈடுபட்ட 250 பேரில் 150 பேர் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மதங்களின் சமூகங்களிடையே ஐக்கியத்தையும் சகோதரத்துவ உணர்வையும் காண்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்ற நராவி பங்குக்குரு லூயிஸ் குட்டின்ஹா, கிறிஸ்தவர்கள் அண்மைக் காலங்களில் தாக்கப்பட்டு வரும் சூழலில் மதங்களிடையேயான இத்தகைய நல் உறவுகள் வரவேற்கப்படவேண்டியவை என்றார்.

No comments:

Post a Comment