1. இத்தாலியத் தொலைக்காட்சியில் இயேசு குறித்த கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்
2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் முத்திப்பேறு பெற்ற நிலையையொட்டி வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வை நேரங்கள் அதிகரிப்பு.
3. புனித பூமியில் கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்ச்சியோடு சோகமும் கலந்துள்ளது- கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கவலை
4. அராபிய உலகத்தில் அனைத்துக் குடிமக்களும் சம உரிமைகள் பெற்றால் மட்டுமே அங்கு வசந்தம் மலரும் – பேராயர் சாக்கோ
5. பூட்டானில் சமய சுதந்திரத்திற்கான அடையாளம் தெரிகிறது - பேராயர் மெனாம்பரம்பில்
6. தெற்கு ஆசியாவில் கிராமப்புற ஏழ்மையைக் குறைக்க வேளாண்மையில் அதிக முதலீடுகள் போடுவது அவசியம் - IFAD
7. இந்தியாவில் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
8. இந்திய உச்சநீதி மன்றம் கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை
9. இலங்கை - உயிரிழப்பு மதிப்பீடுகளை புறந்தள்ள முடியாது: ஐ.நா
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. இத்தாலியத் தொலைக்காட்சியில் இயேசு குறித்த கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்
ஏப்ரல்20,2011. இத்தாலியத் தொலைக்காட்சியில் இப்புனித வெள்ளியன்று இயேசு குறித்தப் பொது மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலிய Rai Uno தொலைக்காட்சியின் “A Sua Immagine” என்ற நிகழ்ச்சியில் ஏப்ரல் 22ம் தேதி இவ்வெள்ளி பிற்பகல் 2.10 மணி முதல் 3.30 மணி வரை இயேசு பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லவிருக்கிறார் திருத்தந்தை.
எலேனா என்ற ஏழு வயது ஜப்பானியச் சிறுமி, கோமா நிலையிலுள்ள தன் மகனுக்கு உதவி வரும் ஓர் இத்தாலியத் தாய், போரினால் பாதிக்கப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டு ஒரு முஸ்லீம் தாய், ஈராக்கில் நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் போன்றோரது ஆறு கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் திருத்தந்தை.
ஜப்பானிய நிலநடுக்கத்தில் பல இறப்புக்களை நேரிடையாகப் பார்த்தவள் சிறுமி எலேனா.
2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் முத்திப்பேறு பெற்ற நிலையையொட்டி வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பார்வை நேரங்கள் அதிகரிப்பு.
ஏப்ரல்20,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருப்பதையொட்டி இந்த ஏப்ரல் 26,27,28,29 மற்றும் மே 2 ஆகிய நாட்களில் வத்திக்கான் அருங்காட்சியகம் இரவிலும் பயணிகளுக்குத் திறந்து விடப்படும் என்று திருப்பீடம் அறிவித்தது.
இந்நாட்களில் வத்திக்கான் அருங்காட்சியகம் மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு வரைத் திறந்திருக்கும் என்றும் அங்கு நுழைவதற்கு இரவு பத்து மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருப்பீடம் கூறியது.
மேலும், பங்குத்தந்தை, மறைமாவட்டம் அல்லது துறவற சபையிலிருந்து கடிதத்துடன் செல்பவர்களுக்கு நுழைவுக் கட்டணம் எட்டு யூரோக்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இன்னும், ஆகஸ்ட் மாதம் தவிர, வருகிற மே 6ம் தேதியிலிருந்து அக்டோபர் 28ம் தேதி வரை வத்திக்கான் அருங்காட்சியகம் இரவிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. புனித பூமியில் கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்ச்சியோடு சோகமும் கலந்துள்ளது- கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கவலை
ஏப்ரல்20,2011. இயேசுவின் திருச்சிலுவை காலியாகவும் அதன் மூலம் நமக்குப் புதுவாழ்வு வந்திருக்கின்ற போதிலும் கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்ச்சியோடு சோகமும் சேர்ந்து வருகின்றது என்று புனித பூமியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புனித பூமியின் 13 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியில் தற்போது அராபிய உலகில் இடம் பெற்று வரும் போராட்ட அலைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
நம் ஆண்டவர் அனைத்து விசுவாசிகளுக்கும் உறுதியளித்துள்ள நித்திய வாழ்வின் நம்பிக்கையில் கிறிஸ்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள் என்றுரைக்கும் அச்செய்தி, மீட்பின் நகரமான எருசலேமில் இருக்கும் நாம், இப்பகுதியின் எகிப்து, ஈராக் மற்றும் பிற இடங்களில் துன்புறும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை நோக்கும் போது நமது மகிழ்ச்சி சோகமாக மாறுகின்றது என்று தெரிவிக்கிறது.
