Tuesday, 5 April 2011

Catholic News - hottest and latest - 04 April 2011


1. திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.

2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்ததன் 6ம் ஆண்டு நிறைவு நினைவுகூரப்பட்டது.

3. கர்தினால் மார் வர்கி விதயத்திலின் மரணத்திற்கு பாரத குடியரசுத் தலைவரின் இரங்கற் செய்தி.

4. உலகம் முழுவதும் மோதல்களில் இரத்தம் சிந்தப்படுவது, இயேசு சிந்திய இரத்தத்தை நினைவுக்குக் கொணர்கிறது.

5. காஷ்மீரில் பணியாற்றி வந்த‌ வெளிநாட்டு குரு ஒருவர் நாட்டை விட்டு வெளியேற அரசு உத்தரவு.

6. பாகிஸ்தானில் அமைதி நிலவ பர்மிங்ஹாமில் சிறப்புத் திருப்பலி.

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.

ஏப்ரல் 04, 2011     நம் வாழ்வை ஒளிர்விக்க கிறிஸ்துவை அனுமதிப்பதன் மூலம், நம் முழு நிறைவுக்கான அச்சுறுத்தல்களை அகற்ற முடியும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செபத்தைத் திருத்தந்தையுடன் இணைந்து ஜெபிக்க உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாக‌த்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு,  இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் வழங்கிய 'பிறவிக்குருடர் குணம் பெற்ற புதுமை' குறித்து எடுத்துரைத்த பாப்பிறை, சாதாரண ஒரு மனிதனின் வாழ்வில் இடம்பெறும் விசுவாசத் திருப்பயணத்தை இப்புதுமை காட்டுகிறது என்றார்.
கூட்டத்தில் ஒருவராக இயேசுவை எண்ணி சந்திக்கும் இப்பிறவிக் குருடர், பின்னர் அவரை இறைவாக்கினராக எண்ணுகிறார். இறுதியில் கண்கள் திறக்கப்பட்டபோது, இயேசுவை ஆண்டவராக அறிக்கையிடுகிறார் என்ற படிப்படியான வளர்ச்சியை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஆதாமின் பாவத்தால் நாமும் பிறவியிலிருந்தே கொண்டிருக்கும் குருட்டு நிலையையும், அதன் பின் திருமுழுக்கின்போது பெறப்படும் உள்ளொளியையும் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, பாவம் மனித குலத்தைக் காயப்படுத்தி, மரணத்தை நோக்கி இட்டுச்சென்றது ஆனால் கிறிஸ்துவில் வாழ்வின் புது நிலை ஒளிர்கிறது என மேலும் உரைத்தார்.
நம் வாழ்வு கிறிஸ்துவால் ஒளிர்விக்கப்பட நாம் அனுமதிக்கும்போது, நம் வாழ்வின் முழு நிறைவை நோக்கிய பாதையில் வரும் அச்சுறுத்தல்களிலிருந்து விடுதலை பெறுவோம் என்ற பாப்பிறை, திருமுழுக்கின்போது பெறப்பட்ட கொடையான தீச்சுடர் அணையாமல் காக்கப்பட, செபம் மற்றும் அயலார் மீதான நம் அன்பின் மூலம் உதவுவோம் என்ற அழைப்பையும் முன் வைத்தார்.

2. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்ததன் 6ம் ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது.

ஏப்ரல் 04, 2011     மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறந்ததன் ஆண்டு நினைவு நாள் சனியன்று இடம்பெற்றதையும் குறிப்பிட்ட பாப்பிறை, அந்நாளில் அவரைச் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து செபித்ததாகவும் எடுத்துரைத்தார்.
அத்திருத்தந்தையின் முத்திப்பேறு அறிவிப்பு, வரும் மாதம் இடம்பெற விருப்பதால்,  அவருக்கான இறந்தோர் நினைவுத் திருப்பலியைப் பாரம்பரியமாக கொண்டாடுவது போல்  தான் நிறைவேற்றவில்லையெனினும், அவருக்காகத் தனிப்பட்ட விதத்தில் செபித்தேன், நீங்களும் செபித்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்றார் பாப்பிறை.
இத்தவக்காலம் முழுவதும் நாம் உயிர்ப்புப் பெருவிழாவிற்கென தயாரித்து வரும் போது, முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழா மற்றும் அவரின் பரிந்துரைகளுக்காக நம்மை அவரிடம் மேலும் ஒப்படைக்கும் மகிழ்ச்சியை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவூட்டினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
தொழிலாளர் தினமான மே மாதம் ஒன்றாந்தேதி உரோம் நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றும் திருப்பலியில் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட உள்ளார்.