மௌனமாக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதில் தங்களோடு உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணையுமாறும் புனித பூமிக் கிறிஸ்தவத் தலைவர்கள் அச்செய்தியில் கேட்டுள்ளனர்.
4. அராபிய உலகத்தில் அனைத்துக் குடிமக்களும் சம உரிமைகள் பெற்றால் மட்டுமே அங்கு வசந்தம் மலரும் – பேராயர் சாக்கோ
ஏப்ரல்20,2011. மத்திய கிழக்குப் பகுதியில் அடிப்படைவாத இயக்கங்கள் அதிகரித்து வருவதையும் இன மற்றும் மதப் பிரிவினைவாதப் போக்குகள் வளர்ந்து வருவதையும் எச்சரித்துள்ளார் ஈராக்கின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ.
அராபிய உலகத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் சனநாயகத்துக்கானக் கோட்பாடுகள் இன மற்றும் மதப் பிரிவினைவாதப் போக்குகளால் நசுக்கப்படக்கூடும், இதில் சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஆபத்தை எதிர்நோக்குவார்கள் என்றும் பேராயர் சாக்கோ கூறினார்.
மாறாக, அரசுகள் அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகளும் ஒரேமாதிரியான குடியுரிமையும் வழங்கினால் மட்டுமே சனநாயகம் இயலக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று எந்த அரபு நாட்டிலாவது ஒவ்வொரு குழுவின் உரிமைகளையும் தனித்துவங்களையும் மதிக்கக்கூடிய அமைப்பை உருவாக்கத் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வியையும் பேராயர் எழுப்பினார்.
5. பூட்டானில் சமய சுதந்திரத்திற்கான அடையாளம் தெரிகிறது - பேராயர் மெனாம்பரம்பில்
ஏப்ரல்20,2011. பூட்டான் நாடு, சனநாயகத்தில் அபார முன்னேற்றத்தையும் சமய சுதந்திரத்திற்கு நல்ல திறந்த அடையாளங்களையும் காட்டி வருவதாக குவாகாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் கூறினார்.
பூட்டானில், சமய சுதந்திரத்திற்கு உறுதி வழங்கப்பட்டால் பல துறவு சபைகள் தங்களது சேவைகளை அந்நாட்டிற்கு வழங்கத் தயாராக இருக்கின்றன என்றும் பேராயர் Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
1600ம் ஆண்டில் காப்ரல், கசெல்லா ஆகிய இரண்டு போர்த்துக்கீசிய இயேசு சபை குருக்கள் பூட்டானுக்குச் சென்று கிறிஸ்து பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறினர், அந்த விசுவாசம் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என்ற தனது நம்பிக்கையையும் பேராயர் மெனாம்பரம்பில் தெரிவித்தார்.
பூட்டானில் சுமார் ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள் இருப்பதாக அண்மைப் புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது.
சுமார் எட்டு இலட்சம் மக்களைக் கொண்ட பூட்டானில் 60 விழுக்காட்டினர் பூட்டானிய இனத்தவர் மற்றும் 40 விழுக்காட்டினர் நேபாள இனத்தவர்.
6. தெற்கு ஆசியாவில் கிராமப்புற ஏழ்மையைக் குறைக்க வேளாண்மையில் அதிக முதலீடுகள் போடுவது அவசியம் - IFAD
ஏப்ரல்20,2011. ஆசிய-பசிபிக் பகுதியில் வறுமையை ஒழிப்பதற்கு அப்பகுதி நாடுகள் பரவலாக முயற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும், தெற்கு ஆசியாவில் கிராமப்புற ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்று ஐ.நா.நிறுவனம் இச்செவ்வாயன்று கூறியது.