3. கர்தினால் மார் வர்கி விதயத்திலின் மரணத்திற்கு பாரத குடியரசுத் தலைவரின் இரங்கற் செய்தி.

ஏப்ரல் 04, 2011     இந்தியாவின் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மார் வர்கி விதயத்தில் இறைபதம் சேர்ந்ததையொட்டி தன் இரங்கற்செய்தியை இந்திய கத்தோலிக்கர்களுக்கு வழங்கியுள்ளார் பாரத குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டீல்.
எர்ணாகுளம்-அங்கமலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராய் இருந்த இவரின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலையுடன் அறிய வந்துள்ளதாகவும், தன் அனுதாபங்களைச் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்கர்களுக்கும், குறிப்பாக அவர் சார்ந்திருந்த உலக இரட்சகர் சபைக்கும் தெரியப்படுத்துவதாகவும் தன் தந்திச்செய்தியில் கூறியுள்ளார் இந்தியக்குடியரசுத்தலைவர்.
குடியர‌சுத்தலவர்  பிரதீபா பட்டீலின் இந்த இரங்க‌ற்செய்தி, இந்திய ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இம்மாதம் முதல் தேதி காலமான கர்தினால் வர்கி விதயத்திலின் அடக்கச் சடங்கு 10ந் தேதி ஞாயிறன்று கொச்சியில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. உலகம் முழுவதும் மோதல்களில் இரத்தம் சிந்தப்படுவது, இயேசு சிந்திய இரத்தத்தை நினைவுக்குக் கொணர்கிறது.

ஏப்ரல் 04, 2011     உலகம் முழுவதும் மோதல்களில் இரத்தம் சிந்தப்படுவதைக் காணும்போது, நம் அனைவருக்காகவும் இயேசு இரத்தம் சிந்தியது நினைவுக்கு வருகின்றது என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வாரம் ஒருமுறை தொலைக்காட்சியில் வழங்கும் ஒக்தாவா தியேஸ் என்ற நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் 'நாசரேத்தின் இயேசு' என்ற புத்தகத்தில் 'இயேசுவின் இரத்தம் எவருக்கு எதிராகவும் சிந்தப்படவில்லை மாறாக அனைவருக்காகவும் வழங்கப்பட்டது' என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
நம் ஒவ்வொருவருக்கும் அன்பின் புனிதப்படுத்தும் சக்தி தேவைப்படுகின்றது, அந்த சக்தியே இயேசுவின் இரத்தம், என்ற குரு லொம்பார்தி, இயேசுவின் இரத்தம் சிந்தல் ஒரு சாபமல்ல மாறாக மீட்பு என உரைத்தார்.
ஐவரி கோஸ்ட், லிபியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் சிந்தப்படும் இரத்தம், இன்றைய மற்றும் வருங்கால பகைமை நிலைகளுக்கே இட்டுச் செல்வதாக உள்ளது என்பதைக் குறித்த கவலையையும் வெளியிட்ட குரு லொம்பார்தி, மனிதகுல வன்முறைகளால் விளையும் துன்பம் கண்டு மனித குல விரோதிகளால் மட்டுமே மகிழ முடியும் என்றார்.
அமைதிக்காக உழைப்போரின் கடினமான பணியானது, சிலுவை மற்றும் உயிர்ப்பை நோக்கிய பயணத்தால் பலம்பெறுகிறது என மேலும் உரைத்தார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.

5. காஷ்மீரில் பணியாற்றி வந்த‌ வெளிநாட்டு குரு ஒருவர் நாட்டை விட்டு வெளியேற அரசு உத்தரவு.

ஏப்ரல் 04, 2011     இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் கடந்த 48 ஆண்டுகளாக கல்விப்பணியாற்றி வரும் வெளிநாட்டு குரு Jim Borst  ஏழு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லையெனில் வெளியேற்றப்படுவார் என உத்தரவு பிறப்பித்துள்ளது காஷ்மீர் மாநில அரசு.
Mill Hill என்ற கத்தோலிக்க மறைபோதகச் சபையைச் சார்ந்த இக்குரு, 2014ம் ஆண்டு வரை நாட்டில் தங்குவதற்கான அனுமதியைக் கொண்டிருந்தும் ஏற்கனவே ஒருமுறை கடந்த ஜூலை மாதத்தில் இத்தகைய உத்தரவு ஒன்று வழங்கப்பட்டிருந்தார். அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லையெனினும், தற்போது இரண்டாம் முறையாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதே உண்மையாக இருக்கும் நிலையில், குரு Borst, மக்களை மதம் மாற்றி வருகிறார் என்பது பொய்யான ஒரு குற்றச்சாட்டு என்று கூறிய ஜம்மு காஷ்மீர் ஆயர் பீட்டர் செலஸ்டீன், தற்போது காஷ்மீரில் 0.014 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்றார்.
குரு Borst காஷ்மீரில் நடத்தும் இரு பள்ளிகளுள் ஒன்றில் 99 விழுக்காடு பணியாளர்கள் இஸ்லாமியர்களே என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர்.
காஷ்மீரின் கல்விப்பணியில் அதிக ஆர்வம் கொண்டு செயலாற்றி வரும் இக்குரு வெளியேற்றப்பட்டால் அது அம்மறைமாவட்டத்திற்குப் பேரிழப்பாய் இருக்கும் எனவும் கவலையை வெளியிட்டார் ஆயர் செலஸ்டீன்.
குரு Borstன் இரு கல்வி நிலையங்களுக்கு அருகே பள்ளிக்கூடங்களைக் கொண்டிருக்கும் சில இஸ்லாமியர்களே பொறாமையின் காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை வெளியேற்றுவதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதாக இக்குருவுடன் பணிபுரிவோர் அறிவித்துள்ளனர்.

6. பாகிஸ்தானில் அமைதி நிலவ பர்மிங்ஹாமில் சிறப்புத் திருப்பலி.

ஏப்ரல் 04, 2011     பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்ற செப விண்ணப்பத்துடன் பிரிட்டனின் பர்மிங்ஹாம் பேராலயத்தில் பல முக்கிய அதிகாரிகளின் பங்கேற்புடன் இஞ்ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினார் பேராயர் Bernard Longley.
பர்மிங்ஹாமின் மேயர், சுவீடன் ஆயர் Anders Arborelius, பாகிஸ்தானின் துணைத்தூதரக உயர் அதிகாரி Saeed Khan Mohmand என‌ முக்கிய‌மானோர் கலந்து கொண்ட‌ இத்திருப்ப‌லியில், பாகிஸ்தானின் அமைதிக்காக‌ சிற‌ப்பான‌ வித‌த்தில் செபிக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன், அண்மையில் கொலை செய்யப்ப‌ட்ட‌ க‌த்தோலிக்க‌ அமைச்ச‌ர் Shabhaz Bhatti யின் உருவ‌ப்ப‌ட‌மும் திறந்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.
அமைச்ச‌ர் Shabhaz Bhatti யின் ம‌ர‌ண‌ம், பாகிஸ்தான் நாட்டில் ஏனைய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அனுப‌விக்கும் துன்ப‌ம் ம‌ற்றும் அச்ச‌த்தை ந‌ம‌க்கு நினைவூட்டுவ‌தாக‌ உள்ள‌து என‌ இத்திருப்ப‌லியில் ம‌றையுரையாற்றிய‌ பேராயர் Bernard Longley, அந்த‌ அமைச்ச‌ரின் தியாகம், பாகிஸ்தான் நாட்டிற்கு ஐக்கிய‌ம் எனும் க‌னியைக் கொண‌ர்வ‌தாக‌ என‌வும் வேண்டினார்.
உல‌கம் முழுவ‌தும் ச‌மூக‌ங்க‌ளைப் பிரித்து வ‌ரும் முர‌ண்பாடுக‌ளுக்கு அமைதித் தீர்வுக‌ள் காண‌ப்ப‌ட‌வேண்டும் என‌ செபிக்குமாறும் விசுவாசிக‌ளுக்கு அழைப்பு விடுத்தார் பர்மிங்ஹாம் பேராய‌ர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...