தெற்கு ஆசியாவில் வேளாண்மையில் அதிக முதலீடுகளைப் போடுவதன் மூலம் அப்பகுதியில் காணப்படும் கடும் கிராமப்புற ஏழ்மையைக் குறைக்க முடியும் என்று IFAD என்ற ஐ.நா.வின் வேளாண்மை வளர்ச்சிக்கான நிதி அமைப்பு பரிந்துரைத்தது.
வளரும் நாடுகளில் கிராமங்களில் காணப்பட்ட கடும் வறுமை கடந்த பத்து ஆண்டுகளில் 48 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்றுரைத்த IFAD ன் ஆசிய-பசிபிக் பகுதிக்கான இயக்குனர் Thomas Elhaut, கடந்த பத்து ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பகுதியில் 35 கோடிக்கு மேற்பட்டோர் ஏழ்மை நிலையிலிருந்து வெளிவந்துள்ளனர் என்றார்.
எனினும் ஆசிய-பசிபிக் பகுதியில் 68 கோடிக்கு மேற்பட்டோர் ஒருநாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான ஊதியத்தில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர் என்றார் Elhaut.
7. இந்தியாவில் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
ஏப்ரல்20,2011.மேற்கு இந்தியாவில் அணுமின் நிலையம் கட்டுவதற்கானத் திட்டத்திற்கு எதிராக இடம் பெற்று வரும் வன்முறைப் போராட்டங்களில், போராட்டக் கும்பல்கள் ஒரு மருத்துவமனையைச் சூறையாடியதோடு பேருந்துகளுக்கும் தீ வைத்துள்ளன என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மஹாராஷ்டிர மாநிலத்தின் இரத்தினகிரியில் நிலவும் பதட்டநிலைகளைக் களைவதற்கு காவல்துறை எடுத்த நடவடிக்கையில் குறைந்தது இருபது பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரம் கோடி டாலரில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் உலகிலே மிகப் பெரியதாக இருக்கும் என்று நம்பப்படும் வேளை, இது தங்களின் பாரம்பரிய மீன் தொழில் ஆதாரங்களை அழிக்கும் என்று, இத்திட்டத்தை எதிர்த்துப் போராடும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்தப் பகுதி நிலநடுக்கத்தால் எளிதில் தாக்கப்படக்கூடியது எனவும் ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுமின் நிலையப் பேரிடர் தங்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
8. இந்திய உச்சநீதி மன்றம் கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை
ஏப்ரல்20,2011. இந்தியாவில் இடம் பெறும் கவுரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதில் மாநில அரசுகள் கடுமையாக நடந்து கொள்ளுமாறு உச்சநீதி மன்றம் கேட்டுள்ளது.
கவுரவக் கொலைக் குற்றங்களைச் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் மூத்த அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உச்சநீதி மன்றம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் குடும்பங்களின் பாரம்பரியத்தைக் காக்கத் தவறுகிறார்கள் என்று சொல்லி அண்மைக் காலங்களில் மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் நடக்கும் “கட்டப் பஞ்சாயத்துக்கள்”, வட இந்தியாவில் நடக்கும் “காப் பஞ்சாயத்துக்கள்” முறைகளையும் இந்திய உச்சநீதி மன்றம் வன்மையாய்க் கண்டித்துள்ளது.
9. இலங்கை - உயிரிழப்பு மதிப்பீடுகளை புறந்தள்ள முடியாது: ஐ.நா.
ஏப்ரல்20,2011. இலங்கையில் இடம் பெற்ற இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் நாற்பதாயிரம் பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளைத் தற்போதைக்குப் புறந்தள்ள முடியாது என ஊடகங்களில் கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போர் குறித்த ஐ.நா. நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருக்கும்வேளை, அந்த அறிக்கையின் சில பகுதிகள் கசிந்துள்ளதாகக் கூறி இலங்கையிலுள்ள நாளிதழ்கள், குறிப்பாக அரசு சார்பு செய்தி நாளிதழ்கள் கட்டம் கட்டமாக அவ்வறிக்கையின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படக் கூற முடியாது இருக்கின்றது. ஆயினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரம் பேர் என்று பல்வேறு வழிகளிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நிராகரித்துவிட முடியாது என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment